தந்தை பெரியார் அவர்கள் 1919 முதல் 1925 வரையில் தமிழ்நாடு காங்கிரசில் இருந்தார். அப்போது 1922-இல் மோதிலால் நேருவை ஈரோட்டுக்கு அழைத்து வந்து, தான் ஈரோட்டில் நடத்திக் கொண்டிருந்த தொடக்கப் பள்ளியில், இந்தி பாட வகுப்பைத் தொடங்கினார். ஏன்? அப்போது ஈ.வெ.இரா. இந்தி தேசியவாதியாக இந்திய தேசிய வாதியாக இருந்தார்.

தந்தை பெரியார், 26.12.1926-இல் “பார்ப்பன ரல்லாதார் சுயமரியாதை இயக்கத்தைத்” தொடங்கினார். அப்போதுதான் பார்ப்பனரல்லாதார், பார்ப்பனர் ஆதிக்கத்தை எதிர்க்கும் உணர்ச்சி - பார்ப்பனப் புரோகிதத்தை எதிர்க்கும் உணர்ச்சி பார்ப்பனரல்லாதார் எல்லோருக்கும் உண்டாகும் என நம்பினார். அதைத் தமிழ்நாட்டோடு மட்டும் நிறுத்திக் கொண்டார். திராவிட நாட்டுக்குக் கூட விரிவு செய்யவில்லை.

அதேபோல், முதலாவது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் 1938-40 சென்னை கடற்கரையில் 11.9.1938-இல் “தமிழ்நாடு தமிழருக்கே!” என முழக்கமிட்ட பெரியார், மற்ற திராவிட மொழித் தலைவர்கள் பெரியாரைக் கேள்வி கேட்ட உடனே, அது தவறு என உணர்ந்து, உடனே “திராவிட நாடு திராவிடருக்கே!” என முழக்கம் எழுப்பினார்.

அதேபோன்று எல்லா இந்தியப் பார்ப்பனரல்லாதாரையும் பார்ப்பனர் பிடியிலிருந்து விடுவிக்க ஏன் முயற்சிக்கவில்லை? என்பது, என்றும் நிலைத்த ஒரு கேள்வியாகும். நிற்க.

காந்தியாரை 1948 சனவரி 30 அன்று சுட்டுக்கொன்றார்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்கள். இனி, அடுத்து “கி.பி.2000-க்குள் இந்தியாவில் இராம இராச்சியம் அமைப்பதுதான் தம் ஒரே குறிக்கோள்” என்று 1948 பிப்பிரவரியில் பூனாவில் முடிவெடுத்தனர்.

அவர்களின் ஒரே நோக்கம் இந்திய அரசைக் கைப்பற்றினால்தான் இந்திய மண்ணில் இராம இராச்சியத்தை அமைக்க முடியும் என்பதுதான். இராம இராச்சியம் அமைக்கப்படுவதைத் தொடக்கம் முதலே பெரியார் எதிர்த்தார். இராம இராச்சியம் அமைப்பதை 2014-இல் மோடி பகுதியளவில் நிறைவேற்றினார்.

2019-இல் பாரதிய சனதாக் கட்சியினர் மக்களவையில் 303 பேரும், கூட்டணிக் கட்சியினர் மேற்கொண்டு 50 பேரும் ஆக 353 பேர் வந்தவுடன், பா.ச.க.வின் அதிகாரப்பூர்வத் தலைவராகச் செயல்பட்ட அமித்ஷாவை உள்துறை அமைச்சராக மோடி அமர்த்தினார்.

உள்துறை அமைச்சர் எந்தத் துறையிலும் தலையிடலாம். ஏனெனில், உள்நாட்டில் இந்தியா-இந்தி-இந்து என்கிற நிமையை உருவாக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வதற்கு அவர் துணிகிறார்.

காட்டாக, 05.08.2019 அன்று ஜம்மு-காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து வழங்கிய இந்திய அரசமைப்புச் சட்டவிதி விதி 370யும், எந்தக் குடிமக்களும் ஜம்மு-காஷ்மீரத்தில் சொத்து வாங்கத் தடையாக இருந்த இந்திய அரச மைப்புச்சட்ட விதி 35-A-யும் நீக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா சட்டம் செய்தார்; ஜம்மு-காஷ்மீரை இரண்டாகப் பிரித்தார்.

லடாக் பகுதியைச் சட்டசபை இல்லாத இந்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றியப் பகுதியாகவும் (Union Territory), ஜம்மு-காஷ்மீர் பகுதியைச் சட்டசபை உள்ள ஒன்றியப் பகுதியாக (Union Territory)வும் பிரித்தார். (Jammu and Kashmir Re-organisation Bill - 2019).

அதேபோல் அடுத்து “ஒரே மொழி; ஒரே இந்தியா அதாவது இந்தியாவுக்கு என்று ஒரு மொழி மட்டுமே உண்டு; அது இந்தி மட்டுமே” என்று 14.9.2019 அன்று ‘இந்தி மொழி நாள்’ விழாவின் போது அமித்ஷா அறிவித்தார்.

இனி நாம், தெருவில் இறங்கிப் போராடிப் பயனில்லை. நம் போராட்டத்தை, வாய்ப்பு இருப்ப வர்களைக் கொண்டு நாடாளுமன்றத்தில் நடத்த வேண்டும். அமித்ஷா அவர்கள், 14.9.2019 அன்று அறிவித்ததை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச வழிகாண வேண்டும். எதை நோக்கி?

இந்தி கல்வி மொழியாக-அரசு அலுவல் மொழியாக இருப்பதை எதிர்த்து நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் திராவிட முன்னேற்றக் கழகத் தினரும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக் கட்சியினரும், இரண்டு பொதுவுடைமைக் கட்சியினரும், முசுலீம் லீக் கட்சியினரும் இணைந்து குறிப்பிட்ட இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துக் கூக்குரல் எழுப்பச் செய்ய வேண்டும்.

பின்கண்ட கோரிக்கைகளை அனைவரும் ஒருமுகமாக எழுப்ப வேண்டும்.

  1. எல்லாத் தேசிய மொழிகளையும் இந்திய அரசின் அலுவல் மொழிகளாக-ஆட்சி மொழிகளாக அறிவிக்க வேண்டும்.
  2. அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில், 343 முதல் 351 வரையிலான விதிகளின் கீழ் நடுவண் அரசின் எந்தவொரு அலுவலகத்திலும் நிறுவனத்திலும் இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருப்பதற்கான முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தி பேசாத பிற தேசிய இன மக்களின் இனம், மொழி உரிமைகளையும் இது பறிக்கிறது. எனவே, சனநாயகத்துக்கு எதிரான இவ்வரசமைப்புச் சட்ட விதிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

இந்தி மட்டுமே இந்திய அரசின் ஆட்சிமொழி என்ப தற்குப் பதிலாக, அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் விதிகள் 344(1), 351 ஆகியவற்றின் கீழ் உள்ள எல்லா மொழிகளையும் இந்திய அரசின் ஆட்சிமொழிகளாக அறிவிக்க வேண்டும்.

பல தேசிய மொழிகளைக் கொண்ட ஒரு கூட்டாட்சியாக இந்தியாவை மறுகட்டமைப்புச் செய்வதற்கான முதல் நடவடிக்கை இதுவேயாகும்.

மொழி அடிப்படையில் அமைந்துள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநிலத்தின் ஆட்சி மொழியே அம்மாநிலத்தின் எல்லைக்குள் உள்ள நடுவண் அரசு அலுவலகங்களிலும் ஆட்சிமொழியாகக் கட்டாயம் இருக்க வேண்டும்.

அத்துடன், இதற்கு வழிகோலும் ஒவ்வொரு கட்சியி னரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பேரணிகள், மாநாடுகள், பொதுக் கூட்டங்கள் தமிழ் நாடெங்கிலும் விரைந்து நடத்துவது இந்தக் கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் என்று நான் மனமார நம்புகிறேன்.

Pin It