kuthoosi guru"கதர்க் குல்லாய் அணிந்தால் போதாது; அதற்குள்ளே சரக்கு இருக்க வேண்டும்; அதாவது அணிபவர்களுக்கு மூளை இருக்க வேண்டும்.” - என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பண்டிட் நேரு கூறி விட்டார்!

கதர்க் குல்லாய்கள் அடியோடு ஒழியவேண்டும் என்ற எண்ணத்தின் மீதுதான் அவர் இப்படிக் கூறியிருக்க வேண்டும்! ஏன் தெரியுமா?

இனி கதர்க் குல்லாய் தரித்தவர்களைப் பார்க்கும்போதெல்லாம் அதற்கடியில் ஒன்றுமில்லை என்ற நினைவுதான் எல்லோருக்கும் வரும்!

“இருந்தாலும் நம் தலைவர் நம்மை இப்படிக் காட்டிக் கொடுத்திருக்கக் கூடாது! நம் தலைகளில் மூளையே இல்லை என்பதைக் குறிப்பதற்காகத் தானே நேரு இம்மாதிரிக் கூறியிருக்கிறார்? இவரே கூறிவிட்டால், இனி நம் எதிர்க்கட்சிக்காரர்கள் சும்மாவா இருப்பார்கள்?”...  - என்று ஏழவுன்ஸ் தோழர்கள் மிகவும் வேதனையோடு பேசிக் கொள்வதாகத் தெரிகிறது!

யாரை நினைத்துக் கொண்டு நேரு இப்படிக் கூறியிருப்பார்? பலர் பலவிதமாகக் கூறுகின்றனர். என்னைப் பொறுத்தமட்டில் மரமந்திரி முன்ஷியை நினைத்துக் கொண்டுதான் இவ்வாறு கூறியிருக்க வேண்டும் என்று கருதுகின்றேன்.

ஏனென்றால் இன்றைக்கு காங்கிரஸ் கட்சியைப் பிடித்திருக்கும் பீடைகளிளெல்லாம் பெரிய பீடை, உணவு (முன்ஷி)ப் பீடை தான்! 16 அவுன்ஸ் அரிசி கிடைக்கிறவரையில் அரிசி தின்கிற எவரும் காங்கிரஸ் பெட்டியில் வோட்டுப் போடுவதேயில்லை யென்று சத்தியஞ் செய்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது!

உணவுப் பிரச்னையை ஒழுங்காகக் கவனிக்கவேண்டிய இவர், ‘வனமகோத்சவம்’ என்ற பெயரால் பல கோடி ரூபாயைப் பாழாக்கியதை நினைத்து நினைத்து மனம் வெதும்பியிருப்பார், நேரு! “1951 முதல் வெளிநாட்டு உணவுத் தான்யம் இறக்குமதியாகாது,” என்று கூறிவந்த நேருவின் முகத்தில் கரி பூசியவர் முன்ஷிதானே?

ஆறு வாரத்தில் 3 கோடி செடிகள் நட்டார்களாம். இவைகளில் 5 இல் 4 பங்கு, அதாவத 100க்கு 80 தண்ணீரில்லாமல் பட்டுப்போய் விட்டனவாம்! சென்னையில் பத்திரிகை நிருபர்களுக்களித்த பேட்டியில் கனம் ஏழவுன்ஸ் மந்திரி முன்ஷி கூறியதே இது.

மீதியுள்ள செடிகளும் அடுத்த மழைக்குள் பட்டு போய்விடும் என்பதை எதிர்பார்க்கலாம்! ஆகவே பல லட்சத்தைப் பாழாக்கி வன மகோத்சவம் நடத்தித் தீர்த்து விட்டார்!

ஏற்கெனவே 30-40 ஆண்டுகளாயுள்ள மரங்களெல்லாம் நாள் தோறும் ஆயிரக்கணக்கில் விறகுக்காக வெட்டிச் சாய்க்கப்பட்டு வருகின்றன! இதை நிறுத்துவதற்குத் திட்டமில்லாபோது, இனிமேல் செடி நட்டு, மரமாகி அந்த மரத்தின் மீது மேகம் வந்து தங்கி மழை பெய்வது என்றால், எப்படி? அது மட்டுமா? செடி நடுவதாகவும் மரம் நடுவதாகவும் கூறிவிட்டு துளசிச் செடியையே நட்டார்களே, பிரகஸ்பதிகள்! அதாவது அதன் மீது மேகம் தங்குவதற்காக!

“குல்லாயல்ல முக்கியம்! அதற்கடியில் சரக்கு இருக்கவேண்டும்,” என்று சொன்னது யாரை என்பது இப்போது தெரிகிறதா?

சாதாரண காங்கிரஸ் தொண்டரையோ, மேடை பிரசங்கியையோ நினைத்து நேரு இப்படிக் கூறியிருக்க மாட்டார்! ஏனெனில் இவர்களால் லாபமுமில்லை; நஷ்டமுமில்லை! ஏதோ அற்ப வருமான; கிடைக்கிறது அதற்காக காலட்சேபமும் நடக்கிறது!

பட்டினியாகக் கிடக்கின்ற மக்களை நோக்கி, பருத்திக் கொட்டை சாப்பிடுங்கள்; கடலைப் புண்ணாக்குச் சாப்பிடுங்கள்!,” என்கிறார்,

முன்ஷி! இதைக் கேட்டு அரைப்பட்டினி மாடுகளெல்லாம், முன்ஷியின் கதர் குல்லாய்க்கு அடியில் என்ன இருக்கிறதோ, என்று நேருவைப்போலவே கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றன!

கனம் முன்ஷி உணவுப் பஞ்சத்தை ஒழிப்பதற்குள்ள கடைசி வழியையும் சென்னையில் கூறிவிட்டார்! அதாவது, “கடவுளை நம்புங்கள்; அவர் உங்களைக் காப்பாற்றுவார்!” என்பதே! இதையும் நேரு பத்திரிகைகளில் படித்திருப்பாரல்லவா?

ஆதலால்தான், “குல்லாய் முக்கியமல்ல; அதற்கடியில் மூளையிருக்க வேண்டும்,” என்று கூறினார், நேரு!

இப்போது நீங்கள் கூறுங்கள், யாரை நினைத்து நேரு இப்படிக் கூறியிருப்பார் என்பதை.

- குத்தூசி குருசாமி (6-2-51)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It