சாதியை ஒழிப்பதற்காக இந்நாட்டில் தனி இயக்கங்கள் பல தோன்றின; பவுத்தம், சீக்கிய மதம், ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், சுயமரியாதை இயக்கம் முதலியன குறிப்பிடத்தக்கவை. இவைகளாலும் சாதியை ஒழிக்க முடியவில்லை. சாதிக்கேடு இல்லாதிருந்தால் இந்நாட்டில் இத்தனை கோடி முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் முளைத்திருக்க மாட்டார்கள். பாகிஸ்தான் பிறந்திருக்காது; கோடிக்கணக்கான மக்கள் மதத்தின் பெயரால் கொன்று குவிக்கப்படும் நிலையும் ஏற்பட்டிருக்காது.

“அந்நியர் ஆட்சி இருப்பதனால்தான். அந்த ஆட்சிக்காரன் நம்மைப் பிரித்து ஆளுகின்றான். அவனை வெளியேற்றி விட்டால் ஒரு நொடிப் பொழுதில் சாதியை ஒழித்துவிடலாம்'' என்றார்கள், நாட்டு சுதந்தரத்துக்காகப் போராடிய காங்கிரஸ்காரர்கள்.

அந்நியர் ஆட்சி ஒழிந்து 17 ஆண்டு காலமாகிவிட்டது. ஆனால் சாதி ஒழிவதற்கு மாறாக, அமோகமாக வளர்திருக்கிறது. மற்றவர்கள் “சாதி ஒழிப்பு மாநாடுகள்'' என்ற பெயரால் பேச்சுக் கச்சேரி நடத்தி வருகின்றனர்.

இன்றுள்ள ஆளும் கட்சியிடம் சாதி ஒழிப்புப் பற்றிய திட்டமேயில்லை. இது பற்றிய கவலையுமில்லை. சாதியை அடிப்படையாக வைத்தே தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் “மக்கள் ஆட்சி முறை'' (ஜனநாயகம்) என்ற போலி நாடகம் – பிறவிக் குருடனுக்கு "கண்ணாயிரம்' என்று பெயரிடுவதுபோல் நடந்து வருகிறது.

இனி, எதிர்க்கட்சிகளில் ஒன்றாகிய கம்யூனிஸ்ட் கட்சியோ, “பொருளாதார சமத்துவம் வந்துவிட்டால் சாதி தானாகவே ஒழிந்து விடும்'' என்கிறது.

இன்னுஞ்சில தலைவர்களோ, “கல்வி பரவி விட்டால் சாதி கரைந்தோடிப் போய்விடும்'' என்கின்றனர்.

சுதந்தரத்துக்கும் சுய அறிவுக்கும் தொடர்பில்லை என்பதைக் கண்டுவிட்டோம். நாடு சுதந்தரம் பெற்ற பிறகு லஞ்சம் ஒழிந்ததா? கலப்படம் குறைந்ததா? திருட்டும் கொலையும் நின்றதா? மடமையும் மூடநம்பிக்கையும் குறைந்தனவா?

இதேபோல் பணத்துக்கும் சுய அறிவுக்கும் தொடர்பில்லை என்பதையும் கண்டு வருகிறோம். பணக்காரரே பகுத்தறிவற்ற செயல்களில் மூழ்கிக் கிடக்கின்றனர் என்பதைக் காண்கிறோம்.

இம்மாதிரியேதான் படித்தவர் சங்கதியும் இருக்கிறது. படித்தவர்களெல்லாம் பகுத்தறிவு பெற்வர்களா? படித்தவர் முதுகில் பூணூல் நெளியலாமா? படித்தவர் நெற்றியில் கோடும், பொட்டும் காட்சி தரலாமா? படித்தவர் கல்லையும் சாணி உருண்டையையும் கும்பிடலாமா? படித்தவர் கிருஷ்ணன், இராமன் போன்ற கட்டுக் கதைக் கற்பனைகளைக் கடவுளõக்கி வணங்கலாமா? படித்தவர் சூரிய – சந்திரன் மறைவுகளை (கிரகணம்) தீட்டாகக் கருதலாமா? படித்தவர் அடிமுட்டாள்தனமான சோதிடத்தை நம்பலாமா?

பகுத்தறிவுக்கும் மற்ற மூன்றுக்கும் எவ்வாறு தொடர்பில்லையோ, அதேபோலத்தான் இந்நாட்டின் பெருங்கேடான சாதிப் பிரச்சனைக்கும் மற்ற மூன்றுக்கும் சிறிதும் தொடர்பேயில்லை.

சுதந்தரம் வந்த பிறகு சாதி ஒழியவில்லை; வளர்ந்து கொண்டிருக்கிறது. சுதந்தரப் போராட்டம் நடத்திய முன்னணி வீரர்களிடையிலேயே இன்று சாதி உணர்ச்சி தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. இவர்களிடத்தில் அதிகாரம் இருந்துங்கூட சாதி ஒழிப்புப் பற்றி நடவடிக்கை எடுப்பதற்கு நடுங்கிக் கிடக்கின்றனர்; சாதி ஒழிப்புக்கான சட்டதிட்டங்களைப் பற்றிக் கவலையற்றுக் கிடக்கின்றனர்.

இதுபோலவே பணம் படைத்தவர்களும் சாதிச் சேற்றில் மூழ்கிக் கிடக்கின்றனர். செல்வத் துறையில் சமத்துவம், சமநிலை ஏற்பட்டு விட்டால் சொத்துக்களெல்லாம் பொது (அரசாங்க) உடைமை ஆகிவிட்டால், சாதி ஒழிந்து விடுமோ? அப்படியானால் ஏழைகளிடத்தில் சாதி இருக்கிறதே, ஏன்? பணக்காரர்கள் “உயர் சாதி''ச் சோம்பேறிகள் முன்பு கைகட்டி நிற்கிறார்களே, ஏன்? பணக்காரனும் ஏழையும் தன் தன் சாதியிலேயே திருமணம் செய்ய வேண்டுமென்று செக்குமாடு மாதிரி சுற்றிக் கொண்டேயிருக்கிறானே, ஏன்?

இம்மாதிரியேதான் படித்தவனுங்கூட சாதி வெறிக்குள் பின்னப்பட்டுக் கிடக்கிறான். சாதிக் கூண்டைவிட்டு வெளிக் கிளம்ப முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறான். பாமரனுக்கு இருக்கின்ற துணிச்சல்கூடப் படித்தவனுக்கு இல்லை. கல்லூரிகளில் படிக்கின்ற வரையில் வீரர்களாக இருக்கின்றவர்கள், அவற்றைவிட்டு வெளியேறியதும் சாதியை எதிர்க்க முடியாத கோழைகளாகி விடுகின்றனர். போர் முனைக்குச் சென்று உயிரைவிட தயாராயிருக்கின்ற இளைஞர்கள்கூட சாதி முனையில் நின்று மார்பு காட்டிச் சமுதாயத் துப்பாக்கிக் குண்டினால் காயப்பட்டுச் சித்திரவதைக்குள்ளாக மறுக்கின்றனர். பெற்றோர்கள் கூடத் தங்கள் இளைஞர்களைப் போர் முனைக்கு அனுப்பும் துணிவு பெற்றிருந்தாலுங்கூட, சுய சாதியைவிட்டு அப்பால் அனுப்பும் துணிவு பெற்றவர்களாக இல்லை.

இந்நிலையில், சாதி ஒழிப்பையே முதல் (முக்கிய) நோக்கமாகக் கொண்டு சீர்திருத்தப் பணியாற்றி வந்த பெருந்தலைவர்கள், தங்களின் படுதோல்வியைக் கண்டு வெட்கமும் வேதனையும் கொண்டு, அதை மறைப்பதற்காக, “சாதி எங்கேயிருக்கிறது, வெங்காயம்? கல்வி பெருகிப் பெருகிச் சாதிதான் ஒழிந்து விட்டதே!'' என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். கண்ணை மூடிக் கொண்டு "உலகமே இருண்டு விட்டதே' என்கின்றனர். “சோசலிசத் திட்டம், வந்தவுடனே, ஏழை – பணக்கார வேற்றுமை ஒழிந்துவிட்டது பார்த்தீர்களா?'' என்று ஆளும் கட்சியார் கேட்கிறார்களல்லவா? அதைப் போன்ற விகடத் துணுக்கு இது!

சாதி ஒழியாத வரையில் சோசலிசம் வெற்றி பெறாது. சிலை வணக்கத்தை வைத்துக் கொண்டு, “அன்பே கடவுள்'' என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற மதவாதிக்கும், சாதியை வைத்துக் கொண்டு, “சோசலிச சமுதாயம் மலர்ந்து விட்டது'' என்று சொல்லி ஏமாற்றுகின்றவர்களுக்கும் எந்தவித வேற்றுமையு மில்லை.

ஆகவே, சாதி ஒழிய வேண்டுமானால் அரசாங்கமும், எதிர்க் கட்சிகளும், பொது ஜனத் தலைவர்களும் ஒன்று சேர்ந்து அய்ந்தாண்டுத் திட்டங்கள் வகுத்து, பல்வேறு கோணங்களிலிருந்து கடுந்தாக்குத்தாக்கி ஒழித்தாக வேண்டும்.

பல நூறு ஆண்டுகளாக வீடு முதல் சுடுகாடு வரையில் வேரூன்றிப் போயிருக்கின்ற இந்த நச்சுப் புதர்களைச் சுளுவாக வெட்டி வீழ்த்திவிட முடியாது. பழைய சப்பாத்திக் கள்ளிகளை அழித்தது போல் வேர்ப்புழுவை விட்டு அழித்தாக வேண்டும்.

இந்த ஒரே ஒரு குறிக்கோளை ஓரளவு நிறைவேற்றினாலுங்கூட சுயமரியாதை இயக்கம் நல்ல பணியாற்றியதாகவே கொள்ளலாம். இக்குறிக்கோளைக் கொண்ட எவருடனும், நம் இயக்கம் கைகோத்து நிற்கத் தயாராயிருக்கிறது.

நன்றி : "அறிவுப்பாதை' – 11.6.1965

Pin It