periyar anna karunanidhi and mgrஇரண்டாயிரம் ஆண்டுகளாக கல்வி, வேலை வாய்ப்பு, சுயமரியாதை என அத்தனை வகைகளிலும் அடிமைப்பட்டு கிடந்த தமிழ்ச் சமுதாயத்தை துடைத்தெறிந்து தமிழர்களை தலைநிமிரச் செய்த இயக்கம் தான் திராவிட இயக்கங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது

அதற்கான விதையை ஊன்றியது நீதிக்கட்சியும், தந்தை பெரியாரும் தான் என்பது இன்றைய தலைமுறைக்கு வேண்டுமானால் தெரியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் அதனை மீண்டும் மீண்டும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய தேவை திராவிட இயக்கங்களுக்கு உண்டு

நம்முடைய தமிழ்நாட்டிற்கு என்று ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. பார்ப்பனிய எதிர்ப்பு என்பது இன்றைக்கு நேற்றைக்கு எழுந்ததல்ல. அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த மண்ணில் ஊன்றப்பட்டு விட்டது என்பதற்கான அடையாளம் தான் அற இலக்கியங்கள்.

இன்றைக்கும் தமிழ் மொழி அகத்தியரால் உருவாக்கப்பட்டது என்றும், தொல்காப்பியர் அகத்தியரின் மாணாக்கரில் ஒருவர் என்று சொல்வதில் இருந்தும் அவர்கள் கூற விரும்புவது உங்கள் மொழியே எங்களிடம் இருந்து தான் தோன்றியது. உங்களுடைய இலக்கண, இலக்கிய வளமை அத்தனைக்கும் நாங்கள் தான் அடிப்படை என்பதை தான். நாமும் அதனை புரிந்து கொள்ளாமல் அகத்தியனை நம்முடைய தலையான புலவராக கொண்டு கொண்டாடி வருகின்றோம்.

பெரியார், கலைஞர் எல்லாம் வந்தேறி என்று சாதி சான்றிதழ் வழங்கி கொண்டிருக்கும் நாம் தமிழர் சீமான் கூட்டத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே படையெடுத்து வந்த பண்பாட்டு வந்தேறி அகத்தியரை கண்ணுக்கு தெரியவில்லை என்பது வியப்பான ஒன்று தான்.

இன்றைக்கு தமிழ் மன்னர்கள் என்று கொண்டாடப்படுபவர்கள் எல்லாம் பார்ப்பனிய மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டு அதன் வழியே ஆட்சி செய்தவர்கள் தான். அருள்மொழித் தேவன் என்ற தன்னுடைய பெயரை ராஜராஜன் என்று மாற்றிக் கொண்டது எல்லாம் அந்த அடிப்படையில் தான்.

ஸ்வஸ்தி ஶ்ரீ என்று தொடங்கும் அவரது மெய்க்கீர்த்திகள் எல்லாம் எந்த வகையில் அடங்கும் என்பதை தம்பிகள் தான் ஆய்வு செய்து மெய்ப்பிக்க வேண்டும். ஆனால் அந்தளவிற்கு தம்பிகளுக்கு அறிவு போதாது என்பதை நினைக்கும் போது தான் வருத்தமாக இருக்கிறது. இப்படி ஒரு தலைமுறையே மீண்டும் அடிமைத்தளைக்குள் சீமானின் பராக்கிரமத்தால் புதையுண்டு போகிறதே என்பதை நினைக்கும் போது.

கீழடியிலேயே நாங்கள் அறிவாற்றல் மிகுந்தவர்களாக இருந்தோம். இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றில் பெரியார் தான் தமிழர்களை படிக்க வைத்தாரா? பெரியார் தான் எல்லாவற்றையும் செய்தாரா? கல்லணையைப் பார். தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பார் என்றெல்லாம் தம்பிகள் வீரத்துடன் கேள்வி கேட்கும் போது சிரிப்பு தான் வருகிறது.

கல்லணையும், தஞ்சாவூர் பெரிய கோயிலும் தொழில்நுட்பங்களைச் சார்ந்தவை. அவை வழி வழியாக வந்த பரம்பரை தொழில்நுட்பங்களால் வடிவமைக்கப்பட்டனவே தவிர அவற்றுக்கும் கீழடியின் குவிரனுக்கும், ஆதனுக்கும் தொடர்பில்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளாக எந்த ஒரு பெண்ணுரிமை போராளியையோ, சமூகப் போராளியையோ தம்பிகளால் காட்ட முடியுமா என்றால் முடியாது. ஆனால் பெரியார் தான் வந்து செய்தாரா என்பதை மட்டும் விடவே மாட்டார்கள்.

காரணம் ஆர்.எஸ்.எஸ் என்ற மதவாத அமைப்பு இன்றைக்கும் நுழைவதற்கு குட்டிக்கரணம் அடித்துக் கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு என்ற வெறுப்பு தான் தம்பிகளின் வழியாக நுட்பமான முறையில் வெளிப்படுகிறது.

இவற்றை எல்லாம் நாம் ஆதாரத்துடன் மறுத்து பேசினால் உடனே திமுகவையும், அதிமுகவையும் ஒன்றாக இணைத்து ஊழல் கட்சிகள் என்பதும், திமுக தான் சமூக நீதி பேசிய கட்சி என்று நாம் சொன்னால் உடனே எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டத்தை தூக்கிக் கொண்டு பொதுவில் வைப்பதும் என்று தம்பிகள் எப்படியாவது திராவிட முன்னேற்ற கழகம் ஊழல் கட்சி என்பதை பதிய வைப்பதையும், ஊழல் கட்சியின் தலைவர் கலைஞர் ஊழல்வாதி என்று சொல்வதன் வழியே, இத்தனைக்கும் காரணம் பெரியார் தான் என்று சொல்வது என்று தம்பிகளின் பரப்புரை பெரியார் என்ற அரணை தகர்ப்பது என்ற அடித்தளத்தை நோக்கியே செல்கிறது.

எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தை அமலாக்கவில்லை. அதற்கு முன்னரே அது காமராஜர் ஆட்சிக் காலத்தில் குறிப்பிட்ட பள்ளிகளிலும், அதற்கும் முன்னரே நீதிக்கட்சி ஆட்சியில் சிங்காரவேலரால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் அது.

அத்திட்டத்தை பரவலாக்கியவர் என்று வேண்டுமானால் எம்.ஜி.ஆரை குறிப்பிடலாமே தவிர இந்தத் திட்டத்தையே கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர் தான் என்று சொல்லி அதனாலேயே திமுகவையும், அதிமுகவையும் ஒரே தராசில் வைப்பது என்பது முழுக்க முழுக்க பெரியாரிய எதிர்ப்பே தவிர வேறு அல்ல.

திராவிட முன்னேற்ற கழகத்தின் சிந்தாந்தம் இன்றைக்கு இந்த நாட்டிற்கே தேவை என்ற நிலையில் இருக்கிறது. சமூக நீதி, பெண்ணுரிமை, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை, அவர்களுக்கான இட ஒதுக்கீடு என்ற அனைத்தும் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியில் தான் நிறைவேற்றப்பட்டன.

இவை அனைத்தும் தொடர வேண்டும் என்றால், தமிழ்நாடு எப்போதும் சமூக நீதி மண்ணாகவே தொடர வேண்டும் என்றால் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும். அதற்கு தம்பிகள், சங்கிகள் என்ற எல்லா களைகளையும், பெரியார் என்ற உரத்தால் அழிக்க வேண்டும்.

காரணம் பெரியார் களத்திற்கு வந்த களங்கமில்லா போராளி. அவரால் தான் நாம் இன்றைக்கு வாழ்கிறோம். இனியும் வாழ்வோம். இது ஒன்றே அவரது ஒப்பற்ற தியாகத்திற்கு நாம் செய்யும் சிறு கைமாறு.

- ஆர்.வெங்கட்ராகவன்

Pin It