கொஞ்ச நாட்களாகவே தேசபக்தி, தேசதுரோகம் போன்ற சொற்கள் இந்திய அரசியலில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு குறிப்பிட்ட சாராரின் கொள்கைகளை ஏற்க மறுக்கும் அனைவரும் தேச துரோகிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர். டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணையாகுமார் மீது  அப்சல் குருவுக்கு ஆதரவாகப் பேசியதால் தேச துரோக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் கண்டனத்திற்கு உள்ளானது. 

amma tasmacஇந்த மண்ணில் பார்ப்பன பாசிஸ்ட்டுகள் தங்களை உறுதியாக தக்க வைத்துக்கொள்ள அன்றில் இருந்து இன்றுவரை பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகின்றனர். வேதம், உபநிடதங்கள், மனுஸ்மிருதி என தொடங்கி அவர்கள் தன்னுடைய மேலாண்மையை பல வழிகளிலும் நிலைநிறுத்தி வந்திருக்கின்றனர். அது எப்போதெல்லாம் கேள்விக்குள்ளாக்கப்பட்டதோ, அப்போதெல்லாம் ஒட்டு மொத்த மக்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனையாக அது மாற்றப்பட்டிருக்கின்றது. பார்ப்பன கொள்கைகளை ஏற்றுக் கொண்டால் தான் மோட்சம் அடைய முடியும் என எண்ணிய சாதி இந்துக்கள், பார்ப்பன பாசிஸ்டுகளின் இந்தக் கபட நாடகத்திற்குப் பலியாக்கப்பட்டனர். அன்று இவர்களை எதிர்த்த பெளத்தர்களும், சமணர்களும், உலகாயதர்களும், சாங்கியர்களும் தேசவிரோதிகள் என முத்திரை குத்தப்பட்டு சாதி இந்துக்களின் துணையுடன் அழித்தொழிக்கப்பட்டனர்.

   இன்று பல நூற்றாண்டுகளை நாம் கடந்து வந்து விட்டாலும், பார்ப்பனியத்தின் சூழ்ச்சி நிறைந்த வஞ்சகத் திட்டங்கள் இன்றும் தொழில்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அன்று எப்படி  அரசு அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள தனக்கான எதிரிகளை பார்ப்பனியம் கட்டமைத்ததோ, அதே போல இன்றும் அது தனக்கான எதிரிகளை கட்டமைத்துள்ளது. என்ன ஒரு வித்தியாசம் என்றால், அன்று எதிரிகளின் இடத்தின் இருந்த பெளத்தர்கள், சமணர்கள், உலகாயதர்கள், சாங்கியர்கள் போன்றோருக்கு பதில் இன்று முஸ்லீம்கள், கிருஸ்துவர்கள் என மாறியிருக்கின்றார்கள். மக்களை வேதங்களைக் காட்டியும், புராண இதிகாசங்களைக் காட்டியும் பணிய வைத்த பார்ப்பனியம் தற்போது மதுவை ஊற்றிக் கொடுத்து இந்த மக்களை மயக்கி வைத்துள்ளது. புராண இதிகாச போதையைவிட பல மடங்கு வீரியம் கொண்டதாய் இந்த மதுபோதை உள்ளது.

  இந்து ஓட்டு வங்கியையும், தன்னுடைய பார்ப்பன சாம்ராஜ்ஜியத்தையும் தக்க வைத்துக்கொள்ள  மத மாற்றத் தடை சட்டத்தையும், கிடாவெட்டு தடை சட்டத்தையும் கொண்டுவந்த பார்ப்பன பாசிஸ்ட்டான ஜெயலலிதா, மக்களின் கடுமையான எதிர்ப்பால் பின்வாங்கினார். இது போன்ற  செயல்களால் பார்ப்பன ஆதிக்கத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியாது என்பதை நன்றாக உணர்ந்த ஜெயலலிதா, தமிழகம் முழுவதும் சாராயக் கடைகளை வீதிக்கு வீதி திறந்து வைத்து ஒட்டுமொத்த தமிழக மக்களையும் குடிபோதையில் ஆழ்த்தினார். இது முன்பை விட சிறப்பாகவே வேலை செய்தது. மதுபோதையில் தள்ளாடிய அடிமைகள் பார்ப்பன ஜெயலலிதாவுக்காக மண்சோறு தின்றனர், காவடி எடுத்தனர், அலகு குத்திக் கொண்டனர், பால்குடம் எடுத்தனர். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மனுஸ்மிருதியும், புராண இதிகாசங்களும், தாம் கொண்டுவந்த அல்பத்தனமான சட்டங்களும் சாதித்துக் காட்ட முடியாத பார்ப்பன அடிமைத்தனத்தை ஜெயலலிதா தன்னுடைய மது புட்டிகளின் மூலம் சாதித்தார். ஜெயலலிதாவின் முன்னால் கூனிக்குறுகி ஒரு கொத்தடிமை போல நிற்கும் கூட்டத்தை உருவாக்கிக் காட்டினர்.

  ஜெயலலிதாவின் பார்ப்பன மூளை நன்றாக தெரிந்து வைத்து இருக்கின்றது. தான் மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வர வேண்டும் என்றால் இப்போது இருக்கும் இதே நிலை தமிழ்நாட்டில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பது. எனவே ஜெயலலிதாவின் அரசியல் வெற்றி என்பது மக்கள் நலத்திட்டங்களைச் சார்ந்து இல்லாமல் மது பாட்டில்களையே சார்ந்திருக்கின்றது. ஜெயலலிதா அரசின் உயிர் நாடியான மதுவை ஒழிக்கச் சொல்வது என்பது ஜெயலலிதாவையே ஒழிக்க நினைப்பதற்குச் சமம். அதனால் தான் பார்ப்பன ஜெயலலிதாவின் ஆட்சியில் மதுவை ஒழிக்கச் சொல்லும் ஒவ்வொரு நபரும் அரசுக்கு எதிராக சதி செய்தவராகவே கருதப்படுகின்றார்.

  மதுவுக்கு எதிராகப் போராடிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழு பாடகர் கோவன் சில மாதங்களுக்கு முன்பு தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் மீது 124ஏ, 153ஏ, 505(1)(பி,சி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தக் கைது நடவடிக்கை நாடு முழுவதும் ஜெயலலிதாவை ஒரு பார்ப்பன பாசிஸ்ட் என்பதை அம்பலப்படுத்தியது. இந்தச் சம்பவம் நடந்து ஐந்து மாதத்திற்கு உள்ளாகவே மீண்டும் ஜெயலலிதா தன்னுடைய பார்ப்பன கோர முகத்தைக் காட்டியுள்ளார். மக்கள் கலை இலக்கிய கழகத்தின் துணை அமைப்பான மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜீ, நிர்வாக குழு உறுப்பினர் காளியப்பன், வழக்கறிஞர் வாஞ்சிநாதன், தனசேகரன், டேவிட்ராஜ், ஆனந்தியம்மாள் போன்றவர்கள் மீது பிப்ரவரி 14 ஆம் தேதி திருச்சியில் மது ஒழிப்பு சிறப்பு மாநாட்டில் பேசியதற்காக இந்திய தண்டனைச் சட்டம்124(ஏ), 504 மற்றும் 505(1)(b) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது சட்டப் பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்தல், பொது இடத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் வதந்திகளைப் பிரசுரித்து, பரப்பி மக்களை அரசுக்கு எதிராக செயல்படும்படி தூண்டிவிடுவது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  பார்ப்பன பாசிஸ்டுகள் தனது இருத்தலுக்கு எதிராக யார் போராடினாலும் அவர்கள் மீது தேச துரோக வழக்கு போடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகின்றது. மாணவர் சங்கத் தலைவர் கண்ணையாகுமார் மீது போடப்பட்ட வழக்கு, டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ  அமானதுல்லாகான், மோடியை விமர்சனம் செய்து பேசியதால் அவர்மீது போடப்பட்ட தேச துரோக வழக்கு போன்றவற்றை உதாரணமாகக் காட்டலாம். பார்ப்பன பாசிஸ்ட்டுகள்  ஒரே மாதிரியாகவே சிந்திக்கின்றார்கள் - அது டெல்லியாக இருந்தாலும் சரி, தமிழ்நாடாக இருந்தாலும் சரி. தனக்கு எதிரான கருத்துக்களை நசுக்க பார்ப்பனியம் ஒரே மதிரியான திட்டங்களையே செயல்படுத்துகின்றது.

  டெல்லியில் இருக்கும் பார்ப்பன பாசிசம் முஸ்லீம்களுக்கு ஆதரவாக யார் பேசினாலும் அவர்களை தேச துரோகி என்கின்றது. தமிழகத்தில் இருக்கும் பார்ப்பன பாசிசம் மதுவை ஒழிக்க வேண்டும் என யார் போராடினாலும் அவர்களை தேச துரோகி என்கின்றது. இரண்டு பாசிசமும் தன்னை தக்க வைத்துக்கொள்ள வன்முறையின் எந்த எல்லைக்கும் செல்லும் என்பது கடந்த கால வரலாறு. ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை படுகொலை செய்த பார்ப்பன பாசிசமும், லட்சக்கணக்கான தமிழர்களை குடிக்க வைத்து கொலை செய்த பார்ப்பன பாசிசமும் நாம் வாழும் காலத்தின் வரலாறுகள். ஹிட்லர், முசோலினி, ராஜபக்சே போன்றவர்கள் வரிசையில் மோடி, ஜெயலலிதா போன்றவர்களுக்கும் ஓர் நிரந்தர இடத்தை வரலாறு ஒதுக்கி உள்ளது.

 மதுவை ஒழிக்க நினைக்கும் தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான தேச துரோகிகள் வரும் தேர்தலில் தன்னுடைய அப்பாவையும், அண்ணனையும், தம்பியையும் சொந்த பந்தங்களையும் மதுவை ஊற்றிக் கொடுத்து கொலை செய்த ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போடச் சொல்லி பிரச்சாரம் செய்யுங்கள். இளம் வயதிலேயே தாலி இழந்த விதவைகளின் கண்ணீரில் ஜெயலலிதாவுக்கு அபிசேகம் செய்யுங்கள். தமிழ்நாட்டு மக்களை கொத்துக்கொத்தாக மதுபுட்டிகளை வீசி கொலைசெய்துவிட்டு தமிழர்களை கொத்துக் குண்டுகள் போட்டு கொலை செய்த சிங்கள ராஜபக்சேவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்த பார்ப்பன கபடதாரி ஜெயலலிதாவுக்கு மறக்காமல் வாக்களியுங்கள்.... மானமுள்ள என் தமிழ் மக்களே!

- செ.கார்கி

(படம் நன்றி: வினவு)

Pin It