காங்கிரசில் கதர்போர்டு தலைவராக பெரியார் இருந்த காலத்தில் அது தொடர்பான பதவிகள் பார்ப்பனர்களுக்கே வழங்கப்படுவதை எதிர்த்து அனைத்து சமூகத்தினருக்கும் பகிர்ந் தளிக்க முயற்சித்தார். போர்டு செயலாளராக இருந்த சி.ஆர். சந்தானம் ஒரு பார்ப்பனர். கதர் போர்டு முழுவதையும் பார்ப்பனர்களையேக் கொண்டு குவித்தார். இதற்கு ராஜாஜி எனும் இராஜகோபாலாச்சாரியும் உடந்தை. கருநாடக மாநிலத்திலுள்ள பெல்காமில் காங்கிரஸ் மாநாட்டின்போது இது குறித்து காந்தியாரிடம் புகார் போனது. 1924ஆம் ஆண்டு டிசம்பர் 24, 27 தேதிகளில் இந்திய தேசிய காங்கிரசின் 39ஆவது மாநாடு பெல்காமில் நடந்தது. மாநாட்டின் தலைவர் காந்தி. காந்தி தலைமை தாங்கிய ஒரே காங்கிரஸ் மாநாடும் இதுதான். பெரியாரும் இந்த மாநாட்டுக்குச் சென்றிருந்தார். பெரியாருக்கும் சந்தானத்துக்கும் பார்ப்பனர் ஆதிக்கப் பிரச்சினையில் உருவான மோதலில், சந்தானம் பதவியிலிருந்து விலக முன் வந்தார். அப்போது பெல்காமில் நடந்த சந்திப்பு இது. இது குறித்து ‘குடிஅரசு’ ஏட்டில் (6.9.1927) காந்திக்கும் தனக்கும் நிகழ்ந்த உரையாடலை பெரியாரே எழுத்து வடிவில் பதிவு செய்திருக்கிறார். பெரியாருக்கும் காந்திக்கும் இடையே பெங்களூரில் நிகழ்ந்த சந்திப்பை ஏற்கனவே ‘நிமிர்வோம்’ பதிவு செய்திருக்கிறது. இது பெல்காமில் நடந்த சந்திப்பு. அப்போது ராஜாஜியும் சங்கர்லால் பாஸ்கர் என்பவரும் உடனிருந்தனர்.

பார்ப்பனரல்லாதாருக்கு பதவிகள் வழங்குவதில் உள்ள நியாயத்தை ஏற்றுக் கொண்ட காந்தியார், அது 90 சதவீதம் அளவுக்கு இருக்க வேண்டும் என்று கூறுவது மிகவும் கவனிக்கப்பட வேண்டியதாகும். காந்தியார் பிறந்த நாள் நினைவாக அந்த உரையாடலை ‘நிமிர்வோம்’ பதிவு செய்கிறது.

periyar gandhi and rajaji“மகாத்மாவிற்கு இந்தப் பார்ப்பனர்களின் யோக்கியதை நன்றாய்த் தெரியும் என்பதற்கு நாம் ஒரு உதாரணம் சொல்லுவோம். பெல்காம் காங்கிரசின்போது மகாத்மாவிடம் நாம் பேசிக் கொண்டிருந்த சமயம் அதாவது கதர் போர்டு சம்பந்தமாக அதிலுள்ள உத்தியோகங்கள் மிகுதியும் பார்ப்பனர்களுக்கே கொடுக்கப்பட்டு வருகிறது என்கிற காரணத்தால் நமக்கும் கதர்போர்டு காரியதரிசி என்கிற முறையில் ஸ்ரீமான் கே. சந்தானம் அவர்களுக்கும் அபிப்பிராயபேதம் ஏற்பட்டு விட்டது. இதில் ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார் ஸ்ரீமான் சந்தானத்திற்குப் பக்கபலமாயிருந்தார். இது விஷயமாய் எங்களுக்குள் ஒரு முடிவும் ஏற்பட இடமில்லாமல் போகவே கடைசியாக காரியதரிசி ஸ்ரீமான் கே. சந்தானம் அவர்கள் ராஜினாமாக் கொடுத்துவிட்டார்.

ராஜினாமா கொடுத்து விட்டதோடு (சும்மா இராமல் இந்த ராஜினாமாவை மகாத்மா தகவலுக்கு கொண்டுபோய் ஸ்ரீமான் சந்தானத்தின் ராஜினாமாவைப் பின் வாங்கிக் கொள்ளும்படி செய்ய மகாத்மாவையும் தூண்டப்பட்டது) மகாத்மா நம்மைக் கூப்பிட்டு ஸ்ரீமான் சந்தானம் ஏன் ராஜினாமா கொடுத்தார்? என்று கேட்டார்.

நான் (பெரியார்) கதர்போர்டு சம்பந்த மான உத்தியோகங்களைப் பெரிதும் பார்ப்பனர் களுக்கே அவர் கொடுப்பதால் அதன் தலைவர் என்கிற முறையில் பார்ப்பனரல்லாதாருக்கும் கொடுக்க வேண்டும் என்பதாகச் சொன்ன தனால் அவருக்குத் திருப்தியில்லாமல் அவர் ராஜினாமாவைக் கொடுத்து விட்டார் என்று சொன்னேன்.

மகாத்மா             :               இது ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரி யாருக்குத் தெரியாதா ? என்றார்.

நான்     :               இது விஷயத்தில் அவர்கள் எல்லோரும் ஒன்றுதான் என்று சொன்னேன்.

மகாத்மா             :               அப்படியானால் உமக்கு ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியாரிடம் கூட நம்பிக்கை இல்லையா என்றார்.

நான்     :               பார்ப்பனர்களுக்கு அவர்களிடம் இருக்கும் நம்பிக்கை அவ்வளவு எனக்கு அவரிடம் இல்லை என்று சொன்னேன்.

மகாத்மா             :               அப்படியானால் பார்ப்பனர்களிடத் திலேயே உனக்கு நம்பிக்கை யில்லையா என்றார்.

நான்     :               இந்த விஷயத்தில் நம்பிக்கையே உண்டாவதில்லையே என்றேன்.

மகாத்மா             :               அப்படியானால் உலகத்திலேயே நல்ல பார்ப்பனர் இல்லை என்பது உமது அபிப்பிராயமா என்றார்.

நான்     :               என் கண்ணுக்குத் தென்படுவ தில்லையே; நான் என்ன செய்யட்டும் என்றேன்.

மகாத்மா             :               அப்படிச் சொல்லாதீர்கள். நான் ஒரு நல்ல பார்ப்பனரைக் கண்டிருக் கிறேன். அவர்தான் கோக்கலே. அவர் தன்னை ‘பிராமணன்’ என்று சொல்லிக் கொண்டதே கிடையாது, யாராவது அவரை ‘பிராமணன்’ என்று கூப்பிட்டாலும், மரியாதை செய்தாலும் ஒப்புக் கொள்ளாத தோடு உடனே ஆட்சேபித்துத் தனக்கு அந்த யோக்கியதை இல்லை என்பதை எடுத்துக் காட்டுவார்.

நான்     :               மகாத்மா கண்ணுக்கே ஒரே ஒரு யோக்கியமான ‘பிராமணன்’ மாத்திரம் தென்பட்டு இருக்கும் போது என் போன்றவர்கள் கண்ணுக்கு எப்படி தென்படக் கூடும் என்றேன்.

மகாத்மா:           (வேடிக்கையாய் சிரித்து விட்டு) மறுபடியும் ஸ்ரீமான் சந்தானம் ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொண்டு காரியதரிசி வேலை பார்க்கக்கூடாதா என்று என்னைக் கேட்டார்.

நான்     :               நன்றாய்ப் பார்க்கலாம் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால் பார்ப்பனரல்லாதாருக்கு சரி பகுதி அதாவது 100-க்கு 50 உத்தியோகமாவது கொடுக்கப் படவேண்டும் என்றேன்.

                                (ஸ்ரீமான் பாங்கர் - ஆச்சரியப்பட்டு 100-க்கு 50 வீதம் போதுமா? அது கூடவா இப்போது கொடுக்கப்பட வில்லை என்கிறீர் என்று கேட்டார். நான் ‘ஆம்’ என்றேன்.)

சங்கர்லால் பாங்கர்: ஸ்ரீமான் இராமசாமி நாயக்கர் 100 க்கு 50 போதும் என்கிறாரே இது என்ன அதிசயம் என்றார்.

மகாத்மா             :               நான் ஒருபோதும் சம்மதியேன். 100-க்கு 90 கொடுக்க வேண்டும்.

நான்     :               100-க்கு 50 கொடுப்பதாய் தீர்மானம் போட முடியாது என்கிறவர்கள் 100க்கு 90 கொடுப்பதெப்படி? என்றேன்.

மகாத்மா             :               தீர்மானம் போடவேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் 100-க்கு90 கொடுக்க வேண்டியது கிரமம் என்று சொல்லுவேன் என்று சொல்லிவிட்டு, ஸ்ரீமான் சந்தானத் தைப் பார்த்து பார்ப்பனரல்லா தாருக்கு உத்தியோகம் கொடுப்பதில் உமக்கென்ன ஆட்சேபணை என்று கேட்டார்.

சந்தானம்           :               எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. ஒருவரும் வருவதில்லையே நான் என்ன செய்யட்டும் என்று சொன்னார்.

மகாத்மா             :               என்னைப் பார்த்து என்ன நாயக்கர் ஜீ? யாரும் வருவதில்லை என்கிறாரே என்ன சொல்லுகிறீர்?

நான்     :               அது சரியல்ல. ஏன் வருவதில்லை என்பதற்கே காரணம் வேண்டும். முதலாவது வேலை கொடுக்க வேண்டும். வேலை கொடுத்து அவனை மரியாதையாக நடத்த வேண்டும். இந்த இரண்டு காரியம் நடந்தால் எவ்வளவோ பேர் வேண் டுமானாலும் கிடைப்பார்கள்.

மகாத்மா             :               அப்படியானால் இனிமேல் உத்தியோகஸ்தர்களை நியமிக்கும் அதிகாரம் நீங்கள் வைத்துக் கொள்ளுகிறீர்களா?

நான்     :               ஸ்ரீமான் சந்தானம் முடியாதென் றால் நானே பார்த்துக் கொள்ளு கிறேன்.

மகாத்மா             :               ஸ்ரீமான் சந்தானத்தைப் பார்த்து இனி உத்தியோகஸ்தர்கள் நிய மனத்தை நாயக்கரிடம் விட்டு விடுங்கள் என்றார்.

சந்தானம்           :               எனக்கு ஆட்சேபணை இல்லை. (ஸ்ரீமான் இராஜகோபாலாச் சாரியார் குறுக்கே தலையிட்டு அது முடியாத காரியம். ஏனென்றால் யார் வேலை வாங்குகிறார்களோ அவர்கள்தான் வேலைக்காரரை நியமிக்க வேண்டும். அப்படிக் கில்லாமல் ஒருவர் நியமிப்பதும், ஒருவர் வேலை வாங்குவதுமாயும் இருந்தால் வேலை நடக்காது என்றார்.)

மகாத்மா             :               உடனே (சிரித்துக் கொண்டு) நாயக்கர் சொல்லுவதில் ஏதோ உண்மை இருக்கும்போல் தோன்று கிறது. இப்போது நான் காங்கிரஸ் பிரசிடெண்டு, ஸ்ரீமான் ஜவஹர்லால் நேரு காரியதரிசி, நான் நியமித்த ஆளைக் கொண்டு ஜவஹர்லால் வேலை வாங்க முடியாவிட்டால் நானாவது குற்றவாளியாக வேண்டும்; அல்லது ஜவஹர்லாலாவது குற்றவாளியாக வேண்டும். நியமிக்கப்பட்ட ஆளிடம் குற்றமிருக்க நியாய மில்லை. சர்க்காரில்கூட நியமிப்பவர் ஒருவர், வேலை வாங்குபவர் ஒருவர். அப்படியிருக்க அதில் எங்கேயாவது வேலை வாங்குபவர் நியமிக்காததால் வேலைக்காரர்கள் சரியாய் நடக்கவில்லை என்று ஏற் பட்டிருக்கிறதா? என்று கேட்டார்.

சி.ராஜகோபாலாச்சாரியார்: வகுப்புப் பிரிவினை பார்த்தால் போதுமான வேலை நடக்க வேண்டாமா? தகுதியும்கூட பார்க்க வேண்டாமா? என்றார்.

மகாத்மா             :               நாயக்கர் அதையும் பார்த்துக் கொள்வார் என்றே நினைக்கின் றேன். அப்படி பார்ப்பனரல்லா தாரை நியமித்ததன் மூலம் ஏதாவது வேலைகள் கொஞ்சம் கெட்டுப் போனாலும் குற்றமில்லை. இரண்டு காரியங்களும் நடக்க வேண்டியது தான். அதாவது கதர் விஷயம் எப்படி முக்கியமானதோ அது போல வகுப்பு அதிருப்திகளும் நீங்க வேண்டியதும் மிக முக்கிய மானது. ஆதலால் கதர்போர்டு சம்பந்தமான உத்தியோக நியமனம் நாயக்கர் கையில் இருக்கட்டும் என்று சொன்னார்.

பிறகு எல்லோரும் சரி என்று ஒப்புக் கொண்டதாக அவருக்கு ஜாடை காட்டிவிட்டு வந்து விட்டோம். பிறகு எப்படி எப்படியோ பாடுபட்டு கதர் ஆதிக்கம் முழுவதும் தங்கள் கைக்கே வரும்படியாக பார்ப்பனர்கள் செய்து கொண்டார்கள். அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. நாமும் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் கதருக்கு எவ்வளவு உழைக்க வேண்டுமோ அவ்வளவு உழைத்தோம்; உழைத்துக் கொண்டுமிருக்கிறோம். எனவே மகாத்மா காந்தி இவர்களை சரியானபடி அறிந்து கொள்ளவில்லை என நாம் நினைப்பது தப்பு என்றே சொல்லுவோம்.

(‘குடி அரசு’ 06.03.1927)

(குறிப்பு: சங்கர்லால் பாஸ்கர், ‘சுதந்திரப்’ போராட்ட வீரர். தொழிற்சங்கத் தலைவர். காந்தி நடத்திய ‘எங் இந்தியா’ பத்திரிகையின் அதிகாரபூர்வ ஆசிரியர்-பதிப்பாளர்.)

Pin It