“இணைப்புக்கு முன்” அழகிய ரோஜாப் பூக்களுக் கும் ஆப்பிள் பழங்களுக்கும் பனிப் பொழிவுகளுக்கும் பேர்போன காசுமீரம் இப்போது கடுமையான பூசலின் களமாகியுள்ளது. எது மெய்? எது பொய்? என்று பிரித் தறிய முடியாத அளவுக்கு காசுமீரம் பற்றிய செய்திகளில் பெருத்த முரண்பாடுகள் உள்ளன. காசுமீரத்துடன் வெளியுலகத் தொடர்பறுந்து கிடக்கும் நிகழ்காலத்திய செய்திகளில் மட்டுமல்லாமல், யாவருமறிந்த கடந்த காலத்திய வரலாற்றுச் செய்திகளிலும் பக்கச்சார்பும் பார்வைக் குழப்பமும் மிகுந்துள்ளன. எனவே முதலில் நாம் செய்ய வேண்டியது நடந்தது என்ன? என்பதை உண்மையாக அறிந்து, விருப்புவெறுப்பின்றி மதிப்பீடு செய்வதுதான். இந்த நோக்கில் காசுமீரத்தின் வரலாற்று வழித்தடத்தில் ஒரு விரைவுப் பயணம் செய்து பார்ப்போம்.

பிரித்தானியர் ஆட்சியில், அதாவது 1947 ஆகஸ்டு 15க்கு முன், இந்தியாவிலிருந்த பெரிய சமஸ்தானங்களில் சம்மு-காசுமீரும் ஒன்று. மக்கள்தொகையில் 77 விழுக்காடு இசுலாமியர் என்றாலும் மகாராசா அரிசிங் ஓர் இந்து மன்னர்.

நாட்டை இந்தியா என்றும் பாகிஸ்தான் என்றும் இரண்டாகப் பிரித்து பிரித்தானியரிடமிருந்து அதிகாரக் கைமாற்றம் நிகழ்ந்த போது, சமஸ்தானங்கள் இந்தியா வுடனோ பாகிஸ்தானுடனோ இணையலாம், அல்லது எதனோடும் சேராமல் தனித்தும் நீடிக்கலாம் என்று ஒப்புக்கொள்ளப் பட்டிருந்தது.

காசுமீரம் இரு நாடுகளுக் கிடையே எல்லையில் அமைந்திருந்தது. அது சிறிது காலம் தனித்தே இருந்து வந்தது. பிரித்தானிய இந்தியாவில் காலனியாதிக்கத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்கள் சமஸ்தானங்களிலும் எதிரொலித் தன. காலனியா திக்கத்துக்கு எதிராக மட்டுமல்லாமல், மன்ன ராட்சிக்கு எதிராகவும் சனநாயகம் கோரியும் இந்தப் போராட்டங்கள் வலுத்தன. குறிப்பாக 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது சமஸ்தானங்கள் உட்பட இந்தியா வெங்கும் பேரெழுச்சி தோன்றிற்று. காசுமீரத்திலும் இதே நிலைதான்!

சமஸ்தானங்களை இந்தியக் குடையின் கீழ் கொண்டுவர இந்திய அரசு அனைத்து வழிகளையும் கையாண்டது. இந்த முயற்சிகளின் மூலவராக இருந்தவர் அன்றைய உள்துறை அமைச்சரும் துணைப் பிரதமரு மான வல்லபாய் பட்டேல். கம்யூனிஸ்டுகள் தலைமையில் நடைபெற்ற வீரத்தெலங்கானா ஆய்தப் போராட்டம்தான் ஐதராபாத் நைஜாம் மன்னனைப் பணிய வைத்தது.

குசராத் ஓரத்தில் ஜுனாகாத் சமஸ்தானத்தை அதன் முஸ்லிம் மன்னர் பாகிஸ்தானுடன் இணைக்க விரும்பிய போதிலும் மக்களில் பெரும்பாலார் இந்துக்கள் என்ற அடிப்படையில் ஜுனாகாத் இந்தியாவுடன் இணைந்தது. இதே அடிப்படையில் இஸ்லாமியரைப் பெரும்பான்மை யாகக் கொண்ட எல்லை மாநிலம் என்ற முறையில் ஜம்மு-காசுமீரம் பாகிஸ்தானில் சேர்ந்திருக்கும். ஆனால் அம்மக்களை வழிநடத்திய ஷேக் அப்துல்லா தலைமை யிலான தேசிய மாநாட்டுக் கட்சி மதச் சார்பின்மையை வலியுறுத்தியது. காஷ்மீர் மக்களும் மதச் சார்பின்மையில் நாட்டம் கொண்டிருந்தனர்.

பிரித்தானிய வல்லாதிக்கத்துக்கும் முடியாட்சிக்கும் பிரபுத்துவத்துக்கும் எதிரான காசுமீர மக்களின் போராட் டத்தில் முகிழ்த்ததே காசுமீரத் தேசியம். இராசபுத்திர டோக்ரா அரச வம்சத்தைச் சேர்ந்த மன்னர் அரிசிங்கின் ஆட்சி ஒளிவுமறைவற்ற இந்து ஆளுகையாகவே இருந்தது. குறிப்பாக காசுமீர் பள்ளத்தாக்கின் அடித்தட்டு மக்களான இசுலாமியரை அடக்கி ஒடுக்குவதாக இருந்தது.

மன்னராட்சிக்கு எதிரான போராட்டங்களின் உச்ச மாக 1931ஆம் ஆண்டு காசுமீரில் ஒரு பேரெழுச்சி உருவாயிற்று. புனித குரானை அவமதித்தது தொடர்பான சிக்கலும், இது குறித்து முறையிட்டவர்களைப் பணி நீக்கம் செய்ததும் இந்த எழுச்சிக்குத் தூண்டுதலாக அமைந்தன. இந்து மகாராஜாவைத் தூக்கி யெறியும் படி மக்களைத் தூண்டியதாக அப்துல் காதர் என்ற இளைஞரைத் தளைப்படுத்தி சிறிநகர் சிறையில் அவர் மீது வழக்கு விசாரணை நடைபெற்றது. இதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது 1931 ஜூலை 13ஆம் நாள் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் உயிரிழந் தனர். இன்றளவும் காசுமீரப் பள்ளத்தாக்கு எங்கிலும் ஜூலை 13 ஈகியர் நாள் (தியாகிகள் தினம்) என்று கொண் டாடப்படுகிறது.

முஸ்லிம் மாநாட்டுக் கட்சியிலிருந்து 1938ஆம் ஆண்டு ஷேக் அப்துல்லா தலைமையில் பிரிந்து வந்தவர்கள் அனைத்து ஜம்மு-காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சியை நிறுவினர். இக்கட்சி 1931 கிளர்ச்சியை அடக்குமுறையாளருக்கு எதிரான அடக்கப் பட்டோரின் போர் என வரையறுத்தது:

நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டுவதே இப்போரின் குறிக்கோள். ஆளுவோர் முஸ்லீம்களாக இருந்து ஆளப்படுவோர் இந்துக்களாக இருந்திருந்தாலும் இதே போலத்தான் நிகழ்ந்திருக்கும்.

காசுமீரத் தேசியத்துக்குப் போட்டியாக சாதி மத அரசியல் இயக்கங்களை மன்னர் அரிசிங் வரவேற்று ஊக்கப்படுத்தினார். காசுமீர பண்டித மாநாட்டுக் கட்சி, ஜம்மு பகுதியில் இந்து சபா, சீக்கியர்களுக்கான சிரோன் மணி கல்சா தர்பார் ஆகிய அமைப்புகள் தொடங்கப் பெற்றன.

ஷேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி இந்திய தேசியக் காங்கிரசால் அமைக் கப்பட்ட அனைத்திந்திய சமஸ்தான மக்கள் மாநாட்டிலும் இணைந்து கொண்டது. காசுமீரப் பள்ளத்தாக்கின் முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறைக்கு இஸ்லாமிய இறையரசைத் தீர்வாக முன்வைத்த அனைத்து சம்மு-காசுமீர் முஸ்லீம் மாநாட்டுக் கட்சிக்கு மாறாக, தேசிய மாநாட்டுக் கட்சியோ ஜாகீர்தார்களின் நிலவுடைமையை ஒழித்து சமூகப் பொருளியல் விடுதலை பெறுவதே குறிக்கோள் என்று அறிவித்தது.

உலக அரங்கில் ஏற்பட்ட நிகழ்ச்சிப்போக்குகளிலும் தேசிய மாநாட்டுக் கட்சி கவனம் செலுத்தி, இரண்டாம் உலகப் போரில் சோவியத்து செஞ்சேனையின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்தது.

தேசிய மாநாட்டுக் கட்சி 1944ஆம் ஆண்டு புதிய காசுமீரம் (நயா காஷ்மீர்) என்ற கொள்கை அறிக்கையை வெளியிட்டது. இந்தியப் பிரிவினை நடந்தாலும் நடக்காவிட்டாலும் காசுமீரம் சுதந்திர அரசாகத் திகழும் என்று இந்த அறிக்கை பறைசாற்றியது. கொள்கை அறிக்கைக்கான முன்னுரையில் ஷேக் அப்துல்லா சோசலிச சோவியத்து ஒன்றியத்தைப் போற்றினார்:

சோவியத்து நாட்டில் வெவ்வேறு தேசிய இனங்கள், மக்களினங்கள் அனைத்தும் அடைந்துள்ள மறுமலர்ச் சியைக் காணும் போது ஊக்கம் பிறக்கிறது.

முஸ்லீம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னாவுடன் ஷேக் அப்துல்லா முரண்பட்டார். பாகிஸ்தான் அமையும் போது காசுமீரத்தை அதில் சேர்ப்பதற்கு ஷேக் அப்துல் லாவே தடையாய் இருப்பதாக ஜின்னா நினைத்தார்.

வல்லாபாய் பட்டேல் இந்துத்துவ நிலைப்பாடு எடுத்து மன்னருடன் நெருக்கமாக இருந்த போது ஷேக் அப்துல்லா ஜவகர்லால் நேருவைப் பெரிதும் நம்பினார்.

அனைத்திந்திய முஸ்லீம் லீக் 1946-47இல் பாகிஸ்தான் அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது. காசுமீரத்தைப் பாகிஸ்தானுடன் இணைப்பதற்காக முஸ்லீம் மாநாட்டுக் கட்சி நடத்திய வரிகொடா இயக்கம் கொடிய முறையில் ஒடுக்கபட்டது. தேசிய மாநாட்டுக் கட்சியோ மன்னராட்சியை எதிர்த்து காசுமீரத்தை விட்டு வெளியேறு! என்று இயக்கம் நடத்தியது.

ஷேக் அப்துல்லா காசுமீரத்தை பாகிஸ்தானுடன் இணைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த போதே காசுமீரத்தின் தனித்தன்மை காக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். தேவையானால் இந்தியக் கூட்டாட்சிக் குடியரசில் இணைந்திருக்கலாம் எனக் கருதினார்.

இந்தியாவுடன் இணைந்தாலும் பாகிஸ்தானுடன் இணைந்தாலும் முடியாட்சி நீடிக்காது என்பது மன்னர் அரிசிங்குக்குத் தெரியும். காசுமீர் மக்களைப் பொறுத்த வரை இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ சேராமல் தனித்திருப்பதே முதல் தேர்வு. அன்று முதல் இன்று வரை அவர்கள் ஆசாதி என்று முழங்குவதன் பொருள் இதுவே. ஷேக் அப்துல்லா 1947 செப்டம்பர் 29ஆம் நாள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின் இவ்வாறு அறிவித்தார்:

ஜம்மு-காசுமீரத்தில் வாழும் நாற்பது இலட்சம் மக்களைப் புறந்தள்ளி பாகிஸ்தானுடனோ இந்தியாவுடனோ இணைவதாக அரசு அறிவிக்குமானல் நான் புரட்சிக் கொடி உயர்த்துவேன். எங்கள் சுதந்திரக் கோரிக்கை எங்கு அறிந்தேற்கப்படுகிறதோ அந்த அரசுடன் நாங்கள் இணைய விரும்புவதே இயல்பு.

இந்தியாவுடன் இணைவதா? வேண்டாமா? என்று மன்னர் அரிசிங் ஊசலாடிக் கொண்டிருந்த போது பிரதமர் நேரு துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேலை ஆர்எஸ்எஸ்தலைவர் கோல்வால்கரிடம் அனுப்பி வைத்தார். 1947 அக்டோபரில் கோல்வால்கர் மன்னர் அரிசிங்கை சந்தித்துப் பேசி இந்திய இணைப்புக்கு இணங்கச் செய்தார்.

அரிசிங் இந்தியாவுடன் காசுமீரத்தை இணைக்க உடன்படப் போகிறார் என்பதை அறிந்த பாகிஸ்தான் காசுமீரத்தின் வடமேற்குப் பழங்குடிகளின் ஆயுதப் படையெடுப்புக்கு ஆதரவளித்தது. மிரண்டு போன அரிசிங் இந்தியாவிடம் இராணுவ உதவி கேட்டார். உடனடியாக இணைப்பு ஒப்பந்தத்தில் ஒப்பமிட வேண்டும் என்று இந்தியா நிபந்தனை விதித்தது.

1947 அக்டோபர் 26ஆம் நாள் இடைக்கால அரசு அமைக்கும்படி ஷேக் அப்துல்லாவிடம் கேட்டுக்கொள்ளப் பட்டது. அதே நாளில் மன்னர் அரிசிங் இணைப்பு ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டார். அடுத்த நாளே காசுமீரத்துக்கு இந்தியப் படை அனுப்பப்பட்டது. மூன்று நாள் கழித்து நெருக்கடிக்கால ஆட்சித் தலைவராக ஷேக் அப்துல்லா அமர்த்தப்பட்டார்.

இந்திய இணைப்புக்கு எதிராக காசுமீர மக்கள் போராட்டம் வெடித்தது. அரிசிங் ஓடிப் போனார். இந்தியாவுடன் காசுமீரத்தை இணைக்கும் ஒப்பந்தத்தை தப்பியோடும் மன்னர் ஒப்பமிட்ட ஒப்பந்தம் என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளார்கள். இந்த ஒப்பந்தத்தைக் காட்டித்தான் காசுமீரத்தை இந்தியாவின் பிரிக்கமுடியாத பகுதி என்று உரிமை கோரப்படுகிறது.

இணைப்பை ஒட்டி காசுமீர மக்களை அமைதிப்படுத்த இந்தியா அவர்களுக்கு ஓர் உறுதி கொடுத்தது: “இந்தியா வுடன் காசுமீரத்தின் இணைப்பு இறுதியான தன்று. இந்த இணைப்பு குறித்துப் பொது வாக்கெடுப்பு நடத்தி காசுமீர மக்களின் விருப்பமறிந்தே இறுதி முடிவு எடுக்கப்படும். “பொதுவாக்கெடுப்பு நடைபெற்றதா? காசுமீர மக்களின் விருப்பம் அறியப்பட்டதா?

தொடரும்

(முகநூல் பதிவு)

Pin It