சுயமரியாதை

திரு. காந்தியால் 1921ஆம் வருஷம் ஆரம்பிக்கப்பட்ட ஒத்துழை யாமை இயக்கமானது அரசியல் கொடுமைகள் ஒழிப்பதோடு பார்ப்பனக் கொடுமைகளையும் ஒருவாறு ஒழிக்கும்படியான மாதிரியில் சில கொள்கை கள் கொண்டிருந்தாலும் நம் போன்றவர்களின் ஆசைக்கும், அவசரத்திற்கும் தக்கபடி அது காணப்பட்டதை முன்னிட்டும், அவ்வியக்கத்தில் கலந்து மனப்பூர்வமாக நாலைந்து வருஷ காலம் உழைத்ததின் மூலமும் அது சமயம் பார்ப்பனர்களுடைய நெருங்கிய சம்பந்தம் இருக்க நேர்ந்ததன் மூலமும், அதன் பலாபலன்களை நாமும் ஒரு பங்கு அனுபவிக்க நேர்ந்ததின் மூலமும், அவ்வியக்கத்தின் போக்கைப் பார்ப்பனர்கள் எந்த வழியில் திருப்பி அதன் பலனை எப்படி அடைய முயற்சித்தார்கள், முயற்சிக்கின்றார்கள் என்பதை நன்றாய் அறிய நமக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அதிலிருந்து நமது போக்கையும் ஒரு வகையில் ஒன்றுபடுத்தி ஒரே வழியில் திருப்பி யோசிக்க வேண்டிய அவசிய முண்டாயிற்று.periyar 629அங்கனம் யோசித்ததின் பலனாக நமக்குக் கிடைத்த பலன் என்னவென்றால் நமது மக்கள் அரசியல் விஷயமாய் கூச்சல் போடுவதும், முயற்சிகள் செய்வதும் சற்றும் நமக்குப் பயன்படுவதல்ல என்பதும், இவைகள் பார்ப்பனர்கள் நம் மீது செலுத்தி வரும் தங்கள் உயர்வை யும், ஆதிக்கத்தையும் நிலைநிறுத்திக் கொள்ளும் சூழ்ச்சிக்கேது உண்டாக்கப் பட்டிருக்கிறதே தவிர வேறல்லவென்றும், இன்றைய நிலையில் நமது மக்களுக்கு வேண்டியவைகளெல்லாம் பகுத்தறிவும் மானமுமே முக்கியமானதென்றும், இன்றைய பார்ப்பன ஆதிக்கத்திற்கு முக்கிய காரணமும், அந்நிய ஆட்சியின் கொடுமைக்குக் காரணமும், நமது மக்களுக்குப் பகுத்தறிவும் தன் மதிப்பு உணர்ச்சியும் தடைப்படுத்தப் பட்டிருப்பதே தானென்றும் கண்டு பிடித்தோம். இது மாத்திர மல்லாமல் நமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், சமத்துவத்திற்கும் வேண்டிய வேலையெல்லாம் செய்தும் பார்த்து விட்டோம். அதாவது பணம் கொடுத்தோம், சுக சௌக்கியம் விட்டோம், சிறை சென்றோம் இன்னும் மனிதனால் உயிரைத் தவிர வேறு என்ன என்ன சாதனங்களை அலட்சிமாய் கருத முடியுமோ அவ்வளவும் செய்தோம். இப்படிச் செய்ததால் ஒருவரல்ல, இருவரல்ல ஆயிரக்கணக்கான பேர் லட்சக்கணக்கான ரூபாய்களையும் நட்டமடைந்து ஒரு தடவை மாத்திர மல்லாமல் பல தடவை சிறையும் சென்றோம்.

இவ்வளவு செய்ததின் பலனாகவும் கடுகளவு கூட முற்போக்கு அடைய முடியாமல் போனதையும் கண்கூடாகக் கண்டோம். அதன் பிறகே மற்ற நாட்டு விடுதலை நிகழ்ச்சிகளை ஆராயத் துடங்கியதில் அவற்றிலும் அநேகமாய் ஒவ்வொரு நாடும் நம்மைப் போலவே வேறு பல முயற்சிகளை எவ்வளவோ செய்து பார்த்தும் முடியாமற் போன காலங்களில் எந்த முடிவைக் கண்டு பிடித்து அந்த முயற்சியிலேயே யிறங்கி கடைசியாக விடுதலைப் பெற்று சமத்துவம் அடைந்ததாகவும் கண்டோமோ அதையே பின்பற்ற நாமும் ஆசைப்பட்டோம்.

அன்றியும் பெருமையும் வலிமையும் கொண்ட நாடு என்று சொல்லப்பட்ட ஐரோப்பா, அமெரிக்கா முதலிய தேசங்களின் உன்னத நிலைமைக்கு அவற்றின் பகுத்தறிவு வளர்ச்சியும், சுயமரியாதை உணர்ச்சியுமே முக்கியமான தென்பதையும் கண்டோம். சமீப காலம் வரை கஷ்டப் பட்டுக் கொண்டிருந்த துருக்கி, சைனா, ஜப்பான் முதலிய தேசங்கள் வல்லரசுத் தன்மை பெற்றதற்கு அவற்றின் சுயமரியாதை உணர்ச்சி என்பதையும் கண்டோம். அதன் பிறகே நாமும் நமது தேசத்தின் விடுதலைக்கும், சமத்துவத்திற்கும், பகுத்தறிவும் தன்மதிப்புமே பிரதானம் என்பதாகக் கருதி அதன் முயற்சிக்குச் சுயமரியாதை இயக்கம் எனப் பெயரிட்டோம். இவ் வியக்கம் எந்த ஒரு தனிப்பட்ட நாட்டிற்கோ, சமூகத்திற்கோ வென்பதாக இல்லாமல் பொதுவாக தாழ்த்தப்பட்டும், இழிவு செய்யப்பட்டும், தன்மான உணர்ச்சி உண்டாகாமல் அழுத்தப்பட்டும், பகுத்தறிவு வளர்ச்சி செய்யாமல் தடைசெய்யப்பட்டும் இருக்கும் எல்லா மக்களுக்கும், கொடுங்கோன்மையில் அடக்கி ஆளப்பட்டு வரும் மக்களுக்கும் பயன்படும்படியான முறையில் அமைக்க விரும்பியே இதில் பிரவேசித்துள்ளோம்.

பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுத்து மக்களெல்லோரும் சமத்துவம் என்கின்ற உண்மையான மனிதத் தன்மைக்குத் தாராளமாய் இடங்கொடுக்கின்ற ஒவ்வொருவருக்கும் இடமும் ஒதுக்கி வைக்கும் எண்ணங் கொண்டே இம்முயற்சிலீடுபட்டோம் என்றும், இம்முயற்சியானது மிகவும் கஷ்டமானதென்றும், அளவுக்கு மீறிய துன்பத் தையும் தொல்லைகளையும் விளைவிக்கக் கூடியதென்றும் நாம் நன்றாய் உணர்கின்றோமாயினும், இது வெற்றி பெற்றாலொழிய நமது சமூக மாத்திர மல்ல, நமது நாடு மாத்திரமல்ல, உலக சமூகம் எல்லாவற்றிற்கும் உலக முழுமைக்கும் நிற்பயமான விடுதலையோ, சாத்தியமோ, ஓய்வோ இல்லை என்கின்ற முடிவினாலும், இம்முயற்சி இன்றைய பெரியோர் களெனப்படும் வயது சென்றவர்களுடைய ஒத்துழைப்பும், ஆதரவும் பெறமுடியாவிட்டா லும் பெரும்பான்மையான பரிசுத்தத் தன்மையுடைய வாலிபர்களின் கூட்டுறவும் அனுதாபமும், ஆதரிப்பும் மலிந்து கிடப்பதாலும் துணிந்து இறங்கிவிட்டோம்; முடிவில் இதனுடைய வெற்றி தோல்வியைப் பற்றி நாம் அதிகமான கவலை எடுத்துக் கொள்ளாமல் இந்த முயற்சி சரியா, தப்பா என்பதைப் பற்றி மாத்திரம் தீர யோசித்து தைரியமாயிறங்கி இருக்கின்றோம்.

காங்கிரஸ்

காங்கிரஸ் என்பது பாமர மக்களைப் படித்த கூட்டத்தார் ஏமாற்றுவதற் கென்று ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனம் என்றும் அதிலும் அப்படித்த கூட்டத்தார் என்பதில் முக்கியமானவர்கள் நமது தென்னாட்டு பார்ப்பனர்க ளேயென்றும், அவர்கள் இஷ்டப்படியெல்லாம் ஏறக்குறைய காங்கிரஸ் ஆரம்பமான காலமுதல் கொண்டு ஆட்டப்பட்டு வந்திருக்கின்றது என்றும், காங்கிரஸ் என்பதாக ஒன்று நமது நாட்டில் ஏற்பட்ட பிறகே மக்களின் ஒற்றுமை குலையவும், ஒழுக்கம் கெடவும் ஏழை மக்களுக்கு பல வழிகளிலும் கஷ்டம் ஏற்படவுமான காரியங்கள் ஏற்பட்டுக் கொண்டு வருகின்றதென்றும் கோபுரத்தின் மீதிருந்தும் கூறுவேன்.

உண்மையை ஒளிக்காமல் பேச வேண்டுமானால் நமது நாட்டில் காங்கிரஸ் என்கின்ற ஒரு கொடிய எமன் போன்ற இந்த ஸ்தாபனம் இருக்கும் வரையில் ஏழை மக்கள் விடுதலை என்பதை கனவிலும் நினைக்க வேண்டிய தில்லை என்றே கல்லிலும் எழுதி விடுவோம்.

வெள்ளைக்காரனுடைய கொடுமையான ஆட்சிமுறை ஏதாவது ஒரு காலத்திலாவது நமது நாட்டை விட்டு ஒழிய வேண்டுமானால் முதலாவது காங்கிரஸ் ஒழிந்து தீர வேண்டும். பிறகுதான் “இந்து மதமும் பார்ப்பன ஆதிக்கமும் ஒழிய வேண்டும்” என்று சொல்லுவோம். ஏனெனில் ‘இந்து’ மதத்தின் பெயரால் பார்ப்பனர்கள் மாத்திரம் தான் மக்களை ஏமாற்றி பாழ்ப் படுத்த முடியும். காங்கிரசோ அப்படியில்லை. காங்கிரசின் பெயரால் எல்லா வகுப்பு அயோக்கியர்களும், அன்னக்காவடிகளும் அனாமதேயங்களும், காலிகளும் மக்களை ஏமாற்ற வசதி இருக்கின்றது.

‘இந்து’ மதம் ஒரு மனிதன் செத்தபிறகு மோட்சம் (விடுதலை) என்கின்ற புரட்டான தத்துவத்தின் மீது கட்டப்பட்ட பொய்க் கோட்டை யாகும். காங்கிரசோ உயிருடன் இருக்கும் போதே விடுதலை (மோட்சம்) கொடுப்பது என்கின்ற புரட்டான தத்துவத்தின் மீது கட்டப்பட்ட பொய்க் கோட்டையாகும். பாமர மக்களும் ஏழை மக்களும் இதை வெகு சுலபத்தில் நம்பி ஏமாந்து போகத் தக்கபடி தந்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

அதற்கு தக்கபடி அரசாங்கத்தின் மீது மக்களுக்கு வெருப்பு ஏற்படும் படி பிரசாரங்கள் செய்ய வசதிகள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே ஜனங்கள் ஏமார்ந்து போவதில் அதிசயமில்லை.

(குடி அரசு - கட்டுரை - 01.05.1932)

Pin It