மா.பெ.பொ.க. தோழர்களுக்கு முதன்மையான வேண்டுகோள்

தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழா என்கிற பேரால், முதன்முதலாகக் கொண்டாடப்பட்ட நாள் 18-12-1939இல் என்பது வரலாறு.

அது பெரியாரின் 60ஆம் ஆண்டு பிறந்த நாள் நிறைவு விழா என்றும், 61ஆவது பிறந்த நாள் விழா என்றும் கொண்டாடப்பட்டுள்ளது.

17-12-1939ஆம் நாளிட்டு அப்போது, “விடுதலை”யில் ஓர் அறிக்கையைப் பெரியார் வெளியிட்டார்.

1937-39 இந்தி எதிர்ப்புப் போராட்ட வெற்றிக்குப் பின்னர், 1940 முதல் ஆங்காங்கே பெரியார் பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடப்பட்டன.

நீதிக்கட்சிக்கு, “திராவிடர் கழகம்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது, 1944இல். அதற்கான கொடி, முதன்முதலாக உயர்த்தப்பட்டது - கரூர் வட்டத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில்தான்.

29-9-1945, 30-9-1945இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற மாகாண மாநாட்டில், ஈ.வெ.கி. மிராண்டா, கழகக் கொடியை உயர்த்தி வைத்தார்.

கொடி உயர்த்துவது என்பது ஒரு சடங்கு அன்று. அது அந்த இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையை விளக்குவதற்கான ஒரு நிகழ்ச்சி.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி என்ற பெயர் மாற்றத்தை, நாம் 1988 மார்ச்சில் மேற்கொண்டோம்.

ஐ. வருண சாதி என்கிற பேரால் நம் மக்கள் சட்டப்படியும் சாத்திரப்படியும் 2013 ஆகிய இன்றும் “சூத்திரர்கள்” என்றே வைக்கப்பட்டுள்ளோம். 1922இலும், 1926இலும் பெரியார் சுட்டிக்காட்டிய பிறவி இழிவு குறித்து, நம்மில் வெகுமக்கள் இன்னமும் வெட்கமோ வேதனையோ அடையவில்லை.

1.            அரசமைப்புச் சட்டத்தில் நான்கு வருண சாதிகளின் பெயர்களோ, அதற்கான விளக் கங்களோ குறிக்கப்படவில்லை. இது வேண்டுமென்றே மறைக்கப்பட்டது. 1947-1949இல் இது நடந்தது. எனவே படித்தவர்கள், படிக்காதவர்கள் யாருக்கும் இது தெரியாது.

2.            1920 முதல் 1937 வரையில் சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த நீதிக்கட்சி என்கிற திராவிடக் கட்சியோ; 1937-39 காங்கிரசு ஆட்சியோ; 1940-46 வெள்ளையன் ஆட்சியோ; 1946 முதல் 1967 வரை இம்மாகாணத்தை ஆண்ட காங்கிரசுக் கட்சியோ -உயர்நிலை, மேல்நிலை, கல்லூரிக் கல்விக்கான பாடத்திட்டங்களில் இந்த உண்மை யைப் பதிவு செய்யவுமில்லை, கற்பிக்கவுமில்லை. 1967 முதல் 2013 வரை 46 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டை ஆண்டுவரும் ஊரறிந்த திராவிடக் கட்சிகள், இதுபற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை.

அதாவது 1920 முதல் 2013க்குள் உள்ள 93 ஆண்டுகளில் நம் மக்களின் கல்வி அறிவு வளர்ந்திருக்கிறது; கோடிக்கணக்கான மக்கள் எழுத்தறிவும், உயர்நிலைக் கல்வியும் பெற்றுவிட்டார்கள். ஆனால், அவர்கள் பழைய பழக்கம், வழக்கம் என்கிற பேரால் உள்ள பாடங்களை மட்டுமே கற்பிக்கப்பட்டுவிட்டனர். எனவே படித்தவர்களிலும் 95 விழுக்காடு பேருக்கு மேலான வர்களுக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது.

1926இல் தந்தை பெரியார் விரும்பியபடியும்; 1947இல் மேதை டாக்டர் அம்பேத்கர் நாடாளுமன்றத் தில் முன்மொழிந்த இந்து சட்டத்திருத்தப்படியும் - “பழக்க, வழக்கச் சட்டம் என்பதை அரசமைப்புச் சட்டத்திலிருந்து அடியோடு நீக்கிட நாம் போராட வேண்டும்” என்று பொதுமக்களுக்கும் இளைய தலைமையினருக்கும் புரிய வைத்தால் ஒழிய - இவர்கள் எல்லோரும் - “இதற்கான ஓர் ஆட்சியை வெகுமக்கள் ஆகிய நாம் நிறுவ வேண்டும்” என்று ஒருதலைமுறைக்காலம் போராடினால் ஒழிய, “நாம் சூத்திரர்” என்கிற இழிவு நாம் வாழும் போதும் இருக்கும்; நாம் செத்த பிறகும் தனிச்சுடுகாட்டில் இருக்கும்.

சில உள்சாதிக்காரர்கள் ‘பிராமணர்’ என்றும், ‘சத்திரியர்’ என்றும், ‘வைசியர்’ என்றும் பட்டங்களைப் போட்டுக் கொள்ளலாம் என்று, வெள்ளையர்கள் சில ஆணைகளை வெளியிட்டார்கள். அதை உண்மை என்று எல்லாச் சூத்திரச் சாதிக்காரர்களும் நம்புகிறார்கள்.

இவ்வளவு பெரிய பிறவி இழிவும் கொடுமையும் உலகத்தில் வேறு எந்த மதத்திலும் இல்லை; எந்த நாட்டிலும் இன்று இல்லை.

ஐஐ. மா.பெ.பொ.க. 8.8.1976இல் தோற்றுவிக்கப்பட்டது. அன்று “சமதர்மம்” என்ற சொல்லைப் பலர் விரும்ப வில்லை. எனவே “பெரியார் சமஉரிமைக்கழகம்” என்று பெயரிட்டோம். ஆனாலும் சமதர்மக் கொள்கை (சோஷலிசம்) பற்றி அப்போது முதல் நாம் எழுதினோம். அதற்கு ஏற்பக் கட்சியின் பெயரை மாற்ற வேண்டும் என, 1981 முதல் விவாதித்தோம். முடிவாக, 1988 மார்ச்சில், “வருணசாதி இழிவைக் குறித்துத் துக்கப்படுகிறோம்” என்பதைக் குறிக்கும் கறுப்பும்; “சாதி இழிவைப் போக்கப் போராடுகிறோம் - புரட்சி செய்வோம்” என்பதைக் குறிக்கும் சிவப்பும் கொண்ட கொடியில், “சமதர்ம சமுதாயத்தை நிறுவுவோம்” என்பதைக் குறிக்கும் “அரிவாள் - சுத்தியல்” கொண்ட கொடியை நாம் வரித்துக் கொண்டோம்.

6-1-2013இல் வேலூரில் நம் கட்சி நடத்திய அரசியல் கொள்கை விளக்க மாநாட்டில், சமதர்மம் பற்றிப் பெரியார் 1933இல் வெளியிட்ட நூலையும், நம் கட்சியின் அரசியல் குறிக்கோள் பற்றிய ஒரு நூலையும் வெளியிட்டோம்.

ஏற்கெனவே, பெரியார் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், நாம் ஆண்டுதோறும் செப்டம்பர் 17 முதல் குறைந்தது 30 நாள்கள் 30 இடங்களில் பொதுக் கூட்டங்கள் நடத்தி நம் கொள்கைகளை மக்கள் முன் வைத்தோம்.

வரும் 17-9-2013இல் வர உள்ள பெரியாரின் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்வைத்து, அன்பு கூர்ந்து, நம் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஒவ்வொரு வரும் துன்பம் பாராமல், பின்கண்ட ஏற்பாடுகளைச் செய்து, நம் இயக்கத்தை வலிமை உள்ளதாக வளர்த் தெடுக்க ஆவன செய்ய வேண்டுகிறேன்.

1. 18-9-2013, புதன் முதல் 22-9-2013 ஞாயிறு வரை உள்ள 5 நாள்களில் - வசதிப்பட்ட ஒரு நாளில் அந்தந்த மாவட்டத்திலுள்ள நம் கட்சி உறுப்பினர்களின் குடும்பங்கள், ஆதரவாளர்களின் குடும்பங்கள் - குழந்தைகளுடன், வசதிப்பட்ட ஓர் ஊரில் கூடி, கூட்டாக விருந்து உண்டு, கொள்கை விளக்கம் அளிப்பது, வேலைத் திட்டங்கள் பற்றிக் கலந்து பேசுவது முதலான வற்றைச் செய்திடுங்கள்;

இதற்குப் பயன்படும் வகையில், 6-1-2013 வேலூரில் வெளியிட்ட இரண்டு நூல்களிலும் - ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும், ஒவ்வொன்றிலும் உடனே 25 படிகளுக் குக் குறையாமல் விலைக்கு வாங்கி, 10-9-2013க்குள் அவற்றை விற்றுப் பரப்புங்கள். இரண்டு நூல்களுக்கும் (50 படிகள்) சேர்த்து, ரூபா 500 விடுத்து உதவுங்கள்.

2. 17-9-2013, செவ்வாய் அன்று, பெரியார் பிறந்த நாளை ஒட்டி, கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் கட்சிக்கொடியை உயர்த்துங்கள். அவரவர் ஊரில் ஒரு பொது இடத்தில் கட்சிக்கொடியை உயர்த்திட ஆவன செய்யுங்கள். இயன்றால், அவரவர் ஊரில் 17-9-2013 அன்று பொதுக் கூட்டம் நடத்துங்கள்.

3. நாம் எல்லோரும் 2007இல் கூடித் திட்டமிட்ட படி, 2009 முதல் - மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் பற்றி இளைஞர்களுக்கும், மாணவர் களுக்கும், கட்சித் தோழர்களுக்கும் அம்பத்தூரில் “பெரியார் ஈ.வெ. இராமசாமி-நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை” வளாகத்தில் உள்ள அறக்கட்டளைக் கட்டடத்தில் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம். அக்கட்டடம் பயிற்சி வகுப்பு நடத்தவும், மாணவர்கள் உண்ணவும், உறங்கவும் போதுமானதாக இல்லை.

எனவே அக்கட்டடத்தின் மேல்தளத்தில், பெரும் பொருள்செலவில், ஒரு மாடிக் கட்டடம் கட்டப்பட்டு, அது ஆயத்தமாகி வருகிறது.

அப்புதிய கட்டடத் திறப்பு விழா, நாம் 7-7-2013இல் கட்சிப் பொதுக்குழுவிலும், அறங்காவலர்கள் கூட்டத் திலும் முடிவு செய்தபடி, வரும் 29-9-2013 ஞாயிறு அன்று சிறப்புற நடைபெற உள்ளது.

அன்கூர்ந்து, நம் தோழர்கள் குடும்பம் குடும்பமாக, 29-9-2013 ஞாயிறு காலை 10 மணிக்குள் அம்பத் தூருக்கு வருகை தந்து, இவ்விழாவைச் சீரோடும் சிறப்போடும் நடத்தித் தர வேண்டுகிறேன்.

இவ்விழாவுக்குரிய நிகழ்ச்சி நிரல் 2013 செப்டம்பர் “சிந்தனையாளன்” இதழில் வெளிவரும். போதிய எண்ணிக்கையில் மா.பெ.பொ.க. பொறுப்பாளர்களுக் கும், அறக்கட்டளையின் அறங்காவலர்கள், ஆலோச னைக்குழு உறுப்பினர்களுக்கும், மற்றும் ஆர்வலர் பெருமக்களுக்கும் 15-9-2013க்குள் விடுத்து வைக்கப் படும்.

தந்தை பெரியாரின் 135ஆவது பிறந்த நாளை முன்வைத்து, நாமும் நம் தமிழ்ப் பெருமக்களும் நம் தலைமுறையிலேயே பெரியார் படைக்க விரும்பிய புதிய தொரு சமுதாயத்தைப் படைத்திட ஆவன எல்லாம் செய்ய உறுதிபூணுவோம்! ஊக்கத்துடன் உழைத்து வெற்றி காண்போம்!

- வே. ஆனைமுத்து

Pin It