பெரியார் இருக்கும் போதும் சரி, அவர் மறைந்த பின்னும் சரி, காவிக் கூட்டங்களால் பெரியாரைக் கடந்து செல்ல முடியவில்லை. பெரியாரின் கொள்கைத் தாக்கம், அதன் வீரியம் இன்றளவும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. பெரியாரின் கொள்கைகளை விமர்சிக்க முடியாதவர்கள் அவர்மீது பொய்சொல்லி அவதூறு வீசுகின்றனர். தந்தை பெரியார், “என் கருத்திற்கான பரப்புரையை என் எதிரிகள் பார்த்துக் கொள்வார்கள்” என்று அன்றே சொல்லி விட்டார்.cartoon on periyar and seemanதிராவிடர்கள் திருடர்கள், திராவிடர்கள் குருடர்கள் , தமிழினத்தைப் போல மானங்கெட்ட இனம் உலகிலேயே இல்லை என்று பேசுகிறார் சீமான். இவை எல்லாம் தமிழர் மீது உள்ள அன்பினாலா சொல்கிறார்? தந்தை பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லி விட்டாராம். குதிக்கிறார் சிமான். ஏன் அப்படிச் சென்னார்? இராமாயணம், மகாபாரதம், வேதபாராயணங்கள் போன்றவை பக்தி இலக்கியங்கள் என்ற பெயரால் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டு, மூடத்தனங்களைத் திணித்துத் தமிழ்மொழியில் எழுதப்பட்டதால் தமிழைக் காட்டு மிராண்டித் தனமாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று அப்படிச் சொன்னார். அதை ஒரு குறியீடாகச் சொல்லியிருக்கிறார் பெரியார். 'தீ பரவட்டும்' என்ற அண்ணாவின் சொற்பொழிவு பெரியாரை உறுதி செய்வதாகத் தானே அமைந்திருக்கிறது. அவைகளை ஒதுக்கிவிட்டு நம்முடைய சங்கத் தமிழ் இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு போன்ற மேல்கணக்கு நூல்களையும், திருக்குறள், நாலடியார் போன்ற கீழ்கணக்கு நூல்களையும் தமிழின் அடையாளமாக மக்கள் முன் கொண்டு வந்தவர்கள் பெரியாரின் வழித் தோன்றல்கள் என்பதை சீமான் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

அடுத்து, தன்னைவிடச் சிறிய வயது பெண்ணை சொத்துக்காகத் திருமணம் செய்தார் பெரியார் என்று சொல்கிறார் அந்தச் சீமான். மறுக்கவில்லை நாம். அதில் ஒரு சமூகப் பார்வை இருந்தது. அதே சமயம் சீமான் தனக்கு மகள் வயது ஒத்த இளைய பெண்ணைத் தானே திருமணம் செய்திருக்கிறார்.

தனிப்பட்ட எவரையும் விமர்சிப்பது நம் நோக்கமல்ல. இருந்தாலும் சீமானின் வக்கிரப் பேச்சு அவருக்கே திரும்பும் என்பதை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

விடுதலைப் புலிகள் கியூபாவில் நடந்த நிகழ்விலும், 'போரும் சமாதானமும்' என்ற ஏட்டிலும் அவர்களின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அவர்கள் தங்களைத் திராவிடராகவே அடையாளப் படுத்தி இருப்பது இந்த சீமான் அறியவில்லை போலும். புலிகளின் தளபதி, தலைவர் பிரபாகரன் அவர்களின் சட்டையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கும் சீமான் திராவிடரைத் திருடர் என்று சொல்வதன் மூலம் புலிகளையும், அவர்களின் தலைவரையும் திருடர்கள் என்று சொல்கிறாரா அந்தச் சீமான்?

ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க போன்ற காவிகளால் என்ன முயன்றாலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை. ஆகவே அந்தக் காவிக்கும்பலின் கையாளாக, அவர்களுக்குப் பிடிக்காத தந்தை பெரியாரை எதிர்க்கும் வேலையை சீமான் சுமந்து கொண்டு இருக்கிறார், காவிச் சங்கிகளுக்கு ஆதரவாக.

ஆகவே, நம் பகை இலக்கு வடக்கே ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க என்றால், தமிழ்நாட்டில் சிங்களச் சீமான் தான்!

- மதிவாணன்