Kamal Haasan torchஇன்று (5/4/2021) இந்து தமிழ் திசை நாளேட்டில் ”காலமும் மக்களும் கொண்டுவந்து விட்ட இடம் இது!” என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு கமல் ஹாசனின் பேட்டி வெளிவந்துள்ளது, மையவியம் அல்லது செண்ட்ரிசம் (centrism) என்ற தமது கட்சியின் கருத்தியலுக்கு அவர் இந்தப் பேட்டியில் விளக்கமளிக்க முயன்றுள்ளார்:

“தமிழில் சொல்ல வேண்டுமானால் நடுநிலைமை. அரசியலற்ற நிலையல்ல. இது வள்ளுவர் போற்றும் நிலை. ஒரு திறந்த மனப்பாங்கு மரபோ நவீனமோ பகுத்தறிந்து நமக்கான விஷயங்களை எடுத்துக் கொள்வோம்.”

திருக்குறள் பேசும் நடுவுநிலைமை (அதிகாரம் 12) என்பதைக் கொண்டு தன் மய்ய அரசியலுக்கு கமல் முட்டுக்கொடுக்க முயல்வது போல் உள்ளது. வள்ளுவர் சொல்லும் நடுவுநிலைமை என்பது பக்கச் சார்பின்மையைக் குறிக்கும். அதற்கும் கமல் முன்மொழியும் மையவியம் அல்லது செண்ட்ரிசத்துக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. 

நடுவுநிலைமை அதிகாரத்தில் இடம்பெற்ற பத்து குறட்பாக்களையும் தக்க உரையோடு கமல் படித்துப் பார்ப்பாரானால் தன் மய்யக் கொள்கைக்கு திருவள்ளுவர் உதவ மாட்டார் என்பது அவருக்கு விளங்கி விடும்.

நல்லதற்கும் கெட்டதற்கும் இடையே, உண்மைக்கும் பொய்மைக்கும் இடையே, நீதிக்கும் அநீதிக்கும் இடையே, பாசிசத்துக்கும் குடியாட்சியத்துக்கும் இடையே, புதுமைத் தேடலுக்கும் பழமைக் காப்புக்கும் இடையே, உழைப்புக்கும் சுரண்டலுக்கும் இடையே,  குமுகியத்துக்கும் முதலியத்துக்கும் இடையே, சமூக நீதிக்கும் சாதியத்துக்கும் இடையே, பாட்டாளி அறத்துக்கும் பார்ப்பனிய  (அ)தர்மத்துக்கும் இடையே… நடுநிலை என்ற ஒன்றே இருக்க முடியாது. 

நடுநிலை என்பது மையமன்று, மாயம்! அந்த நடுநிலையைத்தான் கமல் தேடிப் புறப்பட்டுள்ளார். அநீதிக்கும் நீதிக்கும் நடுவில் நிற்கும் நடுநிலை என்பது இறுதிநோக்கில் அநீதியின் பக்கத்தில்தான் கொண்டுபோய் நிறுத்தும். கமலின் மையவியமும் இப்படிப்பட்டதே என்பதை இதுவரை காணவில்லை என்றால் விரைவில் காணலாம்.

மையவியம் என்பதற்கு வன்முறை தவிர்த்துப் போராடுவதெனப் புது விளக்கம் கொடுக்கிறார் கமல். போராட்டத்தில் வன்முறை கூடாது, அத்துமீறல் கூடாது என்கிறார். ”புரட்சி என்பது வன்முறை வடிவத்திலிருந்து வெளியேறி நிறையக் காலம் ஆகி விட்டது”  என்கிறார். 

சரிங்க கமல், அரசு வன்முறை வடிவத்திலிருந்து வெளியேறி விட்டதா? அடக்குமுறை அரசின் வன்முறை பற்றிப் பேசமாலிருப்பதுதான் உங்கள் மையவியமா? காசுமீரத்திலும் பஸ்தாரிலும் இந்தியப் படை குவித்து வைக்கப்பட்டிருப்பதை உங்கள் செண்ட்ரிசம் கண்டு கொள்ளாதா?

நடுநிலைமைக்குப் பேருதாரணம் காந்தி என்கிறார் கமல். இந்துத்துவக் கொடுமையை உறுதியாக எதிர்த்து நின்று அதற்காகவே உயிரும் கொடுத்தவர் காந்தியார். இன்றைய இந்தியாவில் பாசிச இந்துத்துவம் கோலோச்சும் போது நீங்கள் அதற்கு எதிராகப் போராட முன்வருவீர்களா? சென்ற நாடளுமன்றத் தேர்தல் பரப்புரையில் கூட நீங்கள் மாநில ஆட்சியாளர்களின் ஊழல் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தீர்கள், இந்த முறை பாசகவுடன் கூட்டுச்சேரத்தான் முதலில் ஆசைப்பட்டீர்கள். 

அது நனவாகாத நிலையில் கோவை தெற்கில் பாசகவை எதிர்த்தே போட்டியிடும் நிலைக்கு ஆளானீர்கள். இப்போதும் இந்தியப் பாசிச அரசைச் சாடுவதை விடவும் பெரும்பாலும் உள்ளூர்ச் சிக்கல்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். திருவள்ளுவர் போலவே காந்தியாரும் உங்கள் செண்ட்ரிசத்துக்கு ’செண்ட்ரிங்’ செய்ய உதவ மாட்டார்.

பிறப்புக்கு முன்பே குழந்தைக்குப் பெயர் வைத்தாயிற்று என்பது போல் கமல் சொல்கிறார்: ”இன்னும் எங்கள் கொள்கையைச் செழுமைப்படுத்த வேண்டியிருக்கிறது, பணி தீராத வீடு’ என்று மலையாளத்தில் சொல்வார்கள். வேலை நடந்து கொண்டிருக்கிறது என்ற அர்த்தத்தில். கிரகப்பிரவேசம் வந்து விட்டீர்களே என்று கேட்டால் என்னுடைய தேவைக்காக வந்திருக்கிறேன்….”

ஆகவே கட்டிமுடிக்காத வீட்டில் குடி புகுந்துள்ளீர்கள். சரியாகக் கட்டி முடியுங்கள். மையம் மையம் என்று உழன்று கொண்டிருக்காமல் மக்களைக் கவனியுங்கள், நீதியிலும் கண் வையுங்கள். 

மக்கள் நீதி மய்யம் இனி எதிர்காலத்தில் என்ன செய்யும் என்று ஊகம் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்திய நடுவண் அரசை,  அதிலும் இப்போதுள்ள பாசக அரசை நீங்கள் எதிர்த்துப் பேச விரும்பவில்லை எனபதற்கு உங்கள் பேட்டியே சான்றாக உள்ளது.

பேட்டியாளர் சமஸ் கேட்கிறார்: “இந்தியாவில் மாநிலங்களுக்கான அதிகாரம் ஒரு சூப்பர் மாநகராட்சி அளவுக்குத்தான் இருக்கிறது. அதுவும் மாநிலங்களை மாவட்டங்களைப் போல் வெறும் நிர்வாக அலகாக மாற்றிவிட எண்ணும் ஒரு ஆட்சியின் கீழ இந்தியா இன்று இருக்கிறது. உங்கள் கட்சி அதிகமாக அரசாங்க நிர்வாகம், ஊழல் இவற்றை முன்னிறுத்தியே பேசுகிறது. இது அரசியலை வெறும் நிர்வாக விஷயமாக சுருக்கி விடாதா?”

இந்தப் பேட்டியின் மிக முக்கியமான கேள்வி இது. இந்தக் கேள்வியின் ஒவ்வொரு சொல்லியமும் சொல்லும் பொருள் பொதிந்தவை.  சிறப்பு சமஸ்! கமல் தன் மநீம கொள்கையைத் தெளிவாக்க இதுதான் நல்ல வாய்ப்பு. 

இந்திய அரசமைப்பு குறித்த பார்வை என்ன? மாநிலங்களின் தகுநிலை பற்றிய கருத்து என்ன? கமல் முதலமைச்சர் ஆனாலும், வெறும் சட்டப் பேரவை உறுப்பினர் ஆனாலும், இந்த அரசமைப்புதான், இந்தச் சட்டப் பேரவைதான்! இவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்வதாக எண்ணம்?

ஊருக்கு நடுவில் இருக்கும் நடுவண் சிறையை ஊருக்கு வெளியே மாற்றி விட்டு அங்கு பேரங்காடி அமைப்பது போல் இந்திய அரசமைப்புச் சிறையையும் வெளியே அனுப்பி விட்டுக் கமல் ராச்சியம் அமைத்து விடலாமா? மாநிலங்களையும் மாவட்டங்களைப் போல் நிர்வாக அலகாக மாற்றி விட எண்ணும் ஆட்சி என்று கேள்வியாளர் சொல்வது யாரை என்று கமலுக்குத் தெரியாமல் இருக்க முடியாது. 

மொழிவழி மாநிலங்களைக் கலைத்து விட்டு ஜன்பத் மண்டல்கள் என்ற பெயரில் 100 நிர்வாகப் பிரிவுகளாகப் பிரிப்பது குருஜி கோல்வால்கர் முதல் மோகன் பகவத் ஈறாக ஆர்எஸ்எஸ் கனவுத் திட்டம் என்பதும், நரேந்திர மோதி அரசாங்கத்தின் முனைந்த முயற்சி என்பதும் கமலுக்குத் தெரியாதா? தமிழ்நாட்டை ஒழித்து பாசக தக்சின் பிரதேஷைக் கொண்டுவரத் துடிப்பது மநீம தலைவர்கள் யாருக்கும் தெரியாதா? கமலின் மனத்தில் துளியளவேனும் ஆர்எஸ்எஸ் எதிர்ப்புணர்வு இருக்குமானால் அதை இந்த வினாவிற்கான விடையில் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். தமிழ்நாட்டுப் பற்றைக் காட்ட இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

கமல் சொல்லும் விடையைக் கவனியுங்கள்:

“இல்லை. ஒரு விரிவான அரசியலின் ஒரு பகுதியாகவே நிர்வாகத்தைப் பேசுகிறோம். மாநில சுயாட்சி என்பதும் நிர்வாகத்தோடு பிணைந்ததுதான் இல்லையா? இந்தியா எப்படி ஆளப்பட வேண்டும் என்பதை நிர்வாகமாகவும் பார்க்கலாம். அரசியலாகவும் பார்க்கலாம்.”

கமல் அவர்களே! இது ஆர்எஸ்எஸ்சின் குரல்! காசுமீரத்தை அழித்ததைப் போல் நாளை பாசிச ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டை அழித்தாலும் நீங்கள் இப்படித்தான் நிர்வாக விளக்கம் தந்து கொண்டிருப்பீர்கள்! உங்கள் மய்ய வாதத்தின் சாயம் இந்த ஒரு விடையில் கலைந்து விட்டது! இந்தியா எப்படி ஆளப்பட வேண்டும் என்பதை பத்மஸ்ரீ கமல்ஜி சொல்கிறார்! மோதிஜி! கேட்டுக் கொண்டீர்களா?

முழுக் கூட்டாட்சி நாடாக இந்தியா அமைய வேண்டும் என்ற அண்னாவின் நிலைப்பாட்டில் மநீம கமலுக்கும் முழு உடன்பாடுதானாம்!  அண்ணாவை அவருக்குப் பிடிக்குமாம்! அரசியலமைப்புச் சட்டம் உயிருள்ள ஆவணமாம்! அதனை மாற்றி எழுத முடியாத நூலாக மாற்றி விடக் கூடாதாம்! நடப்பிலுள்ள ஆவணம் நமக்குக் காட்டும் வழிமுறைகளிலிருந்து ஆட்சியாளர்கள் வழுவக் கூடாதாம்!  அரசியலதிகாரத்திலிருந்தே எல்லா மாற்றங்களும் தொடங்குகின்றனவாம்! இது பிளேட்டோவாக கமல் எடுக்கும் பதினொன்றாவது அவதாரம்!

ஆனால் சில கேள்விகளுக்குத்தான் விடை கிடைக்கவில்லை: அரசமைப்புச் சட்ட வழிமுறைகளிலிருந்து வழுவும் ஆட்சியாளர்கள் யார்?  பூடக மொழியை விட்டு விட்டதாகச் சொல்லி விட்டு பூடகமாகக் கூட நீங்கள் அடையாளம் காட்டவில்லையே? சரி, அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவது யார்? எப்படி? மநீம 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் அதைச் செய்ய முடியாதே? இதில் மையமாக ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்.

மநீம சின்னம் என்று ஒரு கைவிளக்கோடு அலையும் கமல் தனக்குள் தானே கொஞ்சம் வெளிச்சம் பாய்ச்சி இருள் நீங்கி வருவாரா?  ஒளிக்கும் இருளுக்கும் நடுநிலை வகிக்கிறேன் என்று இருட்டரசியலுக்கே துணைபோய் விடுவாரா?

- தியாகு

Pin It