1973-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி, வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் தந்தை பெரியாரின் உயிர் பிரிந்தபோது “பெரியார் தனது சுற்றுப் பயணத்தை நிறுத்திக் கொண்டார்” என இரங்கற்பா எழுதினார் கலைஞர். பெரியாரின் உடல் மட்டும்தான் அப்போது இயக்கத்தை நிறுத்திக் கொண்டதே தவிர, அவரது சிந்தனைகளும் தத்துவங்களும் இன்னமும் சூறாவளி போலச் சுற்றிக் கொண்டே இருக்கிறது. போர்க்களத்தில் எதிரியிடம் இருந்து தற்காத்துக் கொள்ள கேடயமும், எதிரியைத் திருப்பித் தாக்குவதற்கு வாளும் வைத்திருப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டுக்கு களம் எதுவானாலும் கேடயமும் பெரியார்தான், வாளும் பெரியார்தான். பெரியாரை முன்னிறுத்தித்தான் தமிழ்நாட்டின் போராட்டக் களங்கள் வடிவமைக்கப்படுகின்றன. பெரியாரைத் துணைகொண்டுதான் தமிழ்நாட்டின் உரிமைக் குரல்கள் எழுப்பப்படுகின்றன.

நூறாண்டுகளுக்கு முன் பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவிக்கும் போது இங்கு படித்தவர்கள் நூற்றுக்கு 10 பேர் கூட இல்லை. ஆனால் இன்றைக்கு படிக்கச் செல்லாதவர்கள் நூற்றுக்குப் பத்து பேர் கூட இல்லை என்ற தலைகீழ் மாற்றத்தை கண்டிருக்கிறோம். கல்வியில், ஆராய்ச்சியில், கட்டமைப்பு வளர்ச்சியில், பொருளாதார தன்னிறைவில் என ஒவ்வொரு துறையிலும் தன்னிகரில்லாத மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது. வகுப்புரிமையை முன்வைத்து வருண பேதங்களை ஒழித்துக்கட்ட வாழ்நாளெல்லாம் போராடிய பெரியாரும், அவர் உருவாக்கி, அவர் வழியில் நடைபோடும் திராவிட இயக்கமும்தான் தமிழ்நாட்டின் இத்தனித்துவமான வளர்ச்சிக்கு காரணம் என்று பொருளியல் அறிஞர்கள் பலரும் கூறுகிறார்கள். வளர்ச்சி கோட்பாட்டுக்கு நேரெதிரான பழமைவாதிகளின் வீழ்ச்சிக்கும் அவரே காரணமாக இருக்கிறார் என்பதால்தான், மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும் பெரியாரை சீரணிக்கவோ, விழுங்கவோ முடியாமல் அவர் மீது முட்டி முட்டி மோதி மூக்குடைந்து வீழ்ந்து கொண்டிருக்கிறது பார்ப்பனியம்.

சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள், ராணுவம் என இந்த நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்புகள், படைகளை ஒட்டுமொத்தமாகக் கையில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளையும் நாட்டு மக்களையும் நினைத்தபடி பந்தாடும் பாரதிய ஜனதா அரசாலும், அதனை ஆட்டுவிக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸாலும் தொட்டுப் பார்க்கக் கூட துணிவில்லாத பெரும் நெருப்பாக பெரியார் இருக்கிறார். நாடாளுமன்றத்தில் பெரியார் பெயரை எவரேனும் உச்சரித்து விட்டால் இப்போதும் பதற்றமடைந்து அவைக்குறிப்பில் இருந்தே நீக்குகிறார்கள், “பெரியார் சிலையை உடைப்பேன்” என்று ஆணவத்திலோ, அரைவேக்காடு புரிதலிலோ அல்லது அறிவுப் போதாமையிலோ பேசிவிட்டால் ஒருநாள் கூட தாக்குப் பிடிக்கும் துணிச்சல் இருப்பதில்லை, மறுநாளே மண்டியிடுகிறது மதவாதக் கூட்டம். “கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளை கற்பித்தவன் முட்டாள், பரப்புகிறவன் அயோக்கியன், நம்புகிறவன் மடையன்” என்று முழங்கிய பெரியார்தான் எங்கள் வாழ்வின் வெளிச்சத்திற்குக் காரணம் என நெற்றியில் திருநீறும், பட்டையும் இட்ட பழுத்த பக்தர்களும் பேசுவதைப் பார்த்து அஞ்சுகிறது ஆரியக் கூட்டம்.

மறைந்து அரை நூறாண்டுகளுக்குப் பிறகும் இப்படி அச்சுறுத்தும் ஒரு தலைவரை உலகில் வேறெந்த நாட்டிலும் எந்த எதிரிகளும் பெற்றிருக்க மாட்டார்கள். அப்படியொரு தனித்துவம் உலகிலேயே பெரியாருக்கு மட்டும்தான் வாய்த்திருக்கிறது. செத்துப்போய் 50 வருடங்கள் ஆகிவிட்ட கிழவன் எப்படி இந்த ஆரிய கூட்டத்தை அச்சுறுத்துகிறார், பதற்றமடைய வைக்கிறார் என தேடித்தேடிப் படிக்கிறது இளைஞர் கூட்டம். புத்தகக் காட்சிகளில் விற்பனையில் முதலிடம் பிடித்து விடுகிறார். மாதத்திற்கு ஒருமுறையேனும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் வந்து விடுகிறார். பெரியாரை பார்த்தே இராத, பெரியார் மறைந்து 10, 20 வருடங்கள் கழித்துப் பிறந்த ஒரு தலைமுறையின் கையில் தத்துவமாய் தவழ்ந்து கொண்டிருக்கிறார். பெற்றோரை விட பெரியாரை அதிகம் நேசிக்கிற படித்த இளம்பெண்களின் எண்ணிக்கை புற்றீசல் போல அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

மொபைல் போன், வீடியோ கால் வசதிகள், சோதனைக்குழாய் குழந்தை என இன்றைய நவீன உலகில் சர்வ சாதாரணமாகிவிட்ட இவையெல்லாம் ஒருகாலத்தில் வந்துவிடும் என, தான் 80 ஆண்டுகளுக்கு முன்னரே கணித்துக் கூறியவர் பெரியார். அத்தகைய தொலைநோக்கு சிந்தனை கொண்ட பெரியாரின் கணிப்புகளில் ஒன்று மட்டும் பொய்த்து விட்டது. பெரியார் என்ற மூடக்காரன் முன்னொரு காலத்தில் இருந்தான் என்று பேசும் அளவுக்கு 50 வருடங்கள் கழித்து வரும் மக்கள் முன்னேறி இருப்பார்கள் என்றார். ஆனால் ஆரிய அழிவு சக்திகள் நம்முடைய உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்துக் கொண்டிருக்கிற இந்த காலத்தில்தான், பெரியார் வாழ்ந்த காலத்தில் தேவைப்பட்டதை விட அதிகம் தேவைப்படுகிறார். எனவே, பெரியாருடைய எழுத்துக்களும் சிந்தனைகளும் கொள்கைகளும் எவர் தடுத்தாலும் நிற்கப்போவதில்லை. உரிமைகள் மறுக்கப்பட்ட, அடிமை விலங்கிடப்பட்ட கடைசி மனிதன் இருக்கும் வரை பெரியாரின் சிந்தனைகளும், எழுத்துக்களும், பேச்சுக்களும் சுற்றிக் கொண்டே இருக்கும். அதை எவர் தடுத்தும் நிறுத்த முடியாது. அதுவரை பெரியாரின் சுற்றுப்பயணமும் முடியாது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It