தந்தை பெரியார் திராவிடர் கழகம் சென்னையில் நடத்திய குத்தூசி குருசாமி நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய ‘சங்கொலி’ பொறுப்பாசிரியர் திருநாவுக்கரசு உரை:

குத்தூசியாரைப் பற்றி அறிகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது எப்படி என்றால் - சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருக்கிற ‘டியுசிஎஸ்’ என்கிற கூட்டுறவு பண்டகச் சாலையில் எனக்கு வேலை கிடைத்தது. அதற்கு முன் பணம் - ‘டிபாசிட்’ கட்டிப் பணியில் சேர வேண்டும். வேலை நியமன உத்தரவை எடுத்துக் கொண்டு பணம் கட்டுவதற்காகச் சென்றேன். தலைமைக் காசாளர் இடத்தில் பலர் - பலவிதமான இனங்களில் பணம் கட்டுவதற்காக வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள். என்னைப் போன்றவர்களும் நின்று இருந்தார்கள் - நானும் போய் நின்றேன்.

அக்கூட்டுறவு நிறுவனம் இன்றும் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. நான் நின்றிருந்த இடத்திற்கு நேரே வெள்ளைச் சலவைக் கல்லில் ‘The Pioneers of the Society’ எனத் தலைப்பிட்டு 14 நபர்களுடைய பெயர்கள் பொறிக்கப்பட்டு இருந்தது. அதில் உ.வே.சா. சில்வர்டங் சீனிவாச சாஸ்திரியார், தமிழில் வெளிவந்த தலையணை மந்திரம் என்கிற இரண்டாவது நாவலை எழுதிய எஸ்.எம். நடேச சாஸ்திரியார், என். அய்யர், தீட்சதர், சாஸ்திரி என 13 பெயர்கள் வரை படித்தேன். கடைசியாக எம்.சிங்காரவேல் செட்டியார் என்றும் ஒரு பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. இவர் நம் சிங்காரவேல் செட்டியார் இல்லை என்பதைப் பிறகு தெரிந்து கொண்டேன்.

தலைமைக் காசாளர் எல்லோரிடமும் ‘பணம்’ வாங்கிக் கொண்டு இருந்தார். அந்த அலுவலகத்தில் 1966லேயே 100க்கு 90 பேர் பார்ப்பனர்கள் தான் பணியாற்றி வந்தார்கள். பணம் கட்டுவதற்கு நான் அப்போது 4 ஆவது ஆளாக இருந்தேன். என்னை அந்தக் காசாளர் பார்த்துக் கொண்டே இருந்தார். என் ஒரு கரத்தில் விடுதலை, நவமணி, ஜனசக்தி, பத்திரிகைகளை வைத்து இருந்தேன்.

அவற்றைக் கையில் பிடித்த வண்ணம் கவுண்ட்டரை யொட்டி நகர்வதையும் - அப்பத்திரிகைகளையும் பார்த்துக் கொண்டு இருந்த - அந்த காசாளர் என்னைப் பார்த்து மூன்று மணிக்கு வரச் சொன்னார். ஆனால், அன்று பணம் கட்டியாக வேண்டும். சரி, மூன்று மணிக்கே வருவோம் என மாடிப்படிகளில் இறங்கி வருகிறபோது - அவ்வலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டு இருந்த திராவிடர் கழக ஈடுபாடுள்ள தோழர் பி.டி. இரகுபதி என்பவர் என்னைப் பார்த்து, ‘எங்கய்யா வந்தே’ என்று விவரம் கேட்டார். அனைத்தையும் கூறினேன். பிறகு அவருடைய முயற்சியால் விரைவாகப் பணத்தைக் கட்டிவிட்டேன்.

பின்னர், இரண்டு நாள் கழித்து அந்தத் தோழர் பி.டி.இரகுபதி வீட்டில் இருந்து ஒரு ‘பழைய’ விடுதலை ஏட்டைக் கொண்டு வந்து ‘குத்தூசி’ பகுதியைப் படிக்குமாறு என்னிடம் வந்தார். அந்தக் கட்டுரையில் குத்தூசி யார் என்ன எழுதியிருந்தார் தெரியுமா?

டியுசிஎஸ் எப்படிச் செயல்படுகிறது? அதன் தலைமை அலுவலகம் எப்படி இயங்குகிறது? பார்ப்பனர் ஆதிக்கம் எப்படி மேலோங்கி இருக்கிறது என்பதை நேரில் கண்டு அறிந்து எழுத வேண்டும் என்று விரும்பி டியுசிஎஸ் அலுவலகம் வந்து இருக்கிறார் குத்தூசியார். அன்று மஹாளய அமாவாசை. இது போன்ற நாள்களில் அந்தத் தலைமை அலுவலகமே 11 மணிக்குத்தான் ஆரம்பமாகும்.

அந்த நேரத்தில் குத்தூசியார் கறுஞ் சட்டை அணிந்து கம்பீரமாக அலுவலகத்தில் நுழைந்து இருக்கிறார். மிக பெரிய ஹால்; எல்லாப் பார்ப்பனர்களும் நெற்றியில் மதக் குறியோடு இருக்கிறார்கள். மஹாளய அமாவாசையாதலால் தலை மூழ்கி நீண்ட குடுமியை மின்விசிறியின் காற்றால் ஆற வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இத்தருணத்தில் தான் குத்தூசியார் நுழைந்து இருக்கிறார். கறுஞ்சட்டை அணிந்து வந்த இவரைத் தெரிந்தோ, தெரியாமலோ அலுவலகத்தில் உள்ள அனைவரும் - எழுந்து நின்று விட்டனர். அதன் பிறகு உரிய அலுவலரைச் சந்தித்து அவர் குத்தூசிக் கட்டுரையை எழுதி இருக்கிறார்.

அந்தக் கட்டுரையின் ஜீவன் எது என்றால் அந்த அலுவலகத்தில் ‘பார்ப்பனர் அல்லாதவர்கள் பாயசத்தில் இருக்கிற முந்திரி, திராட்சையைப் போலப் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்’ என்று குத்தூசியார் குறிப்பிட்டு இருப்பது தான்! இந்தக் கட்டுரையின் மூலமாகத் தான் குத்தூசியாரை நான் அறிந்து கொண்டேன்.

குத்தூசியார், பெரியார் அவர்களை 1927 ஆம் ஆண்டு மே மாதத்தில் சந்தித்தார். 1928 ஆம் ஆண்டு முதல் சுயமரியாதை இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தது முதல் அவர் குடிஅரசில் எழுதத் தொடங்கினார். தொடர்ந்து 1962 வரை விடுதலையில் எழுதும் வரையும் அவர் எழுதிக் கொண்டே இருந்தார். பெரியார் தலைமையில் 35 ஆண்டுகள் அவர் பணியாற்றினார். அதன் பிறகும் குத்தூசி மாத இதழிலும் அறிவுபாதை வார ஏட்டிலும் அவரது எழுத்துப் பணி தொடர்ந்தது.

குத்தூசி குருசாமி அவர்கள் திராவிட இயக்கத் தலைவர்களுள் ஒருவர். இவர் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த போது எஸ்.இராமநாதன், எஸ்.வி. லிங்கம், பட்டுக்கோட்டை அழகர்சாமி, நாகை காளியப்பன், மூவலூர் இராமாமிர்தத்தம்மையார், மாயவரம் சி.நடராசன், அ.பொன்னம்பலனார், சாமி. சிதம்பரனார், பாரதிதாசன், ஜீவா, நாகர்கோவில் சிதம்பரம்பிள்ளை முதலிய தலைவர்கள் எல்லாம் பணியாற்றிக் கொண்டு இருந்தார்கள். இந்த மூத்தத் தலைவர்கள் வரிசையில் வைத்து எண்ணத்தகுந்தவர் குத்தூசியார் அவர்கள்!

அவர் தலைவர் வரிசையில் திகழ்ந்தாலும் அவரைப் பத்திரிகையாளராக - அதுவும் போர்க்குணமிக்க பத்திரிகையாளராகத்தான் வரலாற்றில் அவரைப் பற்றிய செய்திகள் பதிவாகி உள்ளன.

தமிழ்ப் பத்திரிகை உலகில் 1831 இல் ‘தமிழ் மாகசின்’ எனும் வார ஏடு முதன்முதலாக வெளிவந்தது. இந்த ஏடு கிறிஸ்தவ மதப் பிரச்சார ஏடு. இதைத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான இதழ்கள் வெளி வந்தன; மறைந்தன. ஆனால், பெரியார் தொடங்கிய ஏடுகள் இன்றைய தினம் வரலாற்றைச் சொல்லிக் கொண்டு இருக்கின்றன. இன எழுச்சியைப் பகுத்தறிவு நெறியைப் பரப்ப, எடுத்து விளக்க ஒரு படைக்கலனாக உதவி வருகின்றன.

பெரியார் அவர்கள் 1922 இல் கோவைச் சிறையில் இருக்கும் போதே பத்திரிகை தொடங்க வேண்டும் எனும் எண்ணம் கொண்டு இருந்தார். அதன்படி 19.1.1923 இல் குடிஅரசு இதழை வாரப் பதிப்பாகவும், ‘கொங்கு நாடு’ எனும் இதழை மாத வெளியீடாகவும் பதிவு செய்தார்.

குடிஅரசு இதழ் 2.5.1925 முதல் 8.10.1949 வரை வெளிவந்து இருக்கிறது. இதழின் கடைசித்தேதியை இன்னும் நான் முடிவு செய்யவில்லை. ஆனால், 1949க்குப் பிறகு குடிஅரசு வெளி வந்ததாகத் தெரியவில்லை. குடி அரசு ஏடு 3, 4 முறை நிறுத்தப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது.

‘கொங்கு நாடு’ மாத இதழ் வெளிவரவே இல்லை. குடி அரசு, கொங்கு நாடு முறையே நாளேடு என்றும், வார ஏடு என்றும் பதிவு செய்யப்பட்டதாகவும் ‘ஓர் விளக்கம்’ எனத் தலைப்பிட்டு பெரியார் எழுதி இருக்கிறார்.

‘குடிஅரசு’ இதழ் தொடங்கி நடந்து வந்தபோதே, ‘ரிவோல்ட்’ எனும் ஆங்கில வார ஏட்டை 7.11.1928 இல் பெரியார் - எஸ்.இராமநாதன் ஆகிய இருவர் ஆசிரியர்களாகப் பொறுப்பேற்றுத் தொடங்கினர். இதன் துணை ஆசிரியராகக் குத்தூசியார் பணியாற்றினார். ரிவோல்ட் ஆங்கில வார ஏடு 19.1.1930 இல் நிறுத்தப்பட்டுவிட்டது.

ரிவோல்ட் ஆங்கில வார இதழ் 55 இதழ்களே வெளி வந்தன.

குடிஅரசு ஏட்டில் பெரியார் ‘இந்த ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?’ எனும் தலையங்கம் எழுதியதால் குடிஅரசு ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டு, தமிழில் ‘புரட்சி’ எனும் வார ஏடு 26.11.1933 இல் தொடங்கப்பட்டது. ‘புரட்சி’ ஏட்டையும், 17.6.1934 ஆம் தேதியிட்ட இதழோடு, அரசுத் தடைச் செய்தது. பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டு 15.3.1934 இல் பகுத்தறிவு எனும் தினசரி நாளேடு தொடங்கப்படுகிறது. இந்த தினசரி ஏடு சுமார் 2 மாத காலம் வெளிவந்து 6.1.1935 இல் நிறுத்தப்படுகிறது.

பிறகு மீண்டும் ‘பகுத்தறிவு’ மாத இதழாக 1.5.1935 இல் தொடங்கப் பட்டது. இந்த இதழ் 4 ஆண்டுகள் வெளிவந்தது. இது குறித்து புலவர் பு.செல்வராஜ் எழுதிய புத்தகத்தில், “26.8.1934 இல் பகுத்தறிவு இதழைப் பெரியார் ஆரம்பித்தார். அந்த இதழ் 30.12.1934 இல் நின்ற பிறகே, மீண்டும் குடிஅரசு பழையபடி வரத் தொடங்கியது” என்று எழுதி இருக்கிறார்.

நீதிக்கட்சியின் ஏடான ‘திராவிடன்’ நாளேட்டைப் பெரியார் 1927 முதல் சிறிது காலம் நடத்தினார். ‘விடுதலை’ நாளேடும் நீதிக் கட்சிக்காக 1.6.1935 இல் வாரம் இருமுறை ஏடாகத் தொடங்கப்பட்டது. இவ்வேடும் பின்னர் பெரியாரின் பொறுப்புக்கு வந்தது.

பெரியார் கடைசியாகத் தொடங்கிய ஏடு ‘உண்மை’ திங்கள் இருமுறை ஏடு இவ்வாறு தொடங்கப்பட்ட பெரியாரின் ஏடுகளான குடியரசு, ரிவோல்ட், திராவிடன், விடுதலை, புரட்சியிலும் மற்றும் புதுவை முரசு, பகுத்தறிவு ஆகிய இதழ்களிலும் குத்தூசியாரின் எழுத்துகள் பதிவாகி உள்ளன.

குத்தூசியாரின் கட்டுரைகள் வெளி வரத் தொடங்கிய காலகட்டத்தில் இந்தியன் பெட்ரியாட், மெட்ராஸ் டைம்ஸ், பீரி இண்டியா, இந்து, மெயில், சண்டே ஸ்டாண்டர்டு, சுதேசமித்திரன், தேசபக்தன் பின்னர் நவசக்தி, ஆனந்த விகடன் ஆகிய இதழ்கள் இருந்தன. இப்பத்திரிகைகள் மக்கள் கவனத்தைக் கவர்ந்தன. தினமணியும், எக்ஸ்பிரசும் 1934, 1935 இல் தொடங்கப்பட்டன.

பத்திரிகையாளன் என்பவன் முதலில் சிறுமையைக் கண்டு பொங்குபவனாக இருக்க வேண்டும். பிறகு சிந்தித்து எழுதத் தெரிந்தவனாக இருக்க வேண்டும். அந்தச் சிந்தனையும், எழுத்தும், பகுத்தறிவு சார்ந்ததாய் இருக்க வேண்டும். இலட்சிய தாகத்தோடு சமூக, அரசியல், பொருளாதாரச் சமத்துவத்தை மக்களிடம் எடுத்துக் கூறி, பொதுக் கருத்தை மக்களிடம் உருவாக்கி, அந்த எழுச்சியை நிலை நாட்டுகின்ற எழுத்தைத் தமது பத்திரிகையில் வடிப்பவனாகப் பத்திரிகையாளன் இருக்க வேண்டும். புதியதோர் உலகுக்கு வழி காட்டுகின்ற ஆற்றல் இருக்க வேண்டும். துணிவு, தெளிவு, கனிவு வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாகத் துறவு மனப்பான்மை இருக்க வேண்டும். அவனைத்தான் பத்திரிகையாளன் என்று நான் கூறுவேன். அந்த வரையறையை இயற்கையாகவே பெற்றுப் பணியாற்றியவர் குத்தூசியார் அவர்கள்!

தமக்குத் துறவு மனப்பான்மை இருப்பதை ஒரு கட்டுரையில் அவர் எழுதினாலும் அவர்க்கு மனைவியும் இரு குழந்தைகளும் இருப்பதால் தாம் முழு துறவியாக முடியவில்லை என்றும் அவர் வருத்தப்படுகிறார்.

அவரது கட்டுரைகள் படிப்பதற்கு எளிமையானவை. சொல்லுவதை, விளக்கமாகவும், துலக்கமாகவும், படிப்பவர் உடனடியாகப் புரிந்து கொள்ளும் விதத்திலும் அவரது எழுத்தின் நடை இருக்கும். விஷயங்கள் குவியலாக இருக்கும். வாசகனுக்குப் ‘புதிதாகத்’ தெரிந்து கொண்டோம் என்ற நிறைவை உண்டாக்கும்.

‘ரிவோல்டில்’ ஆங்கிலத்தில் இராமாயணத்தைப் பற்றி வாரா வாரம் குத்தூசியார் எழுதினார். இதில் முக்கியப் பகுதிகளைச் சிவப்பு மையினால் அடிக்கோடிட்டு வாரா வாரம் காந்தியடிகளுக்கு அனுப்பி வைத்தார். இக்கட்டுரைகள் காந்தியாரின் மனத்தையே மாற்றி விட்டன. அதற்குப் பிறகுதான் காந்தியடிகள் ‘தசரத இராமன் வேறு - என் இராமன் வேறு’ என்று குறிப்பிடத் தொடங்கினார்.

Pin It