கீற்றில் தேட...

சமத்துவமின்மை குறித்து ஒருவர் பேசும் போது, அதைச் செவிமடுக்கும் எவரும், இயற்கையாக ஒவ் வொரு தனிமனிதரிடமும் வெவ்வேறு அளவில் அமை யப் பெற்றிருப்பதாகக் கருதப்படும் உடல் வலிமை, நாவன்மை, அறிவுத்திறன் ஆகியவை தொடர்பான சமத்துவமின்மையைப் பற்றியதாக அப்பேச்சு இருக் காது என்பதை அறிந்திருப்பார். ஏனெனில் மனிதர் களுக்கிடையேயான சமத்துவமின்மை என்பது செல்வம், வருவாய், வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் அடங்கியிருக்கிறது என்பது திறமையை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பை அளிக்கின்றன. பொருளியல் சார்ந்த சமத்துவமின்மையே நம்முடைய உடல்நலத் தை மட்டுமின்றி, நம் அறிவாற்றலையும் தீர்மானிக் கும் காரணியாக இருக்கிறது. மனிதர்களின் திறமை களுக்கிடையே நிலவும் வேறுபாடுகள், இயற்கையால் விளைந்தவை என்பதைவிட, நம்முடைய சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையினால் ஏற்பட்டவை என் பதே பேருண்மையாகும்.

மனிதன் தவிர்த்த, பிற உயிரினங்களிடையே உள்ள சமத்துவமின்மை, இயற்கையில் ஒரே உயிரினத் திற்குள்ளும், பல்வேறு உயிரினங்களுக்கு இடையே யும் நிகழ்ந்த தனித்த போக்குகள் - திடீர் மாற்றங்கள் ஆகியவற்றின் விளைவாக ஏற்பட்டதாகும். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களால்தான் உயிர்களிடையே வேறுபாடுகள் உண்டாயின. உயிரினங்களுக்கிடையே உள்ள சமத்துவமின்மை - ஓர் எடுத்துக்காட்டாகக் கூறுவதாயின், அவை கூட்டமாக, மந்தையாக வாழும் அளவில் இருக்கிறது. புல்வெளிகள் அல்லது காடுகள் ஆகியவை எந்த அளவுக்கு அருகமைந்துள்ளனவோ அதைப் பொறுத்தும் சமத்துவமின்மை அமைந்திருக் கும். பிற உயிரினங்களிடையிலான சமத்துவமின் மைக்குத் தற்செயல் காரணிகளே அடிப்படையாக உள்ளன.

பிற உயிரினங்களிடையே இயற்கையாக இருப்பது போன்ற சமத்துவமின்மை தொடக்கக் காலத்தில் மனிதர்களிடையிலும் அவர்களையொத்த-அவர்களுக்கு முன்வாழ்ந்த மூதாதையர்களிடமும் (Hominids) இருந் திருக்கும் என்னும் கருத்தை ஏற்பதற்கு நியாயமான காரணிகள் இருக்கின்றன. ஏனெனில் அப்போது இவ் விரு பிரிவினரிடமும் ‘தனிச்சொத்து’ என்பது இல்லை.

மனிதர்கள் தொடக்கக் காலம் பற்றி ஆராய்ந்த மானுடவியலாளர்களின்-குறிப்பாக லீவிஸ் எச். மார்கன் (Lewis H. Morgan) அவர்களின் கருதுகோளின் அடிப்படையில், மார்க்சும் எங்கெல்சும் ‘புராதனப் பொதுவுடைமைச் சமூகம்’ எனும் கோட்பாட்டை உருவாக்கினர். மார்கன் எழுதிய ‘பண்டைய சமுதாயம்’ ((Ancient Society or Researches in the Lines of Human Progress from Savagery through Barbarism to Civilization) எனும் நூல் 1877இல் இலண்டனில் வெளியிடப்பட்டது. எங்கெல்சு எழுதிய “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூல் 1884இல் வெளிவந்தது. இந்நூலில் தான் புராதனப் பொதுவுடைமைச் சமுதாயம் என்பது பற்றி முதன்முதலாக விரிவாக விளக்கப்பட்டது. எங்கெல்சு தன்னுடைய நூலின் துணைத் தலைப் பாக, ‘லீவிஸ் எச். மார்கனின் ஆராய்ச்சி முடிவுகளின் அடியொற்றி’ (In the light of the researches of Lewis H. Morgan) என்று குறிப்பிட்டுள்ளார்.

மார்கனின் ஆராய்ச்சி முடிவுகள் குறித்தும் பல விமர்சனங்கள் எழுந்தன. எது எப்படியிருப்பினும், மார்கன் கூறுகின்ற, காட்டுமிராண்டி நிலை - அநாகரிக நிலை-நாகரிக நிலை எனும் மனித சமூகப் படிமலர்ச்சி நிலைகளின் (பரிணாமம்) துணையில்லாமலேயே, மற்ற உயிரினங்களிடையே இருப்பது போன்ற சமத்துவமின்மை மனித இன வரலாற்றில், புராதனப் பொதுவுடைமைச் சமூகத்திலும் இருந்தது என்ற கருதுகோளைக் கண்டறிய முடியும்.

மனித சமூக வாழ்நிலையால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை என்பதே ஆணிவேர் போன்றதாக இருக்கிறது. இந்த சமத்துவமின்மை குறித்து மார்க்சுக்கு முன்பே அரசியல் பொருளாதார அறிஞர்கள் விளக்கி இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பொருள் உற்பத்திப் பிரிவில், அதில் பயன்படுத்தப்படும் கருவிகளிலும், உழைப்பின் செயல்திறனிலும் (Skills) ஏற்பட்ட நேர்த்தியான வளர்ச்சியின் காரணமாக, தன் தேவைக்கு மேல், ‘உபரி’ (Surplus) அதன் உற்பத்தியாளருக்குக் கிடைத்தது. இந்த உபரிப் பொருளைப் ‘பரிமாற்றம்’ (Exchange) செய்து, வேறொரு உற்பத்தியில் உருவான உபரிப் பொருளைப் பெறும் ‘பண்டமாற்ற’ முறை ஏற்பட்டது. 1776இல் ஆடம்ஸ்மித் எழுதிய ‘நாடுகளின் செலவம்’ என்ற நூலில் (Wealth of Nations) “அவர்கள் தங்களிடம் உபரியாக உள்ள போர்வைகள், கைத்துப்பாக்கி, மது (பிராந்தி) முதலானவற்றைப் பரி மாற்றம் செய்து கொள்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மனித சமூகத்தின் தொடக்கத்தில் - புதிய கற் காலத்தில் கூரிய கல் கருவிகளைத் தயாரிப்பவர், அவரிடம் உபரியாக உள்ள கற்கோடரியைக் கொடுத்து, காட்டில் ‘உணவு சேகரிக்கும்’ (Food Gathering) வாழ்நிலையில் இருந்த காட்டுவாசியிடம் பழங்களை யும் சிறு கனிகளையும் (berries) பண்ட மாற்றாகப் பெற்றார். புதிய கற்காலத்தில் மனிதனின் உற்பத்தி ஆற்றல்கள் வளர்ந்தன. ஆடு, மாடுகளை வளர்க்கும் மேய்ச்சல் சமூகமும், வேளாண் சமூகமும் ஏற்பட்டன. அப்போது, விரைவில் கெட்டுப்போகாத ‘உபரி’ப் பொருள் களைச் சேமிக்கும் நிலை உருவானது. அப்பொருள் களை - அதாவது ‘செல்வத்தை’ (Wealth) ஒருவர் தன்னிடம் பெருமளவில் திரட்டி வைத்துக் கொள்வதற் கான வாய்ப்பு அமைந்தது. இவ்வாறு, ஒவ்வொருவரிட மும் வெவ்வேறு அளவுகளில் பொருள்கள் இருக் கக்கூடிய நிலையால், சமத்துவமின்மை உருவாக்கப் பட்டது. இத்தன்மையிலான சமுதாய நிலையை மானுடவியலாளர்கள் ‘சிக்கலான சமுதாயம்’ என்று கூறுகின்றனர். இச்சமூகத்தில், பொருள்களைச் சேமித்து வைக்கும் வசதிகள், உழைப்புப் பிரிவினை, பண்ட மாற்றுச் செயற்பாடுகள், சமூகத்தில் மனிதர்களிடை யில் உயர்வு-தாழ்வுப் படிநிலைகள் ஆகியன இருந்தன.

உண்மையில், அத்தகைய சமுதாயங்களில் சமத்துவமின்மை தோன்றி, வளர்ந்து, நிலைபெறு வதற்கு நீண்டகாலம் ஆனது. ஏனெனில், பண்ட மாற்றினூடாக இலாபத்தைத் திரட்டல் எனும் பொரு ளியல் போக்கும், சேமிக்க வேண்டும் என்கிற எண் ணம் குறைவாக இருந்தமையும் இதற்குக் காரணி களாக இருந்தன. முன்பே திரட்டப்பட்ட ‘சேமிப்பின் குவிப்பு’ (Accumulation of Stock) உழைப்புப் பிரி வினையை மேலும் ஊக்குவித்து வளர்ச்சியடையச் செய்தது. அதனால் இலாபத்தின் அளவு அதிகரித்தது. எனவே சேமிப்பின் குவிப்பும் அதிகமாயிற்று. இங்கே கூறப்பட்டுள்ள சமத்துவமின்மை முற்றிலும் சந்தை யின் பரிமாற்றத்திலிருந்தும், தனிப்பட்டவர்களின் சேமிப்பிலிருந்தும் தோன்றியது என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுவது ஏற்கத்தக்கது போல் இருக்க லாம். தொல்பொருள் ஆய்வாளர்கள் பண்டைய கலைப் பொருள்களை ஆராய்ந்து இவ்வாறு கூறுகின்றனர். ஆனால் அக்கலைப் பொருள்களுக்கு வரலாற்றில் நிகழ்ந்த வன்முறைக் கதைகளைப் பற்றிச் சொல்லத் தெரியாது. எனவே அறிவார்ந்த வரலாற்றாசிரியர்கள் மேலே குறிப்பிட்டள்ள கூற்றை ஏற்க முடியாது. ஏனெ னில் ‘சொல்வதற்கு வேறொரு கதையை’ வரலாறு தன்னகத்தே கொண்டுள்ளது.

தனிச்சொத்துடைமை எவ்வாறு ஏற்பட்டது என்று மூலதனம் நூலில் மார்க்சு விளக்கியிருக்கிறார். “வெற்றி கள், தோற்ற மனிதர்களை அடிமைகளாக்கல், கொள்ளை, கொலை - சுருக்கமாகச் சொன்னால் வன்முறைதான் உண்மையான வரலாற்றில் தனிச்சொத்துடைமையை உண்டாக்கியது” என்று மார்க்சு அதில் குறிப்பிட் டுள்ளார். மார்க்சு வேறோரிடத்தில், “வன்முறை என்பது தன்னளவில் ஒரு பொருளியல் ஆற்றலாகவும் இருக்கிறது” என்று எழுதியுள்ளார். உற்பத்தியில் தொழில் நுட்பம் வளர வளர வன்முறைக் கருவிகளும் பெருகின என்பது தெளிவாகத் தெரிகிறது. கற்கோடாரியை அடுத்துக் குண்டாந்தடி, ஈட்டி, வில்-அம்பு, இறுதியாகத் துப்பாக்கிகள் வன்முறைக் கருவிகளாகத் தொழில்நுட்ப மேம்பாட்டால் படிப்படியாக வடிவெடுத்தன. இந்த வன்முறைக் கருவிகளைக் கொண்டுதான் ஆண்களும் பெண்களும் அடிமைகளாக்கப்பட்டனர்; நிலங்கள் கைப்பற்றப்பட்டன; குத்தகைத் தொகையும், வரிகளும் திணிக்கப்பட்டன. தனிப்பட்ட வன்முறை, ஒரு சிலரின் செல்வம் பெருகுவதற்கு வழிவகை செய்துள்ளது என்பது உண்மையே!

அரசு என்கிற அமைப்பு ஏற்பட்டபின், அதன் உறுப்பாகப் படை என்பதும் உருவாக்கப்பட்டது. அரசின் படைவலிமைதான் - அதன் வன்முறை தான் எந்தவொரு சமுதாயத்திலும் செல்வம் சிலரிடமே குவிந்திருப்பதற்கு முதன்மையான காரணியாக விளங்குகிறது.

ஒரு குழு அல்லது ஒரு வர்க்கம், தனியார் சொத்து களைத் தன் வலிமையைக் கொண்டு கைப்பற்று வதன் மூலம் அல்லது அரசுப் பொறியமைவைக் (State Machanism) கைப்பற்றுவதன் மூலம் ‘உபரியின்’ பெரும் பகுதியைத் தனதாக்கிக் கொள் கிறது. ஆனால் சிக்கலான சமூக அமைப்பில், ஒரு தனிமனிதன் செய்யும் உற்பத்தியில், அவனது தேவைக் குப் போக எஞ்சிய பகுதிதான் இந்த ‘உபரி’ என்பதான எளிய வடிவத்தில் இப்போது இல்லை.

ஆடம்ஸ்மித் சொன்ன ‘உபரி’ அல்லது ஆல்ஃபிரெட் மார்ஷல் கூறிய ‘நுகர்வோரின் உபரி’ தற்போது வேறுபட்ட சிக்கலான போக்குகளைக் கொண்டதாக இருக்கிறது என்பது ஆய்ந்தறியப்பட்டுள்ளது. வர்க்கச் சமுதாயம் முழுவதிலும், அடிமையின் உழைப்பு அல்லது நிலக்கிழாருக்குக் குடியானவன் தரும் நில வாடகை (rent) அல்லது கூலி உழைப்பின் மூலம் முதலாளி பெறும் இலாபம் (உபரி மதிப்பு -Surplus - Value) ஆகிய உபரிகளைக் கைப்பற்றுவதே ஆளும் வர்க்கத்தின் முதன்மையான நோக்கமாக இருந்து வந்துள்ளது. இத்தகைய உழைப்புச் சுரண்டல் முறை செல்வர்களை - சொத்துடைய வர்க்கத்தை மேலும் பணக்காரர்களாக ஆக்குகிறது. உற்பத்தியில் தன் உழைப்பைச் செலவிடும் உழைப்பாளரை மேலும் ஏழைகளாக்குகிறது. இதன் விளைவாக எந்தவொரு சமுதாயத்திலும் சமத்துவமின்மையின் அளவு அதிக மாகிக் கொண்டே இருக்கிறது.

உற்பத்திச் சக்திகளும், உழைப்பாளர் எண் ணிக்கையும், சுரண்டலின் வடிவங்களும் வழி முறைகளும் வளர்ச்சி அடையும் போது சமுதா யத்தில் பெருமளவிலான சமத்துவமின்மை (ஏற்றத்தாழ்வு) ஏற்படும். இச்சுரண்டல் அமைப் பைப் பாதுகாப்பதற்கும் நீடித்து நிலைத்திருக்கச் செய்வதற்கும் ஏற்றதன்மையிலான சமுதாய நிறுவனங்கள் கட்டமைக்கப்படுகின்றன. குடும்பம் என்பது அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பே ஆகும். தம் குருதியிலிருந்து பிறந்தவர்கள் என்பதால் குழந்தைகளைப் பேணி வளர்ப்பது குடும்பத்தின் இயல்பான கடமையாகிறது. வாரிசு உரிமை என்கிற ஏற்பாட்டின்படி, தனிச் சொத்துடைமையைப் பாதுகாப் பதில் குடும்பம் என்கிற அமைப்பு முதன்மையான பங்காற்றி வந்துள்ளது. தாய் உரிமை சமூகமாயினும், தந்தை உரிமை சமூகமாயினும் வாரிசு உரிமை மூலம் தனிச்சொத்துப் பாதுகாக்கப்பட்டது.

எங்கெல்சு, தாய் உரிமை சமூகத்தின் எச்சங்களை ஆய்வு செய்தார். “புராதன சமுதாயத்திற்குள் உறுப்பி னர்களுக்கிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டபின், தாய்வழி இனக்குழு சமுதாய அமைப்பு சிதைந்தது. அச்சிதைவிலிருந்துதான் தந்தைவழி உரிமைக் குடும்ப அமைப்பு முறை உருவானது” என்று எங்கெல்சு, ‘குடும்பம், தனிச்சொத்து அரசு ஆகியவற் றின் தோற்றம்’ என்ற நூலில் விளக்கியுள்ளார். சொத்து வாரிசு உரிமை, குடும்பத்தில் மகன்கள் அல்லது மூத்த மகனுக்கு மட்டும் அல்லது சொத்தில் பெரும்பகுதி மகன்களுக்கு என்கிற ஆணாதிக்கச் சமுதாய அமைப்பு உலக அளவில் பொதுவிதி என்பதாக ஏற்பட்டது. இவ்வாறு சொத்து, பிரிவினையாகாமல் தடுத்துக் காக்கப்பட்டது.

ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண், ஆணுக்குக் கீழானவள் - அடங்கி நடக்க வேண்டியவள் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டது. எல்லா நாகரிகச் சமுதாயங் களிலும் இதுவே மிகப்பெரிய சமத்துவமின்மையாக இருந்தது. மற்ற சமத்துவமின்மைகளுக்கும் இது ஊற்றுக்கண்ணாக விளங்கியது. இச்சமத்துவமின்மை யின் ஒரு கூறு வெளிப்பார்வைக்குத் தெரியாமல் இருந்து வருகிறது. சமுதாயத்தில் கீழ் அடுக்குகளில் உள்ள ஆண்கள், தங்கள் வர்க்கத்தில் உள்ள பெண்களை விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று எண்ணுகின்ற னர். இத்தகைய சிந்தனைப் போக்கு, ஒட்டுமொத்த சமூகத்திலும் சமத்துவமின்மை என்னும் கருத்தாக்கம் ஒத்திசைவாகச் செயல்பட உதவுகிறது. இவ்வாறு சமத்துவமின்மைக் கோட்பாடு கீழ் அடுக்கில் உள்ள ஆண்களுக்கும் பயன்தருவதாக இருப்பதால், ஆணா திக்கம், எல்லா வகையான பொருளுற்பத்தி முறை சமுதாயங்களிலும் நீடித்து வந்திருக்கிறது.

வாரிசுரிமை கொண்ட குடும்பம் என்கிற அலகு அமைந்திராத சில சமூகக் குழுக்கள் இருக்கின்றன. பழங்குடியினர் இதற்குச் சரியான எடுத்துக்காட்டாவர். சில சமயம் ‘மரபினம்’ (races - நவீன காலத்தில் வெள்ளையர் இனம்) போன்றவையும் இதில் அடங்கும். இக்குழுக்கள், சமூக மேலாண்மைக் கட்டமைப்பையும், சொத்துகளையும் அடுத்த தலைமுறைகளுக்கு எவ்வாறு கையளித்தன? புகழ்பெற்ற ஆப்பிரிக்க வரலாற்றா சிரியரான இபன் கால்டுன் ((Ibn Khaldun) “நாம் அனைவரும் ஒத்திசைவான உணர்வுடையவர்கள் என்கிற உளவியலைப் பயன்படுத்திப் பழங்குடியினர் சமூகத்தில் மேலாண்மை நிலைநாட்டி வரப்பெற்றது” என்று கூறுகிறார்.

‘சாதி’ (Caste) என்பதும் இத்தகைய ஒரு சமூகக் குழுவாகவே இருக்கிறது. சாதி, இந்தியா வுக்கு மட்டுமே உரிய தனித்தன்மையான அமைப்பு ஆகும். சாதியமைப்புப் பற்றிப் பலரும் நிறைய எழுதியிருப்பதால், இங்கு அதைப்பற்றி விரிவாக எழுத வேண்டியதில்லை. ஆயினும் சுருக்கமாக அதைப்பற்றிக் கூறவேண்டியுள்ளது. இந்திய வரலாற்றில் சமத்துவமின்மையை நீடிக்கச் செய்ததில் சாதி முதல் பெருங்காரணியாக இருந்து வருகிறது. ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பல்வேறு குழுக்களாக - சாதிகளாகப் பிளவு படுத்தி வைப்பதுதான் அதன் முதன்மையான பணியாகும். அகமண முறை மூலம்தான் ஒரு சாதியின் கட்டமைப்புநெக்குவிடாமல் காப்பாற்றப்படுகிறது. ஒவ்வொரு சாதிக்கும் விதிக்கப்பட்ட (சாத்திரப்படி) மரபான ஒரு தொழில் இருக் கிறது. சாதிகள் படிநிலை வரிசையில் - ஏணிப் படிகள் போல் அமைக்கப்பட்டுள்ளன.

வேத-சாத்திர மரபுப்படி சாதிகள் நால்வருணங்களுக்குள் அடக்கப்பட்டுள்ளன. நால்வருணத்திற்குள் சேராத - ஆனால் நான்கு வருணங்களுக்கும் கீழான நிலையில் தாழ்த்தப்பட்டவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். அரசமைப்புச் சட்டத்தில் இவர்கள் ‘பட்டியல் சாதியினர்’ எனக் குறிக்கப்பட்டுள்ளனர். புனிதம் அல்லது தீட்டு (Purity or Pollution) என்கிற கற்பனையான ஓர் அளவுகோலைக் கொண்டு ஒவ்வொரு சாதியின் படி நிலை வரிசை தீர்மானிக்கப்படுகிறது. சாதிக் கட்டுப் பாட்டு விதிகளை - பழக்கவழக்கங்களைப் பின்பற்ற வேண்டியது ஒரு மதக்கடமை என்று ஆக்கப்பட்டுள்ளது. இத்தகைய கூறுகளைக் கொண்டிருப்ப தால்தான் சாதி என்பது இந்தியாவுக்கு மட்டுமே உரித் தான ஓர் அமைப்பாக இருந்து வருகிறது.

நம்முடைய தற்போதைய நோக்கத்தில், சாதி இரண்டு வழிகளில் மிக முதன்மையானதாக இருக் கிறது. முதலாவதாக, சாதி, சமூகத்தில் ஏற்றத்தாழ் வான படிநிலையைக் கட்டிக் காப்பாற்றுகிறது. மேலும் இந்தச் சமத்துவமின்மையைப் போற்றுகிறது. இரண் டாவதாக, சாதிக்குத் திட்டவட்டமான பொருளாதாரக் குறிக்கோளும் உள்ளது. அதனால், கீழ்ச்சாதியினர் மேல்சாதியினருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. கீழ்ச்சாதியினர் மீதான ஒடுக்கு முறைகளையும், சுரண்டல்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மேல்சாதியினர் எண்ணுகின்றனர். நிலமற்ற வேளாண் தொழிலாளர்களில் தாழ்த்தப் பட்டோர் தான் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர்.

இதனால், புனிதம்-தீட்டு எனும் கோட்பாடுதான் சாதி அமைப்பின் அடித்தளமாக இருக்கிறது என்றும் பொருளாதாரக் காரணி இரண்டாவது துணைக் காரணியாக இருக்கிறது என்றும் லூயிஸ் டுமாண்ட் (Louis Dumont) கூறுவதை ஏற்கமுடியாது. சாதி அமைப்பின் காரணமாகவே, ஆளும் வகுப்பினரும், சொத்துடைய வர்க்கத்தினரும் பொருளாதாரப் பயன் களைப் பெற்று வருகின்றனர் என்கிற உண்மையை லூயிஸ் டுமாண்ட் காணத் தவறிவிட்டார். மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக உள்ள தாழ்த் தப்பட்ட வகுப்பினர் மற்றும் கீழ்ச்சாதியினர்க்கு (சூத்திரர்) உரிய கூலி தரப்படாததால்தான் ஆளும் வர்க்கமாகவும், பண்ணையார்களாகவும் இருப்பவர் களுக்கு ‘கூலிதரப்படாத உழைப்பு’ இலாபமாகக் கிடைக் கிறது. இந்த ஆளும் வகுப்பினரில், இந்து அல்லாத பிற மதத்தவரோ அல்லது கீழ்ச்சாதியைச் சார்ந்தவரோ இருந்தாலும் இதே பொருளாதார விதிதான் - கூலி தரப்படாத உழைப்பே உபரி மதிப்பாகி இலாப வடிவம் பெறுதல் என்பது மாறாமல் செயல்படுகிறது. சாதிப் படிநிலையில் உயர்ந்த இடத்தில் இருப்பதாலேயே பார்ப்பனர்களுக்கு மட்டும் இப்பொருளதார விதி வேறு வகையில் செயல்பட்டது.

குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் பிரித்தானிய ஆட்சிக்காலங்களில் சிறப்புரிமை களைப் பெற்றிருந்த (மேல்சாதி) மேட்டுக்குடியினர் பெரும் பயன் அடைந்தனர். மத்திய காலத்தில், சாதி அமைப்பில் உள்ள சமத்துவமின்மைக்கு எதிராக ஒரு முசுலீம் குரல்கூட எழாததற்கு இதுவும் ஒரு காரண மாகும் - இசுலாமிய மத அமைப்பில் சாதி அமைப் புக்கு இடமில்லாத போதிலும்கூட! அதேபோல் பிரித்தா னிய ஆட்சியும் இதில் அக்கறை காட்டவில்லை.

1789இல் பிரெஞ்சுப் புரட்சியின் போது ‘சமத்து வம்’ என்ற உரிமை முழக்கம் எழுப்பப்பட்டது. அதற்கு முன்பிருந்த - ஏடறிந்த எல்லா நாகரிகங்களின் (Civilisations) காலங்களிலும் சமத்துவம் என்ற கோட்பாடு ஆட்சிக்கு எதிரானதாகவே கருதப்பட்டது. அதேபோன்று எல்லா மதங்களும் சமத்துவம் எனும் கோட்பாட்டைக் கண்டித்தன. ஆனால் பிரெஞ்சுப் புரட்சியில் எழுப்பப்பட்ட சமத்துவக் கோரிக்கை முழக்கத்தில் - சட்டத்தின் முன் அனைவரும் சமம்; ஒருவர் மீது ஆண்டை அல்லது எசமான் செலுத்தும் ஆதிக்கத்திலிருந்து சுதந்தரம், திருமணம் மற்றும் பரம்பரைச் சொத்தில் உரிமை ஆகியவற்றில் பெண் களுக்குச் சமஉரிமை ஆகியன அடங்கியிருந்தன. சமத்துவ முழக்கம் சமுதாயத்தில் நிலைகொண்டது. ஆனால் இந்த முழக்கத்தில் பொருளாதாரச் சமத்துவம் சேர்க்கப்படவில்லை. பொருளாதாரச் சமத்துவம் இல்லாத சமத்துவக் கோட்பாடு முதலாளியத்துக்கு ஒத்திசைவானதாக இருக்கிறது. இப்படிச் சொல்வதால், பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாகச் சட்ட ஏற்பிசை வுடன் உண்டான சமூக சமத்துவத்தின் முதன்மை யைக் குறைத்து மதிப்பிடுவதாகக் கருதக்கூடாது.

இந்தியாவில், சமூகச் சமத்துவக் கோட்பாடு வளர்ச்சி பெற்றதற்கு, இராசாராம் மோகன்ராய் காலம் முதல் பல சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பங்களிப்பு முகாமையானதாகும். இச்சீர்திருத்தம் முதலில் சில துறைகளில் மட்டுமே தொடங்கப்பட்டது. பின்னர் பல துறைகளுக்கும் பரவியது. 1931ஆம் ஆண்டு கராச்சி யில் நடைபெற்ற காங்கிரசுக் கட்சியின் மாநாட்டில் அடிப்படை உரிமைகள் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம், 1949-இல் எழுதி முடிக்கப்பட்ட அரச மைப்புச் சட்டம், 1955-56இல் இயற்றப்பட்ட இந்துச் சட்டம் முதலானவை சமத்துவத்தைப் பறைசாற்று கின்றன. இச்சட்டங்களில் உள்ள மனித உரிமைக் காப்புக் கூறுகள் உலக அளவில் போற்றப்படுகின்றன. சுதந்தரம் பெற்ற பிறகு, பட்டியல் சாதியினர், பழங் குடியினர் ஆகியோர் சமத்துவம் பெறுவதற்காக எடுக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் குறிப்பிடத்தக்கனவாகும். இதனால், இவர்கள் மீதான சாதி அமைப்பின் தாக்குதல் ஓரளவு குறைத்துள்ளது.

சோசலிச சமுதாயத்தில்கூட (கம்யூனிசத்திற்கு முன்னைய கட்டடம்) சில சமத்துவமின்மைகள் நீடிக் கும் என்று நடைமுறை சார்ந்த தொலைநோக்கோடு மார்க்சு கூறியிருக்கிறார். சோசலிச சமுதாயத்தில், ஒருவர் எந்த அளவுக்கு உழைப்பை அளிக்கிறாரோ, அதன் அடிப்படையில் அவருக்கு ஊதியம் வழங்கப் படும். வெவ்வேறு ஆள்கள் அளிக்கும் உழைப்பில் வேறுபாடு இருப்பதால், அவர்களின் ஊதியத்திலும் சமத்துவமின்மை இருக்கும். ஆயினும் எல்லோரு டைய பொருளாதாரத் தேவைகளையும் கலாச்சார விழைவுகளையும் நிறைவு செய்கின்ற தன்மையில் அச்சமூகத்தின் பொருளாதார முறை மாற்றி அமைக் கப்பட வேண்டும்.

1965-77 காலகட்டத்தில் சீனாவில் கலாச்சாரப் புரட்சி நடைபெற்றது. அப்போது, வறுமையிலும் சமத்துவமின்மையைப் பேணுதல் என்கிற கோட்பாடு சரியானது என்கிற கருத்து போற்றப்பட்டது. ஆனால் இக்கோட்பாடு நீடித்து நிற்கவில்லை. சமூகத்தில் பெருமளவில் சமத்துவத்தைக் கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு முறைமையும் சமூகத்தில் அடித்தட்டில் உள்ளவர்களின் - ஏழை களின் உண்மையான வருவாயை உயர்த்துவதாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் தற்போது சீனாவில் நடப்பில் உள்ள ‘சரக்குச் சோசலிசம்’ (Commodity Socialism) என்பதை நியாயப்படுத்த முடியும். ஆனால், சீனாவில் (மாசேதுங் மறைவுக்குப் பின்) அரசின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் தன்மை யிலான முதலாளித்துவப் பொருளாதாரம் (Capitalist Economy) செயல்படத் தொடங்கிய பிறகு, சொத்தி லும் வருவாயிலும் மக்களிடையே சமத்துவமின்மை அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதைக் கம்யூ னிஸ்ட் கட்சியின்கீழ் உள்ள அரசே கூறுகிறது.

நீண்டகாலமாக முதலாளித்துவ நாடுகளாக இருப்பவற்றிலும் (மேலை அய்ரோப்பிய நாடுகள்) வளர்ச்சியின் பயன்கள் கீழ்த்தட்டு மக்களுக்கும் - மழைநீர் நிலத்தில் சுவறுதல்போல், தானாகவே போய்ச் சேரும் என்று கூறியது நடக்கவில்லை. இந்தியாவில் 1947இல் ஓராண்டில் சராசரியில் ஒருவருக்கு 150 கிலோ உணவு தானியம் கிடைத்தது. இது 1980இல் 180 கிலோவாக உயர்ந்தது. ஆனால் 2008இல் 157 கிலோவாகக் குறைந்தது. இந்தியாவில் 55 விழுக்காடு மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (GDP) வேளாண்மையின் பங்கு 20 விழுக்காட்டுக்கும் குறை வாக இருக்கிறது. இந்தியாவில் பெரும் எண்ணிக்கை யினராக உள்ள ஏழைகளின் (கீழ்ச்சாதி மக்களின்) வாழ்க்கைத் தரம் உயரவில்லை. சமத்துவமின்மை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. எனவே சமத்துவத் துக்கான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை.

(குறிப்பு : ‘சோசியல் சயின்டிஸ்ட்’ (Social Scientist) 2015 சனவரி-பிப்ரவரி இதழில் ‘In Equalities : A Social History’ எனும் தலைப்பில் இந்தியாவின் தலைசிறந்த மார்க்சிய அறிஞர்களில் ஒருவராகத் திகழும் இர்பான் ஹபீப் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். தமிழாக்கம் : க. முகிலன்).