ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. இதன் தொடக்கப் புள்ளியாக 2016 சூலை 8 அன்று ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதி 22 அகவையினரான புர்கான்வானி ஆயுதப்படையினரால் கொல்லப்பட்ட நிகழ்வு அமைந்தது. புர்கான்வானியின் இறுதி ஊர்வலத்தில் பல்லா யிரக்கணக்கில் காஷ்மீரிகள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப் பைத் தெரிவித்தனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் இளைஞர்கள் அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்தனர். காவல்துறையினர், மத்திய ரிசர்வ் படையினர்மீது கற்களை எறிந்து தாக்கினர். ஆயுதப் படையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாண்டனர்.
துப்பாக்கியால் சுடுவதால் சாவு எண்ணிக்கை அதிகமாவதைத் தடுப்பதற்காகப் பெல்லட்டுகளை (Pellets) ஆயுதப் படையினர் பயன்படுத்தியதாக அரசின் தரப்பில் கூறப்பட்டது.
பெல்லட்டுகள் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்டதும் சிறிய நுண்துகள்கள் சிதறி உடல் முழுவதும் துளைத்துச் செல்லும். 2016 சூலை 8-க்குப்பிறகு, பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட பெல்லட்டுகள் பயன்படுத்தப்பட்டன. பெல்லட்டுத் துகள் கண்ணுக்குள் பாய்ந்ததால் ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் முழுமையாகவோ அல்லது பகுதி அளவிலோ பார்வையிழந்துள்ளனர்.
2016 சூலை 8 முதற்கொண்டு 16 நாள்களில் ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்த கலவரங்களில் 2,228 மாநிலக் காவல் படையினர், 1,100 மத்திய ரிசர்வ் படையினர், 2,259 குடி மக்கள் காயமடைந்ததாக நடுவண் அரசின் உள்துறை அமைச்சர் இராஜ்நாத்சிங் வெளியிட்ட அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார். இதைக் கொண்டே காஷ்மீரில் நிலைமை எந்த அளவுக்குக் கொந்தளிப்பாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
செய்தித்தாள்கள் அய்ந்து நாள்களுக்கு முடக்கப்பட்டன. “காஷ்மீர் ரீடர்” என்கிற நாளேடு 2016 அக்டோபர் 2 முதல் திசம்பர் 27 வரை தடைசெய்யப்பட்டது. கைப்பேசிகள், இணைய தள இணைப்பு முதலானவை செயலிழக்கச் செய்யப்பட்டன. 16,000 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும் பகுதியினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகத் தளைப் படுத்தப்பட்டதாக அரசு கூறியது. போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்களின் நெல் வயல்களை ஆயுதப் படையினர் எரித் தனர்; பழத் தோட்டங்களை அழித்தனர். 1989இல் நடந்த கலவரத்துக்குப்பின், 2016இல்தான் பெரிய அளவில் கலவரம் நடந்ததாக ஊடகங்கள் கூறுகின்றன.
இந்தக் கலவரம் குறித்து ஒரு மாதம் வரை வாய்திறக் காமல் இருந்த தலைமை அமைச்சர் மோடி, 2016 ஆகத்து 9 அன்று மத்தியப்பிரதேசத்தில் காஷ்மீர் கலவரம் குறித்து திருவாய் மலர்ந்தார். அப்போதுகூட, காஷ்மீர் மக்கள் தங்க ளுடைய தன்னாட்சி உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள் என்கிற உண்மையை நரேந்திர மோடி ஏற்க முன்வரவில்லை. மாறாக, “தவறாக வழிநடத்தப்படும் இளைஞர்கள் சிலர் போராட்டம் நடத்துகின்றனர்; ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்கும் சுதந்தரம் காஷ்மீரிக்கும் இருக்கிறது; காஷ்மீர் வளர்ச்சியில் புதிய உயர்நிலையை அடைவதற்காக அரசு பாடுபடுகிறது” என்று எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் பேசினார்.
1988 முதல் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பகை நாட்டின ரால் முற்றுகையிடப்பட்டதுபோல் ஆயுதப் படையின் கண் காணிப்பின்கீழ் இருக்கிறது. குடிமக்கள் ஆறுபேருக்கு ஒரு ஆயுதப்படை வீரர் இருக்கிறார் என்கிற உண்மை இதைப் புலப்படுத்தும். கடந்த முப்பது ஆண்டுகளில் பிறந்த இளைஞர் களிடையே “ஆசாத்” எனும் விடுதலை முழக்கம் ஓங்கி ஒலிக்கிறது. 1947க்குப் பின்னர் பெற்ற தன்னாட்சி உரிமைகளை ஜம்மு-காஷ்மீர் மக்கள் 1964க்குப்பின் படிப்படியாக இழந்தனர். அவற்றை மீட்பதற்காகவே மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
நேரு காலம் முதல் மோடி காலம் வரையில் நடுவண் அரசின் ஆட்சியாளர்கள் காஷ்மீர் மக்களின் உரிமைகளை நசுக்குவதிலேயே முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். பாக்கித்தானைக் காட்டி மிரட்டிப் பணிய வைக்க முயல்கின்றனர். காஷ்மீர் மக்களின் தன்னாட்சி உரிமையைச் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையாகச் சுருக்கி. படை வலிமை மூலம் ஒடுக்கிட நினைக்கின்றனர். இதற்குக் காஷ்மீரின் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பதவி ஆசைக்காகத் துணைபோகும் துரோக மும் தொடர்கிறது.
இந்திராகாந்தி தலைமை அமைச்சராக இருந்த போது, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மாநிலங்களுக்கு வழங்கப் பட்டிருந்த உரிமைகளைப் பறிக்கத் தொடங்கினார். அவர் காலத்தில்தான் மாநில அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வி, பொது அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதன் விளைவாக உயர்கல்வி தொடர்பான அதிகாரம் முழு மையாக நடுவண் அரசிடம் சென்றது. மருத்துவப் படிப்புக் கான நுழைவுத் தேர்வு என்கிற நச்சு வலையிலிருந்து நம்மால் விடுபட முடியவில்லை. தற்போதுள்ள மோடி ஆட்சியில் மாநில உரிமைகள் பல வகையிலும் நசுக்கப்பட்டு வருகின்றன. ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே வரி என்று கூறி நாட்டின் பன்முகத் தன்மையையும், மாநில உரிமைகளையும், தேசிய இனங்களின் எழுச்சியையும் ஒடுக்கிட மோடி ஆட்சி தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிற நிலையில், காஷ்மீர் சிக்கலின் வரலாற்றைத் தெளிவாக அறிந்து கொள்வது, மாநிலங்களின் தன்னாட்சிக் கான - உண்மையான கூட்டாட்சிக்கான நகர்வுகளை முன் னெடுக்க உதவும்.
2200 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது காஷ்மீர். கி.மு.3ஆம் நூற்றாண்டில் அசோகர் ஸ்ரீநகர் எனும் நகரத்தை உருவாக்கினார். 1586இல் அக்பர் படையெடுப்பின் மூலம் ஜம்மு-காஷ்மீரைக் கைப்பற்றினார். அப்போது யூசுப்-ஷா-சாக் என்கிற மன்னர் ஆட்சியில் இருந்தார். அதனால் இன்றும் காஷ்மீர் மக்கள் அக்பரைப் போற்றுவதில்லை. 1752இல் ஆப்கானிஸ்தானின் அரசர் அகமத் ஷா அப்தாலி காஷ்மீரைக் கைப்பற்றினார். 1819இல் மகாராசா இரஞ்சித் சிங் ஜம்முவின் தோக்ரா படையின் உதவியுடன் ஆப்கானி யரை விரட்டினார். 1846இல் மகாராசா குலாப்சிங் ஆண்டிற்கு ரூ.75 இலட்சம் தொகையைக் கிழக்கிந்திய கம்பெனிக்குச் செலுத்துவது என்கிற ஒப்பந்தத்தின் பேரில் ஜம்மு-காஷ்மீரின் மன்னரானார்.
பிரித்தானிய ஆட்சியில் இந்தியத் துணைக் கண்டத்தில் மூன்றில் ஒரு பங்கு பகுதி 500-க்கு மேற்பட்ட சிற்றரசர்களின் ஆட்சியின்கீழ் இருந்தது. பாதுகாப்பு, அயலுறவு, தகவல் தொடர்பு, நாணயம் ஆகியவை தவிர்த்த மற்ற அதிகாரங்கள் சிற்றரசர்களிடமே இருந்தன. ஜம்மு-காஷ்மீரும் இதுபோன்ற தொரு சிற்றரசாக இருந்தது. இந்தியாவுக்கான சுதந்தரம், இந்தியா, பாக்கித்தான் என்கிற நாட்டுப் பிரிவினையுடன் வந்தது. அப்போது, எந்த நாட்டுடன் இணைவது அல்லது தனிநாடாக இருப்பது என்று முடிவு செய்யும் உரிமையைப் பிரித்தானிய அரசு சிற்றரசுகளுக்கு வழங்கியது.
1947 ஆகத்து 15க்கு முன்பாக நிஜாம் ஆட்சியின்கீழ் இருந்த அய்தராபாத்தும், இராஜஸ்தானில் பாக்கித்தான் எல்லையை ஒட்டியிருந்த ஒரு சிற்றரசான ஜுனாகர் தவிர மற்ற சிற்றரசுகள் இந்தியாவுடன் இணைந்துவிட்டன. ஆனால் ஜம்மு-காஷ்மீர் மன்னர் அரிசிங் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார்.
ஜம்மு பகுதியில் இருந்த இந்துக்கள் ஜம்மு-காஷ்மீர் தனி இந்து நாடாக இருக்க வேண்டும் என்று விரும்பினர். ஜம்மு-காஷ்மீரின் முசுலீம் லீக்கும் தனிநாடாக இருப்பதை ஆதரித்தது. ஆனால் ஷேக் அப்துல்லா தலைமை யிலான தேசிய மாநாட்டுக் கட்சி ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் தன்னாட்சி உரிமைகளைக் கொண்டதாக இணைய வேண்டும் என்று கூறியது.
1944இல் மன்னராட்சிக்கு எதிராகக் “காஷ்மீரை விட்டு வெளியேறு” இயக்கத்தை நடத்திய ஷேக் அப்துல்லாவை மன்னராட்சி சிறையில் அடைத்தது.
1947 சூலை மாதம் காஷ்மீருக்குச் சென்ற இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன் மன்னர் அரிசிங்கிடம் 1947 ஆகத்து 15க்குள் இந்தியாவுடன் இணைவதா, பாக்கித் தானுடன் இணைவதா என்பதை முடிவு செய்யுமாறு வலியுறுத்தினார்.
ஆனால் மன்னர் அரிசிங் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதனால் 1947 ஆகத்து 15க்குப்பின் பாக்கித் தான் எல்லைப் பகுதியில் இருந்த முரட்டுப் பழங்குடியினர் பாக்கித்தான் படையின் உதவியுடன் ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவிப் பல பகுதிகளைக் கைப்பற்றினர். வேறு வழியில் லாமல் மன்னர் அரிசிங் 1947 அக்டோபர் 26 அன்று இந்தியா வுடன் இணைவதாக மவுண்ட்பேட்டனுக்கு மடல் அனுப்பி னார். 1947 அக்டோபர் 27 அன்று இணைப்பு குறித்த ஒப்பந்தம் மவுண்ட்பேட்டனுக்கும் அரிசிங்கிற்கும் இடையே கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் இணைதல் என்பது மக்களின் ஒப்புதல் பெற்ற பிறகே இறுதியாகும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் அயலுறவு, பாதுகாப்பு, தகவல் தொடர்பு தவிர்த்து மற்ற அதிகாரங்கள் ஜம்மு-காஷ்மீருக்கே உண்டு என்றும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 1947 செப்டம்பர் 29 அன்று சிறையி லிருந்து விடுதலை செய்யப்பட்ட ஷேக் அப்துல்லாவை மன்னர் அரிசிங் அக்டோபர் 27 அன்று ஜம்மு-காஷ்மீரின் அவசரகால தலைமை நிருவாகியாக (Emergency Administrator for the State) நியமித்தார்.
1947 அக்டோபர் 27 அன்றே இந்தியப் படைகள் ஸ்ரீநகரில் இறக்கப்பட்டன. இந்தியப் படைகள் பாக்கித்தானி லிருந்து ஊடுருவியவர்களுக்கு எதிராகத் தாக்குதல்களைத் தொடுத்தன. 1947 நவம்பர் 1-ஆம் நாள் இந்தியா, பாக்கித்தான் கவர்னர் ஜெனரல்கள் கூடிப் பேசினர். ஜம்மு-காஷ்மீர் மக்களின் பொதுக் கருத்தை அறிந்த பின் முடிவு செய்யலாம் என்று மவுண்ட்பேட்டன் கூறினார். இந்தியப் படைகளை ஜம்மு-காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்ற தால், பொது கருத்துக் கணிப்பில் பாக்கித்தானுக்குத் தோல்வி ஏற்படும் என்ற அச்சத்தால் ஜின்னா அக்கருத்தை ஏற்க வில்லை.
இருதரப்புப் பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததால், ஜம்மு-காஷ்மீர் சிக்கலை இந்தியா ஐ.நா. மன்றத்துக்கு 1948 சனவரி 1 அன்று கொண்டு சென்றது. ஐ.நா. பாதுகாப்பு அவை இதற்காக ஒரு ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையத்தின் பரிந்துரையையும் பாக்கித்தான் ஏற்க மறுத்தது. அதனால் இந்தியப் படைகள் தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்தின. அதன்பிறகுதான் 1949 சனவரி 1 அன்று இந்தியா-பாக்கித்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆயினும் ஜம்மு-காஷ்மீரின் ஒருபகுதி பாக்கித்தானிடமே இருந்தது. இது பாக்கித்தான் வசம் உள்ள காஷ்மீர் எனப் படுகிறது. ஐ.நா. மன்றத்துக்குக் கொண்டு சென்றதால், இன்றளவும் காஷ்மீர் ஐ.நா.வில் விவாதிக்கப்படும் பொருளாக இருக்கிறது.
ஜம்மு-காஷ்மீரில் மக்களுக்குப் பொறுப்பு வாய்ந்த அரசு அமைக்கப்பட வேண்டும்; மக்களுக்கான அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. எனவே மன்னர் அரிசிங் ஷேக் அப்துல்லாவை 1948 மார்ச்சு 1 முதல் பிரதமராக நியமித்தார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பணி 1946 திசம்பரில் தொடங்கியது. காங்கிரசுக் கட்சியும் காந்தி யாரும், சுதந்தரம் பெற்றபின் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை அளித்து, அவர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைக் கொண்ட அவையால் இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் என்று பல ஆண்டு களாக மக்களிடம் கூறிவந்தனர். ஆனால் வெறும் 14 விழுக் காடு வாக்குரிமைப் பெற்றவர்களால் 1946 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்ட அவையே அரசமைப்புச் சட்ட அவையாகச் செயல்பட்டது. பெரியார் இதை வன்மை யாகக் கண்டித்தார். இது ஒரு அரசியல் மோசடி என்றார்.
1949 நவம்பர் மாதத்திற்குள் அரசமைப்புச் சட்ட அவையால் இந்திய அரசமைப்புச் சட்டம் இறுதி செய்யப்பட வேண்டியிருந்தது. அந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் மன்ன ராட்சியில் திவானாக இருந்தவரும், இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் உறுப்பினராக இருந்தவருமான கோபால் சாமி அய்யங்கார் 1949 அக்டோபர் 6 அன்று அரசமைப்புச் சட்ட அவையில் ஒரு விவரத்தை முன்வைத்தார்.
ஜம்மு-காஷ்மீர் தவிர, மற்ற சிற்றரசுகள் இந்தியாவுடன் எந்த நிபந்தனையும் இல்லாமல் இணைந்ததால், இந்திய அரசமைப்புச் சட்டம் அவற்றுக்கு முழுமையாகப் பொருந்தும். பாதுகாப்பு, அயலுறவு, தொலைத்தொடர்பு தவிர்த்த மற்ற செய்திகள் குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் ஜம்மு-காஷ்மீருக்கு உண்டு என்று இணைப்பு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்புச் சலுகை அளித்திட இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஓர் ஏற்பாட்டைச் செய்ய வேண்டும் என்பதே கோபால்சாமி அய்யங்கார் முன்வைத்த வாதமாகும். இதன் அடிப்படையில் தான் ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் 370ஆவது உறுப்பு அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.
அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 370இன்படி, இந்திய நாடாளுமன்றம் பாதுகாப்பு, அயலுறவு, தகவல் தொடர்பு தவிர்த்த நடுவண் அரசின் பட்டியலில் உள்ள மற்ற அதிகாரங் கள், பொதுப் பட்டியலில் உள்ள அதிகாரங்கள், எஞ்சிய அதிகாரங்கள் குறித்து இயற்றும் சட்டங்கள் ஜம்மு-காஷ் மீருக்குப் பொருந்தாது. எனவே நேரு நடுவண் அரசின் அதிகார வரம்பை ஜம்மு-காஷ்மீருக்கு விரிவுபடுத்த விரும்பி னார். ஜம்மு-காஷ்மீர் பிரதமர் ஷேக் அப்துல்லாவுடன் பேசினார். அதன் அடிப்படையில் 1952 சூலையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இது தில்லி ஒப்பந்தம் எனப்படுகிறது.
தில்லி ஒப்பந்தத்தின் முதன்மையான கூறுகள் :
1. ஜம்மு-காஷ்மீரில் வாழும் குடிமக்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 5ஆவது பிரிவின்படி இந்தியக் குடிமக்களாவர். அதேசமயம் ஜம்மு-காஷ்மீர் குடிமக்களுக்குக் காஷ்மீர் அரசு தனித்தன்மையான உரிமைகளையும், சலுகை களையும் சட்டமன்றத்தின் மூலம் வழங்கிக் கொள்ளலாம்.
2.இந்திய தேசியக் கொடி முதல்நிலையைப் பெறும். ஜம்மு-காஷ்மீருக்கென்று தனிக்கொடி வைத்துக் கொள்ளலாம்.
3.ஜம்மு-காஷ்மீர் மாநில அரசின் தலைவர் சதார்-அய்-ரியாசட் (ஆளுநர் பதவி போன்றது) என்று அழைக்கப் படுவார். இவர் சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார். இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர் குடியரசுத் தலை வரின் ஒப்புதலைப் பெறவேண்டும்.
4. எஞ்சிய அதிகாரங்கள் ஜம்மு-காஷ்மீர் அரசிடம் இருக்கும்.
5. உச்சநீதிமன்றத்தின் அதிகார எல்லை ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும். ஆனால் அது மாநிலங்களுக்கு இடையே யான சிக்கல்கள், நடுவண் அரசுக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கும் இடையிலான சிக்கல்களுக்கு மட்டுமே பொருந்தும்.
6. இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பு குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்களைப் பொருத்த அளவில் மட்டும் ஜம்மு-காஷ்மீருக்குப் பொருந்தும். சட்டமன்றத் தேர்தல் தொடர்பான முழு அதிகாரமும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் இருக்கும்.
தில்லி ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்டது. இதுதொடர்பாக 1954இல் குடியரசுத் தலைவர் ஆணை வெளியிட்டார். அந்த ஆணையில் இந்திய அரச மைப்புச் சட்டத்தின் விதி 34ஏ-வின்படி ஜம்மு-காஷ்மீர் தன் குடிமக்களுக்குச் சிறப்பு உரிமைகளையும் சிறப்புச் சலுகை களையும் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. குடிமக்கள் (State subjects) என்ற சொல்லுக்குப் பதிலாக நிரந்தரமாகக் குடியிருப்பவர்கள் (Permanent Residents) என்று மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டம்
அரசின் தலைவர் என்ற முறையில் இளவரசர் கரண்சிங் 1951 மே 1 அன்று அரசமைப்புச் சட்ட அவை அமைப்பதற் கான அறிவிப்பை வெளியிட்டார். 21 அகவை நிரம்பிய அனைவரும் வாக்காளர்களாகப் பட்டியலிடப்பட்டிருந்தனர். 1951 ஆகத்து மாதம் சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடந்தது. அக்டோபர் மாதம் சட்டமன்றம் கூடியது. இதுவே அரசமைப் புச் சட்ட அவையாகச் செயல்பட்டது. 1956 நவம்பர் 17 அன்று ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டம் நிறைவேறியது. 1957 சனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த அரசமைப் புச் சட்டத்தின் மூலம் மன்னர் வாரிசு உரிமை ஒழிக்கப்பட்டது. அரசின் தலைவர் சதார்-அய்-ரியாசத் (Sadar-i-Riyasat) என்று அழைக்கப்படுவார். இவர் சட்டமன்றத்தால் தேர்ந் தெடுக்கப்படுவார். அரசமைப்புக்கு முரணாக அவர் செயல்பட்டால், சட்டமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் அவரைப் பதவியிலிருந்து நீக்கலாம்.
இந்த அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை, “ஜம்மு-காஷ்மீர் மக்களாகிய நாங்கள் மனமார்ந்த உறுதிப்பாட்டுடன் எழுதிக்கொண்ட அரசமைப்புச் சட்டம்” என்று தொடங்குகிறது. “1947 அக்டோபர் 26 அன்று இந்தியாவுடன் இணைந்த நாங்கள், இந்திய ஒன்றியத்துடனான ஜம்மு-காஷ்மீரின் உறவுகளை இந்த அரசமைப்புச் சட்டத்தின்மூலம் வரை யறுத்துள்ளோம்” என்று முகவுரையில் கூறப்பட்டுள்ளது.
நிரந்தரக் குடிமக்கள் (Permanent Residents)
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதி 35-ஏ, ஜம்மு-காஷ்மீரின் நிலையான குடிமக்கள் மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து சட்டம் இயற்றிக் கொள்ளும் அதிகாரத்தை ஜம்மு-காஷ்மீருக்கு வழங்குகிறது. அதன்படி ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தில் நிரந்தரக் குடிமக்கள் குறித்தும் அவர்களின் சிறப்பு உரிமைகள் குறித்தும் வரையறுக்கப் பட்டுள்ளது.
மறைந்த அரசர் குலாப் சிங் சாகிப் பகதூர் ஆட்சி தொடங்கிய காலம் (1848) முதல் பிறந்து இங்கேயே குடியிருப்பவர்கள், 1942இல் சம்வத் ஆண்டு தொடங்குவதற்குமுன் இங்கே குடியமர்ந்து தொடர்ந்து நிலையாக வாழ்பவர்கள் மற்றும் 1954 மே 14க்குமுன் சட்டப்படி அசையா சொத்து வாங்கி, பத்து ஆண்டுகளுக்குமேல் குடியிருப்பவர்கள் ஜம்மு-காஷ்மீரின் நிரந்தரக் குடிமக்கள் ஆவர் என்று அம்மாநில அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ளது.
நீண்டகாலமாக ஜம்மு-காஷ்மீரை மற்ற மாநிலத்தவர்கள் குறிப்பாகப் பஞ்சாபியர்கள் சுரண்டி வருவதைத் தடுப்பது நிரந்தரக் குடிமக்கள் சட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும். வேலை வாய்ப்பு, கல்வி உதவித் தொகை. அரசின் பிற சலுகைகள் காஷ்மீர் மக்களுக்கே கிடைக்க வேண்டும் என்பது இதன் முதன்மையான நோக்கமாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதி 15(1)இன்படி, பிறந்த இடம் காரணமாகப் பாகுபாடு காட்டக் கூடாது; விதி 16(1)இன்படி வேலையில் சம வாய்ப்பு; விதி 19(1)(f)இல் எந்த இடத்திலும் சொத்து வாங்க, வைத்திருக்க, விற்க உரிமை உண்டு; 19(1)((e)இல் எந்தப் பகுதியிலும் நிலையாக வாழும் உரிமை உண்டு. ஆனால் 35-ஏ-இன்படி, ஜம்மு-காஷ்மீரில் இவை இந்தியாவின் பிற பகுதிகளில் வாழும் குடிமக்களுக்குப் இது பொருந்தாது.
ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப் படுவதற்கு முன்பே அம்மாநில அரசியலில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. நேருவுக்கும் ஜம்மு-காஷ்மீரில் பிரதமராக இருந்த ஷேக் அப்துல்லாவுக்கும் கருத்து முரண்பாடு முற்றியது. 1953 ஆகத்து 8 அன்று ஷேக் அப்துல்லா பதவியிலிருந்து நீக்கப்பட்டார்; அடுத்த நாள் கைது செய்யப்பட்டார். தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த பக்ஷிகுலாம் முகமது நேரு வால் பிரதமராக்கப்பட்டார். அதுமுதல் ஜம்மு-காஷ்மீரில் நடுவண் அரசின் ஆதிக்கம் வளரத் தொடங்கியது. 1954இல் ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததற்கான மக்களின் ஒப்புதல் சட்டமன்றத்தின் மூலம் வழங்கப்பட்டது. ஷேக் அப்துல்லா 11 ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். ஷேக் அப்துல்லாவை விடுதலை செய்யுமாறு மக்கள் தொடர்ந்து குரல்கொடுத்து வந்தனர்.
நேருவின் திட்டப்படி ஷேக் அப்துல்லா 1954 ஏப்பிரல் 6 அன்று விடுதலை செய்யப்பட்டார். காஷ்மீர் சிக்கலுக்குத் தீர்வு காண பாக்கித்தான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஷேக்கைப் பாக்கித்தானுக்கு அனுப்பினார் நேரு. ஷேக் பாக்கித்தானில் இருந்தபோதே நேரு 1964 மே 27 அன்று இறந்தார். லால்பகதூர் சாஸ்திரி இந்தியாவின் பிரதமரானார். அதன்பின் நடுவண் அரசின் அதிகாரங்கள் ஜம்மு-காஷ் மீருக்கு வேகமாக விரிவுபடுத்தப்பட்டன. இந்திய அரசமைப்புச் சட்ட விதிகள் 356, 357 ஆகியவை ஜம்மு-காஷ்மீர் சட்ட மன்றத்தால் ஏற்கச் செய்யப்ப்டடது. இவற்றின்படி, நடுவண் அரசு ஜம்மு-காஷ்மீர் ஆட்சி அதிகாரத்தையும், சட்டமன்ற அதிகாரத்தையும் எடுத்துக் கொள்ளலாம். ஜம்மு-காஷ்மீர் அரசின் தலைவர் பெயர் சதார்-ஐ-ரியாசட் என்பது ஆளுநர் என்றும், பிரதமர் என்ற பெயர் முதலமைச்சர் என்றும் மாற்றப்பட்டது. ஆளுநர் சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப் படும் நிலை ஒழிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் நியமிக் கப்படும் நிலை ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறு தன்னாட்சி உரிமைகளும், அடையாளங்களும் அழிக்கப்படுவதைக் காஷ்மீர் மக்கள் கடுமையாக எதிர்த்தனர்.
1974 நவம்பர் 13 அன்று பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கும் ஷேக் அப்துல்லாவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி ஷேக் அப்துல்லா முதலமைச்சரானார். ஆனால் காங்கிரசுக் கட்சியின் சட்டமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் ஷேக் முதலமைச்சரானதை இளைஞர்கள் எதிர்த்தனர். 1977, 1983 தேர்தல்களில் ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி அறுதிப் பெரும்பான் மையுடன் ஆட்சி அமைத்தது. இதற்கிடையில் ஷேக் அப்துல்லாவின் மறைவுக்குப்பின் அவருடைய மகன் பாரூக் அப்துல்லா முதலமைச்சரானார். காஷ்மீர் தனிநாடாக வேண்டும் என்று இளைஞர்கள் போராடிக் கொண்டிருந்த போதிலும் பத்து ஆண்டுகளில் பெரிய அளவில் வன்முறை நிகழவில்லை.
இந்நிலையில் 1984 சூலை 2 அன்று இந்திராகாந்தி, பாரூக் அப்துல்லா கட்சியின் 12 சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்த்தார். இத்திட்டத்துக்கு ஆளுநர் பி.கே. நேரு ஒத்துழைக்க மறுத்ததால், அவரைக் குசராத்துக்கு மாற்றிவிட்டு, நெருக்கடி நிலைக் காலத்தில் தில்லியில் துணை நிலை ஆளுநராக இருந்தபோது அடாவடித்தனமாகச் செயல்பட்ட ஜக்மோகனை ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக நியமித்தார். பாரூக்கிற்குப்பின் ஜி.எம். ஷா முதல்வராக்கப்பட்டார். பாரூக்கை முதல்வர் பதவியி லிருந்து நீக்கியதையும், நடுவண் அரசின் அத்துமீறல்களையும் கண்டித்து காஷ்மீர் மக்கள் போராடினர். ஆளுநர் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. ஜக்மோகன் காஷ்மீரி தேசிய இன உணர்வை ஒடுக்கும் நடவடிக்கைகளை எடுத்தார்.
பாரூக் அப்துல்லாவின் பதவி ஆசை காரணமாக 1986 நவம்பர் 7 அன்று காங்கிரசு - தேசிய மாநாட்டுக் கட்சியின் கூட்டணி ஆட்சி ஏற்பட்டது. பாரூக் முதலமைச்சரானார். பாரூக்கின் சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் எதிர்த்தனர். இளைஞர்கள் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற பெயரில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாக்கித்தான் அரசு தன் எல்லையில் முகாம்கள் அமைத்து காஷ்மீர் இளைஞர்களுக்குப் பயிற்சியும் ஆயுதமும் அளித்து இந்தியா வுக்குள் அனுப்பிக் கொண்டே இருக்கிறது. 1988 முதல் கடந்த முப்பது ஆண்டுகளாக இந்திய அரசின் ஆயுதப் படையினருக்கும் ஆயுதமேந்திய இளைஞர்களுக்கும் இடையே மோதல்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. ஜம்மு-காஷ்மீர் மக்கள் தங்கள் சுயமரியாதையும், அடையாளங்களும் காக்கப்படும் வகையிலான தன்னாட்சி உரிமைகள் மீட்டெடுக் கப்பட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கின்றனர்.
1954 முதல் 1994 வரையிலான காலத்தில் இந்திய அரசின் ஏகாதிபத்திய மனப்போக்கின் காரணமாக, குடியரசுத் தலைவரின் 47 ஆணைகள் மூலம் காஷ்மீரின் தன்னாட்சி உரிமைகள் பறிக்கப்பட்டன. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 395 உறுப்புகளில் 260 உறுப்புகள் ஜம்மு-காஷ்மீருக்கு நீட்டிக்கப்பட்டன. நடுவண் அரசின் அதிகாரப் பட்டியலில் உள்ள 97 விதிகளில் 94 விதிகளும், பொதுப் பட்டியலில் உள்ள 47 விதிகளில் 26 விதிகளும் ஜம்மு-காஷ்மீருக்கு நீட்டிக்கப்பட்டன. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 370க்கு இவை முற்றிலும் எதிரானவை ஆகும். இந்திய அரசின் இந்த உரிமைப் பறிப்பு நடவடிக்கைகளே ஜம்மு-காஷ்மீரின் கொந்தளிப்புக்குக் காரணமாகும்.
1996இல் பாரூக் அப்துல்லா மீண்டும் முதலமைச்சரான போது ஆகத்து 11 அன்று மாநில சுயாட்சி குறித்து ஆராய ஒரு குழுவை அமைத்தார். அக்குழுவின் அறிக்கை 2000 சூன் 26 அன்று சட்டமன்றத்தால் ஒருமனதாக ஏற்கப்பட்டது. 1953இல் ஷேக் அப்துல்லா பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன் ஜம்மு-காஷ்மீருக்கு என்னென்ன உரிமைகள் இருந் தனவோ அவை மீண்டும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று அந்த அறிக்கை கூறியது. 2000 ஆகத்து 4 அன்று இந்த அறிக்கையை ஆய்வு செய்த வாஜ்பாய் அமைச்சரவை இதை ஏற்க மறுத்தது. கடிகாரத்தின் முள்ளைப் பின்னோக்கி நகர்த்துவது போன்றது; இயற்கை நியதிக்கு முரணானது; இந்தியாவுடன் இரண்டரக் கலக்க வேண்டும் என்கிற ஜம்மு-காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு எதிரானது என்று அடா வடித்தனமாக வாஜ்பாய் கருத்துரைத்தார்.
2010ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் பெருங்கலவரம் ஏற்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் 130 பேர் இறந்தனர். அப்போது மன்மோகன் சிங் தலைமையில் இருந்த நடுவண் அரசு ஒரு தூதுக்குழுவை அமைத்தது. அக்குழு 2011இல் அதனுடைய அறிக்கையை அளித்தது. அந்த அறிக்கையில், 1952க்குப்பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு விரிவாக்கம் செய்யப் பட்ட நடுவண் அரசின் சட்டங்களை மறுஆய்வு செய்ய வேண்டும்; அரசமைப்புச் சட்டத்தில் விதி 370 தற்காலிகமானது என்று இருப்பதைச் சிறப்பு ஏற்பாடு என்று மாற்ற வேண்டும்; சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் கடுமையான குற்றச்சாட்டு இல்லாதவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
ஆனால் நடுவண் அரசு இந்த அறிக்கை மீதும் எந்தவொரு நடவடிக் கையும் எடுக்கவில்லை. வழக்கம்போல் காஷ்மீர் மக்களுக் குத் துரோகம் இழைக்கப் பட்டது. தோற்கடிக்கப்பட்ட - உரிமைகள் பறிக்கப் பட்ட மக்களாக இருப்ப தை ஏற்கமறுத்தே காஷ் மீர் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரில் இருந்துவரும் கொந்தளிப்பான நிலைமை யையொட்டி, நடுவண் அர சும் நடவடிக்கை எடுப்பது போல் காட்டிக் கொள்வ தற்காக, புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநரான தினேசுவர் சர்மா என்பவரைச் சிறப்புத் தூதுவராக 23.10.2017 அன்று அமர்த்தியுள்ளது. இவர் காஷ்மீரில் சிலருடன் பேசிக் கொண்டிருக்கிறார்.
இந்த நவம்பர் மாதம், கால்பந்தாட்ட வீரராக இருந்து பிறகு லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தில் சேர்ந்த மஜித்கான் என்பவர், இணையதளத்தில் தன் தாயின் வேண்டுகோளை ஏற்று, சரணடைந்தார். இதையொட்டி இந்திய அரசு புதிய சரணடையும் திட்டத்தை அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் சிக்கல் அரசியல் உரிமை சார்ந்தது என்பதைத் திசைதிருப்பும் நாடகமே இத்திட்டம்.
மேற்கு பாக்கித்தான் அகதிகளின் அமைப்பான “குடி மக்களாகிய நாங்கள்” அமைப்பும், காஷ்மீர் பார்ப்பனர் களான பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த சாரு வாலி கன்னா என்பவரும் அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் 35ஏ, 370 ஆகியவற்றை நீக்குமானறு கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. நடுவண் அரசு நீண்டகாலமாகத் தன்னுடைய கொள்கைகளை உச்சநீதிமன்றத்தின் மூலம் நிறைவேற்றிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றமும் ஆளும் வர்க்கத்தின் குறிப்பறிந்து தீர்ப்புகளை வழங்கி வருகிறது. அதனால் காஷ்மீரின் உரிமைகளைப் பாதுகாக்கும் 35-ஏ, 370 ஆகிய விதிகளுக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
பார்ப்பனர்கள் உள்ளிட்ட மேல்சாதியினர், பணக்காரர்கள், முதலாளிகளைக் கொண்ட இந்திய ஆளும் வர்க்கம் தன் பொருளியல் சுரண்டலுக்கும், சமூக ஆதிக்கத்திற்கும் ஏற்ற தன்மையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தை இயற்றிக் கொண்டது. இதன்மூலம் தேசிய இனங்களின் உரிமைகளை நசுக்கியது. இந்தியாவில் உள்ள மொழிவழித் தேசிய இனங்கள், காஷ்மீரின் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதன் மூலமே தங்களின் தன்னாட்சிக்கு வழிகாண முடியும். தேசிய இனங்களின் தன்னாட்சியே உண்மையான மக்களாட்சி யாகும். ஒற்றை அதிகார மய்யப்படுத்தப்பட்ட ஆட்சி முறை யைத் தகர்த்து, தன்னாட்சி கொண்ட தேசிய இனங்களின் உண்மையான கூட்டாட்சியை அமைப்போம்.