‘சிந்தனையாளன்’ ஒரு கிழமை இதழாக 17.8.1974 அன்று திருச்சியில் தொடங்கப்பட்டது. 1982 வரையில் என் சொந்த ஏடாக நடத்தப்பட்டது. 1980இல் வாழ்நாள் கட்டணம் ரூபா 200 எனப் பெறப்பட்டது. பிறகு இது ரூபா 300, 500 என இரண்டு கட்டங்களில் உயர்த்தப்பட்டது. எனக்குப் பெரிய இழப்பு ஏற்பட்டதால், இடையில் 1982 திசம்பர் முதல் ஓராண்டு நிறுத்தப்பட்டது.

சென்னைக்குத் தலைமை இடம் மாற்றப்பட்ட பிறகு, “பெரியார் அச்சிடுவோர் குழுமம்” சார்பில் 17.9.1983 முதல் கிழமை இதழாக வெளியிடப்பட்டது. ஆறே மாதங்களில் பேரிழப்பு ஏற்பட்டது. 15.2.1984 முதல் மாதம் இருமுறை யாக வெளிவந்தது. பிறகு அந்த ஏடும் நிறுத்தப்பட்டது. அதற்கு ஈடாக மாதம் ஒரு “செய்தி மடல்” 1986-1987-இல் வெளியிடப்பட்டது.

பின்னர், 1988 முதல் மாத இதழாக ‘சிந்தனை யாளன்’ வெளியிடப்படுகிறது.

2014-இல் 41ஆம் ஆண்டை எட்டியிருக்க வேண்டிய நம் இதழ், 38ஆம் ஆண்டை 2014 சூலையில் தொடங்கியுள்ளது.

12.3.2000-இல், மா.பெ.பொ.க. பொதுக் குழுவில் முடிவு செய்தபடி, வாழ்நாள் கட்டணம் ரூபா 1000 என உயர்த்தப்பட்டது. பல ஆர் வலர்கள், தொடக்கத்தில் 200, 300, 500 ரூபா முன்பணமாகச் செலுத்தினர். ஆனால் ரூபா 1000 என முழுமையாகச் செலுத்தியவர்கள் சிலரே. பலர் மீதம் 800, 700, 500 எனச் செலுத்தவில்லை. என்றாலும், பகுதித் தொகை செலுத்திய ஆயிரக்கணக்கானவர்களுக்கு 2014 ஆகத்து வரையில் “சிந்தனையாளன்” அனுப் பப்பட்டது. எவரும் கரிசனத்தோடு மீதப்பணம் அனுப் பாததால், 2014 செப்டம்பர் இதழ் முதல் அவர் களுக்கு இதழ் அனுப்பப்பட முடியாது என்பதை, அறிவித்திட நேர்ந்தது.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் மாபெரும் வெற்றிகள் நான்கு.

இதற்கு ஒரு கருவி “சிந்தனையாளன்” மட்டுமே.

1. 1961இல் மே மாதத்தில், அன்றையப் பிரதமர் பண்டித நேரு அவர்கள், “பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசில் இடஒதுக்கீடு தரமுடியாது” என்று மத்திய அமைச்சரவையில் முடிவெடுத்தார். நம் கட்சிதான், 8.5.1978 முதல் இந்திய அரசுக்கு நெருக்குதல் தந்து, 1982 ஏப்பிரலில் கொள்கை அளவில், “பிற்படுத்தப்பட் டோருக்கு இடஒதுக்கீடு தருவோம்” என இந்திய அரசை - இந்திராகாந்தி அரசை ஏற்கவைத்து வெற்றி பெற்றது. அப்போதைய உள்துறை அமைச்சர் கியானி ஜெயில் சிங் அவர்களுக்கு நாம் இதுபற்றி எடுத்துச் சொன்ன முறையினால்தான், அந்த முதல் கட்ட வெற்றி கிடைத்தது. அது செயல் அளவில் 1990இல் பிரதமர் வி.பி. சிங் காலத்தில் ஆணை வடிவம் பெற்றிடவும், நம் பேரவையின் தலைவர் இராம் அவதேஷ்சிங் 1986 முதல் 1990 வரை மாநிலங்கள் அவையில் செய்த முயற்சியே காரணமாக விளங்கியது.

2. ஆயினும், வடமாநிலங்களில் எதிலும், 1978 வரையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வில்லை. நம் கட்சியினர் பீகார் நாடாளுமன்ற உறுப்பினர் இராம் அவதேஷ் சிங் அழைப்பை ஏற்று, 1979 செப்டம்பர் - அக்டோபரில் பீகாரில் 31 நாள்கள் அடை மழை போல் பரப்புரை செய்தோம்; 10 நாள்கள் பாட்னாவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தினோம்; 10,000 பேர் சிறைப்பட்டனர். அதன் பயனாக, பீகார் மாநிலத்தில் முதன்முதலாக 10.11.1978இல் பிற்படுத்தப் பட்டோருக்கு வேலையில், அன்றைய முதலமைச்சர் கர்ப்பூரி தாக்கூர் 20 விழுக்காடு இடஒதுக்கீடு தந்து ஆணை பிறப்பித்தார். அதை ஒட்டியே பஞ்சாப், இராஜ°தான், உ.பி. மாநிலங்களில் முதன்முதலாக 1979இல் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

3. தமிழகப் பிற்படுத்தப்பட்டோருக்கு, 1971இல், தந்தை பெரியாரின் வேண்டுகோளை ஏற்று அன்றைய முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி 25 விழுக்காடு என்பதை 31 விழுக்காடாக உயர்த்தித் தந்தார்.

இடையில், அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில், நாம் முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களிடம் 19.8.1979-இல் ஒரு கோரிக்கையை முன்வைத்தோம்.

அதாவது, தமிழக அரசின் கணக்குப்படி, 1979-இல் பிற்படுத்தப்பட்டோர் 67.5 விழுக்காடு உள்ளனர். அதனால் அவர்களுக்கு அளிக்கப்படுகிற 31 விழுக்காடு ஒதுக்கீட்டை, 60 விழுக்காடாக உயர்த்தி அளித்திட, அவரிடம் வேண்டினோம். அவர் அதை ஏற்றிடத் தயங்கினார். அவருடைய அமைச்ச ரவையில் அன்று அமைச்சராக விளங்கிய பண்ணுருட்டி ச. இராமச்சந்திரன் அவர்களை 6.10.1979-இல் நேரில் கண்டு, சேலம் அ. சித்தய்யன் அவர்களும் நானும் தகுந்த சட்ட நிலைமைகளை விளக்கிச் சொன்னோம்.

அவர் 7.10.1979 முதல் இடைவிடாது முயன்று, எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ஏற்ற அழுத்தம் தந்ததால், 28.1.1980இல் 31 விழுக்காடு என்பதை 50 விழுக்காடாக உயர்த்துவதாக எம்.ஜி.ஆர். அறிவித்தார். 1.2.1980 அதற்கான அரசு ஆணையைப் பிறப்பித்தார்.

இப்படி இந்திய அளவிலும், தமிழக அளவிலும் - இந்தியாவிலுள்ள இந்து, இ°லாம், கிறித்துவ, சீக்கியப் பிற்படுத்தப்பட்டோருக்கு நாமும், நம் கட்சியும், நம் ‘சிந்தனையாளன்’ இதழும், அனைத்திந்தியப் பேரவையும் பெற்றுத்தந்த உரிமைகளை நாம் தான் ஊரெங்கும் சென்று மக்களிடம் பரப்பியிருக்க வேண்டும்.

தமிழகத் தமிழர்களிடம் இதற்குப் பயன்பட்ட கருத்து ஊடகக் கருவியான “சிந்தனையாளன்” இதழை குறைந்தது 1,00,000 (ஒரு இலட்சம்) படிகளாக நாம் வளர்த்தெடுத்திருக்க வேண்டும்.

நன்றியுணர்வுள்ள தமிழ்ப் பெருமக்கள், படித்த இளைஞர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், வணிகர்கள் ஆகிய எல்லாத் தரப்பினரிடமும் சிந்தனையாளன் இதழை அறிமுகப்படுத்தி ஒரு இலட்சம் பேர்களிடம் ஆண்டுக் கட்டணமும், 1,000 பேர்களிடம் வாழ்நாள் கட்டணமும் மற்றும் விளம்பரங்களும் பெற்று, நம் பரப்புரைக் கருவியான “சிந்தனையாளன்” இதழை வலிமையானதாக வளர்த் தெடுத்திருக்க வேண்டும். 

மேலே சொல்லப்பட்டவை மட்டுமே நம் சாதனைகளா? இல்லை.

4. மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி 1981 முதல் 1988 வரை இடைவிடாமல் விவாதித்து, “மார்க்சியத் தையும் - லெனினியத்தையும் இந்தியாவில் வெற்றி பெற வைத்திட ஏற்ற செயல்முறை, பெரியாரியத்தையும் - அம்பேத்கரியத்தையும் எல்லா மக்களிடமும், குறிப்பாகப் பிற்படுத்தப்பட்டோரிடமும், பட்டியல் வகுப்பாரிடமும், மதச் சிறுபான்மை மக்களிடமும் எடுத்துச் சொல்லி, அவர்களின் பேராதரவினைத் திரட்டிப் போராடுவது ஒன்றே, நடை முறைக்கு ஏற்ற - மக்கள் நாயகப் புரட்சியைக் கொணர உகந்த பாதை” என்பதை நாம் நிலைநாட்டியிருக்கிறோம்.

இது சொல்லுவதற்கு எளிதானது. ஆனால் செயல் படுத்துவதற்கும் வென்றெடுப்பதற்கும் மிக மிகக் கடினமானது. ஏன்?

82 விழுக்காடு பேராக உள்ள இம்மக்கள் பார்ப்பனிய வாழ்க்கை முறைக்கு அடிமைகளாக ஆகி, இந்திய அளவில் 6000 உள்சாதிகளாகவும், தமிழக அளவில் 400 உள்சாதிகளாகவும் பிரிந்து பிரிந்து கிடக்கிறார்கள்.

எந்த உள்சாதிக்காரரும் எதிலும் பார்ப்பனியப் பண்பாடான பிறவி உயர்வு - தாழ்வு என்பதைக் கடைப்பிடிப்பதிலிருந்து மாறவே இல்லை; பார்ப் பனியச் சடங்கு வாழ்க்கை முறையைக் கைவிடவே இல்லை.

தமிழர்கள் மொழிவழியில் ஒன்றுசேர முடியாமல் பிரிந்து கிடப்பதற்கு இது ஒன்றே காரணம்.

நான் அறிந்த வரையில், மிதாட்சர இந்துச் சட்டப் பிரிவுக்குள் அடக்கி வைக்கப்பட்ட தென்னாட்டினரிடம் தான், திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவர்களிடம்தான் இந்த வைதிக - ஆன்மிகப் பார்ப்பனிய வாழ்க்கை முறை முனை மழுங்காமல், 2014இலும், கூர்மையாக இருக்கிறது.

இதனை அப்படியே வளர்த்து நிலைக்க வைக்கிற பணியைத் திட்டமிட்டு இந்திய அளவில் இந்தி, ஆங்கில நாளிதழ்களும்; தமிழ் நாட்டில் தமிழ், ஆங்கில நாளேடு களும், பருவ இதழ்களும்; திரைப்படங்கள், இணையதளம், தொலைக்காட்சிகள் வழியாகவும் பொதுவாக எல்லோரும் - குறிப்பாகப் பார்ப்பனர்களும் வளர்த்தெடுக்கிறார்கள்.

“The Hindu” ஆங்கில நாளேடு நாள்தோறும் 17 இலட்சம் படிகளை அச்சிட்டு வெளியிடுகிறது. இது உலகம் முழுவதிலும் அச்சிட்ட இதழாகவும், இணையம் மூலமாகவும் பரவியிருக்கிறது; உலகத் தலைவர்களின் பார்வையில் உள்ளது.

தமிழில் “தினமலர்” நாளேடு பார்ப்பன ஆதிக்க-பார்ப்பனிய ஆதிக்கக் கொள்கைகளையும்; தமிழ்த் தேசியம், திராவிட இனக் கொள்கை, தமிழீழத் தமிழர் விடுதலை எல்லாவற்றுக்கும் எதிரான கருத்துகளையும் வலிமையாகவே பரப்புகிறது.

இப்படி இந்துத்துவ - பார்ப்பனியக் கொள்கைகளை நிலைக்க வைப்பதற்காகவே 110 ஆண்டுகளாக இந்தியிலும் ஆங்கிலத்திலும் பார்ப்பனர்களால் மட்டுமே வெளியிடப்படும் 40 நாளேடுகள் இந்தியாவில் உள்ளன. இவை இந்தியரைப் பார்ப்பனியச் சிந்தனைக்கு அடிமைகளாக்கப் பாடுபடுகின்றன.

16 இலட்சம் படிகளை நாள்தோறும் தமிழில் வெளியிடு கிற “தினத்தந்தி” நாளிதழ்; 15 இலட்சம் படிகளை வெளியிடு கிற “தினகரன்” நாளிதழ் முதலானவை தமிழரின் ஏடுகள்; தமிழில் வெளிவரும் ஏடுகள். ஆனால் பார்ப்பனியத்துக்கு எதிரான ஏடுகள் அல்ல.

“விடுதலை” நாளேடு இப்போது 2014இல், ஒரு இலட்சம் படிகள் நாள்தோறும் வெளி வருகிறது. பெரியாரை நினைவூட்ட இது பயன்படுகிறது.

இவை  மட்டுமே தமிழை - தமிழரை - தமிழ்ப் பண்பாட்டு மீட்சியை வென்றெடுக்கவும், பெரியாரின் தன் மானக் கொள்கைகளை வென்றெடுக்கவும் போதுமா? போதாது; போதாது; போதாது.

இந்துத்துவம் - பார்ப்பனியம் என்றாலும்; நால்வருண சாதி, தீண்டாமை, பெண்ணடிமை என்றாலும்; ஏழை-பணக்காரத் தன்மை என்றாலும் இவற்றைக் கட்டிக் காப்பது ‘இந்திய அரசு’, “இந்திய அரசமைப்புச் சட்டம்”, இந்திய உயர்நீதி, உச்சநீதி மன்றங்கள்; இந்திய உயர் நிருவாக அதிகாரக் கும்பல்; இந்தியப் பாதுகாப்புப் படை மற்றும் கருத்து ஊடகங்கள் - இவை எல்லாமே, உண்மையில், 82 விழுக்காட்டுப் பேராக உள்ள உழைக்கும் கீழ்ச்சாதி மக்களின் நிரந்தர எதிரிகள் என்பதே காரணம்.

இந்த அமைப்புக்கு அடிமைகளே ஒவ்வொரு மாநில அரசினரும், 122 கோடி மக்களும் ஆவர்.

இந்த உண்மையை உலகெங்கும் பரவியுள்ள 8 கோடித் தமிழருக்கும், இந்தியாவில் உள்ள 7 கோடித் தமிழருக்கும் புரிய வைத்திட வலிமையுள்ள தமிழ் நாளேடு எது? ஏது? கிழமை ஏடுகள், மாத ஏடுகள் எவை? எத்தனை?

நம் ‘சிந்தனையாளன்’ ஏடு இதில் எத்தனையாவது இடத்தில் இப்போது இருக்கிறது?

அருள்கூர்ந்து எல்லாத் தமிழரும் இவற்றைப் பற்றிக் கவலையோடு சிந்தியுங்கள்; மா.பெ.பொ.க. தோழர்கள் தனியே அமர்ந்து ஆர அமர எண்ணிப் பாருங்கள்! நாம் ஒவ்வொருவரும் 1000 தமிழர்களிடமாவது ஆண்டுக் கட்டண மாக ரூபா 180 மேனி, 2014 செப்டம்பர் முதல் திசம்பருக்குள் பெற்றாக வேண்டும்; ஒவ்வொருவரும் 100 பேர்களிடமாவது பத்தாண்டுக் கட்டணம் ரூ.1500 மேனியும்; வாழ்நாள் புரவலர் நன்கொடை ரூபா 5000 மேனி 10 பேர்களிடமாவது வருந்தி முயன்று பெற்றிட வேண்டும் என்று உறுதி பூணுங்கள்.

2015 செப்டம்பரில், “சிந்தனையாளன்” ஒரு கிழமை இதழாக மாற்றப்பட்டு, அதே ஆண்டில் ஒரு இலட்சம் படிகள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட ஏற்ற எல்லாவற்றையும் நம் தோழர்கள் தலைமேற்போட்டுக் கொண்டு, இப்போது முதல் செய்யுங்கள் என, அன்புடன் வேண்டுகிறேன்.

Pin It