1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 இந்தியா விடுதலை பெற்ற நாளாக அறிவித்து, 66 ஆண்டுகளாக இந்த விழாச் சடங்கினை வெற்றிகரமாக மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்றி வருகின்றன. இந்தியா உண்மையில் விடுதலை; பெற்றதா? பலர் உழைப்பால், தியாகத்தால், அர்ப்பணிப்பால் போராடிப் பெற்ற விடுதலையை இன்றைய ஆட்சியாளர்கள் முழுமையாக மீண்டும் அந்நிய சக்திகளுக்கு அடகு வைக்க விடா முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனரா? என்ற வினாக்கள் அரசியல் ஆய்வு அரங்குகளில் இன்று எழுப்பப்பட்டு வருகின்றன. வரலாற்றின் பக்கங்களைத் திருப்பிப் பார்த்தால் சில பாடங்களை நாம் பெற முடியும்.

இந்தியத் துணைக்கண்டம், ஒரு நாடா அல்லது பல நாடுகளின் பகுதிகளைக் கொண்ட ஒரு இணைவா என்பது பற்றிப் பல கருத்து வினாக்கள் சான்றுகளுடன் அளிக்கப்படுகின்றன. 1942 ïš “வெள்ளையனே வெளியேறு!” என்று முழங்கிய வர்கள், “வெள்ளையனே இங்கே வா, முன்பு போல எல்லா வளங்களையும் எடுத்துச் செல்!” என்று காங்கிரசு தலைமையில் உள்ள மத்திய அரசு முடிவுகளை மேற்கொள்ளும் போது நமக்கு வியப்பாக உள்ளது.

17ஆம் நூற்றாண்டிலேயே முகலாயர்களின் ஆட்சியின் இறுதிக்காலக்கட்டத்தில் டச்சு, போர்ச்சுகீசு, இங்கிலாந்து, பிரான்சு கிழக்கிந்தியக் குழுமங்கள் வணிகம் மேற்கொள்வதற்கு இந்தியத் துணைக்கண்டத்திற்குள் நுழைந்தன. இந்நிகழ்வைப் பேரறிஞர் மார்க்சு, “முகலாயர்களின் பேராதிக்கம் முகலாயப் போர்ப்படைத் தளபதிகளால் உடைக்கப் பட்டது. முகலாயப்படைத் தலைவர்களுடைய செல்வாக்கு மராட்டியர்களால் உடைக்கப்பட்டது. இவ்வாறு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்த எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் போராடிக் கொண்டிருந்த போது இங்கிலாந்து, இந்தியப் பகுதிக்குள் விரைந்தது. இவர்கள் அனைவரையும் அடக்கியது. இருந்தாலும் நாடானது இசுலாமியர்கள், இந்துக்கள் என்று மட்டும் பிளவுபடவில்லை. பல்வேறு இனங்களுக்கு மத்தியில், பல்வேறு சாதிகளுக்கு இடையில் பிளவுபட்டு நின்றது” என்று தெளிவாக விளக்கினார். மேலும் ஆங்கிலேயர்கள் உள்நாட்டில் வளர்ந்து வந்த தொழில்களை உடைத்து தகர்த்தெறிய முற்படுகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

“இந்தியாவை ஆளும் வர்கத்தினர் கைப்பற்ற எண்ணினர். பண வர்க்கத்தினர் கொள்ளை யடிக்க விரும்பினர். ஆலை அதிபர்கள் குறைந்த விலைக்கு விற்க விரும்புகின்றனர்” (The aristocracy wanted to conquer it, the moneyocracy to plunder plunder it, and the millocracy to undersell it) என்று பேரறிஞர் மார்க்சு குறிப்பிட்டது போல இன்றும் விடுதலை இந்தியாவில் சுரண்டல் முறை பொருளாதாரமும், ஏழைகள் ஏழைகளாகத் தொடரும் சமூக நிலையும் புதிய வடிவத்தில் இடம் பெற்று வருவது வெட்கக் கேடான செயலாகும். விடுதலை பெற்றுப் பல பத்து ஆண்டுகள் கடந்தும் இந்தியாவில் வறுமை குறையவில்லை, ஏற்றத்தாழ்வு மேலும் விரிவடைந்து வருகிறது. “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பது போல, இந்தியாவில் கார்களின் எண்ணிக்கை நாள்தோறும் பெருகி வருகின்றது. இதைப் பார்த்து ஆட்சி யாளர்கள் தங்களின் சாதனை என்று பெருமிதம் கொள்கின்றனர். இதைத்தான் வளர்ச்சி என்றும் வாதிடுகின்றனர். ஆக்ஷிமா காட்டே (Akshima Ghate), எஸ்.சுந்தர் (S.Sundar) என்ற இரு ஆய்வாளர்கள் கார்கள் உற்பத்தி பற்றியும், இந்தியாவில் எத்தனை நபர்கள் கார்களைச் சொந்தமாகப் பெற்றுள்ளார்கள் என்பதையும் விளக்கி ஒரு ஆய்வு கட்டுரையை வரைந்துள்ளனர் (Can we reduce the rate of Growth of Car Ownership?, Economic and Political Weekly, June 8, 2013).

இன்றையப் புள்ளிவிவரப்படி, 1000 நபர்களுக்கு 13 நபர்கள் கார்களையும், 84 நபர்கள் இரண்டு சக்கர வாகனங்களையும் சொந்தமாகப் பெற்றுள்ளார்கள். இவற்றில் வங்கியில் கடன் பெற்றவர்களின் எண்ணிக்கையைப் பற்றிக் குறிப்பிடவில்லை. குறிப்பிட்டிருந்தால் நடைபெறும் மோசடிகள் வெளிச்சத்திற்கு வரும். சராசரியாக 1000 நபர்களில் 987 நபர்கள் கார்கள் இல்லாதவர்கள். 916 நபர்கள் இரண்டு சக்கர வாகனம் இல்லாதவர்கள் ஆவர்;. கடந்த அய்ம்பதாண்டுகளில் (1950-2000) இல்லாத அளவிற்குக் கடந்த 10 ஆண்டுகளில் (2001-11) 80 லட்சத்து 50 ஆயிரம் கார்கள் இந்தியாவில் விற்கப் பட்டுள்ளன. இந்தக் கார் உற்பத்தியைப் பெரும் பாலும் பன்னாட்டு நிறுவனங்களே மேற்கொண்டு வருகின்றன.

விற்பனையாளர்கள் தங்கள் விருப்பம் போல விலையைக் கூட்டியும் குறைத்தும் அதிக லாபம் பெற்று வருகின்றனர். காரின் விலை கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. கொள்ளை லாபத்தைப் பன்னாட்டு நிறுவனங்கள் ஈட்டுகின்றன. மேலும், இந்த வாகனங்களுக்குத் தேவையான பெட்ரோலியப் பொருட்கள் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. உள்நாட்டு உற்பத்தி, வெளிநாட்டு இறக்குமதி பெட்ரோலியப் பொருட்கள் சேர்த்து, சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. 2012ஆம் ஆண்டு 20 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு உள்நாட்டுப் பெட்ரோலியப் பொருட்கள் ஆலை களால் சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 85 விழுக்காடு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். இறக்குமதியின் பண மதிப்பு ஆறு லட்சத்து எழுபத்தி இரண்டாயிரம் கோடி ரூபாய்களாகும்.

அந்நியச் செலாவணி பற்றாக்குறையை ஏற் படுத்துபவர்கள் யார்? டாலரின் மதிப்பை உயர்த்தி ரூபாயின் மதிப்பைக் குறைப்பது யார்? உள்நாட்டில் பணமதிப்பைக் குறைத்து விலைவாசி உயர்வை ஏழை மக்களின் தலையில் ஏற்றுவது யார்? ஏறக்குறைய 10 விழுக்காட்டு மக்களுக்காக 90 விழுக்காட்டு மக்களின் தலை மீது கார் சவாரி செய்வது யார்? 50000 மக்கள் வாழும் நகர்களில், ஊர்ப்புறங்களில் 40 விழுக்காட்டினர் சைக்கிள், பாதசாரிகள் என வாகனங்களிலும் பயணம் செய்வார்கள். நகரங்களில் 75 விழுக்காட்டினர் பாதையில் நடந்து, சைக்கிளில் பயணம் மேற் கொள்கின்றனர். இவர்களுக்கு சைக்கிளில் செல்லச் சரியான பாதை, நடைபாதைகள் கிடையாது. ஆனால், புதிய புதிய மேம்பாலங்கள், அகலப் படுத்தப்பட்ட பாதைகளுக்காக, பல ஆயிரம் கோடி ரூபாய் ஆண்டுதோறும் மத்திய-மாநில அரசுகள் செலவிடுகின்றன. எனவே சாலையிலேயே சமத்துவம் குழித்தோண்டிப் புதைக்கப்படுகிறது என்று இந்த ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மூன்றாவது அய்ந்தாண்டுத் திட்டக்காலத்தில் (நேரு-சாஸ்திரி காலம்) மத்திய அரசின் திட்ட அணுகுமுறை அறிக்கையில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நாட்டின் அவசியத் தேவைக்கு மட்டும்தான் உற்பத்தி செய்ய வேண்டும என்றும், இல்லையெனில், பெட்ரோலியப் பொருட்களை இந்தியா பெருமளவில் இறக்குமதி செய்ய நேரிடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது. இதன் காரணமாக தான் கார் உற்பத்திக்கு மத்திய அரசின் அனுமதி யின்றித் தொழில் தொடங்கக் கூடாது என்று தொழிற் கொள்கையில் உறுதியாக அறிவிக்கப்பட்டது.

இந்திரா காந்தியின் செல்லப்பிள்ளை சஞ்சய் காந்தி, மாருதி கார் உற்பத்தியைத் தொடங்குவேன் என்று அறிவித்தார். மாருதி கார் உற்பத்தியைத் தொடங்குவதற்காகத் திரட்டப்பட்ட நிதியில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது எனக் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் எழுப்பினர். மெல்ல மெல்ல மாருதியின் பொதுத் துறைப் பங்குகள் ஜப்பான் தொழில் குழுமத்திற்கு விற்பனை செய்யப்பட்டன. இன்றோ, மாருதி கார் நிறுவனம் பன்னாட்டு நிறுவனத்திடம் இறுதியாகப் போய்ச் சேர்ந்துள்ளது.

இந்திராகாந்தியின் ‘விமான ஓட்டிப்’ பிள்ளை கார் உற்பத்தி தொழிலுக்கு மத்திய அரசின் அனுமதி தேவையில்லை (Delicensing) என்று கூறி, தாத்தா நேருவின் கொள்கையைக் குழித் தோண்டிப் புதைத்தார். இதே பாணியில்தான் மன்மோகன் சிங் அரசு, தொலைத் தொடர்புத் துறையில் 100 விழுக்காடு அந்நிய முதலீடு செய்யலாம் என்று அறிவித் துள்ளது. கார் உற்பத்தி தொழில் பன்னாட்டு நிறுவனங் களுக்கு முழுமையாகத் தாரை வார்க்கப்பட்டதற்கான பயனை இன்று நாம் காண்கிறோம்.

நகர்ப்புறங்களில் வாகனப் புகையினால் நுரையீரல் புற்றுநோய், காச நோய், இருமல்-சளித் தொல்லைகள் பெருகி வருகின்றன என மருத்துவ புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன. ஊர்ப்புறங்களுக்கும் இந்த நோய்கள் படை யெடுக்கின்றன. பணக்காரர்கள் எழுப்பும் புகை மண்டலத்தில் பொசுங்கிப் போகும் ஏழை மக்களைப் பற்றிக் கவலைப்படுகிற தலைவர்கள் யாரும் இன்று இல்லை. கொள்ளை ïலாபத்தில் ïலஞ்சப்பங்கு கேட்கும் தலைவர்கள் கட்சி வேறுபாடின்றி வளர்ந்து வருகின்றனர். 4 வழி 6 வழிச்சாலைகள் அமைத்தோம் என்றும் ஆட்சியா ளர்கள் கூறி வருகின்றனர். உலகிலேயே சாலை விபத்தில் ஆண்டுதோறும் 1 லட்சம் பேர் உயிரிழக ;கின்றனர். பல லட்சம் பேர் கை-கால்களை இழக் கின்றனர். தமிழ்நாட்டில் 2013ஆம் ஆண்டில் இது வரை 14000 பேர் சாலை விபத்துகளில் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவிலேயே அதிக விபத்துகள் நிகழும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறிவருகிறது.

ஈழத்தில் முள்ளிவாய்க்காலில் ஒரு ïலட்சம் தமிழர்கள் சில நாட்களில் கொல்லப்பட்டார்கள் என்றால், ஆண்டுதோறும் சாலைப் போரில் ஒரு ïலட்சம் பேர் உயிர் இழக்கிறார்கள். பணக்காரர்கள், பணச் செருக்கில், சாலை ஓரத்தில் உறங்கும் ஏழைகள் மீது கார் ஓட்டியதால் உயிர் இழக்கும் எண்ணிக்கை இதில் வராது. இவற்றை யெல்லாம் மூடி மறைக்க, காந்தி ஊர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தால் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று ஆளும் கட்சியின் அடிவருடிகள் கூக்குரலிடுகின்றனர். 2004 ஆம் ஆண்டு மதவாத சக்திகளை முறியடிப்போம் என்று அறிவித்து, காங்கிரசு, இடதுசாரிகள், திமுக மற்றும் பல மாநிலக் கட்சிகள் இணைந்து நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஐக்கிய முற் போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்தது. இடது சாரிகளின் வலியுறுத்தலின் காரணமாக ஊர்ப் புறங்களில் வாழும் ஏழைகளுக்கு 100 நாட்கள் வேலை வழங்கும் இத்திட்டம், பொது வேலைத் திட்டத்தில் இணைக்கப்பட்டது. இத்திட்டம் நடை முறைக்கு வந்த பின்பு, ஊர்ப்புறங்களில் வாழும் குடும்பங்கள் பயன் அடைந்துள்ளனர் என்று அண்மையில் வெளி வந்துள்ள தேசிய மாதிரி புள்ளி விவரங்களில் (National Sample Survey) கணிக்கப் பட்டுள்ளது. இந்தப் புள்ளிவிவரங்களில் சில முதன்மையான கருத்துகளும், தரவுகளும் மறைக்கப்படுகின்றன.

75 விழுக்காட்டு மக்கள் இன்றும் ஊர்ப்புறங்களில் தான் வாழ்கின்றனர். இந்தத் திட்டத்தால் தற்காலிக வேலைவாய்ப்புத்தான் (Casual employment) ஏழைகளுக்குக் கிட்டியுள்ளது. ஊர்ப்புறங்களில் ஏற்றத்தாழ்வுகள் பெருகி வருகின்றன. நிரந்தர வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன. வேளாண் துறையில் உற்பத்தியும், அதன் பங்களிப்பும் ஓராண்டில் நாட்டின் மொத்த உற்பத்தியில் ஏறக்குறைய 3.2 விழுக்காடுதான் உள்ளது. 1970-80 ஆண்டுகளில் சராசரியாக ஓராண்டில் வேளாண் உற்பத்தி நாட்டின் மொத்த உற்பத்தியில் 3.8 விழுக்காட்டு அளவில் உயர்ந்து காணப்பட்டது. மக்கள் தொகைப் பெருக்கம், உணவுத் தேவையைப் பன்மடங்கு அதிகரிக்கும். இதற்குரிய நீர்ப்பாசனத் திட்டங்கள், ஊரக வளர்ச்சித் திட்டங்களில் மத்திய அரசு போதிய கவனம் செலுத்தவில்லை. இதற்குரிய சரியான கொள்கைத் திட்டம் மத்திய அரசிடம் இன்றும் இல்லை என்பதையும் பல ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் ஸ்டேன் போர்டு பல்கலைக் கழகத்தில் (Stanford University) வழங்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் (The Stunted Structural Transformation of the Indian Economy by Hans P.Binswanger- Mkhize, EPW, June 29, 2013), “வேளாண் உற்பத்தி வளர்ச்சியின் வேகம் குறைந்து வருகிறது, தேவையான தொழில்நுட்பம் இத்துறைகளுக்கு வழங்கப்படவில்லை. பெண்களுக்கு வேளாண் பயிற்சியும், நில உரிமையும் தருவதற்குப் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. இதன் காரணமாக ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிரந்தர வருமானம் பெருகவில்லை. மேலும், ஊர்ப்புற-நகர்ப்புற உணவு நுகர்வு பாதிக்கப்படும் சூழலும் உள்ளது. எனவே, வேளாண் துறையைப் பாது காக்கும் முற்போக்கான திட்டமும், அதனைத் திறம ;பட நடைமுறைப்படுத்தும் ஆளுமையும் தேவை” என இந்த ஆய்வுக் கட்டுரையில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

கடந்த 22 ஆண்டுகளாக நடைமுறைப்படுத் தப்படும் புதிய பொருளாதாரக் கொள்கை மோசமான தோல்வியைச் சந்தித்து வருகிறது. மேலும், வட அமெரிக்க நாடுகள், அய்ரோப்பிய நாடுகள் கடும் நிதிச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. இந் நிலையில் அந்நிய நாட்டு மூலதனத்தை இந்தியா விற்குத் தேவையான துறைகளில் யார் வழங்கு வார்கள்? எரிகிற வீட்டில் எண்ணெய் வார்ப்பது போல, அந்நிய முதலீட்டைப் பெறுவதற்குப், பல சலுகைகளை மன்மோகன் சிங் அரசு சில நாட் களுக்கு முன்பு வாரி வழங்கியுள்ளது. சந்தையில் சமமான முறையில் போட்டியிடுவதற்குரிய விதி முறைகளைப் பின்பற்றாமல், உள்நாட்டு முதலாளிகளில் ஒரு சிலரை வளர்ப்பதற்காக மக்களின் வரிப்பணத்தை வாரிக் கொடுக்கிறது.

நாட்டின் இயற்கை வளங்களைக் குத்தகை விடு வதில், விதிகள் பின்பற்றப்படுவதில்லை. நேர்மை யாகச் செயல்படும் மத்திய அமைச்சர்கள், அம்பானி சலுகை பெறுவதற்காக மாற்றப்படுகிறார்கள். மத்திய அரசின் தணிக்கைக் குழு உயர் அலுவலர்கள் அம்பானி நிறுவனத்திடம் எரிவாயு ஒப்பந்தம் தொடர்பாக ஆவணங்களைப் பலமுறை கேட்டும் அந்நிறுவனம் கொடுக்க மறுக்கிறது. அரசமைப்புச் சட்ட விதிகளின்படி இயங்கும் தணிக்கை அமைப்பு அவமதிக்கப்படுகிறது. பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜன் குழு கிருஷ்ணா-கோதாவரி நதிகளின் பள்ளத்தாக்கில் அம்பானியின் எரிவாயு தொழிலுக்குச் சலுகை வழங்கி வருவதற்காக, சரியான கொள்கையைப் பரிந்துரைக்கவில்லை. இதனால் ஆண்டு ஒன்றுக்கு அம்பானி குழுமத்திற்கு 26000 கோடி ரூபாய் லாபம் கிட்டுகிறது என்று எரிசக்தித் துறையின் முன்னாள் செயலர் இ.எ.எஸ். சர்மா ஒரு கட்டுரையை (EPW-July 13,2013) எழுதியுள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ் குப்தா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மடல் எழுதி, அதன் கருத்துகளைச் செய்தி ஊடகங்களுக்கும் தெரிவித்துள்ளார். பிரதமரோ, அவரது அலுவலகமோ இதைப்பற்றி வாய் திறக்க வில்லை. அங்கு இங்கு என்று சொல்ல முடியாத அளவிற்கு எல்லாத் துறைகளிலும் ஊழல் தாண்டவ மாடுகிறது. தனியார் துறைக்குச் சலுகைகள் அளிப்ப தற்குக் கண்டனம் தெரிவித்து உச்சநீதிமன்றம் நாள்தோறும் பல தடையாணைகளை வழங்குகிறது. மத்தியப் புலனாய்வுத் துறை தனது நேரடிப் பார்வையில் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அடிமேல் அடி விழுந்தாலும் சிரித்துக் கொண்டே இருக்கும் நகைச்சுவை நடிகர் நிலைக்குத் தாழ்ந்து விட்டார் நமது தலைமை அமைச்சர். அரசாட்சியியலும் , (Governance) அரசமைப்புச் சட்டமும் தோல்வியைச் சந்தித்து வருகின்றன. பெரும்பான்மை மக்களுக்காக மக்களாட்சி என்ற நிலை மாறி, முதலாளிகளுக்கும், 10 விழுக்காட்டு அளவில் உள்ள மக்களுக்காக அரசு இயந்திரம் முழுமையாகச் செயல்படுகிறது.

இதற்குப் பெயர்தான் விடுதலையா? இது போன்று நிகழும் என்பதைத் தனது நுண்ணறிவால் உணர்ந்த தந்தை பெரியார், 1947 ஆகஸ்ட் 15ஆம் நாளைத் துக்க நாள் என்று அறிவித்தார். மீண்டும் காலனி ஆதிக்க ஆட்சியின் அரசியல் கூறுகள் தலை தூக்குகின்றன. எனவே நாம் பெற்றது விடுதலையா?

Pin It