நவதாராளமய பொருளாதார அறிஞரும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான ரகுராம் ராஜன், கடந்த 2008 ஆம் ஆண்டுகாலபொருளாதார மந்த நிலையைமுன்அறிவித்தவர் என்ற வகையில் வங்கிகள், உலக முதலாளிய அரசுகளின் கவனத்தை கடந்த பத்து ஆண்டுகளாக தன் பக்கம் ஈர்த்து வருபவர். உலகநிதி மூலதனத்தை கட்டுப்படுத்துகிற மத்திய வங்கிகள், மூலதன கொள்கையாளர்களின் மத்தியில் பெரும் செல்வாக்குடைய ரகுராம்ராஜனை மோடி அரசு தூக்கி எறிந்ததன் பின்னணியைக் கொண்டு, இந்திய முதலாளிய வர்க்கத்தின் பண்புகளையும், அரசுக்கும் இந்திய பெரு முதலாளியதிற்குமான உறவையும் தெளிவுபடுத்திக் கொள்ள இயலும்.

Raghuram Rajanஉலக முதலாளிய உற்பத்தி முறையின் வளர்ச்சிப் போக்கின் முக்கிய கட்டம் அதன் ஏகாதிபத்திய கட்டமாகும். தேச எல்லைகளை கடந்த மூலதனத்தின் ஏற்றுமதி, நிதி மூலதனம்-வங்கி-தொழிற்துறை மூலதனத்தின் இணைவாக்கம், பல சிறு குழுமங்களை சேர்த்து பெருங்குழுமமாக ஏகபோக முதலாளியமாக உருப்பெறுவது போன்ற முதலாளியப் பொருளாதார கட்டமைவு மாற்றங்களைக் கொண்டு அதன் ஏகாதிபத்திய கட்டத்தை நூற்றாண்டுக்கு முன்பாக முதலாளியத்தின் உச்சகட்டமாக லெனின்வரையறை செய்தார்.

முதலாளியத்தின் உபரி மூலதன முதலீடு அல்லது பொருளாதார உபரியின் மறு உற்பத்திக்கான முதலீடு தங்கு தடையற்ற வகையில் தேக்கமில்லாமல் தொடர்ந்து லாபத்தை குவிக்கிற வகையிலான அதன் இயக்கத்திற்கு ஏதுவாக பல வங்கிகள் உருவாக்கப்பட்டன. 1980 களின் பொருளாதார தேக்கங்களை அடுத்து வங்கிகள், நிதி மூலதன நிறுவனங்களானது உலக முதலாளிய அமைப்புகளின் முதுகெலும்பாக தொழில்படத் தொடங்கியது. அடிப்படையிலேயே முதலாளிய உற்பத்தி முறையானது அதன் உற்பத்தி மட்டத்திலும் விநியோக மட்டத்திலும் அராஜகமான கட்டுப்பாடற்ற பண்புடையது. அதன் விளைவான மிகை உற்பத்தி, சந்தை தேக்கம், பொருளாதார நெருக்கடி நிலைமைகள் தவிர்க்கமுடியாதவைகளாகின. இந்த நெருக்கடியில் இருந்து சமூகத்தை நிரந்தரமாக காக்க வேண்டுமென்றால் முதலாளிய உற்பத்தி முறையை ஒழித்தாக வேண்டும். (சமூகமமாக்கப்பட்ட)முதலாளிய உற்பத்தி முறையை சமூகத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும். உற்பத்தி சக்திகள் அனைத்தும் சமூகத்தின் கையில் வரவேண்டும். அப்போது மட்டுமே திட்டமிடப்பட்ட உற்பத்தி முறைக்கேற்ப உற்பத்தி நிகழ்முறையை ஒழுங்கமைக்க முடியும். மிகை உற்பத்தியை தவிர்க்க இயலும். எங்கெல்ஸ் கூறுவதுபோல முதலாளியத்தின் கட்டுப்பாட்டில் இருந்து சமூகத்தின் கட்டுப்பாட்டிற்கு உற்பத்தி சக்திகள் மாறுகிற கட்டத்தில் நெருப்பை எவ்வாறு நாம் கட்டுப்பாட்டுடன் கையாண்டு வெற்றி பெறுகிறோமோ, மின்சாரத்தை எவ்வாறு தந்திக் கம்பிக்குள் கடத்தி பலன் பெறுகிறோமோ அதுபோல நாம் ஆக்கப்பூர்வமான வகையில் உற்பத்தியை ஒழுங்கமைத்து பலன் பெற முடியும்.

ஆக, முதலாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உற்பத்தி சக்திகள் ஒழிக்கப்படாமல் லாபத்துடன் அந்த அமைப்பை எவ்வாறு இயங்க வைப்பது, மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையில் எழுகிற முரண்பாடுகளை எவ்வாறு கட்டுப்படுத்தி சமூகத்தை அரசு மூலமாக மேலாண்மை செய்வது என்ற கவலைகள் முதலாளிய அறிவுஜீவிகளுக்கு எழுவது இயல்பே! இயற்கை விதியின்படி முதலாளியப் பொருளாதராம் இயங்க இயலாது என அதன் நெருக்கடி நிலைகளே அப்பட்டமாக அறிவித்த நிலையில் இந்த புதைகுழியில் இருந்து எவ்வாறு மீள்வது என்ற அவர்களின் கவலைகளுக்கான இயங்குதளம்தான் பன்னாட்டு நிதியகம்.

உலக முதலீட்டாளர்கள் தங்கு தடையற்ற வகையில் மூலதனத்தை முதலீடு செய்வதற்கும் தங்கு தடையற்ற வகையில் லாபத்தை குவிப்பதற்குமான கொள்கை ரீதியான ஒழுங்கமைப்பை பன்னாட்டு நிதியகம் ஏற்படுத்தித் தருகின்றன. உலக/தேசிய முதலீட்டாளர்களின் மூலதனத்தை அதாவது பற்று-வரவு-கடன் போன்ற நிதி பரிவர்த்தனைகளை கையாள்வது என்ற வகையில், ஒவ்வொரு நாடுகளின் மத்திய வங்கிகள் பன்னாட்டு நிதியகத்தின் துணை அங்கமாக மூலதனத்தை கட்டுப்படுத்துகிற நிறுவனங்களாக உள்ளன.

கடந்த 1990 ஆண்டுகளில் உலக பொருளாதார மந்த கட்டத்தில், தாராளமய, தனியார்மய ஊக்குவிப்புகள் பெரு மந்தத்தில் இருந்து மீள்வதற்கு தற்காலிகமாக உதவின. தொழிலாளர்கள் சட்டத்தில் நெகிழ்வுத்தன்மை புகுத்துவது, ஏற்றுமதி இறக்குமதி சார் கட்டுப்பாடுகளை தளர்த்துவது, தங்கு தடையற்ற மூலதனப் பரவலுக்கு ஏற்ப சந்தைகளை உருவாக்குவது இக்கட்டத்தில் துரிதமாக நடந்தன. உலக மூலதனமானது, வளரும் நாடுகளான மெக்சிகோ, அர்ஜென்டினா மற்றும் ஆசிய நாடுகளில் முதலீடு செய்யப்பட்டு லாபம் ஈட்டின. ஆனால் இன்றோ நிலைமைகள் முற்றிலும் மாறியுள்ளன. கடந்த 25 ஆண்டுகால தாராளமய ஊக்குவிப்புகள் அதன் அந்திமக் கட்டத்தை நெருங்கி வருகிறது. கிரீசில் நெருக்கடி, ஸ்பெயினில் நெருக்கடி, இத்தாலியில் நெருக்கடி என மீண்டும் ஒருபொருளாதார நெருக்கடி நிலைமைகள் உலகை உலுக்கத் தொடங்கியுள்ளது. இந்தப் பின்புலத்தில்தான் நவதாரளமய பொருளாதார அறிவுஜீவியான ராஜனின் கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக மத்திய வங்கிகளும், பன்னாட்டு நிதியகமும் கருதுகின்றன.

ராஜனைப் பொறுத்தவரை மந்தத்திற்கு முந்தைய ஆண்டுகளில் அதாவது 2008 ஆம் ஆண்டுக்கு முன்பான காலகட்டத்தில் ஏற்பட்ட வளர்ச்சிகளானது நீடித்த வளர்ச்சியின் தன்மைகளை அறவே பெறவில்லை என்பதாக உள்ளது. மேலும், மூலதன குவிப்பு நடந்த வேகத்தில், அதன் வளம் பங்கிடப்படவில்லை என்ற உண்மைக்கு அமெரிக்காவின் ஏற்றத்தாழ்வான, சமச்சீரற்ற வளர்ச்சியை உதாரணம் காட்டுகிறார். அடிப்படையில் சோசலிச நாடுகளில்(நடைமுறையில் ஒரு சோசலிச நாடு இல்லை என்றாலும்) மட்டுமே மூலதனம், மக்களுக்கு பங்கிட்டுக் கொடுக்கப்படும் என்ற உண்மையை அறியாதவரல்ல ராஜன். இந்த ஏற்றத்தாழ்வுகள், வேலைவாய்ப்பின்மை மக்களுக்கு நெருக்கடி வழங்கும் என அபாயச் சங்கூதுகிறார். ஆக, உலக முதலீட்டாளர்களின் செல்லப் பிள்ளையான ராஜன், பெரு மந்தத்தில் இருந்து மீள்வதற்கு என்ன யோசனை முன்வைக்கிறார், தொகுத்தோமென்றால்

  • மூலதன குவிப்பு ஒருகட்டத்தில் பங்கிடப்படவேண்டும்(எவ்வாறு?எப்படி? என்ற பதிலுக்குள் அவர் செல்லவில்லை)
  • தொழிற்துறை நாடுகள் மாற்று/புதிய மூலதன சந்தைகளை முயற்சிக்கவேண்டும். ஜெர்மனி, பசுமை திட்டங்களில் அதன் மூலதனத்தை முதலீடு செய்வதை உதராணம் காட்டுகிறார்.
  • வளரும் நாடுகளில் வேகமான வகையில் நகர்மயமாக்கம் நடைபெற்றுவருவதை கவனத்தில் கொள்கையில், உள் கட்டுமானங்களில் வளரும் நாடுகளின் முதலீடுகளின் செல்ல வேண்டும் என அபிப்பிராயப்படுகிறார்.

இன்று மூலதனமும் சந்தையும் ஒன்றுக்கொன்று பிண்ணிப்பினைந்துள்ள நிலையில், ஒரு நாட்டின் பொருளாதார பாதிப்பு மற்றொரு நாட்டில் பொருளாதார விளைவைக் ஏற்படுத்தும் என்ற அடிப்படையில், நாடுகளுக்கு இடையிலானபொருளாதார கூட்டுச்செயல்பாடு மற்றும் நீண்டகால வளர்ச்சிகளை அடியொற்றிய முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்பது ராஜனின் எண்ணமாக உள்ளது. இன்றைய உலகப் பொருளாதாரம் தோய்வை நோக்கியதாக உள்ளது. தொழிற்துறை முதலீடுகள் வேகமாக சரிந்துள்ளன. சேமிப்பு அதிகரித்துள்ள அளவிற்கு முதலீடுகள் அதிகரிக்கவில்லை. லாபத்தை தக்கவைப்பதன் பொருட்டு போனசை நிறுத்துதல், ஊதிய உயர்வை நிறுத்துதல் போன்ற “செலவீனங்களை”நிறுவனங்கள் தடுத்துவருகின்றன. இந்தப் பின்புலத்தில்தான் உலகப் பொருளாதாரத்தையும் இந்தியப் பெரு முதலாளிவர்க்கத்தின் பாத்திரத்தையும் மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

உலக மக்களின் வளர்ச்சிக்காக, அல்லது ஒரு சிறந்த உலகத்தை நோக்கிய வழிகாட்டுதலின் தேவைக்காக பன்னாட்டு நிதியகம், மற்றும் மத்திய வங்கிகள் வேலை செய்வதாக நமது ஆளும்வர்க்க அறிவுஜீவிகள் அறிவித்துவருவார்கள். அதற்கு ராஜனும் விலக்கல்ல. நிலவுகிற அமைப்பை அதேபாணியில் தொடரச்செய்வதற்கும், அதாவது தங்கு தடையற்ற மூலதன விரிவாக்கம், அதற்கேற்ற அரசியல்-சமூக உடன்பாட்டுச் சூழலை தக்கவைப்பதற்குபான பொறுப்பை பன்னாட்டு நிதியகமும், வங்கிகளும் ஏற்றுள்ளன. இந்த அமைப்பின் மீதான உடைப்பை தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில், கம்யூனிஸ்ட்கள் ஏற்படுத்திவிடக்கூடாது என்பது அதன் மரபார்ந்த எச்சரிக்கை உணர்வாக உள்ளது. எனவே பொருளாதார மந்த கட்டத்தைய, மூலதன வெளியேற்றம் அல்லது நிதி நிறுவனங்களின் திவால் நிலைமைகளானது, மக்களை வீதிக்கு போராட இழுத்து வரும், அரசியல் நிலைமைகளே மாறுமென்ற எச்சரிக்கை உணர்வோடு கொள்கைகளை பன்னாட்டு நிதியகம் வகுக்கின்றன, விவாதிக்கின்றன.

அதன் பொருட்டு சில கறாரான ஒழுங்கமைப்புகளையும் மாற்றங்களையும் மேற்கொள்ள முதலாளியத்தை வற்புறுத்துகின்றன, அல்லது ஆலோசனைகள் வழங்குகின்றன. ஆக, இந்த அம்சங்களில், ராஜனைப் பொறுத்தவரை பணவீக்கத்தை 2-4 விழுக்காட்டிற்குள்ளாக கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, வங்கிகளின் நிதி நிலைமைகளை ஆரோக்கிய சூழலில் வைத்திருப்பது, சேமிப்புகளில் மூலதனம் முடங்குவதற்கு மாறாக, முதலீடுகளின் ஊடாக மூலதனம் சுற்றுக்கு வருவது என மூலதனத்தை ஒழுங்கமைப்பாக கையாளவேண்டும் என்பதில் அக்கறையுடையவராக உள்ளார். 2008 ஆம் ஆண்டுகால பொருளாதார மந்த நிலைமைகள் முற்றிலும் நீங்காத நிலையில், நிலவுகிற குறை வளர்ச்சி சூழலில் இந்த அம்சங்களில் கட்டுப்பாட்டில் வைக்கவேண்டுயது அவசியம் எனக் கருதுகிறார்.

இந்த நிலையில், 2013 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்ற நாள்கொண்டு மேற்குறிப்பிட்ட அம்சங்களை நடைமுறையில் அமுல்படுத்துகிற பணியில் ராஜன் வேகம் காட்டுகிறார். இங்குதான் அவருக்கு சிக்கல் எழுகின்றன. ஏனெனில் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் முதலாளியம் போன்று இந்திய பெரு முதலாளிவர்க்கம் புரட்சிகர பண்புடையதாகவோ, ஒழுங்கமைப்பிற்கு உட்பட்டதாகவோ இருக்கவில்லை. அந்நிய மூலதனத்தின் முகவர் முகமும், சுயாதீன தேசிய முதலாளி என்ற முகமும் அதன் இரு பண்புகளாக உள்ளன. தேசிய முதலாளிய சக்திகளுக்கு பாரிய அளவில் நிதி உதவிகளை வழங்குகிற இந்திய அரசு முதலீட்டிற்கான துறைகள், உற்பத்தி நிகழ்முறைகள், உற்பத்தி அளவு போன்ற அம்சங்களில் முற்றிலுமாக தலையீடு செய்வதில்லை. இதன் காரணமாக தேசிய முதலாளிய வர்க்கத்தை இயக்குகிற சக்தி மிகுந்த இயக்குவிசையென்ற முதன்மையான பாத்திரத்தை இந்திய அரசு இழந்தது. விளைவாக, ”வியாபார ஒழுங்கு” என்றால் என்னவென்ற அறியாவண்ணம் லும்பன் முதலாளிய வர்க்கமாக இந்திய பெரு முதலாளி வர்க்கம் வளர்ச்சியுற்றது. பெரும்பாலும் டாட்ட, பிர்லா போன்ற மரபு முதலாளிகள் நீங்கலாக, புதிய புரட்சிகர இடைமட்ட முதலாளிய வர்க்க அலையேதும் வீசாமேலே போய்விட்டது. அதற்கான சூழ்நிலையை அமைத்துத் தருகிற நிலையில் இருந்து இந்திய அரசு பின்வாங்கியது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் கிட்டத்தட்ட இந்தியாவின் பொருளாதார நிலையோடு ஒத்திருந்த தென் கொரியா இன்று வளர்ச்சியில் இந்தியாவில் முந்திவிட்டது. ஜப்பானும் தைவானும் வேகமான வளர்ச்சியை சாதித்தன. இந்நாட்டு அரசுகள், தங்களின் முதலாளிய வர்க்கத்தை ”வியாபார ஒழுங்கிற்குள்ளாக” கொண்டுவந்த காரணத்தால் இந்திய வகையிலான லும்பன் அல்லது உதிரி வளர்ச்சி மாதிரிகள் அங்கு நிகழவில்லை. தீர்மானகரமான வகையில், தொழிற்துறைசார் மூலதன முதலீடு மற்றும் அதன் நுகர்வுக் குறித்த திட்டமிடலையும் ஆலோசனைகளையும் வழங்குகிற பொருளாதார ஆய்வு நிறுவனங்களே இந்தியாவில் இல்லை. பின் எவ்வாறு துறைசார் முதலீட்டில் ஒழுங்குமுறையும் நீடித்த முதலீடும் சாத்தியமாகும்?

இந்தியாவின் அரசியல் விடுதலைக்கு அடுத்த பல பத்தாண்டுகளாக இந்திய பெரு முதலாளிவர்க்கமோ எந்த வியாபார ஒழுங்கிற்குள்ளும் வராத, லும்பன் வளர்ச்சி மாதிரிக்கான நடைமுறை உதாரணமாக இருந்து வருகிறது. நவதாரளமய கட்டத்தில் உலக மூலதனம் இந்திய சந்தையில் ஊடுருவமால் போயிருந்தால், இங்கு எழவிருந்த நெருக்கடிகள் பெரும் அரசியல் திருப்புமனையை நிகழ்த்தியிருக்கும். மாறாக கூர்மை பெற்றிருந்த சமூக முரண்பாடுகளுக்கு தாராளமயமாக்கம் தற்காலிக வடிகாலாக அமைந்தன. ஆனால் அதற்க்கு கொடுக்கப்பட்ட விளையோ பெரிது. குறைவான கூலி, குறைவான செலவில் நீர், நிலம் என பன்னாட்டு மூலதனத்திற்கு உள்நாட்டு உழைப்பாளர்களின் உழைப்பையும் நிலத்தையும் அடமானம் வைக்கப்பட்டது. தற்போது இந்த தாரளமயமாக்கல் யுகமும் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த கட்டத்தில் தான் இந்திய பெரு முதலாளி வர்க்கத்தை ஒழுங்கிற்குள் கொண்டுவருகிற சவுக்கை சொடுக்க வருகிறார் ராஜன். இந்திய வங்கிகளில் சுமார் 8.5 லட்சம் கோடி அளவில் கடன் பெற்றுள்ள இந்திய நிறுவனங்களை, கடனை திருப்பியளிக் கோருகிற நடவடிக்கையை எடுக்கத் தொடங்கினர். இதில் பத்து நிறுவனங்கள் மட்டுமே சுமார் 7 லட்சம் கோடி கடன் பாக்கி வைத்துள்ளன. ராஜன், ஏதோ சமூக அக்கறையின் பேரிலோ, மூலதனத்தை சமமாக சமூகத்திற்கு பங்கிட்டு வழங்குவதற்கோ, தனியார்மய சொத்துடைமையை ஒழித்த, உற்பத்தி சக்திகளை சமூகத்திடம் திருப்பியளிக்கிற அர்த்தத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. மாறாக இந்திய வங்கிகளின் நிதி நிலைமைகளை ஆரோக்கிய சூழலாக மாற்றுகிற நடவடிக்கையிலும், சிறு குறு தொழில் முனைவோருக்கு நிதிக் கடன்களை வழங்குகிற வகையில் கடன் கொள்கையை மாற்றுகிற வகையிலும் பன்னாட்டு நிதியகத்தின் கொள்கைவழி உலக முதலாளிய அமைப்பை காப்பதற்காக இந்நடவடிக்கையை எடுக்கத்தொடங்கினர். குறிப்பாக இந்தியப் பெரு முதலாளிய வர்க்கமானது, ஆபத்தில்லா வகையில் மனை கட்டுமானம், காப்பீடு, தகவல்தொடர்பு போன்ற துறைகளில் முதலீடு செய்வதில் மட்டுமே அதிகே கவனம் செலுத்துவதாகவும், தொழிற்துறையில் முதலீடு செய்வதற்கு தயங்குவதையும் உணர்ந்திருந்தார். தொழிற்துறை முதலீட்டின் சரிவு, வேலைவாய்ப்பின்மைக்கு வித்திடும் என்ற அர்த்தத்தில் இந்திய பெருமுதலாளி வர்க்கத்தின் மீது கிடுக்கிப்பிடி போட்டுவந்தார்.

அதேபோல ரிசர்வ் வங்கி, ஏனைய வங்கிகளுக்கு வழங்குகிற கடனின்(ரெப்போ) வட்டி வீதத்தை 6.5% விழுக்காட்டில் இருந்து உயர்த்தலாமே தவிர குறைக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். ஏனெனில் குறைவான வட்டி வீதத்தால் கடன் வாங்குகிற வீதம் அதிகரிக்கும், வாங்கும் சக்தி பெருகும், சந்தை ஆரோக்கியமடையும் என்ற வாதத்தில் அவர் ஆர்வமுடையாராக இருக்கவில்லை. மாறாக குறைவான வட்டி வீதத்தில் பெறுகிற கடன்கள், சந்தையில் மீண்டும் முதலீடுகளுக்கு செல்வதில்லை, சேமிப்பிலோ இதர வகையிலோ முடங்கிவிடுகிறது என்ற கருத்தில் உறுதியாக இருந்தார்.

ஆக வாரக் கடனை வசூலிப்பதிலும், ரெப்போ வட்டி வீதத்தை அதிகரிப்பதிலும் உறுதியாக இருந்த ராஜனின் மூலதனக் கொள்கையில், இந்திய பெரு முதலாளிவர்க்கமும் அதன் செல்லப்பிள்ளையான அரசும் (ஆர் எஸ் எஸ்) நெருடலாக உணர்ந்ததில் வியப்பொன்றும் இல்லை. வங்கிகளின் கடன் பற்றை துடைத்து விடுவதில் அழுத்தம் கொடுத்த வந்த ராஜன் விளைவு விரைவாகவே மோடி அரசின் நேரடி எதிர்ப்புக்கு உள்ளாகியது. விளைவாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக தொடர்வதில் ஆர்வமின்மையை வெளிப்படுத்தி ராஜனை வெளியேற்றியது மோடி அரசு. இதை மெய்ப்பிக்கும் விதமாக புதிய ஆளுநராக பதவியேற்ற உர்ஜிட் பட்டேல் குழுவோ ரெப்போ வட்டி வீதத்தை திடுமான 0.25 விழுக்காட்டிற்கு குறைத்ததும், வாரக் கடனை வசூலிப்பதில் தீவிரத் தன்மையை வெளிப்படாத நிலையையும் (வசூலிப்பதற்கு மாறாக “வாரக் கடன் வங்கி” என்ற ஏற்பாட்டை மேற்கொள்வதாக தகவல்) கண்டுவருகிறோம்.

சந்தை விதியின்படி பொருளாதாரம் இயங்க வேண்டும் என்ற தூய பொருளியில் விதியில் இருந்து சற்றே மாறுபட்ட ராஜன், பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்துகிற, கண்காணிக்கிற, முதலீடுகளுக்கு நல்ல சூழ்நிலையை உருவாக்குகிற, சமூக முரண்பாடுகளை ஓரளவிற்கு மட்டுப்படுத்துகிற அரசின் தலையீட்டை வற்புறுத்துபவராக உள்ளார். அவ்வகையில் நவதாரளமய-சீர்திருத்த ஜனநாயக அரசமைப்பின் பாலும் அதன் சட்டங்களின்பாலும் நம்பிக்கையுடை ஆளும்வர்க்க அறிவுஜீவியாகத் தெரிகிறார். சொல்லப் போனால் தாராளமய கட்டத்தின் கீன்சாக உள்ளார்.

ராஜனின் அவதானிப்பில் இந்தியப் பொருளாதாரத்திற்கு அல்லது நிலவுகிற இந்திய அரசியல்-பொருளாதார சூழ்நிலைக்கு பாதகம் விளைவிக்கிற அம்சமாக கீழ்வரும் அவதானிப்புகளுக்கு வருவதாகத் தெரிகிறது

  • தாரளமயமாக்கலுக்கு பிந்தைய இந்திய சமூகத்தில் பன்னாட்டு மூலதன ஊடுருவல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி வாய்ப்புகளால் நகர்புற சார்ந்த வளர்ச்சிகள் அதிகரித்தன, இதன் விளைவாக (முறைசாரா)புதிய நடுத்தர வர்க்கத்தின் எழுச்சியானது நகர்மயமாக்கலை மையமாகக் கொண்டு நடந்தேறியது.
  • நிலவுகிற இந்திய பொருளாதார போக்குகளும் கல்வி முறைகளும் இந்த நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கைத் தேவைகளை நிவர்த்தி செய்கிற வகையில் ஒழுங்கமைக்கப்படவில்லை அல்லது வளர்த்துக் கொள்ளவில்லை.
  • சமூக அரசியல் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கிற நிலையிலேயே ஆரோக்கியமான வளர்ச்சி நிலைமைகள் சாத்தியமாகும். ஆக, பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசியல் ஸ்திரத்தன்மை அவசியமான முன் நிபந்தனையாக உள்ளன.

இவையெல்லாம் முதலாளிய அமைப்பை காப்பதன் பற்பட்டதான, அதன் லிபரல் ஜனநாயக அமைப்பு சட்டகத்திற்குள், மூலதனத்துக்கும் உழைப்புக்குமான முரண்பாடுகளை தீர்த்துக்கொள்கிற வகையிலான ராஜனின் சிந்தனைகளாகும். இதுவே இன்றைய உலக முதலாளியத்தின் சிந்தனையுமாக உள்ளன.

லாபகரமான வகையில் தொடர்ச்சியாக மூலதன மறு உற்பத்தியில் ஈடுபட்டுவருகிற முதலாளிய பொருளாதார அமைப்புகளில் எழுகிற பிரச்சனைகளை முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களால் ஒரு போதும் தீர்க்க முடியாது. முன்பு கூறியபடி, நிலவுகிற அமைப்பின் சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்றால் முதலாளியத்திற்கு முடிவு கட்ட வேண்டும். சமூகத் தேவையின் பாற்பட்டதாக அல்லாமல் மதிப்புக்காக, வளத்திற்காக கட்டுப்பாடில்லாத வகையில் உற்பத்தியில் ஈடுபடுகிற முதலாளியத்தின் மூலதன குவித்தலை ஒழித்தால் அன்றி இப்புவியில் புரையோடியுள்ள முதலாளியத்தின் கோரப் பண்புகளில் இருந்து சமூகம் விடுபட இயலாது. புரட்சிகர சக்திகள் அரசியல் அதிகாரத்தை கைப்பாற்றாததுவரை இம்மாற்றம் சாத்தியமில்லை. பொருளாதார நெருக்கடி நிலைமைகளில் எழுகிற முரண்பாட்டுச் சூழலில், இந்த அமைப்புக்கெதிராக மக்களை திரட்டுவதே புரட்சிகர சக்திகளின் முதன்மைக் கடமையாக உள்ளது.

- அருண் நெடுஞ்செழியன்

Pin It