kuthoosi gurusamy 268தமிழர்:- ஓய்! திராவிடத்தாரே! மலையாளி மதிக்காத, ஆந்திரன் அறியாத, கன்னடியன் கருதாதா திராவிடத்தைக் கேட்கிறீரே! வெட்கம் இல்லையா?

திராவிடர்:- ஓய்! தமிழகத்தாரே! சற்று நிதானமாகப் பேசும்! தமிழகம் தேவை என்று கேட்கிறவர்களைவிட ஆயிரம்பேராவது அதிகமாக திராவிடம் தேவை என்று கூறுகிறார்கள், தெரியுமா? தமிழகத்திலிருக்கின்ற தெலுங்கு பேசுகிறவர்களைத் தமிழர் என்று நீர் சொல்லும்போது, திராவிடர்கள் எல்லோரும் ஒரே இனம் என்று நான் சொல்லக்கூடாதா? யோசித்துப்பாருமே!

தமிழர்:- ஒரே நாட்டு மக்களை ஆரியர் - திராவிடர் என்றும், வட நாட்டார் - தென்னாட்டார் என்றும் பிரிப்பது தேசத்துரோகமல்லவா?

திராவிடர்:- நல்லபோடு போட்டீர்! மல்லாந்து படுத்துக்கொண்டே எச்சிலைத் துப்பிவிட்டீரே! ஒரே பகுதியில் பிறந்தவர்களைத் தமிழர் என்றும்-தெலுங்கர் என்றும் பிரிப்பது மட்டும் தேசத்துரோகமல்லவோ?

தமிழர்:- மொழியால்தான் ஒரு வட்டம் ஒன்றுபட முடியுமே தவிர, மற்ற எதனாலும் ஒன்றுபட முடியாது! தவிர, மற்ற எதனாலும் ஒன்றுபட முடியாது! உமக்கு சரித்திர ஞானமே கிடையாதோ?

திராவிடர்:- எனக்கா அன்பரே! அருமையான கேள்வி கேட்டீர்! ஒரே மொழியைக்கொண்ட பஞ்சாப் இரண்டாக்கப்பட்டதும், ஒரே மொழியைக் கொண்ட வங்காளம் துண்டாக்கப்பட்டதும், உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையோ? பார்வையில் கோளாறு கிடையாதே?

தமிழர்:- ஆரியராவது, திராவிடராவது? இரண்டும் கற்பனையே! இரத்தக் கலப்பு ஏற்பட்டுப் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டனவே!

திராவிடர்:- நாங்கள் இரத்தப் பரிசோதனையிலா ஈடுபட்டிருக்கிறோம்? கலந்து விட்டபடியால்தான் போலி உயர்வுகூட ஒழிய வேண்டுமென்கிறோம். ஆரியம் என்பது இரத்தமல்ல. திமிர்! அசல்திமிர்! நீர் முஸ்லீமாகலாம்! கிறிஸ்தவராகலாம்! புத்தனாகலாம்! இங்கிலீஷ் குடிமகனாகலாம்! ஆனால் என்ன செய்தால் பிராமணனாக முடியுமய்ய? சொல்லுமே! சோணாசலமே!

தமிழர்:- நீர் எவ்வளவு கரடியாகக் கத்தினாலும் தனித்தமிழராட்சி தான் கிடைக்குமே தவிர, தனித் திராவிட அரசு பகற் கனவாகத்தான் முடியப்போகிறது!

திராவிடர்:- பாகிஸ்தானைப் பற்றிக் கூட இதே பல்லவியைத்தான் படித்தீர்கள்! ஆனால் நீங்களே ஆப்பரேஷன் வேலை செய்தீர்களே! நான் தான் பார்த்தேனே! அதுபோகட்டும்! தனித் தமிழர் ஆட்சி ஏற்பட்டு விட்டால் அதுதான் திராவிடர் ஆட்சிக்கு முதற்படி! குறுக்குவழி! எங்கே, அதைத்தான் வாங்குமே, பார்க்கலாம்! டில்லிக்கு அடிமையான ஆட்சிதானே உம்முடைய ஆட்சி? அதனால்தானே உங்களைத் தூண்டிவிட்டு எங்களை எதிர்க்கச் சொல்கிறார்கள்? “இந்திய யூனியனுக்குக் கட்டுப்படாத ஆட்சியே எங்கள் தமிழாட்சி” என்று வேண்டுமானால் சொல்லிப் பாருமே, விளையாட்டுக்காவது! உம் வீரத்தைத்தான் ஹிந்தி சங்கதியிலேயே பார்த்து விட்டேனே!

தமிழர்:- நான் யார் தெரியுமா? பழைய வீரனாக்கும்! இதோ! என் மார்பைப் பாரும்! அத்தனையும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த வடுக்கள்!

திராவிடர்:- சிரங்கு வடு என்றா நான் சொன்னேன்? இதற்காக நீர் பழம்பெருமை பேச வேண்டியதில்லையே! இன்று உம் கடைச் சரக்கு என்ன என்றுதானே கேட்கிறேன்! வடநாட்டுச் சரக்கை வாங்கித்தானே வைத்திருக்கிறீர்? அந்தத் திசையை நோக்கித்தானே தண்டனிட்டுக் கொண்டிருக்கிறீர்?

தமிழர்:- நீர் என்ன சொன்னாலும், உம் செய்கை எனக்குப் பிடிக்கவேயில்லை!

திராவிடர்:- அதற்கென்ன செய்வது? அது பொறாமையால் ஏற்பட்ட நோய்! விரைவில் குணமானால் நல்லது!

- குத்தூசி குருசாமி (20-3-51)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It