மருத்துவம் ஒரு சமூக அறிவியல். சற்றே விரிந்த தளத்தில் அதுவே அரசியலும் ஆகும் - ருடால்ஃப் விர்ச்சௌ.

  anitha ariyalur நோய்க் குறியியல் பிதாமகனாய் போற்றப்படும் ருடால்ஃப் விர்ச்சௌ சொன்ன இக்கூற்றை முழுதாய் உள் வாங்கியிருப்பார்களா சமகால மருத்துவர்கள் என்பது சற்றே விவாதத்திற்குரியது. நோய் நாடி, நோய் முதல் நாடும் அறிவுத் தேடலில் திசுக்களையும், திசுக்கூறுகளை மட்டுமே நுண்ணோக்கி வழியாக உற்றுப் பார்த்து வாழ்ந்தவனுக்கு, மருத்துவகத்தின் சமூக அரசியல்  பரப்பைக் கணிக்கத் தெரிந்த விசாலம் இன்று உள்ள தமிழக அரசியல் மருத்துவர்களிடத்தில் எதிர்பார்க்க இயலாது என்பது நாடறிந்த ஒன்று. இருந்துவிட்டுப் போகட்டும். வாய்மூடி இருக்கலாமே!. சமகால இன்னொரு ஆகப்பெரிய தீமையாக உருவெடுத்திருக்கும் 24 மணிநேர ஊடக வெளியை நிரப்ப இவர்கள்தான் கிடைத்தார்களா? உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி,

     அனிதா மரணத்தை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன என்கிறீர்களே, நீட் தேர்வுக்குப் பின்னால் உள்ள அரசியலை என்னவென்று சொல்கிறீர்கள்?

     மருத்துவக் கல்லூரியில் சேரும் தன் கனவை நடுவணரசு கட்டாயமாக்கிய நீட் எனும் ஒரு நுழைவு(தடுப்புத்) தேர்வு மூலமாகக் கலைத்துவிட்டப் பின்னணியில் குழுமூர் அனிதா உயிர்நீத்தல் போராட்டத்தை நிறைவேற்றிவிட்டு “சமூக மனசாட்சியை சுய ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ளுங்கள் நியாயமாரே!’ எனச் சொல்லி மண்ணுக்குள் விதை யாகிவிட்டார்.

           வாழ்க்கைப் போராட்டம்

           கற்கும் போராட்டம்

           சட்டப்போராட்டம்.. இறுதியாக அனிதா மேற்கொண்டது உயிர் நீத்தல் போராட்டம். அனிதாவின் வாழ்க்கைப் போராட்டத்தை பலவீன நடவடிக்கையாகவோ, தன்னம்பிக்கை குறைபாட்டின் வெளியீடாகவோ சொல்வதைத் தவிருங்கள்.

     அனிதாவின் ஊராகிய அதே குழுமூரைச் சேர்ந்த விவசாயி முருகையாவின் மகன் செல்வராஜ் 2003 ம் ஆண்டில் சந்திக்க நேர்ந்த சமூக அவலத்தையும் இங்கு குறிப்பிடுவது பொருந்தும். அப்போது வெளிவந்திருந்த பத்திரிகைச் செய்தி இன்றும் என் நினைவில்.

     நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடத்தில் அனுமதிக்கப்பட்டார். நிலத்தை விற்று ரூ.1இலட்சம் கட்டியும் முதலாண்டுக் கட்டணப் பாக்கியாகிய ரூ.84,000-கட்ட வழியின்றி தவிக்கும் அந்த விவசாயக் குடும்பத்தைப் பற்றியச் செய்தியைப் படித்ததும் நான் துடித்துப்போனேன். “என்ன செய்யப்போகிறோம்” என்று செய்வதறியாமல் நான் நண்பர்கள் மத்தியில் கேள்விகளால் விம்மினேன். காரணம்… முதன்முதலாக தனியார் கல்லூரிகள் தமிழ்நாட்டில் தொடங்குவதற்கு 1984 ம் ஆண்டில் அன்றைய முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களால்  ஆணை பிறப்பிக்கப்பட்டபோது அன்றைய தேதியில் மருத்துவக் கல்லூரி மாணவராக இருந்த நாங்கள், இதைத் தடுப்பதற்காகப் பெரும் போராட்டம் ஒன்றை நடத்தினோம். மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தியும் நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம். இது ஒரு மிகப்பெரியச் சமூகத் தீமை என்று எவ்வளவோ சத்தம் போட்டுப் பார்த்தும் ‘ஏழை சொல் அம்பலம் ஏறுமோ’ என்பதற்கிணங்க நாங்கள் நசுக்கப்பட்டோம். தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான சிவப்புக் கம்பளம் ஜோராக விரிக்கப்பட்டது.

     இதோ… முருகையா மகன் செல்வராஜ் பொறியில் சிக்கிய எலியாக தவிப்பதை எப்படி கண்டும் காணாதது போல கடந்து செல்ல முடியும்?

     இது தற்கால மாணவ சமுதாயம் எதிர் கொள்ளும் இருண்மையைக் குறிக்கும் அபாயச் செய்தி. அதிலும் அடித்தட்டு மற்றும் ஏழை மக்களின் கல்விக் கனவுகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் நிலையை இச்செய்தி படம் பிடித்துக் காட்டுகிறது. இது ஆழமான சமூக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்மென்றும், வர்த்தகப் போக்கினால் கல்வின் ஆன்மா சிதைக்கப்படுவதைக் குறித்தும் அதன் விளைவாக பல குடும்பங்கள் நெருக்கடிக்கு ஆளாகிவருவதை தடுக்கும் வகையிலும் அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டுமென்றும் குரல் எழுப்பியவர்கள் உண்டு. இக் கட்டுரையாளர் உட்பட.

     ஏழைச் சொல் அம்பலம் ஏறுமா என்ன? குழுமூர் போன்ற கிராமங்களுக்கும், செல்வராஜ், அனிதா போன்ற மாணவர்களுக்கும் கல்வி மட்டும்தான் விமோசனத்திற்கான ஒரே வழி. கல்வியை இவர்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டதற்குக் காரணம் அவர்களுக்கு அதைவிட்டால் வேறு வழியில்லை. மூழ்குபவன் மூச்சுவிட முயல்வது போல அவர்கள் பாடுபட வேண்டியிருக்கிறது. இது உயிர் வாழ்வதற்கான உந்துதலும் போராட்டமும் கூட. பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை மீறிதான் கிராமத்து மாணவர்கள் சாதிக்க வேண்டியிருக்கிறது,

     ஆனால் இன்று பணபலம் பொருந்தியவர்களுக்கு மட்டுமே கல்வி என்கின்ற வருந்தத்தக்க நிலையை உருவாக்குவதிலேயே இன்றைய கல்வி பரிபாலன அமைப்பு முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

     அதற்கு ஊடாக போராடி வெற்றிகோட்டை எட்டிவிட்ட நிலையில், ஆட்டத்தின் விதிகளை மாற்றியமைத்ததன் விளைவாக கபளீகரம் செய்யப்பட்ட அச்சிறு பெண்ணின் வெற்றி,

     “நான் தோற்றுப் போய்விட்டேனோ” என்றுதானே அவளை வாட்டியிருக்கும்!

     அரசுகளின் அழுகுணி ஆட்டம்தானே அவளை இந்நிலைக்கு தள்ளியது.

     நீட் அடிப்படையிலா, நீட் இல்லாமலா என்ற தெளிவற்ற நிலை இருந்தபோது ஒரு முனையில் குழுமூர் அனிதா, இன்னொரு முனையில் சென்னையின் ஸ்வேதா. சென்னையிலேயே பிறந்து வளர்ந்து சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்று தேர்ச்சிப் பெற்று, நீட் தேர்வு எழுதி 500 க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருந்த ஒரு முற்பட்ட வகுப்பைச் சார்ந்த டாக்டர் ஒருவரின் மகள் ஸ்வேதா. வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்ட சூழலில் இந்தாண்டு நீட்டிற்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்று அன்றைய, வருங்கால இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர்கள் காட்சி ஊடகத்தில் சொன்னதுதான் தாமதம், ஃப்ளைட் ஏறினார் ஸ்வேதா தன் தந்தையோடு. பக்கத்து மாநில தனியார் தன்னாட்சி கல்வி நிறுவனம் ஒன்றில் நீட் தேர்ச்சி பெற்றிருந்த மதிப்பெண்ணோடு ரூ.50 இலட்சம் பணத்தைக் கட்டி தன் இருக்கையை உறுதி செய்து கொண்டு சென்னை திரும்பிவிட்டார்.

     எங்கே ஓராண்டு வீணாகி விடுமோ என்று எல்லாம் இருந்தும், இந்த சிறு பதட்டம் கூட தன் மகளுக்கு வேண்டாம் என்ற சென்னை டாக்டர் தந்தை எங்கே! காய்கறி மார்க்கெட்டில் மூட்டைத் தூக்கி வார இறுதியில் மட்டும் வீடு திரும்பும் குழுமூர் தந்தை எங்கே!

     இரு குடும்பங்களும் ஒரே வகுப்பா? இருவருக்கும் சமவாய்ப்பா? இருவருக்கும் ஒரே தேர்வு பொருந்துமா? இது தகுமா? நியாமா?

     அனிதாவிற்கு இன்னும் இரண்டு முறை தேர்வு எழுதும் வாய்ப்பிருக்கிறது. அதை அவர் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று ஒரு குரல் டி.வியில் ஒலித்த போது மிகுந்த வேதனைக்குள்ளானது மனது. இவர்களையெல்லாம் என்ன செய்வது?

     இதுபோன்ற அமைப்பில் போட்டிப் போடுவது என்பது அனிதா போன்ற மாணவிகளுக்கு சாத்தியமா?

     சாத்தியம் என்றும் சாத்தியப்பட வேண்டும் என்றும் விழிப்புறச் செய்து பெரியார் ஏற்றி வைத்த சமூக நீதிச் சுடரில், எண்ணெய் ஊற்றி ஒளியேற்றிய காமராசர். அதை முன்னெடுத்துச் சென்ற திராவிட இயங்களின் பயணத்தை தடுத்து நிறுத்திட வேண்டும் என்பதுதான் நடுவணரசின் குறிக்கோள் என்று சிந்திக்கத் தூண்டுகிறது. ஆனால் அது ஒருபோதும் நடக்காது என்தை மட்டும் உறுதிபடச் சொல்ல முடியும்.

     அனிதா போன்ற மாணவிகளுக்கு சாத்தியப்பட்டிருக்க வேண்டிய ஒன்றை நடுவரணசும், உச்சநீதிமன்றமும் தடுத்திருப்பது நிச்சயமாக அனிதாவின் நம்பிக்கையை குலைத்திருக்கவே செய்யும்.

     அரசு மருத்துவக்கல்லூரி இடங்களை அரசின் வழிமுறைக்கே விட்டுவிட்டு,

     நீட் தேர்வை தனியார் மருத்துவக் கல்லூரி இடங்களை நிரப்புவதற்கு  மட்டும் அடிப்படையாக்க வேண்டும். தனியார்க் மருத்துவக் கல்லூரி கல்விக் கட்டணங்களை வரையறுத்து வெளிப்படையாக்கியும், நடைமுறைப் படுத்தியிருந்தால் நடுவணரசின் நோக்கம் நல்ல திசையில் என்று நாம் ஏற்றிருப்போம்.

     சமூகத்தில் உள்ள அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலையில் மாற்றம் ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது, அவர்கள் அந்நிலையிலேயே தொடர வேண்டும் என்பதற்காகவும், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி இடங்களை குறிவைக்க வேண்டுமென்பதற்காகவுமே நடுவரணசு  நீட் என்ற ஒரு சமத்தன்மையற்ற தேர்வு முறையை அமல் படுத்தியிருக்கிறது என்று ஏன் கருதக்கூடாது?

     தொடர்ந்து படிப்பில் சிறப்பிடம் பெற்று வந்த அனிதா, ஏழை மூட்டைத் தூக்கும் தொழிலாளியின் மகளான அவர் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டது தவறா?

     தன் குலத்தொழிலான மண்வெட்டியும், மூட்டையையும் ஒதுக்கி, பேனாப் பிடிக்க முனைந்தது தவறா?

     தன் உழைப்பின் மீதும் ஆற்றலின் மீதும் நம்பிக்கை வைத்தது தவறா?

     கண்களை மூடிக்கொண்ட அமைப்பில் நியாயம் கேட்டு உச்சநீதிமன்றம் வரை சென்று போராட முனைந்தது தவறா?

     .இவையெல்லாம் நம்முன் விடை கிடைக்காமல் மோதிக் கொண்டிருக்கும் கேட்ள்கத்தலி.

     கவலையோடு கைகளைக் கோர்த்தபடி கட்டை விரல்களைப் பார்க்கிறேன்.

     ஒவ்வொரு முறை தேர்வில் முதன்மை பெறும்போதும் வெற்றிக்குறியாக தன் கட்டை விரலை உயர்த்திக் குதூகளித்த மாணவி அனிதாவிற்கு அன்று அந்த கட்டைவிரல் தன் புராதன சோக வரலாற்றை நினைவூட்டியிருக்க கூடும்.

     அனிதா..ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, உழைத்து முன்னேறத் துடிக்கிற ஒரு பெரும் சனக்கூட்டத்தின் கட்டைவிரல்!

     அந்த கட்டைவிரல்தான் வெட்டப்பட்டிருக்கிறது. அந்த வலியில்தான் துடிக்கிறோம். கட்டைவிரல்கள் வெட்டப்படுவது தொடர்கிறது.

                                     - டாக்டர் ச.மருதுதுரை, முத்துப்பேட்டை

(நன்றி - காக்கைச் சிறகினிலே, அக்டோபர் 2017)

Pin It