சிரங்கு பிடித்தவன் கையும், குரங்கு பிடித்த அகப்பட்ட மாலையும் ஒழுங்காய் இருக்குமா? அத்தன் மையதே மோடியின் ஆட்சியும். இந்தி மொழியின் பயன்பாட்டை அதிகப்படுத்துமாறு வலைத்தளங்களில் ஆணை போட்டார்கள், இப்போது ‘சமற்கிருத வாரம்’ கொண்டாடச் சொல்கிறார்கள். காவி நிறத்தின் கனவுகள் ஒவ்வொன்றாய் அவிழத் தொடங்குகின்றன.

“ஏங்க வைக்கும் வடமொழியை இந்தியினை

எதிர்த்திடுவீர் அஞ்ச வேண்டாம்

தீங்குடைய பார்ப்பனரின் ஆயுதங்கள்

 ‘இந்தி’ ‘வடசொல்’ இரண்டும்”

என எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் தமிழர் களை எச்சரித்தவர் பாவேந்தர். ஆனால் இவ்விரண்டு மொழிகளின் நுழைவையும் தடுக்க முடியாமல் நாம் திண்டாடுகிறோம்.

maraimalaiadikal 220சமற்கிருதப் பிணத்துக்குப் பூச்சூட்டிப் பாடையில் ஊர்வலமாகக் கொண்டுபோகும் காட்சியை நாம் நாடெங்கும் பார்க்கிறோம். நடுவண் அரசும் செத்த மொழி சமற்கிருதத்திற்கு மக்கள் வரிப்பணத்தில் பூச்சூட்டி அழகு பார்க்கிறது.

இந்தியா பல மொழி, பல இன, பல்வேறு கலாச்சார, பண்பாடுகளைக் கொண்ட மக்கள் வாழும் ஒரு துணைக் கண்டம். ஆனால் ஆர்.எஸ்.எஸ். பா.ச.க. வெறியர் களுக்கு இதுவோர் இந்து நாடு.

அவர்கள் கூறும் பண்பாடு இந்துப் பண்பாடு. மதத்தால் முசுலீம்களாய், கிருத்துவர்களாய் வாழும் மக்கள்கூட இங்கே இந்துப் பண்பாட்டை ஏற்றுக் கொண்டால்தான் உயிரோடு உலவமுடியும் என்கிற பேரச்சத்தை நாடு முழுவதும் உருவாக்கி வருகிறார்கள்.

ஆட்டம் காணக்கூடிய ஆட்சியை மத்தியில் அமைத்த போதே வாஜ்பாய், எல்லோரையும் ‘சமற்கிருத ஆண்டு’ கொண்டாட வைத்தார். இப்போதோ மத்தியில் யாராலும் அசைக்க முடியாத ஆட்சியை அவர்கள் அமைத்துவிட்டார்கள். இனிப் புற்றிலிருந்து ஒவ்வொரு பாம்பாய்ப் புறப்பட்டு வரத்தான் போகிறது. வாக்களித்த மக்களுக்கு இனி வாய்க்கரிசி தான்.

இந்திய அரசமைப்பில் சொல்லப்பட்டுள்ள 22 மொழிகளில் ‘வடமொழி’ ஆனது ‘பத்தோடு பதினொன்று, அத்தோடு இது ஒன்று’ போன்றது அன்று. அது இந்திக்கு வேர்மொழி; இந்துத்துவவாதிகளின் இதயத் துடிப்பு; பார்ப்பனியத்தின் நச்சுப்பல்; சமத்துவ மறுப் பின் அடையாளப்புள்ளி; உழைக்கும் மக்களின் உதடு கள் தொட்டால் தீட்டாகும் என அஞ்சும் தெய்வமொழி.

இல்லாத இந்தியாவின் பண்பாடும் நாகரிகமும், இம்மொழியில் கொட்டிக் கிடப்பதாய் ஆரியம் மூளை யில் திணித்த கூ(ழ்) முட்டைகள் அலறுகிறார்கள். ஆனால் சமற்கிருதம் தாங்கி நிற்பது அப்பட்டமான சாதி அழுக்கையும் பார்ப்பன மேலாண்மையையும் தான்.

‘வேதக்கல்வி’ என்பது பார்ப்பனர்களைத் தவிர்த்த பிற உழைக்கும் மக்களைத் தன் அருகே அண்ட விடாமல் தள்ளி வைத்தது. ஆங்கிலேயன் வந்துதான் கல்வியை அனைவர்க்கும் பொதுவாகப் புதுப்பாதை போட்டான்; பொதுப்பள்ளிகளைத் திறந்தான். அதற்கும் பல்வேறு தடைகளை இட்டது சனாதனக் கூட்டம். உயர் குடியாக்கச் (Sanskritisation)சிந்தனை இந்தக் கூட்டத்தாரின் குருதியில் கலந்த நஞ்சு. தம்மிடம் மேல்சாதி இந்து ஊறிய மதப் பழக்கவழக் கங்கள், சடங்குகள், நம்பிக்கைகள், வாழ்முறைகள் ஆகியவற் றைப் பல்வேறு தேசிய இன மக்களின் மீதும் திணிக்கும் வன்முறை வழிதான் ‘வட மொழி வாரக் கொண்டாட்டம்’.

மோடிக்கு முன் நீண்டகாலம் நாட்டை ஆண்ட கட்சி காங்கிரசுக் கட்சி. காங்கிரசானாலும், பா.ச.க. ஆனாலும் இந்துத்துவக் கருத்தியலின் இருதலைக் கொள்ளிகளே. நாட்டு விடுதலைக்கு முன்பும் பின்பும் இதே நடைமுறைதான். காங்கிரசுக் கட்சியின் முன் னோடித் தலைவர்களாய் விளங்கிய மதன்மோகன் மாளவியாவும், லாலா லஜபதிராயும் ‘இந்து மகா சபை’ என்ற மத அடிப்படைவாத அமைப்பின் மூலவர்கள் ஆவர்.

“இந்தியாவில் இன்றுள்ள தேசிய இயக்கத்தின் ஆன்மீக எழுச்சி முழுக்க முழுக்க வேதாந்தச் சிந்த னையிலிருந்து பெறப்பட்டதுதான்” என்று லஜபதிராய் அன்றே முழங்கினார்.

மாளவியா இந்து தருமத்தையும் சமற்கிருதத்தை யும் பாதுகாக்கும் ஒரே நோக்கத்துடன் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தைத் தொடங்கினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்புச் செயல்பட அப்பல்கலைக்கழக வளாகத்தில் தனியாக ஒரு கட்டடம் கட்டிக் கொடுத்தார். நான்கு முறை காங்கிரசுக் கட்சியின் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்ட அவர், 1946இல் காலமாகும் வரை காங்கிரசுக் கட்சியிலேயே இருந்துகொண்டு வருணா சிரமத்தைக் காப்பதற்காகப் போராடி வந்தார். (எஸ்.வி. இராசதுரை நூல் ‘இந்து-இந்தி-இந்தியா’, பக்.58).

திலகர், அரவிந்தர் போன்ற வடநாட்டுத் தலைவர் கள் மட்டுமல்ல, தமிழில் ‘மகாகவி’ என்று போற்றப் படும் பாரதி கூட வடமொழி பற்றி என்ன கருத்துக் கொண்டிருந்தார் என்பதை அறியும்போது வருத்தமாக உள்ளது.

marimalai-adhikal- 300“ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷை என்று சொல்வது விளையாட் டன்று. மற்ற ஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷை என்று சொல்வோமானால், இவை அனைத் திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா? அதன்பொருட்டே அதைத் தெய்வ பாஷை” என்கிறோம். (வாலாசா வல்லவன் நூல் ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’, பக்.5).

தமிழ் இலக்கணம் பெரும்பாலும் சமற்கிருத இலக்கணத்தை ஒட்டியே படைக்கப்பட்டுள்ளதாக பாரதியார் கொண்டிருந்த கருத்து அதிர்ச்சி தரக்கூடி யது. இந்த இடத்தில் எழுத்தாளர் வே. மதிமாறன் குறிப்பிடும் இன்னொரு கருத்தும் நோக்கத்தக்கது.

‘தமிழ்நாட்டிலே தமிழ் சிறந்திடுக. பாரத தேச முழுவ திலும் எப்போதும் போலவே வடமொழி சிறந்திடுக. இன்னும் நாம் பாரத தேசத்தின் அய்க்கி யத்தைப் பூரணமாகச் செய்யு மாறு நாடு முழுவதிலும் மேன் மேலும் ஓங்குக. எனினும் தமிழ்நாட்டில் தமிழ்மொழி தலைமை பெற்றுத் தழைத் திடுக’. பாரதியின் இந்த வார்த் தைகள் இல. கணேசனின் குரல்வளையாக, இராம கோபாலனின் குரல்வளை யாகக் காலத்தைத் தாண்டியும் நம் காதுகளில் இன்றும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. (நூல் : ‘பாரதி’ய ஜனதா பார்டி, பக்.111).

இதற்கு மாறாகப் பாரதியார் மீது எல்லையற்ற பற்றால் ‘கனக சுப்புரத்தினம்’ எனும் தன் இயற்பெய ரைப் பாரதிதாசன் என மாற்றிக்கொண்ட பாவேந்தர், தன் படைப்புகள் எல்லாவற்றிலும் வடமொழியின் வல்லாதிக்கத்தை வன்மையாகக் கண்டிக்கிறார். ‘பயிரழிக்கும் விட்டிலெனத் தமிழ்மொழியைப் பாழ் படுத்த வந்த வடமறைதான்’ எனக் குறிப்பிடும் பாரதி தாசன், தொடக்கக் காலங்களில் தன் கதைமாந்தர் பெயர்களைச் சரோஜா, சுந்தரன், சொர்ணம், விஜயா என வடமொழியில் வைத்தாலும், பிற்காலத்தில் வேலன், அன்னம், வேடப்பன், நகைமுத்து என மணி மணியான தமிழ்ப் பெயர்களைத் தேர்ந்தெடுத்துச் சூட்டினார்.

‘வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?’ என்ற அவருடைய நூலைப் படித்தால் பிறமொழிகள் மீது வடமொழி செலுத்தியுள்ள வல்லாண்மையைப் புரிந்துகொள்ள முடியும், சான்றுக்கு ஒன்று :

‘மா’ - இஃது மஹா என்ற வடசொற் சிதைவாம். என்னே மடமை! மா எனில் பெரியது, சிறந்தது, விலங்கு, மாமரம் முதலிய பல பொருள் குறிக்கும் உரிச்சொல் என்று, வடமொழி என்பது இந் நாட்டிற்குப் புகுவதற்கு முன்னமே தமிழ் நூல் கூறிற்று. (மேற்படி நூல், பக்.42).

தமிழ் திராவிடத்திற்குத் தாயாக மட்டுமன்றி, ஆரியத்திற்கு மூல மாகவும் உள்ளது என்று உரத்துச் சொன்னார் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்.

‘தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே

தமிழுயரத் தானுயர்வான் தான்’

எனும் பாவாணரின் கூற்றைக் கூர்ந்து நோக்கினால், நமக்குப் பல உண்மைகள் புலப்படும். வடமொழியை வரைமுறையின்றித் தமிழில் கலக்கவிட்டதன் விளை வாக ஊர்ப்பெயர்களெல்லாம் சமற்கிருதப் பெயர்களாக உருமாறிப் போயின. முதுகுன்றம் - விருத்தாசலமாக வும், மறைக்காடு - வேதாரண்யமாகவும், மயிலாடு துறை - மாயவரமாகவும் இன்று மாய, வரங் கேட்டு நிற்கின்றன.

பழமலை நாதர் - விருத்தீசுவரர், தாயுமானவர் - மாத்ருபூதம், மாதொருபாகன் - அர்த்தநாரீசுவரன், அங்கயற்கண்ணி - மீனாட்சி, உலகம்மை - புவனேசு வரி எனத் தெய்வப் பெயர்களெல்லாம் வடசொல்லாய்த் திரிந்து பல்லிளிக்கின்றன.

பிற்காலச் சோழர் வரலாற்றில் பெருமன்னனாய் எழுந்த அருண்மொழித்தேவன் ‘இராசராசசோழன்’ ஆனான். அவனால் பீடுறக் கட்டப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில் ‘பிரகதீஸ்வரர் ஆலயம்’ ஆனது. இவை பார்ப்பனர்கள் திட்டமிட்டே செய்த தீங்குகள் ஆகும்.

தனித்தமிழ் இயக்கத்தின் எழுச்சிக்குப் பின், மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்றோரின் மாபெரும் தொண்டுகளால் நாராயணசாமி, இராமய் யா, சோமசுந்தரம் போன்ற பெயர்களெல் லாம் இங்கே நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன் போன்ற மாத்தமிழ்ப் பெயர் களாய் மாற்றம் பெற்றன.

அந்தோ, இன்று மொழிப் பற்றில்லாமல் முனை மழுங்கிக் கிடக்கும் தமிழ்ப் பெற்றோர்கள் தம் மக்க ளுக்கு ‘இஷா’, ‘உஷா’, ‘ஆஷா’ என்றெல் லாம் பெயர்கள் இட்டு இழிகின்றாரே! இன்றுவரை இந்து மதத்தின் அசைக்க முடியாத கோட்டையாக விளங்கிவருவது காஞ்சி சங்கரமட மாகும். தற்போhது 80ஆவது பிறந்த நாள் காணும் காஞ்சி சங்கரமடத் தலைவர் செயேந்திர சரசுவதிக்கு முன்பு மடத்தலைவராய் விளங்கியவர் பெரிய பெரிய வாள் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள்.

அந்தப் பெரியவாள் கூறுகிறார் : “இந்துக் களாய்ப் பிறந்த யாராய் இருந்தாலும், எந்த வகுப்பைச் சேர்ந்தவர் களாக இருந்தாலும் பிறந்தது முதல் இறப்பது வரை, அவர்கள் செய்யும் சடங்குகள் எல்லாம் ஆன்மாவின் சமஸ்காரத்திற்காகச் செய்ய வேண்டி யிருப்பதால் ஸம°கிருத மொழியில், புனிதமான மொழியில், பூஜிக்கத் தகுந்த மொழியில் காரியங்கள், சடங்குகள் இவைகள் நடைபெறுகின்றன. மன சந்தோஷத்தை அளிக்கக்கூடியது சமஸ்கிருதம் மாத் திரமே.” (நூல் : ‘தெய்வ வாக்கு’, பக்.267).

இந்தியாவின் அனைத்து அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கத்தினரும் இந்தச் சங்கரமடத்தின் காலடி அடிமைகள் என்றால் இந்தியா உருப்படுவது எப்போது? ‘வடமொழி வாரம்’ கொண்டாட மோடியின் அரசுக்கு ஏன் துணிவு வராது? அதனால்தான் 7.8.2014 நாளிட்ட ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் ஆர். நடராசன் என்பவர் ‘சமற்கிருத வாரம் கொண்டாடுவதில் என்ன தவறு?’ என்று துணிச்சலோடு வினா எழுப்புகிறார்.

மறுநாளே இதற்குப் பேராசிரியர் சுப. வீரபாண்டி யன், செம்மையாய் விடையளித்துள்ளார். ‘சமற்கிருத வாரம் கொண்டாடும் மத்திய அரசே, தமிழுக்கும் வங்கமொழிக்கும் வாரம் எப்போது? அரசமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் வாரங்கள் எப்போது? இந்தியாவில் சமற்கிருதத்துக்கு மட்டும் 12 பல்கலைக்கழகங்கள் உள்ளனவே, மற்ற மொழிகளுக்கான பல்கலைக் கழகங்கள் எங்கே?’ என அடுக்கடுக்காக அக்கட்டுரை யில் வினாக்கள் எழுப்பியுள்ள சுபவீ, இன்றியமையாத இன்னொரு பட்டியலையும் தந்துள்ளார். 3.8.2011 அன்று நாடாளுமன்றத்தில், மனிதவள மேம்பாட்டுத் துறையின் இணையமைச்சர் தந்துள்ள அந்தப் புள்ளி விவரங்கள் கீழே உள்ளன :

மொழிகள் மேம்பாட்டுக்கு அரசின் நிதி ஒதுக்கீடு

ஆண்டு           தமிழ் மேம்பாட்டுக்கு               சமற்கிருதமேம்பாட்டுக்கு       

2008-2009            4.47 கோடி                            72.10 கோடி

2009-2010            8.61 கோடி                            99.18 கோடி

2010-2011            10.16 கோடி                           108.75 கோடி

மேற்காணும் நிதி ஒதுக்கீடு காங்கிரசு ஆட்சிக் காலத்திலும் செய்யப்பட்டது. முன்னதாக வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும், இப்போது மோடியின் ஆட்சிக் காலத்திலும் இதேநிலை தான். (‘தி இந்து’, 8.8.2014, பக்.9).

இதே செய்தியை ஒட்டிச் ‘சமற்கிருதம் பேசுவோர் எங்கே இருக்கிறார்கள்?’ (Where are the Sanskrit Speakers?)என்ற தலைப்பில் ‘தி இந்து’ நாளேட்டில், 10.8.2014 அன்று வெளிவந்துள்ள தகவல் : கோடிக் கணக்கான மக்கள் வாழும் இந்தியாவில் 14,000 பேர் மட்டுமே சமற்கிருதத்தைத் தம் தாய் மொழியாகக் கொண்டவர்கள் எனப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகள், வட தெலுங்கானா, தெற்கு இராஜ°தான், நாகபுரி, அரித்து வார் போன்ற பகுதிகளில் மட்டுமே 200 முதல் 300 பேர் வரை தமது தாய்மொழி சமற்கிருதம் என்று கூறிக்கொள்கின்றனர். உ.பி.யின் சீதாபூர் மாவட்டத் தில் மட்டும் அதிக அளவாக 550 பேர் உள்ளனர்.

இவை தவிர்த்து வடகிழக்கு மாநிலங்கள், மத்தியப் பிரதேசம் தவிர்த்த கிழக்குப் பகுதிகள், ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு, கேரளா, குசராத் போன்ற நாட்டின் மற்றப் பகுதிகளில் சமற்கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண் டோர் ஒருவர் கூட இல்லை என அப்புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்த ஆண்டின் விடுதலைநாளையொட்டி 15.8.2014 அன்று குடியரசுத் தலைவரால் 19 மொழியறிஞர் களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இவற்றில் சமஸ்கிருதம் 15; பாரசீகம் 1; அரபு 2; பிராகிருதம் 1. இவை மட்டுமன்று, சர்வதேச அளவில் பங்களிப்பைச் செலுத்தியமைக்காக சமஸ்கிருத அறிஞர்களில் மேலும் ஒருவருக்குச் சிறப்பு விருது வழங்கப்பட்டது. (தினமணி 16.8.2014, பக்.13).

1921ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப் பின்படி அன்று நாட்டின் மொத்த அளவாகச் சமற் கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்ட 356 பேரில் அன்றைய சென்னை மாகாணத்தில் (Madras Province)  மட்டும் 315 பேர் இருந்துள்ளனர்.

devaneyar-pavanar 3501981இல் 6,106 பேரிலிருந்து, திடுமென 1991இல் 49,736 பேராக வளர்ச்சி கண்ட சமற்கிருதம் தெரிந்த வர்களின் தொகை, 2001இன் கணக்கெடுப்பில், 14,135 பேராகச் சரிவு கண்டுள்ளது.

‘இந்தியாவின் சமற்கிருத கிராமம்’ என்று போற்றப்படும் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாத்தூர் என்ற கிராமத்தில் இன்று மிகச் சிலர்தான் சமற்கிருதத்தைத் தமது தாய்மொழி என்று கூறிக்கொள்கின்றனர். (‘தி இந்து’ ஆங்கில நாளிதழ், 10.8.2014, பக்.I & II.

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய், வடமொழியானது மக்களின் பேச்சு வழக்கிலிருந்து அந்நியப்பட்டாலும், இந்துமத வெறியும், பார்ப்பன மேல்சாதிக் கண்ணோட்டமும் கொண்ட நடுவண் அரசு.

இந்நாட்டு உழைக்கும் மக்களை ஒன்றும் அறியாத மடையர்கள் என்று எண்ணிக் கொண்டு, செத்த மொழி சமற்கிருதத்துக்குக் கோடிக் கணக்கான ரூபாயைச் செலவிட்டுச் சீராட்டப் பார்ப்பது வெட்கங்கெட்ட செயலாகும்.

அண்மையில் முடிந்த விடுதலைநாள் விழாவை யொட்டிக் குடியரசுத் தலைவர் 19 மொழியறிஞர்களுக்கு விருதுகள் வழங்கினார்.

அவர்களில் சமற் கிருதம் 15, பாரசீகம் 1, அரபி 2 பிராகிருதம் 1, இவை மட்டுமன்றிச் சர்வதேச அளவில் பங்களிப்புச் செய்தவர் என்று சமற்கிருத அறிஞர் ஒருவருக்கு மேலும் ஒரு விருது வழங்கப்பட்டது.

- - தினமணி, 16-08-14,பக்.13.

“அரசிருந்த தமிழன்னை ஆட்சியிலே

                சூழ்ச்சிசெயும் ஆள்கள் யாரும்

எரிசருகு! தமிழரிடை எழுச்சியுறும்

                தமிழார்வம் கொழுத்த தீதீ”

என முழங்கினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

“தெற்கோதும் தேவாரம் திருவாய்நன்

                மொழியான தேனிருக்க

செக்காடும் இரைச்சலென வேதபா

                ராயணமேன் திருக்கோ யில்பால்?”

என்றும், எரிதழல் போல் சினந்துகேட்ட தன்மானப் புலவர் அவர். வாய்மூடிக் கிடக்கும் வண்டமிழ் மக்களே! தொடரும் வடமொழி - இந்திமொழித் திணிப்புகளுக்கு எதிராக என்ன செய்யப் போகிறோம்? சமற்கிருதம் பரவினால்தான் பார்ப்பான் வாழமுடியும்; சுரண்டமுடி யும்; நம்மைக் கீழ்ச்சாதி மக்களாக ஆக்க முடியும். அதன் நலிவு, பார்ப்பன ஆதிக்கத்தின் சரிவு என்பதை உணர்ந்துதான் ஒவ்வொரு பார்ப்பனரும் சர்வ ஜாக்கிர தையாக-விழிப்போடு காரியம் செய்து வருகிறார்கள்.”

- பெரியார் ஈ.வெ.ரா. விடுதலை கட்டுரை 15.2.1950, சிந்தனையாளன் தொகுதி 3-2, பக்.1765

Pin It