முன்பெல்லாம் பழனிக்கு நடைபயணமாக சென்று வந்தவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ளவர்களுக்கு ஒரு தட்டில் பொரிகடலை, பஞ்சாமிர்தம், வெற்றிலைப் பாக்கு, விபூதி குங்குமம் இவற்றோடு முருகன், ஐயப்பன் போன்ற தெய்வ உருவங்களொடு, ஓம் என்ற மந்திரம் பொறிக்கப்பட்ட டாலர்களும், கையில் கட்டிக் கொள்ளும் கருப்பு நிறக் கயிறும் வைத்து கொடுப்பார்கள்.

பக்தி சிரத்தையோடு அவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் தங்கள் வீட்டில் உள்ள சிறு குழந்தைகளின் கையில் முருகன் கயிற்றைக் கட்டிவிட்டு, முருகன் உருவம் பொறிக்கப்பட்ட டாலரை கறுப்புக் கயிற்றில் கோர்த்து கழுத்தில் மாட்டி விடுவார்கள்.

caste threadகழுத்திலும் கையிலும் முருகன் கயிறு கட்டப்பட்ட சிறு குழந்தைகள் கெட்ட வார்த்தைகள் பேசமாட்டோம், பொய் கூற மாட்டோம் என்றெல்லாம் உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். பக்தி என்ற பெயரில் ஒழுக்கம் பேணி வளர்க்கப்பட்டது.

தை, மாசி மாதங்களில் இந்த முருகன் கயிறு கட்டிக் கொள்ளும் சிறுவர்களை அதிகமாகப் பார்க்கலாம்.

பக்தியை வளர்த்த கயிறு இன்று சாதியை வளர்க்கும் கயிறாக மாற்றப்பட்டிருப்பது தான் வேதனை.

சரித்திரப் புகழ் மிக்க சாதனை நாயகர்களையும், இந்திய விடுதலைப் போராட்ட போராளிகளையும், பொதுச் சொத்துக்களாக கோவில் குளங்களை உருவாக்கிய மன்னர்களையும் தங்கள் இனத்தின் அடையாளமாகக் காட்டிக் கொண்டு பெருமித சிந்தனைக்குள் மக்களை தள்ளி வாக்கு அரசியல் செய்யும் போக்கைக் கொண்டவர்கள் தற்போது கையில் எடுத்திருப்பது சாதிக் கயிறு.

சாதிக்கப் பிறந்த மாணவர்களை சாதியின் பெயரால் சுருக்கி சமூக விரோதிகளாக மாற்றும் போக்கு அதிகரித்து வருகிறது.

சாதிக்கொரு நிறத்தில் வண்ண வண்ணமாக கயிறுகளை கட்டிக் கொண்டு மாணவர்களுக்குள்ளாக பெருமிதம் பேசிக் கொள்ளும் பழக்கம் பெருகுவது போற்றக் கூடியது அல்ல.

2018 குடிமைப் பணியில் தேர்வான அதிகாரிகள் தெற்குத் தமிழ்நாட்டில் பள்ளிகளில் பரவி வரும் சாதிக் கயிறு குறித்து அறிக்கை தயாரித்து கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து பள்ளிகளில் சாதிக் கயிறு கட்டிக் கொள்வதற்கு தடை விதித்து கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியது.

சாதிக் குழு மனப்பான்மைக்கு எதிரான சுற்றறிக்கைபை சமய நம்பிக்கைக்கு எதிரான சுற்றறிக்கையாக, இந்து மதத்துக்கு எதிரான சுற்றறிக்கையாக மக்கள் மத்தியில் பரப்புரை செய்து வருகிறார்கள் மதவாத சக்திகள். மதவாத ஊடகங்கள் மக்கள் மத்தியில் விஷத்தைப் பரப்பி வருகின்றன.

ஒழுக்கத்தையும் பண்பையும் வளர்க்கும் பக்தி கயிற்றை சாதியை வளர்க்கும் கருவியாக பயன்படுத்தும் சதியை மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் சாதிக் கயிறுக்கு எதிரான குரல் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் வகையில் தமிழக இயற்கை வளங்களை சூறையாடும் சர்வதேச சதிக்கு எதிராக, இயற்கை வளப் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் இளைஞர்களை திசை திருப்பும் வகையில், சாதிக் கயிறு சமயக் கயிறாக மாற்றப்பட்டு மக்களிடம் பிரிவினை வளர்க்கப்படுகிறது.

சாதி மறந்து, சமயம் கடந்து, நீர் மேலாண்மை செயல்பாடுகளில் குளம் தூர் வாருவது, குறுங்காடுகள் அமைப்பது, சாலையோரங்களிலும் குளக்கரைகளிலும் பள்ளி வளாகங்களிலும் மரக்கன்றுகளை நடுவது, நீர் பாதுகாப்பின் அவசியத்தை மாணவர்களிடம் பரப்புவது என்று சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய இளைய சமுதாயம் சாதிக் கயிறு சதியை முறியடித்து மாணவர்களிடம் மதிப்புமிக்க சிந்தனையை விதைப்பதை யாராலும் தடுக்க முடியாது.

தமிழர்களின் ஒன்றுபட்ட சிந்தனையை தடுக்கும் சாதிக் கயிறு, சாதி மேட்ரிமோனி போன்ற சாக்கடைகளில் இருந்து தமிழர்கள் தங்களை விடுவித்துக் கொள்வார்கள் என்பதை தமிழக வரலாறு நமக்கு உணர்த்தி இருக்கிறது.

குறிப்பாக சாதிக் கயிற்றுக்கு எதிராக அறிக்கை தயாரித்து வழங்கிய 2018இல் குடிமைப் பணியில் தேர்வான இளம் ஆட்சியாளர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மாணவர்களிடம் பரவும் சாதிக் கயிறு கலாச்சாரத்தை தடுத்து நிறுத்துவதில் தனது உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தயங்காமல் எடுக்க வேண்டும். மதவாத சக்திகளின் மிரட்டல்களுக்கு அடி பணியாமல் மக்கள் பணி செய்ய வேண்டும். இந்து சமயச் சான்றோர்கள் சாதிக் கயிற்றின் சதியை அம்பலப்படுத்த வேண்டும். வீரத்துறவி விவேகானந்தரின் சாதிக்கு எதிரான செயல்பாட்டை தமிழக சமயச் சான்றோர்களும் சமயப் பணி செய்யும் ஆதீனங்களும் தொடர்ந்து செய்ய வேண்டும்.

தமிழகம் என்றுமே சாதி சமய பூசலுக்கு எதிரான
திருவள்ளுவரின் மண்
திருமூலரின் மண்
சித்தர்களின் மண்
வள்ளலாரின் மண்
குறிப்பாக
பெரியாரின் மண்.

அதனால் சாதிப் பருப்பு இங்கு வேகாது!

- மெய்ச்சுடர் நா.வெங்கடேசன்

Pin It