“சங்கத் தொகை நூல்களில் ஒன்று புறநானூறு. சங்க இலக்கியங்களில் இது பலராலும் தனித்து வாசிக்கப்பட்ட நூல். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருப்பெற்று வளர்ந்த திராவிட இயக்கம், தன் அடையாளங்களைச் செவ்விலக்கியங்களின் மூலமாகக் கட்டமைக்க முனைந்தது. இச்செயல்பாட்டிற்குப் பெரிதும் உதவியது புறநானூறு. தமிழ்த் தேசிய இனத்தின் அடையாளமாகப் புறநானூறு புரிந்துகொள்ளப்பட்டது” என்கிறார் தமிழறிஞர் முனைவர் வீ. அரசு அவர்கள்.

‘வீர ஊழிக் கால இலக்கியங்களில் தனித்தன்மை வாய்ந்த இலக்கியம் புறநானூறு’ என்பது கலைநிதி க. கைலாசபதி அவர்களின் கருத்து.

சமூகத்தின் வாழ்வியல் ஒருங்குநெறியையே தமிழர் ‘அறம்’ என்றனர். வடமொழியாளர் கூறும் ‘தருமம்’ வேறு; தமிழர் கூறும் ‘அறம்’ வேறு. வடமொழியாளரின் தருமம் வருண நீதிகளுக்கு உட்பட்டது. பிராமணன் கொலைக்குற்றமே புரிந் தாலும் அவனைத் தண்டிக்கக் கூடாது; மொட்டையடித்தால் போதும். ஆனால், ஒரு சூத்திரன் வேதம் ஓதுதலைக் காதால் கேட்டாலும் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்பது வடநூலார் தருமம். மனிதகுலக் கீழ்மைகளின் தொகுப்பு வடநூல் நெறி என்றால், மனிதகுல மேன்மைகளின் தொகுப்பைத் தமிழர் நெறி எனலாம்.

நானூறு பாடல்கள் அடங்கிய புறநானூற்றைப் போர்முறை வாழ்வின் இலக்கியம் எனலாம். போர்க்குணத்தை மெச்சிய புலவர் பலரின் பாடல்களின் தொகுப்பு இது. இந்நூலைப் படிக்கும் போது நம்முள் ஒரு கேள்வி எழும். ‘இந்தப் போர் இலக்கியத்தைச் சுவைத்துப் படிக்கிறோமே. போர் இன்றும் நமக்குத் தேவையா?’

எட்கார்சுனோ என்னும் எழுத்தாளர் சுநன ளுவயச டீஎநச ஊhiயே என்னும் தமது நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். “போர்க்களங்கள் அன்று ஊருக்கு வெளியே தனித்து இருந்தன. இன்று ஒவ்வோர் ஊரும் போர்க்களமாகிவிட்டது. ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு வீடும் போர்க்களமாகிவிட்டன.”

அநீதிகள் எல்லா இடங்களிலும் எல்லா மட்டங்களிலும் தலைவிரித்தாடும் போது, போர்க்குணமில்லாமல், போரில் லாமல் நாம் எப்படி வாழமுடியும்? போரின் வடிவங்கள் மாறும்; போரிடுதல் மாறுவதில்லை. அமைதியான வாழ்வை, இணக்கமான வாழ்வை வேண்டுவோர் போராடியே தீரவேண்டும். போர்க்குணத்தை இழப்போர் எல்லாவற்றையும் இழந்து போவர் என்பது திண்ணம். பாவலன் துங் கூறினான், “ஆயு தத்தை ஒழிக்க ஆயுதத்தையே எடு” என்று.

எனவே நம் முன்னோரின் போர்க்குணத்தையே நம் மூத்த வாழ்க்கை அறமாக நாம் புறநானூற்றில் காண்கிறோம். நம் தாய் ஒருத்தி புறநானூற்றில் தன் தோழி யிடம் பேசுகிறாள்.

“சிற்றில் நற்றூண் பற்றி, நின் மகன்

யாண்டுளனோ என வினவுதி, என்மகன்

யாண்டுளன் ஆயினும் அறியேன்! ஓரும்

புலிசேர்ந்து போகிய கல்லளை போல

ஈன்ற வயிறோ இதுவே

தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே”                                                               (புறம் 86) 

‘என் வயிறு புலி தங்கியிருந்த குகை. என் மகன் போர்க்களத்தில்தான் இருப்பான்’ என்று மொழியும் தாயின் சொற்களில் கொப்பளிக்கும் வீரம் எவ்வளவு சூடு மிகுந்தது! புறநானூற்றிலிருந்து நாம் எடுத்துப் பேண வேண்டியது இந்தப் போர்க்குணத்தைத்தான்.

இன்று, சூத்திரரும் பஞ்சமரும் கல்வியைப் பெற்றுவிடக் கூடாதென்று நீட்டென்றும் பூட்டென்றும் போடுபவர்கள், அன்றைக்கே மனுநீதியாகச் சட்டம் வகுத்தார்கள். தாழ்த்தப்பட்டவர்கள், உடல் உழைப்பாளருக்குக் கல்வி இல்லை என்று. இந்த அநீதியை, அன்று தமிழகத்தில் ஆட்சியாளராய் இருந்த மன்னர்களே எதிர்த்தார்கள். பாண்டியன் நெடுஞ்செழியன் கூறு கிறான் : “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் கற்க வேண்டும்; பெற்ற தாயும் கற்றவனையே அதிகம் விரும்புவாள்; குடும்பத்தில் மூத்தவனை அழைக் காமல் கற்றவனையே அரசனும் அழைப்பான்; கீழ்ப்பால் ஒருவன் கற்றிருந்தால் மேல்பால் ஒருவனும் அவனுக்கு அடங்கி நடப்பான்” (புறம் 183).

அறிவாளர், ஆட்சியாளர், வணிகர், உடலுழைப்பாளர் என்பது உலகளாவிய நாற்பால் பகுப்பு. இது பிறவியால் வருவ தன்று. ஆனால் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பது பிறவியால் கற்பிக்கப்பட்ட நால்வருணம். நல்வருணம் வேறு; நாற்பால் வேறு. நால்வருணத்தில் கீழோன் கல்வி கற்க உரிமை இல்லை. நாற்பால் பகுப்பில் கீழானவன் (உடலுழைப்புச் சமூகத்தைச் சேர்ந்தவனும்) கல்வி கற்க முடியும். எனவே அனைவருக்கும் கல்வியை அரசனே வற்புறுத்துகிறான். அனைவரும் கற்க வேண்டும் என்தே தமிழர் அறம். புறநானூறு புலப்படுத்துவது இதைத் தான்.

ஒரு தேசத்திற்குச் செல்வச் செழிப்பு இன்றியமையாதது. ஆனால், அது ஒரு வரிடம் குவிந்து கிடப்பதால் பயனில்லை. அது பரவலாக்கப்பட வேண்டும். “செல் வத்துப் பயனே ஈதல்” என்று புறநானூறு (189) கூறுவதை இவ்வாறுதான் புரிந்து கொள்ள முடியும். நான் மட்டுமே துய்க்க வேண்டும் என வைத்திருப்பவன் அதனை வீணாக்குகிறான். எனவே செல்வத்தைப் பகிர்ந்து துய்க்க வேண்டும். புறநானூற்றின் 163-ஆம் பாடல் இதனையே வலியுறுத்து கிறது. “இன்னோர்க்கு என்னாது, என் னொடும் சூழாது வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும் எல்லோர்க்கும் கொடுமதி” என்கிறார் புலவர் பெருஞ்சித்திரனார். பகிர்ந்து இன்புறுதல் என்னும் அறத்தைப் புறநானூற்றின் பல பாடல்களில் காணலா கிறோம்.

நீரறம் பேணுதல் சங்க காலத்தில் மக்க ளாலும் மன்னர்களாலும் போற்றப்பட்ட ஒரு பேரறமாக இருந்தது. புறநானூறு 18ஆம் பாடலில் குடபுலவியனார் கூறுகிறார் :

“உயிர்களுக்கு உணவு வேண்டும். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோர். உணவு என்பது நிலத்தொடு கூடிய நீரின் ஆக்கம். எனவே, நிலம் குழியான பகுதிகளில் நீர்நிலைகளை உருவாக்க வேண்டும்; பாசன வசதியைப் பெருக்க வேண்டும். இதற்கு முயல்பவரே முயற்சி யாளர்.”

உழுதொழிலை மேம்படுத்திக் குடிநலம் காத்தல் ஓர் அரசின் தலையாய அறமாக அன்று உணரப்பட்டது. புறநானூற்றின் 35-ஆவது பாடலில் புலவர் வெள்ளைக் குடி நாகனார் இதனைத் தெளிவுபடுத்து கிறார்.

“பகைவர்களை வென்று மன்னர்கள் பெறுகின்ற வெற்றி என்பது,

ஏரினால் நிலத்தில் ஊன்றி, விளைந்த நெல்லின் பயனாகும்.

எனவே, அரசே, எருதுகளின் துணையுடன் பயிர்த்தொழில் புரிந்து

மக்களைக் காக்கும் உழவர் குடிக்கு நீ உதவுவாய் எனில்,

அடங்க மறுக்கும் பகைவரும் அடங்கி வருவர்” என்கிறார்.

இன்று இந்தியாவை வல்லரசாக மாற்ற முனையும் தலைவர்களோ “வேளாண்மையை விட்டு வெளியே வாருங்கள்” என மக்களை அழைக்கிறார்கள். உண்டிகொடுப்பாரை ஒன்றுமில்லாதவராக்கிவிட்டு, இவர்கள் தேசத்தை எப்படி உயர்த்தப் போகிறார் களோ தெரியவில்லை.

புறநானூற்றுச் சான்றோரின் அறநோக் கில் மக்கள் மீதான பரிவும், திட்டமிட்டுச் யெல்பட வலியுறுத்துவதும் முதன்மை பெறுகின்றன. புறம் 184-இல் பிசிராந்தை யார் பாண்டிய மன்னனுக்குக் கூறுகிறார் :

“காய்நெல் அறுத்துக் கவளமாய் யானைக்கு ஊட்டுவதுபோல்

அரசன் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். மக்கள்மீது பரிவு

காட்ட வேண்டும். வரம்புக்கு உட்பட்டு வரிவாங்க வேண்டும்.

அறிவார்ந்த கருத்தாளரையே அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தரமற்ற ஆரவாரக் கூட்டத்தை அணுகவிடக் கூடாது. திட்ட

மிட்டுச் செயல்பட்டால் கோடி ஆக்கச் செயல்களை மேற்

கொள்ளலாம். நாடும் உயர்வடையும்.”

மன்னர்களை அறம் திறம்பாமல் இட்டுச் செல்பவர்களாக அன்றைய புலமைச் சான்றோர்கள் விளங்கினார்கள்.

புறநானூறு 182-ஆம் பாடலில் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் தன்னலமற்ற பொதுநல வாழ்வை மெச்சுகிறான். பிறர்க்காக வாழ்பவர் உள்ள தால்தான் உலகம் உள்ளது என்கிறான்.

“அமிழ்தமே கிடைத்தாலும் தாமே தனித்து உண்ணாதவர்,

சினம் கொள்ளாதவர், செயலைத் துறந்து உறங்காதவர்,

அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுபவர், புகழ்தரும் செயலுக்கு

உயிரையும் கொடுப்பவர், உலகமே கிடைத்தாலும் பழிச்செயலை

நாடாதவர், சோம்பலை உதறியவர், தமக்கென உழைக்காமல்

காமல் மக்கள் யாவருக்குமாக உழைப்பவர் உள்ளதால்தான்

உலகம் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது”.

சமூக நலத்தையே முதன்மைப்படுத்து கின்ற அறநோக்கு அந்நாளைய தமிழர் பண்பாக இருந்திருக்கிறது என்பதைத் தான் இந்தப் புறநானூற்றுப் பாடல் புலப்படுத்துகின்றது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ‘உலகம் ஒன்று, மனிதகுலம் ஒரே குலம்’ என்பதுதான் தமிழர் அறநோக்கின் உச்சம் எனலாம், புறநானூற்றின் 192ஆம் பாடல் கணியன் பூங்குன்றனாரின் சிந்தனை ஆக்கம். உலகம் போற்றும் உயர் எண்ணச் செல்வம் இது!

“யாதும் நம் ஊரே! யாவரும் நம் உறவினரே!

தீதும் நன்மையும் பிறர்தர வருவதில்லை!

வருத்தமும் வருத்தம்தணிதலும் பிறரால் வருவன அல்ல!

சாவும் புதியதன்று!

வாழ்க்கை இனியது என்று மகிழ வேண்டியதும் இல்லை!

வெறுப்புற்று, இது துன்பமானது எனக் கூற வேண்டியதும் இல்லை!

மின்னல் இடியோடு வானம் மழை பொழிகிறது!

மலை முகடுகளில் துளிகளாய் வீழ்ந்து அருவியாகிறது!

தரையில் இறங்கி வளம் பொருந்திய பேராறாய் நடந்து செல்கிறது!

ஆற்றில் அடித்துவரப்பட்ட ஒரு மிதவை

ஆற்று நீரோட்டத்தின் வழியே செல்வது போல,

உயிர்களின் வாழ்க்கை

இயற்கையாய் அமைந்த இயங்குநெறிப்படியே செல்லும்!

அறிவாளர்கள் கண்டுரைத்த உண்மைகளால்

இந்தத் தெளிவை நாம் பெற்றோம்.

எனவே,

மாட்சிமை மிக்க பெரியவர்களைப் பார்த்து

நாம் வியப்பதும் இல்லை!

எளியோரை ஒருபோதும் இகழ்ந்துரைப்பதும் இல்லை!”

இந்த அறநோக்குகள் கூடிய மனவளம் வாய்த்துவிட்டால், உலகில் போர் இருக் காது! பூசல் இருக்காது! பரிவும், நேயமும், இணக்கமும், நலன்களும் செழிப்புற்று ஓங்கும்.