கடந்த வாரம் திருச்சியில் பாடகர் கோவன் என்பவர் அவர் பாடிய 'மூடு டாஸ்மார்க்கை மூடு' என்ற பாடலுக்காக தேச துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைபடுத்தப்பட்டுள்ளார். கருத்துரிமை, பேச்சுரிமை என்பது சனநாயகத்தின் அடிப்படை என அங்கீகரிக்கப்பட்ட நாட்டில், ஆளும் ஆட்சியாளரின் மதுபானக் கொள்கையை விமர்சித்து, பாடிய பாடலுக்காக தேச துரோக குற்றச்சாட்டு மற்றும் சிறைவாசம் என்பது நமது சனநாயகம் வழங்கியுள்ள உரிமைகளின் எல்லைகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

kovanதேச துரோக குற்றம் என்பது இந்திய தண்டனைச் சட்டத்தில் அரசுக்கு எதிராக வெறுப்புண்ர்வை காட்டுவதும், விசுவாசமின்றி இருப்பதும், அரசைத் தூக்கி எறியத் திட்டமிடுதலையும் குறிக்கும். ஆனால் நாள்தோறும் அதிகரித்து வரும் குடிப்பழக்கத்தை கட்டுப்படுத்த திட்டம் வகுக்காத ஆளும் முதலைமைச்சரை எதிர்த்துப் பாடும் ஒரு பாடல் அவதூறு வகைப்பட்டதாகவும், தேச விரோத செயல் எனவும் காவல்துறை முடிவு செய்துள்ளது.

இந்தக் கைது தரும் எச்சரிக்கை என்பது அரசாங்கத்தை எதிர்த்துப் பேசவோ, பாடவோ கூடாது. அதன் கொள்கைகளுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதேயாகும். ஆள்பவர்கள் மீது வரும் சிறு விமர்சனம் அல்லது நையாண்டிகளைக்கூட தாங்கிக் கொள்ள ஆட்சியாளர்கள் தயாராயில்லை. அது போன்ற உரிமை, தெருவில் பாடும் கடைக்கோடி பாடகனுக்குக் கிடையாது எனக் கருதுகின்றனர். அவர்கள் பூரண விசுவாசத்தை மட்டுமே எல்லோரிடமும் எதிர்பார்க்கின்றனர்.

இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள தேச துரோக குற்றத்தைப் பொருத்து வார்த்தைகள் மூலமாகவோ அல்லது குறியீடுகள் மூலமோ, காணத்தக்க வகையில் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலமோ அல்லது வேறு வகையிலோ, இந்தியாவில் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட அரசாங்கத்தின் மீது வெறுப்பையோ அவமதிப்பையோ கொண்டுவருகிற அல்லது கொண்டுவர முயற்சிக்கிற அல்லது அதிருப்தியைத் தூண்டுகிற அல்லது தூண்ட முயற்சிக்கிற ஒருவர் ஆயுள்தண்டனையும், அதோடு அபராதத் தொகையும் சேர்த்து தண்டிக்கப்படுவார். சுதந்திரப் போராட்டத்தின் போது 1897ல் கேசரி இதழில் திலகர் வீர சிவாஜி அப்சல்கானை கொலை செய்தது பற்றி எழுதியிருந்தார். அதன் பின் பூனாவில் பிளேக் நோய் ஒழிப்பில் ஈடுபட்ட கலெக்டர் ராந்த் மற்றும் இராணுவ அதிகார் அய்யர்ஸ்ட் என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அரசாங்கத்திற்கு எதிராக பகைமையை உருவாக்கியதாக திலகர் தேச துரோக குற்றச்சாட்டை எதிர்கொண்டார். ஓராண்டு சிறைக்குப் பின் அவர் ஆங்கிலேய அரசாங்கத்தை விமர்சிக்கக்கூடாது என எச்சரித்து விடுவிக்கப்பட்டார். ஆனாலும் திலகர் தொடர்ந்து ஆங்கிலேய அரசை விமர்சித்து வந்தார்.

1922 ஆண்டு 'யங் இந்தியா' நாளிதழில் எழுதிய கட்டுரைக்காக மகாத்மா காந்தியும் அந்த பத்திரிக்கையின் வெளியீட்டாளரான சங்கர்லால் கிளாபாய் பங்கரும் கைது செய்யப்பட்டனர். காந்தியடிகள் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை எந்தத் தயக்கமுமின்றி ஒத்துக்கொண்டார். ஆங்கிலேய அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளை சகித்துக் கொண்டிருப்பதே பாவம் என நீதிபதியின் முன் கூறினார். இந்த அரசாங்கத்தை எதிர்ப்பது குற்றம் என்றால் அதனைத் தான் தொடர்ந்து செய்யப் போவதாகவும், அது தனது தலையாய கடமை என்றும் கூறினார். சட்டத்தைக் காட்டி அச்சுறுத்தி அரசாங்கத்தின் மீது யாரும் விசுவாசத்தைக் கொண்டு வரமுடியாது என அடக்குமுறையை எதிர்த்தார். மேலும் அரசாங்கத்தின் மீது எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் வன்முறையற்ற முறையில் முழு எதிர்ப்பு தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என்பதே தனது நிலைபாடு எனக் கூறினார்.

காந்தியடிகளை குற்றம் புரிந்ததாக தண்டித்த நீதிபதியோ, அரசாங்கத்தின் சட்டத்தில் தேசத் துரோகியான இந்த மனிதர் மக்களின் பார்வையில் ஒரு தேச பக்தராக கருதப்படுவார் எனக் குறிப்பிட்டார். ஆனால் நாடு விடுதலை அடைந்த பின்னும் நமது சட்டத்தில் தேச துரோகப்பிரிவு இன்னும் உள்ளது. மாற்றுக் கருத்து கொண்ட அரசியல் செயல்பாட்டாளர்கள், ஓவியர்கள், அறிவு ஜீவிகள் என பலர் அதில் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது பாடகர் கோவனும் அதை எதிர்கொண்டிருக்கின்றார். இந்த சட்டப் பிரிவு சனநாயக சமூகத்தில் முற்றாக நீக்கப்பட வேண்டும் என தொடர்ந்து மனித உரிமை செயல்பாட்டாளர்கள் குரல் எழுப்புகின்றனர்.

அடக்குமுறை சட்டங்களை ஏவி கருத்துரிமையைப் பறிக்கும் இந்தக் கைது, சனநாயக விழுமியங்களையும் அதன் நோக்கங்களையும் வெகுவாக பாதிக்கின்றது. கொடுங்கோன்மை, உரிமையின்மையை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டத்தில் கிடைத்த சனநாயக சமூகத்தில் அரசாங்கத்தை விமர்சிப்பதே தேச துரோகம் என்பதும், நமது ஆட்சியாளர்கள் தெருப் பாடகர் எழுப்பும் சிறு விமர்சனத்தைக்கூட தாங்கிக் கொள்ள சக்தியற்றவர்கள் என்பதும் இன்னமும் ஒரு வகையில் ஆங்கிலேய மனோபாவம் ஆட்சி செய்வதையே காட்டுகின்றது. எப்போதும் முகஸ்துதி பாடுவதையே வெகு காலம் கேட்டுப் பழகிய சமூகத்தில் ஒரு பாடகனின் சின்னப்பாட்டு காதுகளைக் குடையும் பேரொலியாய் மாறுவது ஆச்சர்யமில்லை. நமது ஆட்சியாளர்கள் விமர்சனங்களை தாங்கும் சக்தியற்றவர்களாய் உள்ளதும், அதற்கு அவர்கள் சற்று பழகிக் கொள்ள வேண்டும் என்பதுமே இந்த பாடகனின் கைது வெளிப்படுத்துகின்றது.

சனநாயகம் என்பதே மாற்று கருத்துக் கூறும் உரிமையை தன்னகத்தே கொண்டது. சனநாயகப் பண்புகளை பாதுகாப்பதும், அதனைப் பேணுவதும் ஆள்பவர்களின் கடமையாகும். ஆட்சியாளர்களை எதிர்த்து விமர்சிக்க எண்ணும்போது கண்முன் சிறையும், சித்தரவதையும் கணநேரம் தோன்றி மறைந்தால் நமது சனநாயக சமூகத்தின் ஆன்மா செத்துக் கொண்டிருக்கின்றது என்று பொருள்.

- ச.பாலமுருகன்

Pin It