கடந்த 26.11.2015 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றில் கலை நிகழ்ச்சி நடத்துவது பற்றிய வழக்கில் தீர்ப்பு கூறும் போது, 1.1.2016 முதல் ஆகம விதிகளின்படி நடத்தப் படும் கோவில்களுக்குச் செல்பவர்கள் அணிய வேண்டிய உடைகள் பற்றிய கட்டுப்பாடும் அறிவிக்கப்பட்டது. இக்கட்டுப்பாட்டை எதிர்த்து முதலில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. அதன் பின் 5.1.2016 அன்று தென் மாவட்டங்களின் மகளிர் கூட்டமைப்பு மேல் முறையீடு செய்து உள்ளது.

உயர் நீதி மன்றத்தின் இந்த ஆணையை, வெளிப்படையான பார்ப்பன ஆதிக்க வெறி கொண்டவர்கள் வெளிப்படையாகவே வரவேற்று உள்ளனர். இதை எதிர்ப்பவர்கள் இந்த ஆணை காலத்திற்கு ஒவ்வாதது என்றும், சனாதன மதவாதிகள் பழங்காலத்தில் ஏற்றுக் கொள்ளாத பல பழக்க வழக்கங்கள் இன்று கோவில் களில் அன்றாட நடைமுறைகளாகி இருப்பதைச் சுட்டிக் காட்டியும், சினத்துடனும், எள்ளலுடனும் தங்கள் கருத்தைத் தெரிவித்து இருக்கிறார்கள்.

பார்ப்பன ஆதிக்க வாதிகளிலேயே சிலர் இந்த ஆணை கோவிலுக்கு வரும் மக்களின் எண்ணிக் கையைக் குறைத்து விடக் கூடாதே என்று தங்கள் அச்சத்தை மிகுந்த கவலையுடன் தெரிவித்து உள்ளனர். யாருமே எதிர் பாராத வகையில் பா.ஜ.க. முழு வலுவுடன் மைய அரசைக் கைப்பற்றிய பின், அடுத்த திட்டமாக மகாத்மா ஃபுலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஈட்டித் தந்த வகுப்புரிமை, பெண்ணுரிமைகளை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்று தொலைநோக்குத் திட்டங்களைத் தீட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

முதலில் இட ஒதுக்கீடு கூடாது என்பது, மக்களிடையே எதிர்ப்பு தோன்றிய உடன் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறுவது, இறுதியில் தங்கள் போக்கு தங் களுக்கே முடிவு கட்டி விடும் என்ற அச்சம் தோன்றிய உடன் இட ஒதுக்கீடு தொடரும் என்று உறுதி அளிப்பது, மாட்டுக் கறிக்குத் தடை விதிப்பது, இவை போன்ற நடவடிக்கைகள்யாவும் பார்ப்பனர்கள் வருணாசிரம அதர்மத்தைச் சாதிய நிலையில் பழைய நிலைக்குக் கொண்டு வர முயலும் தொலை நோக்குத் திட்டங்களே.

இப்பொழுது புதிதாகக் கிளப்பி இருக்கும் இந்த உடைக் கட்டுப்பாடு சாதிய நிலையைக் கடந்து, பெண் அடிமைத்தனத் தையும் பழைய நிலக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கொடூரமான ஆசையின் வெளிப்பாடுதான். ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் தலைவர்களான ஃபுலே, பெரியார், அம்பேத்கர் முதலானோர் அனைத்து வகுப்பு மக்களின் நலன்களுக் காகவே போராடினர்.

குறிப்பாக அவர்களுடைய பெண் விடுதலைப் போராட்டத்தினால் ஒடுக்கப்பட்ட வகுப்புப் பெண்களைவிட, பார்ப்பனப் பெண்களே அதிக நன்மைகளை அடைந்து உள்ளனர்.

இவர்களுடைய போராட்டங்களின் காரண மாகத்தான் கல்வி மறுக்கப்பட்ட பார்ப்பனப் பெண்கள் கல்வி பெற முடிந்தது. கணவனை இழந்த பார்ப்பனப் பெண்கள் மொட்டை அடிக்கப்பட்டு மூலையில் உட்கார வைக்கப்பட்ட நிலை மாறி, இன்று சமூகத்தில் இயல்பாக நடமாட முடிகிறது என்றால் அதற்கு ஃபுலே, பெரியார், அம்பேத்தகரின் போராட்டங்கள்தான் காரணம்.

அம்பேத்கர், பெரியார், ஃபுலே ஈட்டித் தந்த வகுப்புரி மைகளை நீர்த்துப் போகச் செய்து இறுதியில் அழித்தே விட வேண்டும் என்று ஆசைப்படும் பார்ப்பன ஆதிக்க வாதிகள் மெது மெதுவாக அதில் வெற்றி பெற்றால், அதன் பின் தங்கள் இனப் பெண் களைச் சுதந்திரமாக இருக்க விட முடியுமா? சனாதன மதப் புனித நூல்கள் பெண்கள் அடிமைகளாக இருக்க வேண்டும் என்று தானே போதிக்கின்றன? அதை நடைமுறைப்படுத்தா மல் இருக்கலாமா? சமூக முரண்பாடுகளில் சாதிய / வருண முரண்பாடு தானே முதன்மையானது? ஆகவே முதலில் அதில் தங்கள் ஆதிக்கத்தை மேலும் இறுகச் செய்ய, இட ஒதுக்கீடு கூடாது; மறுபரிசீலனை செய்ய வேண்டும்; தொடரும் என்றெல்லாம் விவாதத்தைக் கிளப்பி விடுகின்றனர்.

ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களிலேயே சிலரைப் பிடித்து, மூளை வெளுப்பு செய்து, இட ஒதுக்கீட்டுக்கு எதிரகப் பேச வைக்கின்ற னர். இது வெற்றி பெற்றால் ஒடுக்கப்பட்ட வகுப்பின் ஆண்கள் பெண்கள் அனைவரையும் முழுமையாக அடிமைகளாக்கி விடலாம்.

அடுத்து, தங்கள் இனத்தில் உள்ள பெண்களையும் அடிமைப்படுத்தினால் அல்லவா வருணாசிரம அதர்மத்திற்கு முழு வெற்றி கிடைக்கும்? அந்த வேலைக்கான முன்னேற் பாடுகளை இப்பொழுது இருந்தே செய்ய வேண்டும் அல்லவா? பார்ப்பனர்கள் அறிவாளிகளாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் படிப்பாளிகள் அல்லவா?

திட்டச் செயலாக்க ஆய்வு உத்தி (PERT - Programme Evaluation Review Technique) விரைவுப் பாதை முறை (CPM - Critical Path Method) ஆகியவற்றை எல்லாம் படித்து இருக்கிறார்கள் அல்லவா? ஒரு வேலை முடிந்த பின் தான் இன்னொரு வேலை தொடங்கினால் அது முழு வேலை முடிவுக் காலத்தில் தேவையற்ற / தவிர்க்க முடியக் கூடிய தாம தத்தை ஏற்படுத்தும் என்று அவாளுக்குத் தெரியாதா?

சாதிய / வருண நிலையில் வருண அதர்மத்தை வெற்றி அடையச் செய்த உடனேயே பெண்களை முழுமையாக அடிமைப்படுத்தும் வேலையைத் தொடங்க முன்னேற் பாடுகளை இப்போதே செய்து கொள்ள வேண்டாமா? அதற்காகத் தான் உடைக் கட்டுப்பாடு விஷயத்தில் பெண்களை இப்பொழுது சீண்டிப் பார்த்து இருக்கிறார்கள்.

இடஒதுக்கீடு விஷயத்தில் கூடாது மறு பரிசீலனை செய்ய வேண்டும் தொடரும் என்று மாறி மாறிப் பேசுவது போல, இந்த உடைக் கட்டுப்பாடு விஷயத் திலும் மாறி மாறிப் பேசலாம். ஆனால் இந்த முயற்சிகளைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருப்பார்கள்.

இது போன்ற பெண் விடுதலைக்கு எதிரான முயற்சிகளைத் தலையெடுக்க விடாமல், முழுமையாக அழித்து ஒழிக்க வேண்டும் என்றால் அதற்குப் பார்ப்பன ஆதிக்கம் உருத்தெரியாமல் அழிந்து ஒழிந்தாக வேண்டும். பார்ப்பனப் பெண்களும்-அவர்களுக்கு உண்மையில் பெண் விடுதலை மீது அக்கறை இருந்தால் - பார்ப்பன ஆதிக்கம் ஒழி வதற்கு ஒத்துழைப்பதே / போராடுவதே சரியான வழியாகும்.

Pin It