தலைவரவர்களே! தோழர்களே!! இன்று உங்களை இவ்வளவு பெரிய கூட்டமாகக் காண்பது எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் எல்லோரும் இங்கு எதற்காக இந்த வெய்யில் காலத்தில் கஷ்டப்பட்டு வந்து சேர்ந்து கூடியிருக்கின்றீர்கள். உங்களுடைய இன்றைய நோக்கமெல்லாம் இந்து மதத்தில் எவ்வளவோ காலமிருந்து கீழான ஜாதியாய் கருதப்பட்டு நீங்கள் அடைந்து வந்த இழிவைப் போக்கிக் கொள்வதற்காக வேறு மதத்தில் வந்து சேர்ந்தும் அங்கும் அந்த இழிவு இருந்து உங்களைப் பழைய கருப்பனாகவே நடத்தி வந்தால் எப்படியாவது அந்த இழிவை போக்கிக் கொள்ள வேண்டுமென்ற உணர்ச்சியின் மீது இந்த மகாநாட்டைக் கூட்டி நீங்கள் எல்லோரும் இங்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள்.

ஆனால் இந்த மகா நாட்டில் பலர் ஆவேசமாய் பேசி விடுவதினாலும், பலர் அதிதீவிரமான தீர்மானங்கள் செய்து விடுவதினாலும் உங்களுக்கு ஏதாவது ஒரு பெரிய பலன் கிடைத்து விடுமா? என்று பார்த்தால் அது முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் இம்மாதிரி தீர்மானங்களும், இம்மாதிரி ஆவேசப் பேச்சுகளும் வெகுகாலமாக நடந்துகொண்டேதான் வருகிறது. ஆனால் இவையெல்லாம் மேல்ஜாதிக்காரர்கள் என்பவர்களால் அலட்சியமாக கருதி அசட்டை செய்யப்பட்டுதான் வருகிறது. உங்களுக்கு மதப்பித்தின் பயனாக சு. ம. உணர்ச்சி இல்லை யென்பதை உங்கள் பாதிரிமார்கள் நன்றாய் உணர்ந்தி ருக்கிறார்கள். கட்டுப்பாட்டை மீறி நீங்கள் ஏதும் செய்யமாட்டீர்களென்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். நீங்களும் மதத்திற்காகவும், கடவுளுக் காகவும் எவ்வளவு கஷ்டங்களையும் , இழிவுகளையும் பொறுத்துக்கொண்டு வெறும் வாயினாலே மாத்திரம் எதையாவது பேசிக் கொண்டிருப்பீர்களே யொழிய கட்டுப்பாடுகளை மீறவோ உங்கள் இழிவுக்குக் காரணமானவற்றை உதறித் தள்ளவோ அதை அழிக்க முயற்சிக்கவோ ஒரு நாளும் சம்மதிக்க மாட்டீர்கள்.

periyar and karunadhi 350உண்மையான விடுதலை உங்களுக்கு வேண்டுமானால் உங்கள் இழிவுக்கும், அடிமைத் தன்மைக்கும் அஸ்திவாரமான ஆதாரத்தை அழிக்க நீங்கள் தைரியம் கொள்ள வேண்டும். அந்த தைரியம் எவ்வித கட்டுப்பாடு களையும், நம்பிக்கைகளையும் உடைத்தெரிய தக்கதாகயிருக்கவேண்டும். அப்படிக்கில்லாமல் வீணே வாய்ப்பேச்சிலும், காகிதத் தீர்மானத்திலும் சாதித்து விடலாமென்று கருதுவது பைத்தியகாரத்தனமாய் தான் முடியும். நீங்கள் கீழ் ஜாதி என்பதும், தொடக்கூடாதவர்களென்பதும், சமத்துவமளிக் காமல் தனியாய் வைக்கப்பட வேண்டியவர்களென்பதும் ஆகிய காரியங்களுக்குவென்றும் மதமோ, பழக்கவழக்கமோ, சாஸ்திரமோ, கடவுள் செயலோ என்பதெல்லாம் வெறும் பித்தலாட்டமேயாகும்.

உங்களுடைய கீழ் சாதி தன்மைக்கும் மேற்கண்ட காரியங்களுக்கும் யாதொரு சம்பந்தமுமே கிடையாது. உண்மையான காரணத்தைச் சொன்னால் ஒரே நிமிஷத்தில் நீங்கள் அவர்கள் மீது பாய்ந்து சின்னாபின்னமாய்க் கிழித்தெறிந்து விடுவீர்களென்று கருதி ஏதேதோ சாக்கு போக்குகளைச் சொல்லி உங்களை ஏமாற்றுவதற்கு கடவு ளையும், மதத்தையும், பழக்க வழக்கத்தையும் சொல்லி வருகிறார்கள். கடவுள் மதத்தினர் கட்டளை என்றபடி பழக்க வழக்கங்கள் என்ற முறைப்படி யார் நடக்கிறார்கள்? அவர்கள் சொந்த விஷயத்தை பொறுத்த மட்டில் எவ்வித கட்டுப்பாட்டிற்கும் பழக்க வழக்கத்திற்கும் கடவுள் மத கட்டளைக்கும் கீழ்படியாமல் தங்கள் இஷ்டம் போலவே சமயத்திற் கேற்றபடியே நடந்து கொள்கிறார்கள். ஆனால் பிறத்தியானை அடக்கி ஆண்டு அடிமை கொள்வதற்காக மாத்திரம் இந்தப்படி சொல்லி பயன் பெறுகிறார்கள்.

கீழ் ஜாதி என்பதாக ஒரு பிரிவு எதற்காக? யாரால் ஏற்படுத்தப்பட்டது என்பதின் ரகசியத்தை உணர்ந்தால் பிறகு அதை அழிக்கும் விஷயம் வெகு சுலபமாக விளங்கி விடும்.

கீழ் ஜாதி, மேல் ஜாதி என்று சொல்வதின் தத்துவம் என்பதைப் பாருங்கள். ஒரு பார்ப்பானையும், ஒரு பறையனையும் கூட்டிவந்து நிறுத்தி கீழ் ஜாதி, மேல் ஜாதி என்பது அவர்களிடத்தில் எப்படி விளங்குகிற தென்று பார்த்தால் மேல் ஜாதி என்பவன் பாடுபடாமல் சோம்பேறியாய் இருந்து ஊரார் உழைப்பில் வாழ்கிறவன் என்பதும், கீழ் ஜாதி என்பவன் பாடுபட்டு உழைத்து உழைப்பின் பயனையெல்லாம் அன்னியருக்கே அழுதுவிட்டு வீடில்லாமல், துணியில்லாமல், கஞ்சியில்லாமல், கல்வியில்லாமல், மிருகத்திலும் கேடாய் வாழ்கிறவன் என்பதும் நன்றாய் விளங்கும். ஆகவே கீழ் ஜாதி தன்மை ஒழிய வேண்டும் என்று கருதுகிற ஒருவன் அன்னியருக்காக நாம் உழைக்கப் பிறந்தோமென்கிற எண்ணத்தை விட்டு விட்டு நமது உழைப்பின் பயனை சோம்பேறிகள், பாடுபடாத மக்கள் அனுபவிக்க விடக்கூடாது என்கிற உறுதி கொண்டு, பிறவியில் நமக்கும் மற்றவருக்கும் எவ்வித வித்தியாமுமில்லை என்கின்ற உறுதியோடு சோம்பேறி கூட்டத்தோடு எவன் போர் தொடுக்க முனைந்து நிற்கின்றானோ அவனே இவ்வித இழிவுகளை நீக்கிக்கொள்ள அருகதையுள்ளவனாக ஆகிறான்.

அதைவிட்டு விட்டு மதக்கட்டளையை மதிப்பவன், பாதிரிகளின் சொல்லுக்கு கீழ்படிந்துதான் ஆக வேண்டும். கடவுள் நம்பிக்கையை கொண்டவன் அவனவன் தற்கால நிலைமைக்குக் காரணம் “கடவுள் சித்தம்” என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும். மத கட்டளையையும், கடவுள் நம்பிக்கையையும் கொண்ட ஒரு அடிமை ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன் ஒரு நாளும் விடுதலை அடையவோ, முன்னேற்றமடையவோ முடியவே முடியாது. மத கட்டளையும், கடவுள் நம்பிக்கையும், மேல்ஜாதிக்காரனுக்கும், பாதிரிகளுக்கும், முதலாளிகளுக்கும் தான் மேன்மையையும், அனுகூலத்தையும் அழிக்கக் கூடியதாகும். இந்த நாட்டில் 1000 கணக் கான வருஷங்களாக ஏழை மக்களும் தாழ்ந்த ஜாதிக்காரர்களும் இருந்துதான் வருகிறார்கள். அவர்கள் அன்று முதல் இன்றுவரை மத பக்தியும், கடவுள் பக்தியும் கொண்டு அதற்காக எவ்வளவோ பணத்தையும், நேரத்தையும், செலவு செய்து தங்கள் கஷ்டங்களும், இழிவுகளும் ஒழிய வேண்டுமென்று பிரார்தனை செய்து கொண்டு தான் வந்திருக்கிறார்கள். ஏழைகளின் எண்ணிக்கை குறைந்ததா? கீழ் ஜாதிக்காரர்களின் எண்ணிக்கை குறைந்ததா? அல்லது இவர்களுடைய கஷ்டமாவது ஒழிந்ததா? யோசித்துப் பாருங்கள்.

உலகில் எவ்வளவோ அதிசயங்களும், அற்புதங்களும், முன்னேற்ற மான காரியங்களும் நாளுக்குநாள் விருத்தியடைந்தும் அதற்கு தகுந்த படி தொழில் முறைகளும், யந்திர சௌகரியங்களும், ஒன்றுக்குப் பத்து நூறாய் உயர்ந்தும் இவற்றின் பயனாய் லட்சாதிபதிகள் பத்துலட்சாதிபதியாகவும், பத்து லட்சாதிபதிகள் கோடீஸ்வரர்களாகவும்தான், முடிந்ததேயொழிய உங்களு டைய நிலைமை அன்றும் இன்றும் ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகிறது. நீங்கள் ஒரு உயிருள்ள இயந்திரம் போல் தான் இருக்கிறீர்கள். இயந்திரங் களுக்கு எப்படி எண்ணை ஊற்றினால் எண்ணையிருக்கிற வரையில் ஓடுகிறதோ அதுபோல் உங்களுக்கு ஏதாவது ஆகாரம் கொடுத்தால் அது ஜீரணமாகிறவரையில் வேலை செய்துவிட்டு மடிவது என்கிற முறையில் தானிருக்கிறீர்கள்.

உங்களுக்கு உங்களுடைய பிரதி பிரயோஜனமெல்லாம் உங்களு டைய வயிற்றுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவுதான். அதுவும் நீங்கள் சாகாமலிருப்பதற்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு தான் என்பதாகப் பதினாயிர வருஷங்களுக்கு முன்பதாகவே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. இந்த நிர்ணயத்தை மீறி நீங்கள் அதிகம் கேட்காமல் இருக்க வேண்டுமென் பதற்காகத்தான் உங்களை பறையர், சக்கிலியர் என்று சொல்லி தீண்டாத சாதியார்களென்று ஆக்கியும் உங்கள் அண்ணன்மார்களை யெல்லாம் ‘அடிமை’ ‘பார்ப்பானின் வைப்பாட்டி மகன்’ ‘சூத்திரன்’ என்று சொல்லி தாழ்ந்த ஜாதியும் ஆக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

உங்களுக்கு ஜீவனத்திற்காக என்று கொடுக்கப்படும் கூலிகளும் உங்கள் மீதுள்ள கருணையினால் என்று நினைத்து விடாதீர்கள். இந்த ஆகாரமும் இல்லாமல் மடிந்து போவீர் களேயானல் நாளைக்கு மேல் ஜாதிக்காரர்களுக்கும் முதலாளிமார்களுக்கும் வேலை செய்ய ஆள் இல்லாமல் போகுமே என்கின்ற சுயநல கருணை கொண்டுதான் மாடு வளர்க்கிறவன் தீனி போடாவிட்டால் பால் கறக்காதே. பாடுபடாதே என்று கருதி அதற்கு தீனிபோடுவது போல் உங்களுக்கும் ஜீவனத்திற்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை மாறவேண்டு மென்பதில் தான் உங்களுடைய முக்கிய வேலையாக இருக்க வேண்டுமே யொழிய சும்மா பறையர் பட்டம் போனால் போதும், கிறாதியை எடுத்து விட்டால் போதும், கோயிலுக்குள் நுழைய விட்டால் போதும் என்றெல்லாம் கருதுவதில் பிரயோசனமில்லை. கிறாதி வித்தியாசமில்லாமலும் பறஜாதி பட்டம் இல்லாமலும் கோயிலுக்குள் போய் தொழுகிற உரிமையுடனும் இருக்கின்ற கோடிக்கணக்கான மக்கள் கஞ்சிக்கு வகையில்லாமல் இருக்க, வீடில்லாமல் ஊர் ஊராய் பிச்சைக்காரர்கள் போல் லம்பாடிகள் போல் திரிவதையும் மரத்து நிழல்களில் தலைக்கு கல்லையோ, கையை மடக்கியோ வைத்து படுத்துக்கொண்டிருப்பதை இன்றைய தினம் எங்கும் பார்க்கலாம். இதற்குக் காரணம் என்ன என்று கருதுகிறீர்கள்.

ஆகவே உங்களுடைய கிளர்ச்சியானது பொருளாதாரத் துறையில் நீங்கள் மற்றவர்களால் ஏமாற்றப்படுவதும் வஞ்சிக்கப்படுவதும் ஒழிய வேண்டுமென்பதையே அஸ்திவாரமாகக் கொண்டிருக்க வேண்டும். அதில் தான் உங்கள் விடுதலை இருக்கிறது. எந்தக் கடவுளும், எந்த பாதிரியும் இதற்கு வகை செய்ய முடியாது?

உங்கள் மதங்களை எல்லாம், உங்கள் கடவுள் கட்டளை எல்லாம் “பொறு பொறு” “அவசரப்படாதே” “ஆத்திரப்படாதே” உனது வாழ்வில் உள்ள எல்லா துன்பங்களையும், எல்லா இழிவுகளையும் பொருமையோடு பொறுத்துக் கொண்டிருந்தால் நீ செத்த பிறகு மேல்லோகத்தில் கடவுள் உன்னுடைய பொறுமைக்காக நல்ல சன்மானம் கொடுப்பார். அடுத்த ஜன்மத்தில் நல்ல பிறவி பெறுவாய் பொறுத்தார் பூமியாள்வார் என்று தான் உபதேசிக்கும் இந்த உபதேசத்தை ஆயிரக்கணக்கான வருஷங்களாக கேட்டு கேட்டு அதன்படி பொறுமையாய் இருந்து வந்ததின் பலன் தான் இன்றும் இன்னமும் நீங்கள் பொறுமையாகவே இருந்து இழிவடைந்து கஷ்டப்பட்டு சீக்கிரம் செத்து கடவுளிடம் சன்மானம் பெற வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள்.

ஆகவே செத்த பிறகு மேல் லோகத்தில் அல்லது அடுத்த ஜன்மத்தில் பயன் பெறலா மென்கின்ற பித்தலாட்ட, சுயநல சூட்சியான உபதேசத்தை அடியோடு மறந்து இந்த ஜன்மத்தில் நீங்கள் சாவதற்கு முன் உங்கள் இழிவுக்கும், கஷ்டத்திற்கும் என்ன பரிகாரம் என்பதைக் கவனித்து அதற்குத் தக்கது செய்ய முன் வாருங்கள். இந்தப்படி நினைத்து தைரியமாய் முன் வந்த மக்கள் தான் இன்று உலகில் ஒருபக்கத்தில் அடிமையாய் கூலியாய் இழி ஜாதியாய் ஏழையாய் இல்லாமல் மனிதனாய் கவலையற்று தேசமே ஒரு குடும்பமாகவும் எல்லோரும் ஒரு தாய் வயிற்று சகோதரர்களாகவும் வாழ்ந்து வருகின்றார்கள்.

ஆகவே இந்த விஷயங்களை கவனித்து நன்றாய் ஆலோசித்து தங்களுக்கு சரி என்று பட்டதை பின்பற்றுங்கள் என்பதை தெரிவித்துக் கொண்டு இத்துடன் முடித்துக் கொள்ளுகிறேன்.

(குறிப்பு: 23.04.1933 இல் களத்தில் வென்றான் பேட்டை கிராமத்தில் நடைபெற்ற இலால்குடி தாலூக்கா ஆதிதிராவிட கிருஸ்தவர்கள் மாநாட்டில் சொற்பொழிவு.

குடி அரசு - சொற்பொழிவு - 07.05.1933)

Pin It