250 ஆண்டுகளுக்குமுன் எரிசக்தியால் இயக்கப் படும் இயந்திரங்கள் மூலமான முதலாளிய உற்பத்தி முறை ஏற்பட்டது. பருத்தியை மூலப் பொருளாகக் கொண்ட பஞ்சாலைகள், நூற்பாலைகள், நெசவாலைகள் முதன்மையான தொழிற்சாலைகளாக இருந்தன. அப்போது பிரித்தானியப் பேரரசின் அடிமை நாடாக இந்தியா இருந்தது.

இந்தியாவில் விளைந்த பருத்தியை அடிமாட்டு விலைக்கு வாங்கி, இங்கிலாந்துக்கு எடுத்துச்சென்று ஆலைகளில் துணியாக்கி இந்தியாவுக்குக் கொண்டு வந்து விற்றுக் கொள்ளை இலாபம் ஈட்டினர் ஆங்கி லேய முதலாளிகள். இதனால் இந்தியாவில் கைத் தொழிலாக இருந்த நெசவுத் தொழில் அடியோடு வீழ்ந்தது. இதைக் கண்டித்துக் காந்தியார் அந்நியத் துணி புறக்கணிப்புப் போராட்டத்தை மாபெரும் மக்கள் இயக்க மாக நடத்தினார். அதன்பிறகு ஆங்கிலேய முதலாளிகள் மும்பை, அகமதாபாத், கோவை, மதுரை முதலான ஊர்களில் ஆலைகளை அமைத்து, இந்தியாவில் விளைந்த பருத்தியை இங்கேயே பயன்படுத்தத் தொடங்கினர். பின்னர் இந்திய முதலாளிகளும் இத்தொழிலில் ஈடுபட்டனர்.

ஆனால் இப்போது, தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு சார்ந்த தொழில்களே முதலாளிய உலகில் முதல் இடம்பிடித்துள்ளன. ஆயினும் பருத்தியைச் சார்ந்த தொழிலும் வணிகமும் வலிமை யான ஒரு பிரிவாக இருந்து வருகின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் கடன் சுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட உழவர்களில் பாதிப்பேர் பருத்தி சாகுபடி செய்த உழவர்களேயாவர்.

நடுவண் அரசின் வணிக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அயல் வணிகத்திற்கான மேலாண்மை இயக்குநர் அலுவலகம் 5.3.2012 அன்று பருத்தி ஏற்றுமதிக்குத் தடைவிதிப்பதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதும் நடுவண் வேளாண் அமைச்சர் சரத்பவார், “இந்தத் தடையால், சந்தையில் பருத்தி விலை குறையும்; விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காது; எனவே உடனடியாக இத்தடையை நீக்கிட பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

குசராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியும் இத்தடையை உடனே நீக்க வேண்டும் என்று வலியுறுத் தினார். நாட்டின் மொத்த பருத்தி உற்பத்தியில் 40 விழுக்காடு குசராத்தில் விளைகிறது. தடையை நீக்கக் கோரி குசராத்தில் உள்ள 975 பஞ்சாலைகள் இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்தன. மகாராட்டிரத்தி லிருந்தும், குசராத்திலிருந்தும் காங்கிரசுக் கட்சியின் தலைவர்கள் இரண்டு குழுக்களாகச் சென்று மன்மோகன் சிங்கிடம் இத்தடையை நீக்கக் கோரினர். எனவே மன்மோகன் சிங், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு 9.3.2012 அன்று இத்தடை குறித்து ஆய்வு செய்யும் என்று அறிவித்தார். இதன்படி அமைச்சர்கள் குழு கூடியது. பருத்தி ஏற்றுமதிக்கான தடையை நீக்குவ தாக அறிவித்தது.

மார்ச்சு மாதம் 5ஆம் நாள் விதிக்கப்பட்ட தடை 5 நாள்களுக்குள் நீக்கப்பட்டுவிட்டது. பருத்தி பயிரிட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்க முடியாமலும், குறைந்த விலையில் விற்க வேண்டிய நிலைக்கும் ஆளாக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவா பருத்தி ஏற்றுமதி மீதான தடை நீக்கப்பட்டது. இல்லை! பருத்தி வணி கத்தில் உள்ள பெரும் பணக்காரர்களும், ஆலை முதலா ளிகளும் கொள்ளை இலாபம் பெறுவது தடைபடக் கூடாது என்பதே பருத்தி ஏற்றுமதிக்கான தடை நீக்கப் பட்டதின் உள்நோக்கமாகும். இத்தகைய ஏற்றுமதி-இறக்குமதிகள் தாம், ஹவாலா மோசடிகளுக்கும் சுவிஸ் வங்கி போன்றவற்றில் கள்ளப் பணத்தைக் குவிப் பதற்கும் அச்சாணியாக உள்ளன.

தப்பித்தவறி நடுவண் அரசு சில சமயங்களில் நல்ல முடிவுகளை எடுப்பதுண்டு. அப்படிப்பட்ட நல்ல முடிவுகளில் ஒன்றுதான் பருத்தி ஏற்றுமதி மீதான தடையாகும். வணிக அமைச்சர் ஆனந்த் சர்மா, “பருத்தி வணிகர்கள் வழக்கமான அளவைவிட அதிக மாக ஏற்றுமதி செய்தால், உள்நாட்டுத் தேவையில் தட்டுப்பாடு ஏற்படும். அதன்பிறகு, அதிக விலை கொடுத்து பருத்தியை இறக்குமதி செய்யும் நிலைமைக் குத் தொழில்துறையைத் தள்ள வேண்டுமா? மேலும்இவர்களுக்கு வரும் பருத்தி ஏற்றுமதி ஒப்பந்தக் கடிதங்கள் யாவும், ஏற்கனவே பருத்தியை வாங்கி விட்ட ஆள்களிடமிருந்தே வந்துள்ளன. இது சில அய்யங்களை ஏற்படுத்துகிறது. அதாவது, இந்த மிகச் சில பேரான பருத்தி வணிகர்கள், மேலும் அதிகமாகப் பருத்தியை ஏற்றுமதி செய்து, அதை வெளிநாட்டில் உள்ள தங்கள் கிடங்குகளில் வைத்திருந்து பிறகு இந்தியாவுக்கே அதிக விலைக்கு விற்பனை செய் வார்கள் என்பதைத்தான் அது மறைமுகமாக உணர்த் துகிறது. ஆகவேதான் தடைவிதிக்கும் முடிவை மேற்கொண்டோம்” என்று தெளிவாகக் கூறியுள்ளார். சர்க்கரை ஏற்றுமதி-இறக்குமதியில் இதுபோன்ற தில்லுமுல்லுகள் பல தடவை நடந்துள்ளன.

தென்னிந்திய ஆலைகள் சங்கத்தின் தலைவர், எஸ். தினகரன், “பருத்தி ஏற்றுமதி மீதான தடை, இந்தியாவில் நூற்பாலைகளுக்குத் தேவையான பருத்தி போதுமான அளவிற்குக் கிடைப்பதற்கு உதவும். தடைவிதிக்கப்படுவதற்கு முன் பத்து நாள்களில் தான் பருத்தி ஏற்றுமதிக்கான பெரும்பாலான ஒப்பந்தங்கள் பதிவாகியுள்ளன. இது பல அய்யங்களுக்கு இடமளிப்ப தாக இருக்கிறது. ஜவுளி ஆணையரகம் நாள்தோறும் பருத்தி ஏற்றுமதிக்கான பதிவுகள் குறித்த விவரங்களை இணைய தளத்தில் வெளியிட்டு வந்தது. இடையில் இந்நடைமுறை நிறுத்தப்பட்டது. அந்நிய ஏற்றுமதிக்கான மேலாண்மை இயக்குநரகம் மீண்டும் இந்த நடை முறையைச் செயல்படுத்த வேண்டும். இது பருத்தி சந்தையில் தேவை - அளிப்பு பற்றிய நிலைமையை அறிந்து கொள்ள உதவும்” என்று கூறியுள்ளார்.

விவசாயிகளிடமிருந்து விதையுடன் கூடிய பருத்தி தான் வாங்கப்படுகிறது. பஞ்சாலைகளில், பருத்தியி லிருந்து விதைகள் பிரிக்கப்பட்டு பஞ்சாக்கப்படுகிறது. 170 கிலோ எடை கொண்ட பொதிகளாக (யெடநள) இது விற்கப்படுகிறது. 2010-11ஆம் ஆண்டில் 333 இலட்சம் பொதிகள் உற்பத்தி செய்யப்பட்டன. 2011-12ஆம் ஆண்டில் பருத்தி உற்பத்தி 345 இலட்சம் பொதிகளாக இருக்கும் என்று நடுவண் வேளாண் அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பருத்தி நூற் பாலைகளுக்கான பருத்தித் தேவை 260 இலட்சம் பொதிகள். இதன்படிக் கணக்கிட்டால் தேவைக்குமேல் கூடுதலாக இருப்பது 85 இலட்சம் பொதிகள் மட்டுமே. ஆனால் 2011-12ஆம் நிதி ஆண்டில் இதுவரை 95 இலட்சம் பொதி பருத்தி ஏற்றுமதியாகியுள்ளது. மேலும் 33 இலட்சம் பொதி பருத்தி ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் நிலுவையில் இருப்பதால், பருத்தி ஏற்று மதிக்குத் தடை விதிக்கக் கூடாது என்று சரத்பவாரும், நரேந்திர மோடியும் வாதிடுகின்றனர்.

பருத்தி ஏற்றுமதிக்கான தடையால், விவசாயிகள் குறைந்த விலையில் பருத்தியை விற்க நேரிடும் என்று சரத்பவார் கூறுவது ஒரு மோசடி. பருத்தி அறுவடைக் காலமும், கொள்முதலும் முடிந்துவிட்டன. தற்போது விவசாயிகளிடம் பருத்தி இருப்பு இல்லை. வணிகர்களிடம்தான் இருக்கிறது. வணிகர்களின் குரலாகத்தான் பவாரும் மோடியும் பேசுகின்றனர்.

2010-11ஆம் ஆண்டில் பருத்தி குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.7,000 முதல் ரூ.9,000 வரை விலை கிடைத்தது. ஆனால் 2011-12ஆம் ஆண்டில் விளைச்சல் அதிகம் என்பதைக் காரணமாகக் காட்டி, குவிண்டால் பருத்தி - அதன் தரத்துக்கு ஏற்ப ரூ.3000 முதல் ரூ.5200 வரையில்தான் விவசாயிகளிடம் வணிகர்களால் வாங்கப்பட்டது. வேளாண் அமைச்சர் சரத்பவார், பருத்தி ஏற்றுமதி மீதான தடையை நீக்க வேண்டும் என்பதில் காட்டிய தீவிரமான வேகத்தை பருத்தி கொள்முதல் செய்யப்பட்ட காலத்திலேயே விவசாயிகள் குறைந்த விலையில் பருத்தி விற்க நேரிட்டதைத் தடுப்பதில் - அவர்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்வதில் ஏன் காட்டவில்லை?

இந்த ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்ட 95 இலட்சம் பருத்தி பொதிகளில் 80 இலட்சம் பொதிகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. சீனாவிலும் தனியார் வணிகர்கள்தாம் பருத்தி வணிகத்தில் இருக்கின்றனர். பருத்தி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டதும், சீனா இதைக் கடுமையாகக் கண்டனம் செய்தது. ஏற்றுமதி செய்வதாக ஒப்புக்கொண்ட அளவை ஏற்றுமதி செய்யா விட்டால், அதன் விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும் என்று சீனா எச்சரித்தது. பருத்தி உற்பத்தி யில் உலகில் முதலிடத்தில் உள்ள சீனா தன் நாட்டி லிருந்து பஞ்சை ஏற்றுமதி செய்வதில்லை. மாறாக உலகச் சந்தையில் பருத்தி எவ்வளவு விலை விற் றாலும் இறக்குமதி செய்கிறது. நூல் உற்பத்தி, துணி உற்பத்தி, ஆயத்த ஆடை உற்பத்தி ஆகியவற்றைப் பெருக்கிப் பல இலட்சம் பேருக்கு வேலை தருகிறது. ஆயத்த ஆடை ஏற்றுமதி மூலம் பெருமளவு அன்னியச் செலாவணி ஈட்டுகிறது. அமெரிக்காவுடனான ஏற்றுமதி- இறக்குமதி வணிகத்தில் சீனா அமெரிக்காவை விஞ்சி நிற்கிறது. அமெரிக்கா சீனாவுடன் வணிக நிதிப் பற்றாக் குறை நாடாக இருக்கிறது.

இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி மதிப்பு 200 பில்லியன் டாலர். ஆனால் சீனாவின் ஜவுளி ஏற்றுமதி 1,200 பில்லியன் டாலர் - அதாவது 6 மடங்கு அதிகம். சீனாவின் வணிகத்தில் நாட்டு நலன் முன்னிறுத்தப் பட்டுள்ளது. இந்தியாவிலோ அரசியல்வாதிகள், வணிகர்கள், முதலாளிகள், உயர் அதிகாரிகளின் தன்னலமும் இலாப நோக்கமுமே முன்னிலை வகிக்கின்றன. பஞ்சாக - நூலாக ஏற்றுமதி செய்வதை நிறுத்திவிட்டு, உலக நாடுகளின் நுகர்வியத் தேவைக்கு ஏற்ப பின்னலாடை களை, ஆயத்த ஆடைகளை இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்ய வேண்டும். அதன்வழி இரு பெரும் நன்மைகள் கிட்டும். திரளான மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும். நாட்டுக்கு அதிக அந்நியச் செலாவணியை ஈட்டமுடியும்.

பருத்தி விலை எப்போது ஏறும், எப்போது இறங்கும்? என்று நெசவாளர்கள் அச்சத்திலிருக்கும் படியான நிலை நீடிக்கிறது. இதற்குப் பஞ்சுச் சந்தை யிலும் ஏற்றுமதியிலும் உள்ள ஊகவணிகமே காரண மாகும். எனவே விவசாயிகள் விளைவிக்கும் பருத் திக்கு உரிய விலை கிடைக்கச் செய்வதும், சீரான விலையில் நெசவாளர்களுக்கு நூல் கிடைக்கச் செய் வதும் அரசின் கடமையாகும் என்பதைக் கணக்கிற் கொண்டு ஏறுக்குமாறான பருத்தி ஏற்றுமதிக் கொள் கையைத் தவிர்த்து முறையான கொள்கை வகுக்கப் படுவதுதான் நாட்டுக்கும் நல்லது; உழைக்கும் மக்களுக்கும் பயன் அளிப்பதாக அமையும்.

Pin It