கோத்தாரி கல்விக்குழு அன்றே சொன்னது:

பாடுபடுபவர் ஒருவராகவும் பயனைத் தீர்மானிப் பவர் வேறொருவராகவும் இருப்பதை எதிர்க்கும் குரல் விடுதலைப் போராட்டக் காலத்தில் கேட்டது.

ஊரான் ஊரான் தோட்டத்திலே

ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய்

காசுக்கு ரெண்டு விற்கச் சொல்லிக்

காயிதம் போட்டான் வெள்ளைக்காரன்

வெள்ளைக்காரன் இலண்டனிலிருந்து தீர்மானித் ததுபோல், இன்று தில்லியிலிருந்து தீர்மானிப்பேன் என்று அடம்பிடிக்கிறது நடுவணரசு.

இந்தியாவே பல தேசிய இனங்களை உள்ளடக்கிய துணைக்கண்டம். இந்திய அரசமைப்புச் சட்டமும் ‘இந்திய ஒன்றியம்’ என்றே குறிப்பிடுகிறது.

மாந்தகுலம் பலதுறைகளிலும் திரட்டி வைத்துள்ள பயனையும் பட்டறிவையும் அறியச் செய்து அடுத்த படிக்கு முன்னேற்றுவதே கல்வி! கல்வியைத் தமிழ் நாட்டின் அனைத்துப் பிரிவு மக்களும் பெறத் தொடங்கி இன்னும் இருநூறு ஆண்டுகூட ஆகவில்லை.

தமிழ்நாட்டின் மாநில அதிகாரத்திற்கு உட்பட்டிருந்த கல்வி, 1976இல் நடுவணரசால் பறிக்கப்பட்டுவிட்டது. மாநிலக் கல்வி உரிமையை 42ஆவது திருத்தச் சட்டத் தின்படி பொதுப் பட்டியலுக்குக் கொண்டு போய்விட்டது நடுவணரசு!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் நடுவணரசுக்கு உரியவை 97 அதிகார இனங்கள்; மாநிலத்திற்கு உரி யவை 66 அதிகார இனங்கள்; பொதுப் பட்டியலுக்கு உரியவை 47 அதிகார இனங்கள்! இவை போக எஞ்சியிருக்கும் அதிகாரங்கள் ((Residuary Powers) அனைத்தும் நடுவணரசிற்கே வழங்கப்பட்டுள்ளன.

அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணை யில் இந்த அதிகாரப் பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியத் துணைக் கண்டம் 125 கோடி மக்க ளையும் 7 ஒன்றியப் பகுதிகளையும் (Union Territories) 29 மாநிலங்களையும் 22 தேசிய மொழிகளையும் பல்வேறு குமுக, பொருளியல் வேறுபாடுகளையும் கொண்டுள்ள இங்கு, ஒற்றை அதிகாரக்குவிப்பு என்பது, சரிவையும் சீர்குலைவையும் சமத்துவ மறுப்பையும் ஏற்படுத்தும் அபாயம் நிறைந்தது.

மாநிலத்திற்கு உரிய கல்வி அதிகாரத்தைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டுபோன கொடுமை 1976இல் நடந்தது.

பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அனைத் திந்தியத் தொழில்நுட்பக் கழகம் (AICTE), இந்திய மருத் துவக்குழு (MIC) முதலிய பலவும் அதன்பின் நடுவணர சின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குப் போய்விட்டன.

நடுவணரசின் அதிகாரக் குவிப்பால், ஊழலும் குளறு படிகளும் எளிய மக்கள் புறக்கணிப்பும் தலைவிரித் தாடும் என்பதை மெய்ப்பித்தது கேத்தன் தேசாய் வழக்குச் செய்தி!

இந்திய மருத்துவக் குழுவின் தலைவராக இருந்தவர் கேத்தன் தேசாய் (மீண்டும் அதே இடத்திற்கு வரப் போகிறார்). அதிகாரம் அனைத்தும் அவரிடம் குவிக்கப் பட்டிருந்ததால் தங்கமும் பணமும் அவர் காலடியில் குவிக்கப்பட்டுக் கிடந்தன. அவரைத் தளைப்படுத்திய போதுதான் அது தெரியவந்தது, அவர் வீட்டில் பறி முதல் செய்யப்பட்ட தங்கத்தின் அளவு ஒன்றரைக் கல்லெடை (டன்)! (இந்தியாவின் ஓராண்டு தங்க உற் பத்தியே இரண்டு கல்லெடை (டன்) தான்!). வீட்டில் பதுக்கப்பட்டிருந்த பணத்தின் மதிப்பு 1500 கோடி!

ஒரு துறையில் ஒருவர் நடத்திய முறைகேட்டின் அளவே இப்படி! ஒவ்வொரு துறையிலும் அதிகாரக் குவிப்பு உருவாக்கியிருக்கும் நிலை என்னவென்பதை இதிலிருந்து ஊகித்துக் கொள்ளலாம்.

இவற்றை முன்கூட்டியே எண்ணிப் பார்த்து, “மாநிலப் பட்டியலில் கல்வி இடம்பெற வேண்டும்” என, 1966 இலேயே அறிவித்துள்ளது கோத்தாரி கல்விக்குழு அறிக்கை:“பொதுப் பட்டியலில் கல்வியை இணைப்பத னால் விரும்பத்தகாத அதிகாரக்குவியல் ஏற்படும்... சுதந்தரமும் தேவைக்கேற்ப விட்டுக்கொடுக்கும் நெகிழ்வுத் தன்மையும் இல்லாமல் போய்விடும் Ref. Education and National Development, Report of the Education Commission (1964+1966) headed by D.S. Kothari, 1970, P.829-830).

கோத்தாரி கல்விக்குழு எச்சரித்துப் பத்தாண்டிற்குப் பின், அதற்கு எதிரான திசையில் கல்வி 1976இல் பொது அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கோத்தாரி கல்விக்குழு வலியுறுத்திய அதே கருத் தைத் தமிழக முன்னாள் ஆளுநர் பி.சி. அலெக்சாண் டரும் 2010ஆம் ஆண்டு வழிமொழிந்து பேசியுள்ளார். நடுவணரசு உயர் கல்வியில் தலையிடுவது குழப்பங் களை உருவாக்கும் என்று அவர் கூறியுள்ளார் :

“இப்போது தேவைப்படுவது என்னவென்றால், மாநில அரசுகள் தங்களின் சொந்தச் சட்டங்களில் உள்ள விதிகளின்படி உயர்கல்வி நிறுவனங்களை நிருவகிக்க அனுமதிக்க வேண்டும். நடுவணரசின் நிருவாகக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரும் எந்த விதியையோ சட்டத்தையோ அவர்கள் மீது திணிக் காமல் இருக்க வேண்டும்” - பி.சி. அலெக்சாண்டர் (டெக்கான் கிரானிக்கிள் 16.6.2010; தமிழில் த.க. பாலகிருட்டிணன் - விடுதலை 26.6.2010).

‘கல்வி உரிமை மாநிலங்களுக்கே’ என்பதை ‘நீட்’ போன்ற பொது நுழைவுத் தேர்வினால் பறிக்கப்பட்ட மாணவ உயிர்கள் சொல்கின்றன. கல்வித்துறை ஆய்வு அறிக்கைகளும் அதனை முன்னரே கூறி எச்சரித்து உள்ளன.

மக்கள் நலனைக் காக்கும் எவரும் மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைக் காக்க விரும்புவர். அதற்குத் தொடக்கமாகக் கல்வியை மாநில அதிகாரப் பட்டியலுக் குத் திரும்பக் கொண்டுவரும் முயற்சியில் சேர்ந்து ழைக்க உறுதியேற்போம்!

Pin It