*   சமயக் கருத்துக்களால் வேறுபட்டிருந்த தலைவர் களை;

*   அரசியல் குறிக்கோளால் வேறுபட்டு நின்ற தலை வர்களை;

*  ஆண்டால், அறிவால், ஆளுமையால் வேறுபட்டு நின்ற தலைவர்கள் - தொண்டர்களை;

* எல்லாச் சாதிகளையும் சார்ந்த - ஏழைகளையும் செல்வந்தர்களையும் ஒன்றிணைத்த முதலாவது போர், கட்டாய இந்தியைக் கல்வியில் திணித் திட்டதை எதிர்த்த போர். அதுவே தமிழன் தொடுத்த முதலாவது மொழிப் போர்!

* தமிழனை, தமிழறிஞர்களை, ஆடவரை, மகளிரை, குழந்தைகளை 1300 பேரைக் களத்தில் இறக்கிச் சிறைப்படுத்திய முதலாவது போர்!

*  நடராசன்-தாளமுத்து இருவரைக் காவு கொண்ட போர்!

*  தமிழ்க் கடலாகவும் வடமொழியை அறிந்த மேதையாகவும் ஆங்கிலப் புலவராகவும் விளங்கிய சாமி வேதாசலம் என்னும் மறைமலை அடிகளாரை;

*  இந்திய தேசியக் காங்கிரசுத் தலைவராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும், வடமொழி வல்லுந ராகவும், அன்றைய முதலமைச்சரை வாதுக்கு இழுத்த வல்லவராகவும் விளங்கிய சோமசுந்தர பாரதியாரை;

* தொடக்கப் பள்ளி ஆசிரியராகவும் தன்மான மறவ ராகவும் தமிழன் களம்காணக் கவிதைக் கருவி களைத் தந்த கவிஞராகவும் விளங்கிய கனக சுப்புரத்தினக் கவிக்குயிலை;

*  காஞ்சி பரவஸ்து இராச கோபாலாச்சாரியார், அருணகிரிநாதர், ஈழத்துச் சிவானந்த அடிகள் ஆகியோரை;

*  நீதிக்கட்சி ஆதரவாளராக-களம்காண அஞ்சாதவ ராக விளங்கிய ஈரோட்டு வெ. இராமசாமியை;

* ஈ,வெ.ரா.வின் கைவாளாக விளங்கிய குலசேகரப் பட்டணம் தந்த கோமான் செ.தெ. நாயக்கத்தை - கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட வைத்த முதலாவது நிகழ்ச்சி 1938-39 இந்தி எதிர்ப்புப் போரே.

தமிழ்நாடு, கேரள நாடு, தெலுங்கு நாடு, கன்னட நாடு என்கிற நான்கு திராவிட மொழிக்குடும்ப நாடுகள் இணைந்த அரசுப் புலமாக-ஆட்சி மாகாணமாக சென்னை இராசதானி எனப்பட்ட சென்னை மாகாண அரசு விளங்கியது.

17-12-1920 முதல் 1926 வரையிலும் நீதிக்கட்சி ஆட்சியிலும்; 1926 முதல் 1929 முடிய நீதிக்கட்சி ஆதரவு பெற்ற காங்கிரசு சுயேச்சைகள் ஆட்சியிலும்; 1930 முதல் 1937 வரை மீண்டும் நீதிக்கட்சி ஆட்சி யிலும் இருந்த சென்னை மாகாணத்தில் - எல்லாச் சாதிக்காரர்களும் படித்திட ஏற்ற அரசுத் தொடக்கப் பள்ளி களை ஆயிரக்கணக்கிலும், உயர்நிலைப் பள்ளிகளை நூற்றுக்கணக்கிலும் அந்த மூன்று கட்ட ஆட்சிகளிலும் தொடங்கினார்கள் - பிரிட்டிஷ் ஆட்சிப் பகுதியில்.

அய்தராபாத் சிற்றரசு, மைசூர் சிற்றரசு, புதுக் கோட்டை சிற்றரசு, கொச்சி, திருவிதாகூர் சிற்றரசுகளிலும் (சுயேச்சை அரசுகளிலும்) உயர்நிலைப் பள்ளிகள் இருந்தன.

எல்லா உயர்நிலைப் பள்ளிகளிலும் 6, 7, 8, 9, 10ஆம் வகுப்புகளில் தாய்மொழிப் பாடம் ஒன்றைத் தவிர்த்த மற்ற எல்லாப் பாடங்களும் ஆங்கில வழியிலேயே கற்பிக்கப்பட்டன.

1937-இல், சென்னை மாகாணத்தில் 1935ஆம் ஆண்டைய இந்திய அரசுச் சட்டப்படி நடைபெற்ற முதலாவது தேர்தலில் நீதிக்கட்சிக்காரர் 21 பேரே வென்றனர்; படுதோல்வி கண்டனர். காங்கிரசின் சுய ராஜ்யக் கட்சியினர் 159 பேர் வென்றனர். மொத்தம் உள்ள 215 பேரில் காங்கிரசுக்காரர்களே மிகப்பெரும் பான்மையினர்.

காங்கிரசுக்காரராகவும் காந்தியாரின் நம்பிக்கைக்கு உரியவராகவும் விளங்கிய சக்கரவர்த்தி இராசகோபா லாச்சாரியார் தேர்தலில் போட்டியிடவில்லை; எனவே மாகாணச் சட்ட அவை உறுப்பினராக இல்லை.

ஆனால் மேலவை உறுப்பினராக ஆகி, கொல்லைப் புறவழியில் நுழைந்து, அன்றையப் பிரதமர் (Premier) பதவியை அவர் அடைந்தார்.

இந்தியா விடுதலை பெற்றால் - இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி வரவேண்டும் என்று முதன் முதல் சொன்னவர் காந்தியார். அதை வழிமொழிந்த வர் புதுமைப் பாவலர் சுப்பிரமணிய பாரதியார்.

இந்தியாவிலிருந்த அன்றைய மற்ற மாகாணக் காங்கிரசு ஆட்சிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலமே பயிற்று மொழி. காந்தியாரின் இந்தி மொழிக் கொள்கையை ஏற்று, மற்ற அந்த மாகாணத்தார் அவர வர் மாகாணப் பள்ளிகளில் இந்தியை ஒரு கட்டாயப் பாடமாகத் திணித்தனரா? இல்லை; இல்லை; இல்லை.

ஆனால், சென்னை மாகாணத்தில் மட்டும் சி. இராசகோபாலாச்சாரியார் 6ஆம் வகுப்பு முதல் - அரசுப் பொதுத் தேர்வுக்குரிய கட்டாயப் பாடமாக இந்தியைத் திணித்தார்.

ஆரியக் கொள்கையைக் கல்வியில் புகுத்துகிற உள்நோக்கத்துடன் தான் ஆச்சாரியார் இந்தியைப் புகுத்தினார்.

“இந்தி” என்பது ஒரே வரி வடிவம் கொண்ட, ஒரே பேச்சு வழக்கைக் கொண்ட ஒரு மொழியாக இல்லை என்பதைத் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் “இந்தி பொது மொழியா?” என்கிற குறு நூலில் விளக்கி எழுதித் தமிழர்க்குப் போர் வாளாகத் தந்தார்.

அன்று அண்ணாமலைப் பல்கலையில் தமிழ்த் துறைத் தலைவராகவும் இந்திய தேசிய காங்கிரசுக் கொள்கைக் குன்றாகவும் விளங்கிய அஞ்சாத அரிமா சோமசுந்தர பாரதியாருக்கு, பிரதமர் ஆச்சாரியார் ஆங்கிலத்தில் நெடிய மடலை எழுதித் - “தேசியக் காங்கிரசு வாதியான ஒரு பேராசிரியர் எப்படி அரசின் இந்தி மொழித் திட்டத்தை எதிர்க்கலாம்?” என்றே கேட்டார்.

அரிமா நோக்குக் கொண்ட பாரதியார்-“தமிழ் நாட்டில் இந்திக்கு என்ன வேலை - என்ன தேவை?” என முகத்திலறைந்தாற்போல் பிரதமருக்கு விடை போக்கினார்.

“எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி

எத்தனைப் பட்டாளம் கூட்டி வரும்

மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை

மாட்ட நினைக்கும் சிறைச்சாலை”

எனப் போர்ப் பரணி பாடிட, இந்தி எதிர்ப்புக் கால் நடைப் படைக்குப் போர்க்கருவியை ஈந்தார், புரட்சிக் கவிஞர்.

ஈ.வெ.ரா.வின் போர்ப்படைத் தளபதிகளான பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமியும், மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையாரும், வ.ப.தாமரைக் கண்ணியாரும் அடங்கிய இந்தி எதிர்ப்புப் படை, திருச்சியிலிருந்து புறப்பட்டு, சென்னை கடற்கரையை அடைந்தது.

கடல் மணற்பரப்பை மூடிவிட்டதுபோல் கடலெனத் திரண்டிருந்த தமிழர் பெருங்கூட்டம் ஆர்ப்பரித்து வரவேற்றது - இந்தி எதிர்ப்புப் படையை.

“தமிழ் வாழ்க!”, “இந்தி ஒழிக!” என்னும் முழக் கங்கள் முகிலைக் கிழித்துக் கொண்டு வானை முட்டின; கடல் அலைகளை அடக்கின.

மக்களின் மாபெரும் எழுச்சியைக் கண்டுதான்,

11-09-1938 அன்று “தமிழ்நாடு தமிழருக்கே!” என்ற நாட்டுப் பிரிவினை முழக்கத்தைத் தமிழர்க்குத் தந்தார், ஈ.வெ.ரா.

அன்றுதான் அவர் “தமிழர் தலைவர்” ஆனார்;

மக்கள் நெஞ்சங்களில் மறுபதிப்பு ஆனார், ஈ.வெ.ரா.

ஆயினும் என்ன?

ஈ.வெ.ரா.வை நன்கு அறிந்த பிரதமர் ஆச்சாரியார், கிஞ்சிற்றும் இறங்கி வரவில்லை.

இரண்டாம் உலகப் போர் வெடித்ததைக் காரண மாகக் காட்டி, எல்லா மாகாணங்களிலும் காங்கிரசு பதவி யிலிருந்து விலகியது. ஆச்சாரியார், கட்டாய இந்தி ஆணையை எடுக்காமலேயே பதவி விலகினார்.

ஆச்சாரியாரும், மாகாண ஆளுநரும், இந்திய அரசப் பிரதிநிதியும் (Viceroy)) நேரில் வேண்டிக் கேட்ட போதும், நீதிக்கட்சித் தலைவராக ஆன ஈ.வெ.ரா., மாகாணப் பிரதமராகப் பதவி ஏற்றிட ஒப்பவில்லை.

மாகாண ஆளுநரின் ஆணைப்படித்தான் கட்டாய இந்திப்பாடம் தமிழகத்தில் - சென்னை மாகாணத்தில் 21-2-1940இல் ஒழிந்தது.

1947 ஆகத்து 15-இல் வெள்ளையன் வெளியேறி னான்.

விடுதலை பெற்ற இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை, 1946இல் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய சட்டப் பேரவையை (Central Legislative Assembly) வைத்து - அதையே அரசமைப்பு அவை (Constituent Assembly)) என மாற்றி, 9.12.1946 முதலே அரச மைப்புச் சட்ட நடவடிக்கைகளை இடைக்காலப் பிரதமர் நேரு தொடங்கினார்.

இந்தியா முழுவதிலும், அதை அன்று முதல் எதிர்த் தவர் ஈ.வெ.ரா. ஒருவரே; ஒரே அமைப்பு திராவிடர் கழகம் மட்டுமே!

அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிட 13 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றுள் ஒன்றே அரசமைப்புச் சட்ட வரைவுக்குழு. அக்குழுவின் தலைவராக மேதை அம்பேத்கர் 29.8.1947இல் அமர்த்தப்பட்டார். ஆனால் அதற்கு முன்னரே நேரு தலைமையிலான ஒரு குழு, பெனிகல் நரசிங்கராவ் என்பவரை வைத்து, அரச மைப்புச் சட்ட முதலாவது வரைவை (First Draft) எழுதி அச்சிட்டு, அதை 18.10.1947-இல் அம்பேத்கர் கையில் தந்தனர். அதுவே முதலாவது அரசியல் மோசடி.

அடுத்த மோசடி என்ன தெரியுமா?

“இந்தியாவுக்கு ஒரு தேசிய மொழி வேண்டும். அது இந்திதான்” என்பதை, அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுவோ, அவையோ விவாதித்து முடிவெடுக்க வில்லை. அதற்கு மாறாக, காங்கிரசுக் கட்சியின் மத்திய சட்டப் பேரவை உறுப்பினர்கள் மட்டும் கூடி, தேசிய மொழி பற்றி விவாதித்து, ஒரு வாக்குப் பெரும் பான்மையை வைத்து, “இந்தியே இந்தியாவின் தேசிய மொழி” என்று முடிவெடுத்து, அதையே அரச மைப்புச் சட்டத்தில் நுழைத்தனர்.

இது இரண்டாவது மோசடி.

இதனை அம்பலப்படுத்திட வேண்டி, 1948-இல் குடந்தையில், பெரியார் நடத்திய இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போராட்டம், காவல்துறையின் வன்கொடு மையைத் தாங்க முடியாமல், தற்காலிகமாக நிறுத் தப்பட்டது.

இந்தி போஜ்புரி, மைதிலி, கரிபோல்டி எனப் பல் வேறு பிரிவுகளைக் கொண்ட மொழி. இத்தனைப் பிரிவு இந்தி மொழிகளையும் பேசுவோர், இந்திய மக்களில் 42ரூ பேரே. மற்ற மொழிகளைப் பேசுவோர் 58ரூ பேர். அந்த இந்தி எப்படி ஆட்சிமொழி?

இவ்வளவையும் மீறித்தான், 1950 சனவரி 26 முதல் நடப்புக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில், 17ஆம் (XVII)) பகுதியில், “ஆட்சிமொழி - Offical Language” என்னும் தலைப்புடன், நான்கு “பிரிவுகளின் -Chapters”கீழ், விதிகள் 343 முதல் 349 முடிய உள்ளவை - “இந்திய அரசின் ஆட்சி மொழி (அ) அலுவல் மொழியாக, தேவநாகரி வரி வடிவில் உள்ள இந்தி இருக்கும்” எனக் கூறியது.

மேலே காணப்பட்ட ஏழு விதிகளில், எதிலும்-“இந்தி தேசிய மொழி -Hindi is the National Language” என்பதாக இல்லை.

அதாவது இந்தி மொழி இந்திய அரசின் 1) எல்லா நிருவாக அலுவலகங்களிலும்; 2) நாடாளுமன்றத்திலும்; 3) உச்சநீதிமன்றத்திலும் அலுவல் மொழியாக இருக்கும் என்று மட்டுமே எழுதப்பட்டுள்ளது.

இவற்றை அன்னியில், அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது இணைப்பில் (Eighth Schedule) விதிகள் 344(1), 351-இன்படி, 1950 முதல் 2002 வரையில், 14 மொழிகளே இருந்தன. 2003இல் செய்யப்பட்ட 92ஆவது திருத்தத்துக்குப் பிறகு, 22 “மொழிகள்” பட்டியலிடப்பட்டுள்ளன.

இவை “பிராந்திய மொழிகள்” என்றோ, “மாநிலங் களின் மொழிகள்” என்றோ இங்கே குறிப்பிடப்பட வில்லை.

பகுதி – II என்கிற தலைப்பின்கீழ் மட்டும் - “பிராந்திய மொழிகள் -Regional Languages” என்று காணப்பட்டுள்ளது. இதன்கீழ் விதிகள் 345, 346, 347 உள்ளன.

இது மூன்றாவது மோசடி; இது ஓர் அவமானம்.

இந்த நிலையில் “மொழிகள்” என்கிற மேலே கண்ட பட்டியலில் “ஆங்கிலம்” என்பது இல்லை.

அப்படி இல்லாமலே “ஆங்கிலம்-இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரையில், இணை ஆட்சி மொழியாக இருக்கும்” என்று, “ஆட்சி மொழிச் சட்டம்” என்கிற நிருவாகச் சட்டம் இருக்கிறது.

இது நான்காவது மோசடி. ஏன்?

அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறாத ஆட்சி மொழிச் சட்டம் - ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்க மட்டுமே பயன்படுமே அன்றி, இந்தி ஆட்சிமொழியாக ஆவதைத் தடுக்கப் பயன்படாது. இது உண்மை.

தமிழ்நாட்டுத் தமிழ் மாணவ மறவர்கள், 26.1.1965இல் தன்னெழுச்சியாக மேற்கொண்ட “இந்தி ஆட்சி மொழிச் சட்ட எதிர்ப்புப் போராட்ட மும்” - அதை முன்னெடுத்து முழுவீச்சில் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய மாபெரும் போராட்டமும் பெற்றுத் தந்த பெரிய வெற்றி இது. இதில் அட்டியில்லை.

ஆனால் இன்று நம் முன் உள்ள உண்மையான நிலைமை என்ன?

1) விதி 344(1)இல் கண்டபடி, 1955இல் ஒரு ஆய்வுக் குழுவை அரசு அமைக்க வேண்டும்; அதன் பிறகு 10 ஆண்டுகள் கழித்து - 1965இல் ஒரு தலை வரைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். அக்குழுவில் - அட்டவணை 8இன்கீழ் காணப்படும் மொழிகளின் பிரதிநிதிகள் இருக்க வேண்டும். அக் குழுவின் பணிகள் எவையெவை என்பதையும், அரசு ஆணை விளக்கிட (define) வேண்டும்.

விதி 344(2)இன்படி, அந்தக் குழுவின் கட்டாயக் கடமை என்பது - பின்கண்டவற்றைப் பற்றி ஆய்வு செய்து, தம் பரிந்துரைகளைக் குடிஅரசுத் தலை வருக்கு அளிப்பதே ஆகும்.

(அ)       இந்திய அரசுத்துறைகளின் அன்றாட அலுவலகப் பணிகளில் படிப்படியாக இந்தி பயன்படுத்தப்படுகிறதா?

(ஆ)      இந்திய அரசின் அலுவலகங்களில் அன்றாடப் பணிகளில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது கட்டுப் படுத்தப்பட்டு அல்லது குறைக்கப்பட்டு வருகிறதா?

(இ)       விதி 348இல் சொல்லப்பட்டுள்ள எல்லாப் பணி களிலும் அல்லது அவற்றுள் ஏதாவதொரு பணி யிலும் எந்த மொழியைப் பயன்படுத்தலாம்?

(ஈ)        இந்திய அரசின் ஒரு துறைப் பணியில் அல்லது பலதுறைப் பணிகளில் எந்த வடிவத்திலான எண்களைப் பயன்படுத்தலாம்?

(உ)       இந்திய அரசு அலுவலக அன்றாடப் பணிகளைச் செயல்படுவதற்கான ஆட்சி மொழி, மற்றும் ஒன்றிய அரசுக்கும் ஒரு மாநில அரசுக்கும் இடையே ஆன தொடர்புக்கான மொழி, ஒரு மாநிலத்துக்கும் இன் னொரு மாநிலத்துக்கும் இடையே தொடர்புக்கான மொழி எது என்பதைப் பற்றியும் குடிஅரசுத் தலை வருக்கு அறிக்கை தர வேண்டும்.

அப்படிப்பட்ட குழுவில் யார், யார் இருப்பார்கள்? மொத்தம் எத்தனை பேர் இருப்பார்கள்?

விதி 344(4)இன்படி மக்கள் அவையினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 உறுப்பினர்களும், மாநிலங்கள் அவையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 உறுப்பினர் களும் - ஆக மொத்தம் 30 உறுப்பினர்கள் இருப்பார்கள்.

கட்சிகள் பெற்றுள்ள உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ற விழுக்காட்டினர், ஒற்றை மாற்று வாக்கெடுப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இப்படித் தேர்வு செய்யப்பட்ட குழுக்களில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. உள்ளிட்ட பல கட்சியினரும் இடம் பெற்றிருந்தார்கள் அல்லவா?

இவர்களின் முயற்சிகளால் இன்றுவரை விளைந்த எதிர் வினைகள் யாவை?

எட்டாவது அட்டவணையில் கண்ட எல்லா மாநி லங்களின் மொழிகளையும் இந்திய ஆட்சிமொழிகளாக ஆக்குவது குறித்து ஆய்வு செய்திட இந்திய அரசு ஒரு குழுவை அமைக்கும் என்று, ஏற்கெனவே அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் அமைந்த ஆட்சி 1998இல் அறிவித்தது.

ஆனால், அது நடைபெறவில்லை.

2004இல் அமைந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், கொள்கை அளவில், அப்படி ஒரு குழுவை அமைத்திட உறுதி கூறியது.

அதுவும் நடைபெறவில்லை.

இந்நிலையில் தீர்வுதான் என்ன?

1)            எட்டாம் அட்டவணையில் கண்டுள்ள 22 மொழிகளையும் இந்திய ஆட்சிமொழிகளாக - அலுவல் மொழிகளாக ஆக்கும் தன்மை யில் 343 முதல் 349 வரை உள்ள ஏழு விதி களையும் திருத்தம் செய்க!

2)            ஒவ்வொரு மாநில எல்லைக்குள்ளும் இயங்கு கிற அஞ்சல், தொலைப்பேசி, வருமான வரி, தொடர்வண்டி முதலான எல்லா இந்திய அரசுத் துறைகளிலும்; எல்லா உயர்நீதி மன்றங்களிலும் அந்தந்த மாநில ஆட்சி மொழியே, மய்ய அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழியாக-அன்றாட அலுவல் மொழி யாக இலங்கும் என்று உறுதி செய்து, மேற் கண்ட ஏழு விதிகளையும் திருத்தம் செய்க!

3)            மாநில அரசு, இந்திய அரசுடன் மாநில ஆட்சி மொழியின் வழியே தொடர்பு கொள்ளவும், அந்தந்த மாநில மொழியின் வழியே இந்திய அரசு விடை தரவும் வழி செய்க!

என்று நாம் கோருவதே தீர்வாகும் என, மா.பெ.பொ.க. கருதுகிறது.

இது, இந்தியா, தன்னாட்சி உரிமை பெற்ற மொழி மாநி லங்கள் ஒன்றாக இணைந்த ஒரு கூட்டாட்சியாக இயங்க வழிகோலும்.

பண அச்சடிப்பு, தொலைத் தொடர்பு, பாதுகாப்பு முதலான துறைகள் இந்தியா முழுமைக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.

இந்தியா ஒரே நாடு என்று சாதனையாகக் கூறும் எந்தக் கட்சி ஆட்சியானாலும் - இந்தியா உடைபடாமல் இருக்க இத்தீர்வுகளை ஏற்கச் செய்திட வேண்டும். 

1.            எட்டாம் அட்டவணையில் கண்ட 22 மொழிக் காரர்களுக்கும் இப்படிப்பட்ட கருத்துக்கொண்ட வேண்டுகோளை அவரவர் தாய்மொழி (அ) ஆட்சி மொழியில் எழுதி நாம் விடுத்திடுவோம்.

2.            இத்தீர்வுக்கு உடன்படுகிற தமிழ்நாட்டில் உள்ள வர்கள் ஒரு குழுவாக இணைந்து, 22 மாநிலங் களுக்கும் நேரில் சென்று, இக்கோரிக்கைக்கு ஆதரவு திரட்டுவோம்.

3.            22 மொழி மாநிலக்காரர்களையும் கொண்ட குழுவினர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 790 பேர்களுக்கும், மாநிலச் சட்டமன்றங்களின் உறுப்பினர்கள் 4200 பேர்களுக்கும் இவ்வேண்டு கோளை விடுப்போம்.

22 மொழிகளின் பகுதிகளிலும் இதுபற்றிய புரிந் துணர்வு பெற்றோர் - இந்திக்கு எதிராக உறுதியாக ஒன்றிணைவர்.

இந்திக்கு எதிர்ப்பு மிகவும் வலுப்பெற்றால் தான், எந்தக் கட்சி இந்திய அரசும் அஞ்சும்; இறங்கிவரும்.

இப்படியெல்லாம் செய்யாமல், தமிழர்கள் மட்டும் தனித்துப் போராடியோ, இரண்டொரு மாநிலத்தினர் இணைந்து போராடியோ, இந்தி ஆட்சிமொழி ஆவதைத் தடுக்க இயலாது என மார்க்சியப் பெரியாரியப் பொது வுடைமைக் கட்சி தெளிவாகவும் உறுதியாகவும் கருதுகிறது.

 

Pin It