election campiagnநடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு பெற்று விட்டாலும் முடிவுகளுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை! யார் அல்லது எந்தக் கட்சி அல்லது கூட்டணி வெற்றி பெற்றாலும் தமிழ்நாட்டின் வரலாற்றில் அது ஒரு திருப்புமுனையாகவோ மக்கள் வாழ்வில் ஒரு விடியலாகவோ அமையும் என்று நாம் நம்பவில்லை.

அதே போது இந்தத் தேர்தலைத் தமிழ்நாட்டில் காலூன்றும் வாய்ப்பாக பாரதிய சனதா கட்சி கருதியது. எனவே பாசிச எதிர்ப்புக் களத்தில் போராடும் மக்கள் - இயக்கங்கள் பாசக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் அதனைத் தோற்கடிக்கப் பாடுபடுவது என்று முடிவெடுத்தோம். 

நம்மைப் பொறுத்த வரை யாருக்கு வாக்களிப்பது பாசகவைத் தோற்கடிக்கப் பயன்படும் என்ற முடிவை வாக்காளர்களிடமே விட்டு விட்டோம். நம்மிற்சிலர் பாசகவைத் தோற்கடிக்க எதிர்த்தரப்பிலுள்ள திமுக கூட்டணிக்கு வாக்குக் கேட்க முடிவெடுத்தாலும் அது பாசிச பாசக எதிர்ப்பியக்கத்தில் சிக்கலைத் தோற்றுவிக்கவில்லை.

தமிழ்த் தேசிய நோக்கில் பெரும்பான்மைத் தொகுதிகளில் ஒரு கட்சி அல்லது கூட்டணியை ஆதரிப்பது இறைமையில்லாத மாநிலச் சட்டப் பேரவையையும் அரசுரிமையற்ற மாநில ஆட்சியையும் தேர்ந்தெடுப்பதில் பங்கேற்பதாகும் என்ற முறையில் 214 தொகுதிகளில் நாம் தேர்தலில் பங்கேற்கவில்லை (அல்லது நோட்டாவுக்கு வாக்களித்தோம்). இதிலும் சில தோழமை அமைப்புகள் அதிமுக கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்தாலும் அதுவும் கூட பாசிச பாசக எதிர்ப்பியக்கத்தில் எவ்வித சிக்கலையும் தோற்றுவிக்கவில்லை.

பாசிச பாசக எதிர்ப்பியக்கத்தின் போராட்ட ஒற்றுமையைக் காத்துக்கொண்டே வேறுபட்ட உத்திகளைக் கையாண்ட அரசியல் முதிர்ச்சிக்காக மக்கள் இயக்கங்களைப் பாராட்டத்தான் வேண்டும். இருபது தொகுதிகளில் மக்கள் இயக்கங்கள் பன்னிரண்டு நாட்களுக்கும் மேலாக நடத்திய பாசக எதிர்ப்புப் பரப்புரை எவ்வளவு திறம்பட அமைந்தது என்பதைத் தெரிந்து கொள்ள மே 2 வரை காத்திருக்கத் தேவையில்லை. 

சென்னையிலும் கோவை தெற்கிலும் மக்கள் இயக்கங்களின் பரப்புரையைத் தடுக்க பாசக ஆர்எஸ்எஸ் வன்முறையாளர்கள் செய்த முயற்சியை நம் தோழர்கள் பொறுமையாக எதிர்கொண்டு முறியடித்தார்கள். இறுதியில் பாசக எந்த அளவுத் தோல்வி கண்டாலும் அந்தத் தோல்வியில் மக்கள் இயக்கங்களின் பங்கும் உறுதியாக இருக்கும்.

20 தொகுதிகளில், அல்லது அவற்றுள் பெரும்பாலானவற்றில் பாசகவைத் தோற்கடித்து விட்டால் பாசிசத்தை வீழ்த்தி விட முடியும் என்ற மயக்கம் நமக்கில்லை. இந்திய வல்லரசு பாசிசத் தலைமையில்தான் நீடித்து வரும், தமிழ்நாட்டிலும் கூட யார் ஆட்சிக்கு வந்தாலும் பாசிசம் தொடர்ந்து கேடுகளைச் செய்து வரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் பாசிச பாசகவை எவ்வளவு கடுமையாக வெறுத்தொதுக்குகிறார்கள் என்பதை சற்றொப்பக் காட்டும் அளவுகோலாக இந்தத் தேர்தல் முடிவு அமையக் கூடும்.

பாசிச பாசகவைத் தோற்கடிக்கும் மக்கள் இயக்கங்களின் பரப்புரையில், குறிப்பாக திருவையாறு, கோவை தெற்கு, சென்னை ஆயிரம்விளக்கு ஆகிய தொகுதிகளில் முனைப்புடன் பாடாற்றிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர்களுக்குப் புரட்சிய வாழ்த்து! அனைத்துத் தொகுதிகளிலும் உழைத்த மக்கள் இயக்கங்களின் தோழர்கள் அனைவரையும் பாராட்டுகின்றோம்!

பாசிச பாசக எதிர்ப்பு மக்கள் இயக்கங்கள் இத்தேர்தலில் கட்டிய ஒற்றுமையையும் காட்டிய செயல்முனைப்பையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்! பாசிச எதிர்ப்பின் இறுதிக் களங்களான மக்கள் பெருந்திரள் போராட்டங்களின் பாதையில் முன்னேறிச் செல்ல உறுதியேற்போம்!

- தியாகு

Pin It