சூத்திரர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது; கல்வி முழுவதையும் பார்ப்பனர்களே கவர்ந்து வைத்துக் கொண்டு இருந்தார்கள் என்று பொத்தாம் பொதுவாக நாம் அனைவரும் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். இது உண்மை தான். ஆனால் முழுமை அல்ல.     

பார்ப்பனர்கள் ஆட்சி அதிகாரக் கல்வியை மட்டுமே மற்றவர்கள் பெற்று விடக் கூடாது என்று எச்சரிக்கை யுடனும், பிடிவாதத்துடனும் இருந்தனர். இப்போதும் அதற்காகவே போராடிக் கொண்டு இருக்கின்றனர்.

சத்திரியர்களுக்குப் போர்க் கல்வியையும், சூத்திரர் களுக்குப் பொருட்களை உற்பத்தி செய்யத் தேவைப்படும் கல்வியையும், வைசியர்களுக்கு உழைக்கும் வர்க்கத்தினர், அதாவது சூத்திரர்கள் உற்பத்தி செய்த பொருட்களை, அவாளுடைய அதிகாரப்படி மக்களிடையே விநி யோகம் செய்யத் தேவைப் படும் கல்வியையும் திணித்து இருந்தனர்.

இந்நிலையில் சூத்திரர்கள் பொருட்களை உற்பத்தி செய்யத் தேவைப்படும் அறிவியலை-அதாவது உண்மையான அறிவியலை - தங்களிடையே வளர்த்துக் கொண்டு இருந்தனர். என்னென்ன விதைகள் எந்தெந்தப் பருவத்தில் விளையும்? மழை பொய்த்துப் போனால் நிலைமையை எப்படிச் சமாளிக்க வேண்டும்? ஏரி குளங்களை எப்படிப் பராமரிக்க வேண்டும்? கால்நடைகளுக்கு நோய் வந்தால் அவற்றிற்கு மருத்துவம் பார்ப்பது எப்படி? இன்னும் இவை போல்  மனித இன இயக்கத் திற்கு அவசியமான பல கல்விகளை எல்லாம் சூத்திரர்கள் கற்றே தீர வேண்டிய கட்டாயம் இருந்தது. அவர்களும் இக்கல்விகளில் கற்றுத் தேர்ந்த அறிஞர்களாக இருந் தார்கள்.

விவசாயம் மட்டும் அல்லாமல், நெய்தல், வீடு கட்டுதல், தச்சுப் பட்டறை, கொல்லன் பட்டறை வேலைகள், மருத்துவம் போன்ற மனித குல வளர்ச்சிக்கும் சீரான இயக்கத்திற்கும் தேவைப்படும் அனைத்துத் தொழில்களும், அத்தொழில்களைச் சார்ந்த அறிவியல் மற்றும் தொழில் நுட்பக்கல்வியும் சூத்திரர்களின் வசமே இருந்தன. இத்தொழில்களில் அவர்கள் வல்லுநர்களாக இருப்பதால் ஒருவனுக்கு மற்ற மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் வசதியோ வலிமையோ கிடைக்கவில்லை.   

தொழிற் புரட்சி காரணமாக, தொழில்கள் எல்லாம் இயந்திர மயமாக்கப்பட்ட பின், இத்தொழில்களில் நிபுணத்துவம் பெறுவதும், மேலாண்மை செய்யும் நிலையைப் பெறுவதும் சக மனிதர்களைக் கட்டி ஆளும் வசதியையும், வலிமையையும் அளித்தது. இதுவரைக்கும் இத்தொழில்களைப் பற்றி நினைப்பதே தீட்டு என்றும் பாவம் என்றும் இருந்த பார்ப்பனர்கள் இயந்திர ஆளுகையைப் பற்றிக் கற்க முனைந்தார்கள். அப்படிக் கற்கத் தொடங்கியவர்கள், சூத்திரர்கள் இந்த நவீனக் கல்வியில் நுழைந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாகவும் இருந்தார்கள்.

இப்படியாக, ஆங்கிலக் கல்வியைக் கற்கத் தொடங்கி, இது வரைக்கும் பொருள் உற்பத்திக் கல்வியில் அக்கறையே கொள்ளாத பார்ப்பனர்கள், நவீனமயமாக்கப்பட்ட உற்பத்தி முறையில் அக்கறை காட்டத் தொடங்கினர். ஆனால் அதிலும் நாட்டாமை செய்யும் பகுதியை மட்டும் தங்கள் வசம் வைத்துக் கொண்டு உழைக்கும் பகுதியை ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களிடமே இருக்குமாறு விட்டு விட்டனர்.

இந்த வகையில் தான் பார்ப்பனர்கள் மருத்துவத் துறையில் நுழைந்தனர். புராதன மருத்துவக் கல்வியில் புலமை அடை வதால் அதிகாரப் பிடிப்பு எதுவும் கிடைப்பது இல்லை. ஆகவே அத்தொழில் பெரும்பாலும் சூத்திரர்களிடமே, அதிலும் முக்கியமாக மருத்துவ (முடி திருத்துவோர்) வகுப்பினரிடையே வழங்கிக் கொண்டு இருந்தது. ஆனால் தொழிற் புரட்சிக்குப் பின், இந்தியாவில் அறிமுகமான ஆங்கில மருத்துவக் கல்வி மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில் பொருள் வசதி யையும், அதிகார வலிமையையும் தரும் தன்மையதாக இருந்தது. இதைக் கண்ட பார்ப்பனர்கள் ஆங்கில மருத்துவக் கல்வி யைக் கற்கத் தொடங்கினர். ஏற்கனவே மருத்துவர்களாக இருந்த மருத்துவ வகுப்பினர் இதில் நுழைந்து விடா வண்ணமும் கவனமாகப் பார்த்துக் கொண்டனர்.

காலப் போக்கில் ஆங்கில மருத்துவக் கல்வியை மற்ற வகுப்பினர் யாரும் பெற்று விடாமல் தடுக்கும் நோக்கத் துடன், மருத்துவக் கல்வியைப் பெறுவதற்கு சமஸ்கிருதம் தெரிந்து இருக்க வேண்டும் என்ற விதியை வலிந்து திணித்தனர்.

ஆனால் 1920களில் நீதிக் கட்சியின் சார்பில் சென்னை இராஜதானியின் முதல்வராக இருந்த பனகல் அரசர் பார்ப் பனர்களின் கடுமையான எதிர்ப்புகளைத் தன் அறிவாற்றலால் தவிடு பொடி ஆக்கி இவ்விதியை நீக்கினார். அதன் விளைவாகப் பார்ப்பனர் அல்லாதோர் பலர் நவீன மருத்துவக் கல்வியைக் கற்க முடிந்தது. இது பூ.பழனியப்பன், வடமலையான், ஏ.ஏ.ஆசீர்வாதம், கே.என்.வாசுதேவன் போன்ற இன்னும் பல மருத்துவ மாமேதைகளை நாட்டிற்கு அளித்தது.

ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகு, ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், பெருந்தலைவர் காமராசர் ஆகியோரின் தலைமையில் செயல்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டுக் கொள்கையினால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் பலர் மருத்துவக் கல்வி கற்கும் வாய்ப்புப் பெற்றனர். பெரும் எண்ணிக்கையில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் மருத்துவர்களாக உருவாயினர்.

இந்த நிகழ்வு, அதாவது ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் மருத்துவர்களாக உருவாவது வட மாநிலங்களில் நடக்கவில்லை. அங்கு இட ஒதுக்கீடு முறை ஒழுங்காகச் செயல்படுத்தப்படா ததால், உயர்சாதிக் கும்பலினருக்கே மருத்துவர்களாகும் வாய்ப்பு கிடைத்தது.

எந்த ஒரு வகுப்பிலும் அனைவரும் திறமைசாலிகளாக இருப்பதோ அல்லது அனைவரும் திறமைக் குறைவானவர் களாக இருப்பதோ இயற்கை நியதிக்கு முற்றிலும் எதிரானது ஆகும். அனைத்து வகுப்பிலும் அனைத்து நிலைத் திறமை உடையவர்கள் இருப்பது என்பது தவிர்க்க முடியாத / மாற்ற முடியாத இயற்கை நியதி. ஆகவே ஒரு வகுப்பில் இருந்து மட்டுமே ஆட்களைத் தேர்வு செய்தால் திறமைக் குறைவானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது தவிர்க்க முடியாமல் போகிறது. இது தான் வட மாநிலங்களில் நடந்து உள்ளது.

அனைத்து வகுப்பில் இருந்தும் ஆட்களைத் தேர்ந்தெடுத் தால், அந்தந்த வகுப்பில் உள்ள திறமை சாலிகள் தேர்ந்தெடுக் கப்படுவது எளிதாகிவிடுகிறது; திறமைக் குறைவானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது. இதுதான் தமிழ் நாட்டில் நடந்து உள்ளது.

இதன் வெளிப்பாடாக, மருத்துவச் சேவை / மருத்துவத் தொழில் தமிழ்நாட்டில் சிறந்து விளங்குகிறது. இந்தியா வின் பிற பாகங்களில் இருந்து மட்டும் அல்லாமல் உலக கெங்கிலும் இருந்தும் மருத்துவச் சிகிச்சை பெற மக்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். உயர்சாதிக் கும்பலினரே மருத்துவர்களாக நிரம்பி உள்ள வட மாநிலங்களில் இந்த நிகழ்வு நடைபெறவில்லை.

இதைக் கண்ணுறும் யாருமே என்ன முடிவுக்கு வர வேண்டும்? "பொதுப் போட்டி முறையால் திறமைசாலிகளைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை; இட ஒதுக்கீட்டினால் மட்டுமே திறமைசாலிகளைத் தேர்ந்தெடுக்க முடிகிறது." என்ற முடிவுக்கு வந்து இருக்க வேண்டும் அல்லவா? அதன் தொடர்ச்சியாக இட ஒதுக்கீடு முறையை இன்னும் விரிவுபடுத்தி விகிதாச்சாரப் பங்கீடு முறையைக் கொண்டு வர வேண்டும் என்ற முடிவுக்கும் வந்து இருக்க வேண்டும் அல்லவா? இவ்விதமாக யோசிப்ப தற்குச் சராசரி அறிவுக்கும் குறைவான அறிவே போதுமே?

ஆனால் என்ன நடந்தது / நடக்கிறது? இட ஒதுக்கீடு முறையினால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் அவாளைவிடத் திறமைசாலிகள் என்று பட்டவர்த்தனமாக வெளிப்படுவதைக் கண்ட உயர்சாதிக் கும்பலினர் அரண்டு போய் விட்டனர். அவாளைப் பொறுத்தமட்டில் திறமைசாலிகள் உயர் நிலைகளில் இருக்க வேண்டும் என்பதைவிட, உயர்சாதிக் கும்பலினரே உயர்நிலைகளில் இருக்க வேண்டும். அதனால் நிர்வாகம் நாசமானாலும், மனித உயிர்கள் காவு வாங்கப்பட்டாலும் கவலை இல்லை. ஆகவே திறமைசாலிகள் வாய்ப்புப் பெறுவதைத் தடுக்கப் பல நடவடிக்கைகளை எடுத்தனர். அதில் ஒன்று கல்வியை வணிகமயம் ஆக்கியது. அப்படி ஆக்கிவிட்டு அதற்கு எதிராக அவாளே கூப்பாடு போடவும் செய்தனர் / செய்து கொண்டும் இருக்கின்றனர். கல்வி வணிகமயம் ஆகி விட்டதால் தங்களால் படிக்க முடியாமல் போய்விட்டது என்று அழுது புலம்பி கண்ணீர் விட்டும் காட்டு கின்றனர். அவாளது நடிப்பைக் கண்ட ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் சில அதிமேதாவிகளும் அவாள் மீது இரக்கம் காட்டுகின்றனர். "அரசதிகாரம் அனைத்தும் அவாளிடம் தானே உள்ளது? கல்வி வணிகமயம் ஆவதைத் தடுக்கலாமே?" என்றோ “இந்த வணிகமயமாக்கலினால் கல்வியில் அவாளது எண்ணிக்கை அதிகரித்துத்தானே இருக்கிறது? குறைய வில்லையே? என்றே” கேட்க வேண்டும் என்று எந்த அதிமேதா விக்கும் தோன்றவில்லை. வணிகமயமாக்கம் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களைத்தான் பாதித்து இருக்கிறது என்பதையும் உணர வில்லை.

நமது மவுடீகமான அமைதியைக் கண்ட உயர்சாதிக் கும்பலினர் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து உள்ளனர். அது தான் தேசியத் தகுதி நுழைவுத் தேர்வின் திணிப்பு. இதற்குக் காரணமாக அவாளும் அவாளுடைய அடிமைகளும் கூறுவது, மருத்துவத் தொழில் என்பது மக்களின் உயிர்காக்கும் தொழில் என்றும், இதில் திறமையின்மைக்கு இம்மியும் இடம் கொடுத்து விடலாகாது என்றும் தான். ஆனால் தகுதி நுழைவுத் தேர்வில் திறமையைச் சோதிப்பதற்கான / கண்டு பிடிப்பதற்கான ஒரு கூறும் இல்லை என்பது மட்டும் அல்ல; பகுப்பாயும் திறனுக்கு முற்றிலும் எதிரான குருட்டு மனப்பாடம் செய்யும் ஆற்றல் உடைய வர்களுக்கு வழி விடும் கூறுகள் மட்டுமே உள்ளன. ஆகவே மருத்துவச் சேவைக்குத் தேவைப்படும் அறிவுத் திறன் உடைய வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை விட, இயந்திரத்தனமான அறிவு உடையவர்களே இத்தேர்வில் வெற்றி பெற முடியும்.

அப்படி என்றால் அரசு இம்முறையை ஏன் வலிந்து திணிக் கிறது? இந்திய அரசு பார்ப்பன ஆதிக்க அரசு. பார்ப்பனர்களைப் பொறுத்த மட்டில், திறமை இருக்கிறதோ இல்லையோ பார்ப்பனர்கள் உயர்நிலைகளில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள். அதனால் சமூக நலன் கெடுவதைப் பற்றிச் சிறிதும் அக்கறை கொள்ளாதவர்கள். அது மட்டும் அல்ல; தங்கள் ஆதிக்கம் தளராமல் இருப்பதற்காக, தங்களுடைய சில பொருளா தார, உடல் நல சவுகரியங்களையும் தியாகம் செய்யவும் தயங்காதவர்கள். ஆகவே தான் தகுதி நுழைவுத் தேர்வு வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள்.

இதற்குத் தான் "நீட்" தேவைப்படுகிறது.

இதை முன்னிட்டே உயர் கல்வி நிலையங்களில் சேர் வதற்கு நுழைவுத் தேர்வு என்ற முறையைப் புகுத்தினார்கள். பெரியார், அம்பேத்கர் இயக்கங்களால் எழுச்சி பெற்ற ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் நுழைவுத் தேர்வின் நுணுக்கங்களைப் புரிந்து கொண்டு, அதில் வெற்றி பெறத் தொடங்கிய உடன், நுழைவுத் தேர்வின் மூலம் ஒருவனுடைய திறமையைக் கண்டறிய முடியாது என்று குரல் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள். இதற்கு ஒரு மாற்று வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறி சென்னை, இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில்  21.9.2008 அன்று ஒரு குழுவை அமைத்தனர். ஆனால் நுழைவுத் தேர்வு முறை பயனற்றது என்று கருத்து வெளிப்படும் அதே காலத்தில் (26.9.2008 அன்று) உச்ச நீதிமன்றம் பழங்குடி மக்களுக்கு நுழைவுத் தேர்வு எழுதப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று அரசுக்குக் கூறியது.

அதாவது ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் முயன்று பெற்ற திறமைகளைக் காலாவதி ஆக்க வேண்டும் என்பதும், காலாவதிஆகிப் போன வழிமுறைகளைப் பின்பற்ற வைத்து, அவாளே வெற்றி வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதுமே அவாளுடைய திட்டமாக இருக்கிறது.     

இன்றும் தகுதி நுழைவுத் தேர்வை எதிர்ப்பதை விட்டு விட்டு அதற்குப் பழகிக் கொள்ளுங்கள் என்று அவாளும், அவாளுடைய அடிமைகளும் நமக்கு அறிவுரை கூறுகிறார்கள். அவர்களின் அறிவுரையைப் பின் பற்றி, பயிற்சி பெற்று, வெற்றி பெறும் நிலைக்கு முதிர்ச்சி அடையும் பொழுது, நுழைவுத் தேர்வு திறமையைக் கண்டறியும் முறை அல்ல என்று கூறி, அவாளால் மட்டுமே வெற்றி பெற முடியக் கூடிய வேறெரு முறையைப் புகுத்துவார்கள். அந்த முறையில் நாம் முதிர்ச்சி அடைந் தால் வேறொரு முறையைப் புகுத்துவார்கள். இப்படியே நமக்கு உரிய பங்கு நிரந்தரமாகவே கிடைக்காதபடியான வழிமுறைகளைக் கடைப்பிடித்துக் கொண்டே இருப்பார்கள்.

ஆகவே நம் முன் உள் கடமை என்ன? அனைத்து நிலை அறிவுத் திறனும் அனைத்து வகுப்பு மக்களுக்கும் உள்ளது என்ற இயற்கை நியதியை  மக்களிடையே உணர்த்தி விழிப் புணர்வையும், பொதுக் கருத்தையும் உருவாக்க வேண்டும்.

ஒடுக்கப்பட்ட வகுப்பு மருத்துவர்கள் நிறைந்து உள்ள தமிழ் நாடு மருத்துவத் துறையில் முன்னணியில் இருப்பதையும், உயர்சாதிக் கும்பலினரே மருத்துவர் களாக உள்ள வட மாநிலங்கள் சிறப்பாக இல்லாததையும் எடுத்துக்காட்டி, அனைத்து வகுப்பு மக்களும்  அனைத்து நிலை வேலைகளிலும் வாய்ப்புப் பெற வேண்டும் என்ற விழிப்புணர்வையும், பொதுக் கருத்தையும் உருவாக்க வேண்டும்.

அதைச் செயல்படுத்தும் கொள்கையான விகிதாச் சாரப் பங்கீடு முறையை வென்றெடுக்க மக்களிடையே விழிப்புணர் வையும், பொதுக் கருத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

Pin It