hindi agitationகடந்த ஏப்ரல் 28, 2022 அன்று புதுச்சேரியில் உள்ள ஜவகர்லால் நேரு முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் (JIPMER) இரண்டு சுற்றறிக்கைகளை ஒரே நாளில் வெளியிட்டுள்ளது. இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படுவதோடு அதில் ஒரு சுற்றறிக்கை அலுவல் மொழிச் சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது.

ஒரு சுற்றறிக்கை, அலுவல் மொழிச் சட்டம் 1963 பிரிவு 3 (3) ஐ குறிப்பிட்டு அதன்படி பொது ஆணைகள், அறிவிக்கைகள், தீர்மானங்கள், விதிகள் மற்றும் அதற்கான படிவங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் எல்லாம் இரு மொழிகளில் அதாவது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

இரண்டாவது சுற்றறிக்கையின் உள்ளடக்கம் அதிர்ச்சியைத் தருகிறது.

“அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் எல்லா பதிவேடுகள், பணி ஏடுகள், பணிக் கணக்குகள் ஆகியவற்றின் பொருள், விவரங்களின் தலைப்புகள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்படும். எல்லா பதிவேடுகள், பணி ஏடுகள், பணிக் கணக்குகள் ஆகியவற்றில் எதிர்காலப் பதிவுகள் இனி முடிந்த அளவிற்கு இந்தியில் மட்டுமே செய்யப்படும்”

இந்த உறுதி மொழி ஜிப்மர் இந்திப் பிரிவால், நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவிற்குத் தரப்பட்டுள்ளதாம்.

அது மட்டுமன்று. கோப்புகளில் 30% அளவிற்கு இந்தியில் குறிப்புகள் எழுத இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், இந்திப் பயிற்சி வகுப்புகளில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் இந்தித் தேர்வுகளில் தேர்ச்சி அடைந்தவர்கள் 50% அளவுக்குக் அவர்களுடைய அன்றாடப் பணிகளில் கட்டாயம் இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் இவை இரண்டும் அல்லாத மற்றொரு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது சட்ட மீறல் மட்டுமின்றி இந்தியைத் திணிக்கின்ற அப்பட்டமான நடவடிக்கை ஆகும். சட்டம் இருமொழிப் பயன்பாடு பற்றி பேசும்போது “இந்தியைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்” என்று சொல்லும் அதிகாரம் ஜிப்மருக்கு எங்கே இருந்து வருகிறது? என்ற கேள்வி எழுகிறது.

ஜிப்மரின் இச்செயலை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டித்துள்ளார். இந்தச் சுற்றறிக்கையினை உடனடியாகத் திரும்பப்பெறும் நடவடிக்கையை ஜிப்மர் எடுக்க வேண்டும் என்று அதன் இயக்குநருக்கு எழுத்தாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

ஒன்றிய அரசு இதுபோன்ற ஆழம் பார்க்கும் முயற்சிகளில் ஈடுபடுவது புதிது அன்று. இதற்குக் காங்கிரசும் விதிவிலக்கு இல்லை. எனினும் அண்மைக் காலங்களில் இம்முயற்சிகள் அதிகமாகி வருகின்றன. ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டிலிருந்தே அதற்கு எதிர்ப்புக் குரல் எழுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழக அரசின் கொள்கை இருமொழிக் கொள்கைதான். நூறாண்டுகளாக இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துக் கொண்டிருக்கும் மாநிலம், தமிழ்நாடு. ”தமிழுக்குத் துரோகமும், இந்தி பாஷையின் ரகசியமும்” என்று 1926-லேயே இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து கட்டுரை எழுதியவர் தந்தை பெரியார் (குடிஅரசு, 07.03.1926). பொதுமொழியாக நாம் முன்வைப்பதும், பெரியாரின் வழியில் ஆங்கிலத்தையே. “இந்தியாவுக்கு ஒரு பொது பாஷை வேண்டுமானால் அல்லது வியாபாரத்திற்கு ஒரு பொது பாஷை வேண்டுமானால் ஆங்கில பாஷையைத் தெரிந்து எடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டுமேயல்லாமல் வேறு பாஷையைப் பற்றி யோசிப்பது முட்டாள்தனமோ அல்லது சூழ்ச்சியோதான் ஆகும்” (குடிஅரசு, 20.01.1929).

எனினும் ஒன்றிய அரசின் நிறுவனங்களில் இவ்வாறு தொடர்ந்து இந்தி திணிக்கப்படுவதும், எதிர்ப்புக் கிளம்பிய பின்னர் ஒன்றிய அரசு சிறிது காலத்திற்கு அம்முயற்சியைத் தள்ளிப் போடுவதும் வாடிக்கையாகி விட்டது. சரி! இதற்கு நிரந்தரத் தீர்வுதான் என்ன ?

இவ்விதமான இந்தியைப் புகுத்தும்போதெல்லாம் இந்தி ஆதரவாளர்கள் சுட்டிக் காட்டும் அரசியலமைப்புப் பிரிவு 351 ஆகும். அப்பிரிவு என்ன சொல்கிறது ?

Article 351: It shall be the duty of the Union to promote the spread of the Hindi language.

அதாவது இந்தி மொழியைப் பரப்புவது ஒன்றிய அரசின் கடமையாகும் என்கிறது இப்பிரிவு. எனவே, அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டதைத்தானே ஒன்றிய அரசு செய்கிறது, இதில் என்ன தவறு உள்ளது என்கின்றனர் இந்தி ஆதரவாளர்கள்.

ஆனால் இந்த ஒரு உறுப்பைக் காரணமாக வைத்துக் கொண்டே இந்தியானது பல்வேறு இடங்களிலும், பல்வேறு தளங்களிலும் நம் மீது திணிக்கப்படுகிறது என்பதுதான் இன்றைய சூழ்நிலை.

இந்திய மொழிகளில் ஒன்றான இந்திக்கு, வேறு எந்த இந்திய மொழிக்கும் தரப்படாத முக்கியத்துவம் ஏன் தரப்பட்டுள்ளது ? இது மொழிச் சமத்துவத்திற்கு எதிரானது இல்லையா ?

இப்பிரிவு இந்திக்கு மட்டும் ஒரு சிறப்பான இடத்தையும் மற்ற இந்திய மொழிகளை இரண்டாம் தரமாகக் கருதப்படுவதற்கும் முக்கிய காரணமாக அமைகிறது இல்லையா?

எனவே இப்பிரிவு இந்தி ஆதிக்கத்தை நம் மீது திணிப்பதாலும், மொழிச் சமத்துவத்திற்கு எதிரானது என்பதாலும் மாநில சுயாட்சிக்கான நமது முழக்கங்களில் முக்கியமான ஒரு முழக்கமாக “பிரிவு 351 நீக்கப்பட வேண்டும்” என்பதும் இருக்க வேண்டும் என்பதை இந்த நேரத்தில் வலியுறுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

- வெற்றிச்செல்வன்

Pin It