chennai centralகொரானா முதல் அலையின் போது உழவர்களுக்கு எதிரான வேளாண் சட்டங்களை இயற்றிய பாஜக அரசு தற்போது இரண்டாவது அலையில் இரயில்வே துறையை தனியார் மயமாக்குவதற்கு துடிக்கின்றது.

மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு பல்வேறு துறைகளை தனியாருக்கு தாரை வார்த்து வரும் நிலையில் தற்போது தொடர்வண்டி வழித்தடங்களை படிப்படியாக தனியார் கையில் ஒப்படைத்து வருகிறது.

இந்த பெருந்தொற்று சூழலில் வரி கட்டும் பொதுமக்களுக்கு போதுமான தடுப்பூசிகளை ஏற்பாடு செய்து தர திறனில்லாத மோடி, பொது சொத்துகளை தனது நண்பர்கள் அதானி, அம்பானி வாரி வழங்குவதில் சளைக்கவில்லை.

தமிழ்நாட்டில், சென்னை மற்றும் மாநிலத்தின் இதர நகரங்களிலிருந்து இயக்கப்படும் தொடர்வண்டிகளை தனியாருக்கு தாரைவார்த்திட அனைத்து ஆயத்த பணிகளையும் தென்னக இரயில்வே மேற்கொண்டு வருகிறது.

சூன் மாத இறுதிக்குள் தொடர்வண்டிகளை இயக்கும் தனியார் நிறுவனங்களை தேர்ந்தெடுத்திட வேண்டும் என்று இந்திய ரயில்வே வாரியம் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

சென்னையிலிருந்து இயக்கப்படும் முக்கியமான 11 வழித்தட தொடரிகளை தனியாருக்கு வழங்கிடும் “நிதி ஏலம்” (Financial Bid) சூன் மாத இறுதிக்குள் நடைபெறவுள்ளது. சுமார், ரூ.3,221 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டம் 1052 கிலோமீட்டர் தொலைவை உள்ளடக்கியதாகும்.

இதற்கான ஒப்பந்தம் செயல்முறைகளை செய்து வருவதாக தென்னக இரயில்வே வாரிய முதன்மை தலைவர் சூனட்டு சர்மா கடந்த புதன்கிழமை நடந்த மெய்நிகர் (Virtual) பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அதில், பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கலாம் என்றும் கூறியுள்ளார்.

ஏலத்தில் பங்குபெறும் தகுதி வாய்ந்த நிறுவனங்கள் இரயில்வே துறையை தொடர்பு கொண்டு தொடர்வண்டிகள் இருப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் தகவல்களை பெற்று இவ்வாண்டு இறுதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழித்தடங்களில் தொடர்வண்டிகளை இயக்கிட வேண்டும்.

மேலும், தங்கள் கையிருப்பு தொடர்வண்டிகள் மற்றும் பயணக் கட்டணத்தொகை நிர்ணயக்க இரயில்வே குழுவிற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்வண்டிகள் புறப்படும் சந்திப்புகள் மற்றும் பராமரிப்பு பணிமனை ஆகியவையும் தேர்ந்தெடுத்திட இரயில்வே மண்டலங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய இரயில்தட வலைப்பின்னலை கொண்டு நாளொன்றுக்கு 2.3 கோடி பயணிகளையும் 30 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகளையும் சுமந்து ஒன்றியத்தின் மூலைமுடுக்கெல்லாம் தொட்டு செல்லும் இந்தியாவின் இரயில்வேத்துறை உலகின் மிகப்பெரிய நிறுவனமாகும்.

ஒன்றியத்தின் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் உற்ற துணைவன் தொடர்வண்டிகளே. சாலைகளும் அரசு பேருந்துகளும் அரிதான வட இந்திய மாநில மக்களின் அடிப்படை வாகனமே தொடர்வண்டிகள் தான்.

மனித முன்னேற்றத்திற்கு அடிப்படை காரணியாக அமைவது பயணம். இந்த பயணங்கள் மூலமாகவே மனிதன் வெளியுலகை அறிவதோடு தனது பொருளாதார முன்னேற்றத்தையும் அடைகிறான். நம் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த பயணங்களை மேற்கொள்ள ஏதுவான போக்குவரத்தை அரசின் மலிவு கட்டண தொடரிகள் அமைத்து தருகின்றன.

மிகக்குறைந்த செலவில் அன்றாட பயணத்திற்கு மிகவும் இன்றியமையாதது தொடர்வண்டி சேவை. பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் போக்குவரத்தை பூர்த்தி செய்வது தொடர் வண்டி சேவைகள் தான்.

அச்சேவையை சமூக வளர்ச்சிக்கான அடிப்படை முதலீடாக கருதாமல் லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு இயங்கும் தனியாருக்கு வழங்கிடும் கொள்கை அடிப்படையில் பிழையல்லவா?

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், 31-8-2020 தேதியன்று தனியார் நிறுவனங்கள் இரயில் பயணக் கட்டணத்தை தாமாக நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்று இரயில்வே அமைச்சம் அறிவித்துள்ளது.

தனியார் நிறுவனங்களே பயணக் கட்டணத்தை தாமாக நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்றால் கட்டண உயர்வை யாரும் தடுத்திட இயலாது.

எடுத்துக்காட்டாக, 2019ல் அதானி குழுமம் தனக்கு முன் அனுபவம் இல்லாத விமான நிலையம் நிர்வாகத்தில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தது மட்டுமல்லாமல், அரசு கட்டுப்பாட்டில் இருந்த ஜெய்ப்பூர், அகமதாபாத், கௌவுகாத்தி, மங்களூர், திருவனந்தபுரம் மற்றும் லக்னோ ஆகிய 6 நகரங்களின் விமான நிலையங்களை 50 ஆண்டு குத்தகை ஒப்பந்தத்தைப் பெற்றது.

இதனையடுத்து, அதானி நிறுவனம் லக்னோ விமான நிலையத்தில் மட்டும் பயணக் கட்டணத்தை 10 மடங்கு உயர்த்தி உள்ளது. தற்போது, இதே அதானி குழுமமும் இரயில்வே வழித்தடங்களுக்கான ஏலங்களில் பங்கேற்கிறது. மோடியின் நெருங்கிய நண்பரின் நிறுவனமான அதானி குழுமம் ஏலங்களில் போட்டியின்றி வெற்றி பெற்றிடும். இனிமேல் இரயில்வே பயண கட்டணங்களும் பலமடங்கு உயரும். அதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் இரயிலில் பயணிக்க முடியாத நிலை உருவாகும்.

விமான கட்டணத்தில் தனியார் ரயில் பயணம்

பாஜக மோடி அரசு ஆட்சிக்கு வந்த 2014 இல் இருந்து அனைத்து அரசு துறைகளையும் தனியார் மயக்குமாக்கும் வேலையை செய்து வருகிறது. அரசுக்கு மிகப்பெரும் வருவாயை தரும் எல்.ஐ.சி போன்ற அரசு பொது நிறுவனங்கள், விமான சேவை மற்றும் இரயில்வே சேவைகளை தனது கட்சிக்கு நிதி உதவிய அதானி, அம்பானி போன்ற தனியாருக்கு தாரை வார்கிறது. அதேநேரம், தமக்கு வாக்களித்து வரி கட்டி வரும் பெரும்பான்மை “இந்து” மக்களை பாஜக மோடி அரசு வஞ்சித்து வருகிறது.

அரசின் பொது சேவை நிறுவனங்களை நடத்த கையாலாகாத பாஜக மோடி அரசு, 2023 ஆண்டு முதல் 2027 ஆண்டுக்குள் 109 வழித்தடங்களில் இயங்கிடும் முக்கியமான 151 பயணியர் தொடர் வண்டிகளை 35 ஆண்டு குத்தகைக்கு தனியாருக்கு வழங்கிட 18-7-2020 தேதியன்று முடிவெடுத்துள்ளது.

ஆனால், சென்னையிலிருந்து இயங்கிடும் முக்கியமான 11 பயணியர் தொடர்வண்டிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் தனியாரிடம் வழங்கிட கொரானா தொற்று நேரத்தில் அவசரமாக எடுத்துள்ள முடிவு தமிழ்நாட்டு மக்களிடம் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

2014-15 நிதி ஆண்டிலிருந்து ஆண்டுக்கு (2020-2021 நிதி ஆண்டை தவிர்த்து, கொரானா ஊரடங்கு காரணமாக) சுமார் ரூ.7,500 கோடிக்கு மேல் வருவாய் தரும் தென்னக இரயில்வே துறையில் தமிழ்நாட்டில் இயங்கிடும் இரயில்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஏனென்றால், தென்னக இரயில்வேயில் 75 விழுக்காடு இரயில் வழித்தடங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன.

தமிழ்நாட்டில் இயங்கும் வழித்தடங்கள் இந்தியாவிலேயே மிக லாபகரமானதாக விளங்குகின்றன. பயணிகள் முறையாக கட்டணத்தை செலுத்திடும் தமிழ்நாட்டின் சுங்கவரி சாலைகள் லாபகரமாக உள்ளதால் தனியார் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவும்.

அதை போலவே தற்போது தமிழர்களை மேலும் சுரண்டிட தனியார் நிறுவனங்கள் இரயில் தடங்களை பெற்றிட முண்டியடித்து வருகின்றன. அரசு பொது நிறுவனங்களால் முன்னேறிய தமிழ்நாடு, தற்போது தனியார்மயத்தால் முக்கியமாக மார்வாரி பனியா கும்பலால் சுரண்டப்படவிருக்கிறது.

முன்னனுபவம் இல்லாத அதானி குழுமத்தை போன்ற ஒரு தனியார் நிறுவனம் சுரங்கம், மின் உற்பத்தி, விமான நிலைய நிர்வாகம், துறைமுக நிர்வாகம், இரயில்வே சேவை என அனைத்து துறைகளையும் எடுத்து நிர்வகித்திட முடியுமானால் தமிழ்நாடு அரசு ஏன் மாநிலத்தின் தொடர்வண்டி சேவையை தாமாக நிர்வகித்திட கூடாது?

தமிழ்நாட்டில் பொதுமக்கள் போக்குவரத்து சேவையை மாநில அரசு தனது முதன்மை பணியாகவே தொடர்ந்து வழங்கி வருகிறது. லாபநோக்கமில்லாத மாநில அரசு போக்குவரத்து சேவை வெகுமக்களுக்கானதாக உள்ளதால் தமிழர்களின் சமூக - பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவில் வழிவகுக்கிறது.

இச்சூழலில், மாநிலத்தின் இரயில் சேவையை தனியாருக்கு தாரைவார்த்தால் இத்துறையின் சமூக பங்களிப்பு வெகுவாக குறைக்கப்படும். இதன்மூலம், தமிழ்நாட்டின் போக்குவரத்து வெறும் லாபநோக்கிலான தொழிலை நோக்கி நகர்த்தப்படும்.

தமிழ்நாட்டின் சமூக - பொருளாதாரத்தின் முன்னேற்றத்தை காத்திடவும் தமிழர்களின் பொருளாதாரம் மாநில மக்களின் முன்னேற்றத்திற்கு பயனளிக்கும் வகையில் மாநில அரசின் கொள்கைகளை வகுத்திட வேண்டும்.

ஆகையால், அரசு பொது துறைகளை நிர்வகிக்கும் திறனற்ற ஒன்றிய மோடி அரசிடமிருந்து தென்னக இரயில்வேயின் தமிழ்நாட்டு தடங்களை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த முன்வர வேண்டும் என்று மேபதினேழு இயக்கம் தனது ஆலோசனையை முன் வைக்கின்றது.

- மே பதினேழு இயக்கம்

Pin It