உலகளவிலும் சரி, இந்தியாவிலும் சரி பொருளாதாரச் சரிவை, பெருமந்தமாக்கிய உச்சப்புள்ளிதான் கொரோனாவே தவிர, கொரோனாவினால் மட்டுமே பெருமந்தம் வரவில்லை. முதலாளித்துவமும், பாஜக அரசும் தம் வசதிக்கேற்ப எல்லா அரசியல் பொருளாதாரப் பிரச்சனைகளுக்குமான பழியையும் கொரோனாவின் தலையில் கட்டும் விதமாகத்தான் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். தற்பொழுது ஏற்பட்டுள்ள மந்தநிலை 2009இல் ஏற்பட்டதைக் காட்டிலும் மோசமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கிறது. பெருமந்தத்தின் விளைவாக உலகப் பொருளாதாரம் 2009இல் 0.6% சுருங்கியதாகவும், கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தால் உலகப் பொருளாதாரத்தில் 1.5% அளவிற்குச் சரிவு ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.

migrant workers coronaகொரோனாவைச் சாக்கிட்டு மக்கள்-போராட்டங்களை முடக்கியதிலும், இனிமேல் எல்லா அரசியல் பொருளாதார பழிகளையும் கொரோனாவின் மீது போட்டு விடலாம் என்பதிலும் பாஜகவுக்கு இரட்டை மகிழ்ச்சி.

திசம்பரிலிருந்தே கொரோனா சீனாவில் மையங்கொண்டுள்ள நிலையில், அருகிலுள்ள மக்களடர்த்தி அதிகம் கொண்ட இந்திய நாட்டின் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து கொரோனாவை எதிர்கொள்ளத் தயார்நிலையில் இருந்திருக்க வேண்டும். ஆனால் பாஜக அரசு ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஆழ்ந்திருந்தது. பொருளாதாரம் சரிந்து மக்களின் பணப் புழக்கமும், நுகர்வும் குறைந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக எந்த முன்னேற்பாடும் செய்யாமல் திடீரென்று மார்ச் 24 நள்ளிரவில் மோடி ஊரடங்கு உத்தரவிட்டார். குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு மக்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்பதைப் பற்றிக்கூட சிந்திக்காமல் மார்ச் 25 முதல் 21 நாட்களுக்குக் கண்மூடித்தனமாக ஒரு முழு அடைப்பை அறிவித்திருக்கிறார்கள். எப்பொழுதும் மேல்தட்டையே கவனிக்கும் பாஜக அரசு அன்றாடங்காய்ச்சிகள், தினக்கூலிகளைப் பற்றியோ, புலம்பெயர் தொழிலாளர்களைப் பற்றியோ யோசிக்காததில் ஆச்சரியமில்லை.

பணமுள்ளவர்கள் தேவையானதை வாங்கி முடக்கிவைத்துள்ளனர். எளிய மக்கள் வாங்க இயலாத வண்ணம் ஊகவாணிகத்தையே இதனால் பாஜக அரசு ஊக்குவித்துள்ளது. பட்டினியால் இறக்கட்டும், கொரோனாவினால் இறக்க வேண்டாம் என விட்டுவிட்டார்களா என்ன?.. மக்கள் சோற்றுக்கு வழியில்லாமல் பட்டினி கிடந்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்தாக்கம் அதிகரிக்கும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் எதற்காக ஆட்சி செய்ய வேண்டும்? முன்பே அனைவருக்கும் பொது விநியோக முறையில் உணவுப் பொருட்களை விநியோகித்து அதன் பிறகு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருக்க வேண்டும். வேற்று மாநிலத் தொழிலாளர்களை பாதுகாக்குமாறு மாநிலங்களை அறிவுறுத்தி அதற்கான நிதியையும் வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் கோடிக்கணக்கான தொழிலாளர்களை சாவின் விளிம்பிற்குத் தள்ளி அலைக்கழித்திருக்கிறார்கள்.

அரசின் ஆதரவின்றி அகதிகளாக விரக்தியுற்று அவர்கள் கால்நடையாகச் சென்று கொண்டிருக்கும் போது 5 நாட்களுக்குப் பிறகு மார்ச் 30ஆம் தேதி, நடுவழியில் அவர்களை நிறுத்தி, வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதைத் தடுக்க அனைத்து மாநில எல்லைகளையும் மூட வேண்டும் என்றும், பதினான்கு நாட்கள் தனிமுகாம்களில் அவர்களை அடைக்க வேண்டும் என்றும் மாநிலங்களுக்குக் கட்டளையிட்டுள்ளனர். குற்றம் செய்தது மோடி அரசு, தண்டிக்கப்பட்டதோ தொழிலாளர் வர்க்கம்.

மக்கள் வேலைக்குத் திண்டாடிய பொழுதெல்லாம் நூறு நாள் வேலைத் திட்டத்தை கண்டு கொள்ளாமல் நிதியை வெட்டிய பாஜக அரசு தற்பொழுது அதற்கான கூலியில் வெறும் 20 ரூபாய் அதிகரித்து, ஊரடங்கை அறிவித்த பிறகு நிலுவைத் தொகையில் ரூ.4 ஆயிரத்து 431 கோடியை விடுவித்துள்ளது. ஏப்ரல் 10 தேதிக்குள் மொத்த நிலுவையான ரூ.11ஆயிரத்து 499 கோடியையும் விடுவிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.

பேரிடர் துயர்தணிப்பு நிதி, கனிம வளமுள்ள மாநிலங்கள் பெறும் கனிம நிதியம், கட்டுமானத் தொழிலாளர்களுக்கான துயர்தணிப்பு நிதி ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட தொகையை தற்பொழுது துயர்தணிப்புக்குப் பயன்படுத்துமாறு மத்திய அரசு, மாநிலங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.இவற்றைப் பயன்படுத்துவதற்கான உரிமை மாநிலங்களிடம் ஏற்கெனவே உள்ள போது அதில் மத்திய அரசின் பங்கு புதிதாய் எதுவும் இல்லை.

கொரோனா தாக்குதலிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார நிதித்தொகுப்பை அளிப்பதாக நிதியமைச்சர் தெரிவித்தார். பொது விநியோக முறையின் பயனாளர்களுக்குக் கூடுதலாக 5 கிலோ தானியமும், 1கிலோ பருப்பும் வழங்கப்படும். அடுத்த மூன்று மாதங்களுக்கும் சேர்த்து ரூ.1,000 வங்கிக் கணக்கில் செலுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார். அதாவது மாதத்திற்கு வெறும் 330 ரூபாய் அளிக்கப்படவுள்ளது. ஒரு நாளைக்கு 11 ரூபாயை வைத்து என்ன செய்ய முடியும்? பிரதமர்-விவசாயத் திட்டத்திற்கான முதல் தவணை ரூ. 2000 ஏப்ரல் 1இல் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று மாதங்களுக்கு ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு மாதத்திற்கு ரூ. 500 அளிக்க உள்ளதாகவும், பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு மூன்று மாதங்களுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதுதான் அவர்கள் வழங்கியுள்ள துயர்தணிப்பு. இந்த உதவியையும் ஏற்கெனவே உள்ள திட்டங்களின் பயனாளிகள் மட்டுமே பெற முடியும். இத்திட்டங்களின் பயனாளராக இல்லாத எவருக்கும் எந்த உதவியும் கிடைக்காது. இயல்பான நாட்களில் கூட இதனால் எந்த அளவுக்கு மக்கள் உதவி பெறுவர் என்பது கேள்விக்குறியே.

பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் கொரோனா தொற்றைத் தடுக்கப் போராடி வரும் சுகாதாரப் பணியாளர்களுக்குக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மருத்துவ ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு வசதிகள் செய்து தராமல், கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் காப்பீட்டு நிவாரணம் தருவோம் என்பது என்ன மாதிரியான வழிமுறை? வருமுன் காக்கும் அடிப்படையில் பாஜக எதையும் செயல்படுத்தவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த துயர்தணிப்புத் திட்டங்களை பாஜக அரசின் காலங்கடந்த ஞானோதயம் என்று யாரேனும் நினைத்தால் அது தவறு. அவர்களின் திட்டம் என்ன? துயர்தணிப்பு (நிவாரணம்) அளிப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும் ஆனால் அளிக்கக் கூடாது என்பது தான். இல்லையென்றால் எதற்காகச் செயல்படுத்த முடியாத ஒரு நிலையை உருவாக்கி பெயரளவில் இவற்றை அறிவித்துள்ளனர்? பொது விநியோக ஊழியர்கள் ஊரடங்கு முடிந்தவுடன் விநியோகம் செய்வதாகவே தெரிவித்துள்ளனர். அதனால் எதற்காக இத்திட்டத்தை அறிவித்தார்களோ அதைச் செயல்படுத்த முடியாத நிலைமையை ஏற்படுத்தியே அறிவித்துள்ளார்கள். நிதிப் பற்றாக்குறை அதிகமானால் பங்குச்சந்தை சரியும். கார்ப்பரேட் நண்பர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்பதே பாஜக அரசின் கவலையாக உள்ளது.

ரிசர்வ் வங்கி கடன் தவணைகளை செலுத்துவதற்கான காலத்தை மூன்று மாதம் நீட்டித்துள்ளது. வருங்கால வைப்பு நிதிகளில் 75 சதவீதம் வரை பெற்றுக் கொள்ள அனுமதியும் அளித்துள்ளது. 5.15 சதவீதமாக இருந்த வங்கிக் கடன் வீதத்தை ரெப்போ’ 0.75% குறைத்து 4.4% ஆக நிர்ணயித்துள்ளது. ரிவர்ஸ்-ரெப்போ வீதத்தை 0.90% குறைத்து 4%ஆக நிர்ணயித்துள்ளது. இதனால் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டிவிகிதமும் குறைக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 7.1 சதவீதமாகவும், தேசிய சேமிப்புப் பத்திரத்திற்கான வட்டி 6.8% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கு, வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.6 சதவீதத்திலிருந்து 7.4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உரிய அளவில் நிதி ஒதுக்காமல், ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கையில் மாற்றம் கொண்டுவருவதன் மூலம் மட்டுமே பொருளாதார மந்தத்தை சரிசெய்ய இயலாது.

நுகர்வோர் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் ஃபிப்ரவரியில் 7.59 % உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலைவாசி 10.81% சதவீதம் உயர்ந்துள்ளது. அதில் தானியப் பொருட்களின் விலைவாசி 5.23%, காய்கறி விலைவாசி 31.61% உயர்ந்துள்ளது. பருப்பு வகைகளின் விலை 16.61% உயர்ந்துள்ளது. மீன் இறைச்சியின் விலை 10.2%, முட்டை விலை 7.28% உயர்ந்துள்ளது. இந்தியாவின் சராசரி பணவீக்கம் 6.58 % ஆகவும் தமிழ் நாட்டில் 7.4% ஆகவும் உள்ளது.

தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு அறிக்கையின் (ஐஐபி) படி 2020 ஜனவரி மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தியானது சென்ற ஆண்டைக் காட்டிலும் 2% உயர்ந்துள்ளது. ஏப்ரல்-ஜனவரி 2019-20 காலகட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது 0.5 சதவீதமாக உள்ளது. சென்ற நிதி ஆண்டின் (2018-19) ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது சுரங்கத்துறை (4.4%), உற்பத்தித்துறை (1.5%) மற்றும் மின்சாரத் துறை (3.1%) வளர்ச்சி பெற்றுள்ளது. 2019-20இல் இந்த மூன்று துறைகளிலும் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான ஒட்டுமொத்த வளர்ச்சி முறையே சுரங்கத் துறையில் 1.0 % ஆகவும், உற்பத்தித் துறையில் 0.3% ஆகவும் மற்றும் மின்சாரத் துறையில் 0.9% ஆகவும் உள்ளது.

உற்பத்தித் துறையில் இருபத்துமூன்று தொழில்வகைகளில் 12 தொழிற்குழுக்கள் 2020 ஜனவரி மாதத்தில் எதிர்மறை வளர்ச்சி காட்டியுள்ளன. அதாவது வளராமல் தேய்ந்துள்ளன. அனைத்தை விடவும் ‘புகையிலைப் பொருட்களின் உற்பத்தி’ 22.8 % உயர்ந்துள்ளது. ‘அடிப்படை உலோகங்களின் உற்பத்தி’ 14.1 சதவீதமும், ‘அறைகலன்களின் உற்பத்தி’ 9.0 சதவீதமும் உயர்ந்துள்ளன. 'பதிவுசெய்யப்பட்ட ஊடகங்களின் அச்சிடுதல் மற்றும் மறு உற்பத்தி ' -16.3%, உணவுப்பொருட்களின் உற்பத்தி -0.9%, 'கணினி, மின்னணு மற்றும் ஒளியியல் தயாரிப்புகளின் உற்பத்தி' -11.6%, உலோகப் புனைபொருட்களின் உற்பத்தி -7.2% மற்றும் 'மோட்டார் வாகனங்களின் உற்பத்தி' -10.6% குறைந்துள்ளன. ஏப்ரல்-ஜனவரி வரையிலான உலோகப் புனை பொருட்களின் உற்பத்தி -13.1%, இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் உற்பத்தி -10.2 %, மின் உபகரணங்களின் உற்பத்தி -2.5%, ஜவுளித்துறையில் உற்பத்தி -1.9% குறைந்துள்ளன.

பயன்பாட்டு அடிப்படையில் மூலதனப் பொருட்களின் உற்பத்தி -4.3%, உள்கட்டமைப்பு / கட்டுமானப் பொருட்களின் உற்பத்தி -2.2%, நீடித்த நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி -4.0% மற்றும் உடனடி நுகர்வு பொருட்களின் உற்பத்தி -0.3% குறைந்துள்ளது. முதன்மைப் பொருட்களின் உற்பத்தி 1.8%, இடைநிலைப் பொருட்களின் உற்பத்தி 15.8% வளர்ச்சி பெற்றுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் எஃகு உற்பத்தியின் அளவும் 8.56 மில்லியன் டன்னாக சரிந்துள்ளது. அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஜவுளித்துறையின் ஏற்றுமதியும் குறைந்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தில் 75% முடக்கப்பட்ட நிலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடும் வீழ்ச்சி ஏற்படும் எனவும், 2021ல் மொத்தப் பொருளுற்பத்தியின் மதிப்பு 3.5% குறையும் எனவும் மத்தியப் புள்ளியியல் அமைப்பின் ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். உற்பத்தித் துறையில், உணவு பதப்படுத்துதல், மருந்துத் தொழில்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுவதாலும், பொறியியல் துறை, உலோகத் துறை போன்ற பிற பிரிவுகளும் செயல்பாடுகளை நிறுத்தி விட்டதாலும் உற்பத்தி 70 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த உற்பத்தியில் உணவு, பானங்கள் மற்றும் புகையிலை ஆகியவற்றின் உற்பத்தி 10 % பங்கையே வகிக்கின்றன.

இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் --- ஆட்டோமொபைல்கள், நுகர்வோர் பொருட்கள் மற்றும் மூலதனப் பொருட்கள் --- மொத்த உற்பத்தித் துறையில் சுமார் 20% ஆகவும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7% ஆகவும் பங்கு வகிக்கின்றன. ஒட்டுமொத்தமாக, உற்பத்தித்துறை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.1 சதவீதமாக உள்ளது. பொருளாதார முடக்கத்தால் உற்பத்தியில் மொத்த இழப்பு ரூ. 6 டிரில்லியன் ஏற்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை விரைவாகக் கட்டுப்படுத்தினாலும் தொழில்துறை மீண்டு வருவதற்கு 9 மாதம் ஆகும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

ராபி பயிர்களின் அறுவடையும் பாதிக்கப்பட்டுள்ளதால் நான்காம் காலாண்டில் உணவு உற்பத்தி அதிகமாகும் என்ற நம்பிக்கையும் பொய்யாக உள்ளது. ஏற்கெனவே 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை 6.1%ஆக அதிகரித்த நிலையில், தற்போது வர்த்தகத்துறை,சுற்றுலாத்துறை, சேவைத்துறை எனப் பெரும்பாலானத் துறைகள் முடங்கியதால் பல கோடி மக்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.சுற்றுலாத் துறையில் மட்டுமே 3.8 கோடி பேர் வேலையை இழக்க உள்ளனர்.

சிறு, குறு தொழில் நிறுவனங்களும், சிறு உற்பத்தியாளர்கள், சிறு வணிகர்கள் சுய தொழில் முனைவோர், விவசாயிகள் நிதிநெருக்கடியால் பாதிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

பொருளாதார சரிவினாலும் கொரோனா அச்சுறுத்தலாலும் பெருமளவில் நிதிமூலதனம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 25 டாலருக்கும் குறைவாக வீழ்ந்துள்ள காலகட்டத்திலும் கூட ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு 76 என்ற அளவுக்கு மேல் வீழ்ந்துள்ளது. கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியுள்ளது மத்திய அரசு. கலால் வரி வரம்பு பெட்ரோலுக்கு ரூ.18 ஆகவும், டீசலுக்கு ரூ.12 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பொருளாதர மந்த நிலையிலும், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் கச்சா எண்ணெய் விலைக் குறைவின் பலன் மக்களுக்குக் கிடைக்க விடவில்லை பாஜக அரசு. சுங்கவரியின் மூலமும் பெட்ரோல், டீசல் விற்பனையின் மூலமும் மக்களின் வரிப்பணத்தில் பல இலட்சம் கோடிகளை மத்திய அரசு அபகரித்துள்ளது. அதையெல்லாம் மக்களுக்கு துயர்தணிப்பு உதவி வழங்க பாஜக அரசுக்கு மனம் வருமா?.

பெருமுதலாளிகளுக்கு வரித் தள்ளுபடி, கடன் தள்ளுபடி என பல இலட்சம் கோடிகளை சலுகைகளாக அள்ளி இரைத்தது பாஜக அரசு. அவர்களை வளம் உருவாக்குபவர்கள் எனப் போற்றியது. இப்பொழுது எங்கே அந்த வளம் உருவாக்குபவர்கள்? கொரோனா அச்சுறுத்தலிலிருந்து மக்களுக்கு துயர்தணிப்பு அளிப்போம் என்று அவர்கள் வாய் திறக்கவும் இல்லை. பொருளாதாரத்தை மந்த நிலையிலிருந்து மீட்டெடுக்கவும் முன்வரவில்லை. ஊரடங்கு அறிவித்த ஐந்து நாட்களுக்குப் பிறகே ஒருவர் பின் ஒருவராக சில கோடிகளை விட்டெறிந்து, வாழ்நாள் வள்ளல் பட்டத்தைப் பெற்று செல்கிறார்கள். ஆனால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் அடிப்பது என்னவோ பெருங்கொள்ளை மட்டும் தான். அவர்களைக் குற்ற நடவடிக்கைகளிலிருந்து காப்பதற்குத்தானே பாஜக அரசு உள்ளது! சமீபத்தில் நிறுவனச் சட்டத்தில் பாஜக அரசு கொண்டுவந்துள்ள திருத்தமும் அதன் ஒரு பகுதி தானே! பெருமுதலாளிகள் அளித்த கோடிகளும் பெறுநிறுவன சமூகப் பொறுப்பு வரியின் ஒரு பகுதியாகவே உள்ளது என்பதால் அவர்கள் ஒரு பைசா கூட நன்கொடை வழங்கவில்லை என்பதையும் இங்கு அடிக்கோடிட்டுக் குறிப்பிடவேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான செலவுகளுக்கு நிதி பெறுவதற்காக என்று மக்களிடமிருந்து மேலும் அபகரிக்க மோடி ‘பிரதமர் கேர்ஸ்’ என்ற புதிய நிதியத்தை உருவாக்கியுள்ளார். பேரிடர் துயர்தணிப்புக்காக பிரதமர் தேசியத் துயர்தணிப்பு நிதி என்று ஏற்கெனவே ஒன்று இருக்கும் போது தற்போது எதற்காக ’பிரதமர் கேர்ஸ்’ என்ற புதிய அறக்கட்டளையை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கொரோனாவைக் கை கழுவதாகக் கூறி மக்களையும், பொருளாதாரத்தையும் கைகழுவிய பாஜக அரசுதான் சமூக விலகலைத் தீவிரமாகக் கடைப்பிடித்துள்ளது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

- சமந்தா

Pin It