காஷ்மீரின் பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், தகவல் தொடர்பு ஆகிய மூன்று துறைகளை மட்டும் இந்தியா பார்த்துக் கொள்ளும். படையெடுப்பாளர்கள் வெளியேற்றப்பட்ட பின் காஷ்மீர் மக்களின் விருப்பத்தின்படி இறுதி முடிவெடுக்க ஒப்புக் கொண்ட இந்திய அரசின் அன்றைய பிரதமர் நேரு, 1947 நவம்பர் 2 அன்றைய வானொலி உரையில், “காஷ்மீரின் எதிர்காலம் இறுதியில் மக்களால் தீrமானிக்கப் பட வேண்டும் என்பதை நாங்கள் பிரகடனப்படுத்தியுள்ளோம். இது காஷ்மீர் மக்களுக்கு மட்டுமல்ல. முழு உலகிற்கும் நாங்கள் கொடுத்துள்ள வாக்குறுதியாகும்” என்றார்.

உதட்டளவில் இவ்வாறு பேசிய நேருவின் உள்ளடக்கிடக்கையோ வேறானது. 1947 செப். 27 இல் சர்தார் பட்டேலுக்கு தான் எழுதிய கடிதத்தில் “ஷேக் அப்துல்லாவின் ஒத்துழைப்போடு இந்திய யூனியனுடன் காஷ் மீரை எவ்வளவு விரைவில் இணைக்க முடியுமோ அவ்வளவு விரைவில் இணைப்பதற்கு ஏற்ற வகையில் காரியங்கள் நடந்தாக வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். (காஷ்மீர் மீதான பாரதத்தின் யுத்தம் ப.23).

காஷ்மீர் மக்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஜனவரி 3, 1948 தொடங்கி டிசம்பர் 2, 1957 வரை 11 தீர்மானங்கள் ஐ.நா.வில் மீண்டும் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 31.12.1948 இல் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமான போர் ஓய்வு ஒப்பந்தப்படி காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு - ஒரு தற்காலிக எல்லைக்கோடு வரையப் பட்டு, கட்டுப்பாடு எல்லைக்கோடு வரையப்பட்டது. (கி.வெங்கட்ராமன், கார்கில் போரும் காஷ்மீர் சிக்கலும் ப.7)

ஜம்மு காஷ்மீருக்கு முழு இறையாண்மை கோரிய ஷேக் அப்துல்லா, 1951 செப்டம்பரில் நடந்த தேர்தலில் வெற்றியடைந்ததன் பின்னரான தன் சட்டமன்ற உரையில் 1951 நவம்பர் 5 அன்று நான்கு கடமைகளை முன் வைத்தார்.

1.        காஷ்மீரின் எதிர்காலம் பற்றிச் சட்டமியற்றுவது.

2.        மன்னராட்சியின் எதிர்காலம் பற்றி முடிவு செய்வது.

3.        முன்னாள் நிலவுடமையாளர்களால் பறிமுதல் செய்யப்பட்ட தமது பாரம்பரிய உரிமையுள்ள நிலங்களுக்கு நட்ட ஈடு கோருவதைப் பற்றிப் பரிசீலிப்பது, இந்தியாவுடன் இணைவதைப் பற்றி முடிவு செய்வது.

தேர்தல் வெற்றியின் சுகம் காஷ்மீர் சிங்கமான ஷேக் அப்துல்லாவையும் விட்டு வைக்கவில்லை. இதன் பயனாகவே - இந்திய வரலாற்றில் அப்பட்டமாக காஷ்மீரிகளுக்கு துரோகமிழைக்கப்பட்டு, காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு எதிராக 1955 ஜூலை 7 அன்று ஸ்ரீநகரில் இந்திய உள்துறை அமைச்சராக இருந்த கோவிந்தவல்லபபந்த். “காஷ்மீருடைய இணைப்பு என்பது ஒரு யதார்த்தம் ஆகிவிட்டது. இனி அதை மாற்ற முடியாது. ஏனெனில் அரசியல் நிர்ணய சபையில் உள்ள தங்களுடைய பிரதிநிதிகள் மூலமாக இந்தியாவுடன் இருப்பதென காஷ்மீர் மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்றார்” (நுராணி. ஏ.ஜி. The Kashmir Question, P.69) பக்ஷிகுலாம் முகமது தலைமையில் இயங்கிய ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை 1956 நவம்பர் 17 அன்று இயற்றிய தீர்மானம் கீழ்வருமாறு கூறியது. ‘ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கிறது. இனிமேலும் இருக்கும்’.

ஆனால் இந்த அறிவிப்பை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நிராகரித்து 1957 ஜனவரி 24 அன்று இயற்றப்பட்ட தீர்மானம், ‘ஐ.நா. தீர்மானத்திற்கு இணங்க செய்யப்படாத இவ்வறிவிப்பு அதாவது கருத்து வாக்கெடுப்பின் வழி செய்யப்படாத இந்த முடிவு செல்லத் தக்கதல்ல’ என்று கூறியது.

ஆனால் நேருவும் தன் குரலை வெளிப்படையாக மாற்றிக் கொண்டு, “காஷ்மீரானது அய்யத்திற்கிடமின்றி சட்டப்பூர்வமாகவும், வரலாற்றுப் பூர்வமாகவும், அரசியலமைப்புச் சட்ட மூலமாகவும் இந்தியாவின் ஒரு பகுதியே” என்று 1957 ஜூலை நவம்பர் இந்தோ ஜப்பானிய இதழில் வந்த பேட்டியில் கூறினார். (காஷ்மீர் மீதான பாரதத்தின் யுத்தம் ப.68)

தேசிய மாநாட்டுக் கட்சியும், ஷேக் அப்துல்லாவினுடைய அரசும் காஷ்மீரின் சுதந்திரத்தை நோக்கி நகரத் தொடங்கிய நிலையில் 1953 ஆகஸ்ட் 8 இல் சேக் அப்துல்லா கைது செய்யப்பட்டார். 1947க்குப் பின் இந்திய வரலாற்றில் முதன்முறையாக பொய் வாக்கு போட்டு சேக் அப்துல்லாவை தனிமைச் சிறையில் (10 ஆண்டுகள்) அடைத்ததன் மூலம் - எந்த விசாரணையும் இன்றி அரசியல் தலைவர்களை ஆண்டுக்கணக்கில் சிறை வைக்கும் நடைமுறையை ஆசிய ஜோதியான நேரு தொடங்கி வைத்தார்.

1957 பிப்ரவரி 10 வாக்கில் கீழ்க்கண்டவாறு நேரு பேசியதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

“இரண்டு அடிப்படைகளை ஏற்றுக் கொண்டால் ஐ.நா. உடனோ, பாகிஸ்தானுடனோ அல்லது எந்த நாட்டுடனானாலும் சரி, நான் பேசத் தயார். முதல் அடிப்படை, 1947 அக்டோபரில் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகிவிட்டது என்பதாகும்.

இரண்டாவது அடிப்படை, பாகிஸ்தானின் நியாயமற்ற தன்னிச்சையான காஷ்மீரின் மீதான ஆக்கிரமிப்பாகும்.” (காஷ்மீர் மீதான பாரதத்தின் யுத்தம் ப.29) இதன் பின் ஐ.நா. பற்றிய பேச்சும் வெகுஜன வாக்கெடுப்பு என்ற உறுதி மொழியும் காணாமல் போயின.

1960களில் இருந்து சோவியத் இந்திய அரசியல் நட்பின் அடையாளமாக காஷ்மீர் சிக்கல் பற்றி ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் எந்தத் தீர்மானமும் (வாக்கெடுப்பு உட்பட) வரவிடாமல் செய்தது சோவியத் யூனியன்.

இந்திய அரசு பல லட்சக்கணக்கானப் படையினரை காஷ்மீரில் நிறுத்தி அம்மக்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதச் செயலாக அடையாளப்படுத்தி, காஷ்மீர் மக்களை இராணுவ ஒடுக்கு முறைக்குள் வாழ நிர்ப்பந்தித்தது.

இந்திய அரசின், நேருவின் துரோகங்களினால் வஞ்சிக்கப்பட்ட காஷ்மீர் மக்கள் அடைந்த துன்ப, துயரங்களின் எதிர்விளைவாகவே காஷ்மீரில் காலப்போக்கில் எண்ணற்ற போராளிக் குழுக்கள் உருவாயின.

காஷ்மீர் மக்களின் பேராதரவுடன் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தது. அவ்வமைப்பின் நிறுவனர் மெக்பூல்ட் மீது, இந்திய அரசு கொலைக்குற்றம் சாட்டி பிப்ரவரி 11, 1984 அன்று தூக்கிலிட்டுக் கொன்றது.

காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து, விடுதலை கோரும் அம்மக்களை நரவேட்டை நடத்தும் இந்தியப் படையினர் ஒரு பக்கமும், புதிய புதிய பெயரிலான இஸ்லாமிய விடுதலைக் குழுக்களின் ஆயுதப் போராட்டமுமாக காஷ்மீர் விவகாரம் இந்தியாவிற்குத் தீராதச் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.