modi ambani tataபுலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் பிற உழைக்கும் வர்க்கங்களின் பெருந்துன்பங்கள், அவர்கள் கொரோனாவுக்குத் தப்பிப் பிழைத்தாலும் தீரப்போவதில்லை. மத்திய, மாநில அரசாங்கங்கள் மூலதனத்தின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழிலாளர் சட்டங்களில் விரைவான மாற்றங்களைச் செய்துக் கொண்டிருக்கின்றன.

தொழிலாளர் உரிமைகளைப் பறிப்பதில் பா.ஜ.க.வுக்கும் காங்கிரசுக்கும் எந்தக் கொள்கை வேறுபாடும் இல்லை. இந்த இரண்டு தேசியக் கட்சிகளைப் பொருத்தவரை, மூலதனமும் அதன் நலன்களுமே புனிதமானவை, தொழிலாளர் நலன்கள் கழித்துக் கட்டப்பட வேண்டியவை.

முதலாளித்துவ வர்க்கங்களின் நலன்களை உயர்த்திப் பிடிப்பதற்கு, ஆளும் வர்க்கங்கள் தேசியவாதத்தையும் தேசபக்தியையும் இந்திய அரசியலில் புதிய போதை மருந்துகளாகக் கண்டறிந்துள்ளன. புதுடெல்லியில் உள்ள மத்திய அரசாங்கமும், அசாம், உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா,, பஞ்சாப், ஒடிசா ஆகியவற்றில் மாநில அரசாங்கங்களும் பெருந்தொற்றின் போது மோசமாகிக் கொண்டிருக்கும் பொருளாதாரச் சூழலில் தொழிலாளர் சட்டங்களில் தீங்கிழைக்கும் சீர்திருத்தங்களைச் செய்வதில் முன்னணியில் இருக்கின்றன.

மோடி அரசாங்கத்தின் தவறானப் பொருளாதாரக் கொள்கைகளாலும் தவறான முன்னுரிமைகளாலும் கொரோனா வைரஸ் வருவதற்கு முன்பே பொருளாதாரச் சூழல் பெருத்த அடிவாங்கியிருந்தது. திட்டமிடப்படாத ஊரடங்கல்கள் மோசமானப் பொருளாதார வீழ்ச்சியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.

பொருளாதாரத்தை மீட்பதற்கு நிலையான மாற்றுக் கொள்கைகளையும் திட்டங்களையும் கண்டறிவதற்குப் பதிலாக, அரசாங்கங்கள் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் பணயம் வைத்து முதலாளித்துவ வர்க்கங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதைத் தீவிரமாகச் செய்கின்றன.

பெருந்தொற்றைப் பயன்படுத்தி, உழைக்கும் மக்களுக்குத் தீங்கிழைக்கும் வகையில் அவசரச் சட்டங்கள் மூலம் சட்டபூர்வ மாற்றங்களைத் திணிப்பதற்கு அரசாங்கங்கள் ஜனநாயகமற்ற சட்ட வழிமுறையை பயன்படுத்துகின்றன.

உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் அரசாங்கங்கள் அடுத்த மூன்றாண்டுகளுக்கு தொழில்துறைக்கு ஆதரவாக முப்பத்தியெட்டு தொழிலாளர் சட்டங்களை இடைமுடக்கம் செய்துள்ளன. மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசா அரசாங்கங்கள் தொழிலாளர்களுக்குப் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அளித்துவந்த 1948 ஆம் ஆண்டின் தொழிற்சாலைச் சட்டத்தில் சீர்திருத்தம் செய்துள்ளன.

தொழில்கூடங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பு, உடல்நலப் பாதுகாப்பு, மற்றும் பிற நல்வாழ்வுக்கு ஓரளவுக்கு உத்தரவாதமளித்துவந்த தொழிலாளர் சட்டங்களை தொழிலாளர் சட்டச் சீர்திருத்தங்கள் நீர்த்துப்போகச் செய்ததுள்ளது மட்டுமின்றி, அவற்றை இடைநிறுத்தம் செய்து, அவற்றைப் பின்பற்றுவதில் நிறுவனங்களுக்கு விலக்களித்துள்ளன.

வேறுபல மாநில அரசாங்கங்களும் வேலை நேரத்தை அதிகரிக்கும் வகையிலும், கூடுதல் நேர உழைப்பை வரைமுறைப் படுத்தும் வகையிலும் சட்டத்திருத்தங்களை செய்துக் கொண்டிருக்கின்றன. வேண்டும்போது வேலைக்கழைக்கவும், வேண்டாதபோது வெளியேற்றவும் வழிவகுப்பதே இந்தச் சட்டத் திருத்தங்களின் ஒரே குறிக்கோளாகும்.

இத்தகைய பிற்போக்கான சட்டத்திருத்தங்கள் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக என்றும் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தும் என்றும் கூறிக்கொள்ளப்பட்டாலும், அவை தொழிலாளர் பாதுகாப்புக்கான பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு உடன்பாடுகள் மற்றும் பன்னாட்டு ஒப்படைவுகளை மீறுபவையாக இருக்கின்றன.

இந்தியாவில் உழைப்புச் சந்தை சீர்திருத்தங்கள், மாநில அரசுகளும் அரசாங்கங்களும் மக்களுடன் அல்லாமல் மூலதனத்தின் பக்கம் நிற்கப்போகின்றன என்ற பலமான மற்றும் தவறான சமிக்ஞைகளைத் தொழிலாளர் வர்க்கங்களுக்கு அனுப்புகின்றன. இந்தியாவில் மூலதனத்தைத் திரட்டுவதைவிட உழைக்கும் வர்க்கங்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் முக்கியத்துவம் குறைந்தவையே.

உழைப்புச் சந்தைக் கட்டுப்பாடகற்றல் என்பது கார்பொரேட் சக்திகளுக்கு மூலதனத்தைப் பலப்படுத்துவதற்கு ஆதரவானதாகும். அது சீர்திருத்தங்களின் பெயரால் புதிய தாராளவாத ஏற்பாட்டின் வைதீகத்தன்மைகளை முடுக்கிவிடுவதன் மூலம் சேமநல அரசு மற்றும் மறுவினியோக அரசாங்கம் என்ற கருத்தைக் கைவிடுகிறது.

அனைத்தையும் உள்ளடக்கிய தொழிலாளர் சட்டத்திருத்தங்களின் பின்விளைவுகள் அதன் இரட்டை நோக்கங்களை முறியடிக்கப் போகின்றன; மூலதனத்தின் உற்பத்தித் திறனையும் திரட்சியையும் அதிகரிக்கப் போகின்றன. அது தொழிலாளரின் பாதுகாப்பை பலவீனப்படுத்துவது, குறைந்த கூலி, பிற உரிமைகளும் ஊக்குவிப்புக்களும் குறைக்கப்படுவது ஆகியவற்றால் அவர்களின் உற்பத்தித் திறனை குறையச் செய்கிறது என்பது அனுபவரீதியாக நன்கு நிறுவப்பட்டுள்ளது.

தொழிலாளர் மன வலிமைக் குறைவு அவர்களின் உற்பத்தித் திறனைக் குன்றச் செய்கிறது, அது தொழிலாளர் திரட்சியைப் பலவீனப்படுத்துகிறது. ஆகவே, குறுகியகால மூலதன ஈர்ப்பு என்பது நீண்டகாலப் போக்கில் மூலதனத்துக்கும் நல்லதல்ல, தொழிலாளர்களுக்கும் நல்லதல்ல. எனவே பெருந்தொற்றுக்கால தொழிலாளர் சட்டத்திருத்தங்கள் சிந்தனையற்றவை; அருவருப்பானவை; கற்பிதமானவை; தொலை நோக்கற்றவை ஆகும்.

உழைப்புச் சந்தையின் சீர்திருத்தப் பொருளாதாரச் சட்டகம் மூலதனம், உழைப்பு ஆகிய இரண்டுக்குமே பொய்யான வாக்குறுதிகளின் அடிப்படையிலானவை. இந்தத் தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் தொழிலாளர்களைப் பலவீனப்படுத்துவது மட்டுமின்றி, பொருளாதாரத்தையும் மந்த நிலைக்குக் கொண்டுவருகின்றன. அது குடியரசையும் கூடப் பலவீனப்படுத்துகிறது.

மூலதனம் உற்பத்தித் திறன் மற்றும் திறன்பெற்ற உழைப்புச் சந்தையை ஈர்க்கிறது, மலிவான மற்றும் திறன் பெற்றிராத வேலையில்லாதோர் பட்டாளத்தை ஈர்ப்பதில்லை. அத்தகைய சூழலைத் தவிர்க்கும் முயற்சியில், தேவையற்ற தொழிலாளர் சட்டத்திருத்தங்களைக் கைவிடுவதன் மூலம் நாட்டின் நலனிலும் அதன் மக்களின் நலனிலும் பாதுகாப்பு மற்றும் சேமநலப் பொறுப்புக்களை அரசுகளும் அரசாங்கங்களும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

கொரோனாத் தொற்றினால் தூண்டிவிடப்பட்டுள்ள உலகளாவிய சுகாதார நெருக்கடியின்போது, மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுடன் நிற்கவேண்டியது ஜனநாயக மற்றும் சேமநல அரசுகள் ஒவ்வொன்றின் கடமையாகும். ஆனால் பெருந்தொற்றுத் தூண்டிய நெருக்கடி இந்தியாவில் உழைக்கும் வர்க்கங்களை வாக்குரிமையிழக்கச் செய்வதற்கு ஆளும் மற்றும் ஆட்சியில் இல்லாத வர்க்கங்களுக்கு வாய்ப்பை அளித்திருக்கிறது.

தொழிலாளர்களின் வியர்வையே முதலாளித்துவ இலாபமாக முதலாளிகளின் வங்கிக் கணக்குகளிலும் அவர்களுடைய அசையாச் சொத்துக்களாகவும் மாற்றம் அடைகிறது. உழைப்பே உற்பத்திச் செயல்முறையிலும் பொருளாதார வளர்ச்சியிலும் மையமாக இருக்கிறது.

ஆனால் உழைப்புச் சந்தை சீர்திருத்தச் சட்டகம் உழைக்கும் வர்க்கங்களை மூலதனத்துக்குக் கீழ்ப்படிந்ததாக மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய சித்தாந்த நடைமுறை 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே வலதுசாரி அரசியல் பொருளாதாரத்தின் அடையாளமாக இருக்கிறது. அது அதன் குறிக்கோள்கள், பகுப்பாய்வு, மற்றும் விளைவுகளின் பொருளில் ஒரு மாபெரும் பின்னோக்கிய பாய்ச்சலாகும்.

முதலாளித்துவத்துக்குள்ளயே உழைப்புக்கும் மூலதனத்துக்கும் உள்ள வரலாறு மற்றும் தாராளமற்ற தன்னிச்சையான அரசியல் பொருளாதாரப் பொருத்தப்பாடு வீழ்ச்சியடைந்து வருவது பற்றிய புரிதலின்மையின் காரணமாக சமூகப் பொருளாதாரம் குறித்த அறிவார்ந்த விளக்கம் இந்தச் சட்டத் திருத்தங்களுக்குப் பின்னால் உள்ள பொருளாதார மற்றும் அரசியல் தர்க்கத்தில் இல்லை.

தொழிலாளர் வர்க்கத்தின் மீதான வலதுசாரி அரசியல் மற்றும் பொருளாதாரத் தாக்குதல்களுக்கு அஞ்சத்தக்க வகையில் எதிர்ப்பைத் தெரிவிப்பது இந்தியா மற்றும் இந்தியத் தொழிலாளர்களுக்குத் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. முதலாளித்துவக் கொள்ளையின் அராஜகத்துக்கு எதிராக அமைப்பு ரீதியான போராட்டம் மட்டுமே இந்தியாவில் உழைக்கும் மக்கள் பிழைத்திருப்பதற்கான ஒரே மாற்று வழியாகும்.

ஊதியப் பாதுகாப்பு, கண்ணியத்துடன் உழைக்கும் வாய்ப்பு, பாதுகாப்பான வேலையிடம் என்பது தொழிலாளர்களின் அடிப்படை உரிமையும், இந்தியாவில் சமத்துவப் பொருளாதார வளர்ச்சிக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் முன்நிபந்தனையும் ஆகும்.

மோசமான பொருளாதார நிலைமைகளும், சமூக மற்றும் அரசியல் சீர்குலைவின் காரணமாகவே நாகரிகங்கள் வீழ்ச்சியடைந்தன என்பதற்கு வரலாறே சாட்சியாக இருக்கிறது. இந்தியா, திசைத் தெரியாத பொருளாதார நிர்வாகம், ஆணவ, அகங்கார அரசியல், அறியாமையில் உள்ள அரசாங்கம், மற்றும் சமுதாயத்தின் மீது இந்துத்துவா சக்திகளின் பெரும்பான்மைவாத மேலாதிக்கம் ஆகியவற்றின் காரணமாக இன்று நெருக்கடியான தருணத்தில் இருக்கிறது.

கூலிக்காகப் பேரம் பேசும் அரசியலை கடந்து சென்று, பாதுகாப்பான வேலையிடத்தில், பாதுகாப்பான வேலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் தொழிலாளர் இயக்கம் போராட வேண்டிய நேரம் இது. இந்தியத் தொழிலாளர் வர்க்கம், பிரிவினைவாத இந்துத்துவா அரசியல் தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை அழித்துக் கொண்டிருக்கும் மெய்நிலைமைகளை எதிர்கொண்டு போராட வேண்டிய நேரம் இது.

இந்தப் பரந்த நிகழ்ச்சி நிரல் உடனடியாகவும் தீவிரமாகவும் செயல்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றால், அனைத்து உழைக்கும் வர்க்க நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தவறினால், முதலாளித்துவ உணர்வுடனும் நடவடிக்கைகளுடனும் பிற்போக்கு இந்துத்துவா அரசியல் எழுச்சி பெறுவதற்கான நிலைமைகளை உருவாக்கிவிடும்.

உழைப்புச் சந்தை என்பது உழைக்கும் வர்க்கத்தின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தின் எதிர்காலத்திற்கு ஓர் அபாய அறிவிப்பாகும். இந்தியாவில் உழைக்கும் மக்களின் பாதுகாப்புக்கான ஒன்றுபட்ட போராட்டங்களின் மூலம் தொழிலாளர் சட்டத்திருத்தங்கள் முன்னெடுக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதைச் சார்ந்தே நாட்டின் எதிர்காலம் இருக்கிறது.

கவன்ட்ரி பல்கலைக்கழகம், ஐக்கிய அரசியம் (UK)

நன்றி: countercurrents.org

பவானி சங்கர் நாயக்
தமிழில்: நிழல்வண்ணன்

Pin It