neet exam 650

"தகுதி தேர்வின் மூலமே மருத்துவக் கல்வியின் தரம் உயரும்; நீட் தேர்வினால் சரியான மருத்துவக் கல்வியை அடைந்து மாணவர்களை திறமையானவர்களாக உருமாற்ற முடியும்" நீட் தேர்வை ஆதரிப்பவர்கள் கூறும் வாய் ஜாலங்கள்தான் இவை. இதனுடன் தனியார் மருத்துவனைகளின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்தமுடியும். ஊழல், லஞ்சம், மோசடி, முறைகேடுகளிடமிருந்து மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் காப்பாற்றமுடியும் என்றும் தங்களது நிலைப்பாட்டிற்கு வலுசேர்க்க காரணங்களை அடுக்குகிறார்கள். 

ஊழல், லஞ்சம், முறைகேடுகள் இல்லாத பரிசுத்தமான ஒரு அமைப்புதான் இந்த நீட் தேர்வை நடத்தி நம் மாணவர்களையும், கல்வியின் தரத்தையும் உயர்த்த போகிறார்களோ என்று நீட் தேர்வு நடத்தும் அந்த அமைப்பின் பக்கம் கவனத்தை குவித்தால், அவர்களின் செயல்பாடுகளை உற்றுநோக்கினால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
 
நீட் தேர்வை நடத்துகின்ற இந்திய மருத்துவ கவுன்சில் ஊழல், லஞ்சம், முறைகேடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட பரிசுத்தமான அமைப்பு; அவர்கள் மாணவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொள்பவர்கள் என்று நினைத்தால் நம்மைவிட அறிவீனர்கள் யாரும் இருக்க முடியாது. இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவர் கேடன் தேசாய் 2010 ல் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதற்கு 2 கோடி லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக சிக்கிக்கொண்டவர். தொடர்ந்து நடந்த சோதனையில் 1800 கோடி பணமும், 1500 கிலோ தங்க நகைகளும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன. முன்பு ஒருமுறை CBSE ஏற்பாடு செய்து நடத்திய All India Pre-Medical Test இப்படியானதொரு குற்றச்சாட்டுகளால்தான் ரத்து செய்யப்பட்டது.
 
முறைகேடுகளில் ஈடுபடுவதையே பிழைப்பாக வைத்திருக்கின்றவர்கள் தலைமை தாங்குகிற ஒரு அமைப்பு எப்படி தூய்மையான மனதுடன் செயல்படும். உண்மையில் மருத்துவத்துறை தரம் வாய்ந்ததாக இல்லாமல் இருப்பதற்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு தகுதியற்ற கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் இவர்களை போன்ற ஊழல் பெருச்சாளிகளே முதன்மை காரணமாக இருக்கிறார்கள்.
 
இந்திய மருத்துவக் கல்வியை உலகத் தரத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் ஊழல், லஞ்சம், முறைகேடு என்று சிக்கி இருக்கும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்று அமைப்பு ஏற்படுத்தப்படும்வரை அதனை கண்காணிப்பில் வைப்பதற்கு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி லோதாவின் தலைமையில் மூன்று பேர் கொண்ட கமிட்டியை ஏற்படுத்தியது உச்சநீதிமன்றம். இந்த கமிட்டியை எதற்காக உச்சநீதிமன்றம் அமைத்ததோ அதன் நோக்கைத்தையே கமிட்டியின் செயல்பாடுகளால் சிதைக்கப்பட்டது.
 
இந்திய மருத்துவ கவுன்சில் 26 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தகுதியில்லை என்றுகூறி மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து அந்த கல்லூரிகள் இயங்குவதை நிறுத்தியது. இதில் உத்திர பிரதேசத்தின் சரஸ்வதி மருத்துவக் கல்லூரி, மத்திய பிரதேசத்தின் சாஷி மருத்துவக் கல்லூரி ஆகிய இரண்டும் இந்திய மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைகளை தங்கள் கல்லூரி சரிசெய்யவில்லை என்று அவைகளே ஒத்துக்கொண்டன.
 
ஆனால் தகுதியில்லாத இந்த 26 மருத்துவக் கல்லூரிகளுக்கும் 'பெறுவதை பெற்றுக்கொண்டு' இயங்குவதற்கு அனுமதியளித்து மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடியது லோதா கமிட்டி. "நாட்டின் மருத்துவர் தேவையை ஈடு செய்யும் நல்ல எண்ணம்தான் இந்த அனுமதிக்கு காரணம்" என்று அதற்கும் சப்பைக்கட்டு கட்டியது.  கல்லூரிக்கு அங்கீகாரம் அளிப்பதில் மட்டுமல்ல நீட் தேர்வை நடத்துவதில், தரவரிசைப்பட்டியலை வெளியிடுவதில், மாணவர்களை சேர்ப்பதில் என அனைத்திலுமே முறைகேடுகள் நடைபெறும் செய்தி தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. 
 
நீட் தேர்வின்போது தென் மாநிலங்களில் கடுமையான கெடுபிடிகள் காட்டப்பட்டன. மாணவ, மாணவியர் தீவிரவாதிகள் போன்று சோதனையிடப்பட்டனர். இதில் மாணவிகளின் ஏர்பின், உள்ளாடைகள்கூட தப்பவில்லை. இதன்மூலம் தென்மாநில மாணவர்களுக்கு மன உளைச்சலை திட்டமிட்டே ஏற்படுத்தினர். ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெல்வேறு கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்பட்டன. பொதுநுழைவுத்தேர்வு என்று கூறிவிட்டு ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு கேள்வித்தாள் என்பதே அடிப்படையில் நியாயம் அற்ற ஒன்று. அதுவும் பல மாநிலங்களுக்கு கடினமாக இருந்த கேள்வித்தாள் குஜராத்திற்கு மட்டும் மிக இலகுவாக இருந்ததை திட்டமிட்ட சதிச்செயல் என்றே சொல்ல வேண்டிருக்கிறது. நீட் தேர்வு சமநிலையில் நடத்தப்படுவதற்கு பதிலாக பாரபட்சத்துடனே நடத்தப்பட்டிருக்கிறது.
 
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதுகலை பட்டப்படிப்பிற்கான நீட் தேர்வுகளில் மோசடி நடைபெற்றதாக டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறது. அதேபோல் ஜனவரி மாதம் இந்திய நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுத்தர ஐந்து லட்சம் ரூபாய் கேட்டதாக பல மாணவர்கள் ஜாம்செட்புரில் உள்ள காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். கடந்த வருடம் என்று அல்ல இதற்கு முன்பு நடைபெற்ற பல நுழைவுத்தேர்வுகளில்கூட முறைகேடுகள் நடைபெற்று வந்துள்ளது. 2007 ல் நடைபெற்ற மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு 45 மருத்துவர்கள் உட்பட 52 பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்ததை இங்கு உதாரணமாக கொள்ளலாம்.
 
இவை எல்லாவற்றையும்விட சத்தமே இல்லாமல் நீட் தேர்வை நடத்தும் பொறுப்பை இந்திய நிறுவனத்திடம் கொடுக்காமல் அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரோமெட்ரிக் நிறுவனத்திடம் எந்தவித டெண்டரும் கோராமல் கொடுத்திருக்கிறார்கள். இதனால் அறிவியல் பூர்வமான முறைகேடுகள் இன்று தலைதூக்கி இருக்கின்றன. ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்ட ப்ரோமெட்ரிக் நிறுவனம் அதை சி.எம்.எஸ். என்ற நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. சி.எம்.எஸ். நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு உள்ளூர் நிறுவனங்களிடமிருந்து ஊழியர்களை நியமனம் செய்தது. இதன் அடிப்படையில் நடைபெற்ற முறைகேடுகள் அதிர்ச்சியை தருவிக்கிறது.
 
ப்ரோமெட்ரிக் முறையில் நடைபெறும் தேர்வுகளில் பயன்படுத்தப்படும் கணினிகளுக்கு இணைய இணைப்பு இருக்கக்கூடாது என்பது விதி. இந்த விதி பல்வேறு தேர்வு மையங்களில் மீறப்பட்டிருக்கின்றன. கணினியில் Ammy Admin எனும் ரகசிய மென்பொருளை பொருத்தி அவற்றின் திரைகளை வெளியிடங்களிலிருந்து இயக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். இவ்வாறு ஹேக் செய்யப்பட கணினியில் தேர்வு எழுத லஞ்சம் பெறப்பட்டிருக்கிறது. வசூல்ராஜா MBBS திரைப்பட பாணியில் தேர்வுமையத்தில் உள்ளே மாணவர் கணினி முன் தேர்வு எழுதாமல் சும்மா அமர்ந்திருக்க அவரது கணினியை வெளியிலிருந்து இயக்கி  அவருக்காக இன்னொருவர் தேர்வு எழுதுகிறார். இன்னும் சில இடங்களில் மாணவர்களே இணைய இணைப்பை பயன்படுத்தி தேர்விற்கான விடையை தேடி எழுதியிருக்கிறார்கள். 
 
இதுபோன்ற மோசடிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற வியாபம் ஊழலை அவ்வளவு எழுத்தில் மறக்க முடியுமா என்ன? பத்தாம் வகுப்பு தாண்டாதவர்கள்கூட கட்டுக்கட்டாக பணத்தை கொடுத்து மருத்துவ படிப்பில் சேர்ந்து மருத்துவர் ஆன அதிசயம் நிகழ்ந்து எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்தது. 
 
மருத்துவக் கல்வியை தரம் உயர்த்த வேண்டும், மாணவர்களை திறமையானவர்களாக உருமாற்ற வேண்டும் என்பதற்காக நீட் தேர்வை கட்டாயமாக்க வேண்டிய அவசியமில்லை. லஞ்சம், ஊழல், முறைகேடுகளுக்கு அப்பால் செயல்படும் உன்னதமான அமைப்பு முறையே அவசியமானது. இவை சாத்தியமாகாமல் எத்துணை நுழைவு தேர்வுகள் வந்தாலும் யாருக்கும் எந்த பயனும் இருக்கப்போவதில்லை. பணம் படைத்தவர்களும், உயர் சாதியினரும் மட்டுமே பயன் அடைவார்கள்.
 
- வி.களத்தூர் எம்.பாரூக் 
Pin It