மானுட சமுதாயம் பல்வேறு படிநிலைகளைக் கடந்து வந்துள்ளது. தொடக்க காலம் முதல் இன்று வரையிலுமான மனித வரலாற்றில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடரிணைப்பு இருப்பதனைப் பல்வேறு ஆய்வுகளின் மூலம் அறிகின்றோம். அவ்வகையில் சங்ககாலச் சமூகத்தில் ஏறுதழுவுதல் நிகழ்வு இடம் பெற்றமையை கலித்தொகையிலும், இன்னுபிற சங்க இலக்கியங்களின் வாயிலாகவும் அறியமுடிகின்றது. இந்நிகழ்வு இன்றும் ‘சல்லிக்கட்டு’, ‘மஞ்சுவிரட்டு’ என்று அழைக்கப்பட்டு வழக்கில் உள்ளது. இந்நிகழ்வானது, ஆண்மகனின் வீரத்தினை மெய்ப்பிக்கக்கூடிய ஒன்றாகக் கருதப்படுகின்றது. மேலும் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. ஆனால் இன்றைய சூழலில் ஏறுதழுவுதல் நிகழ்வானது தன் அடையாளத்தினை இழக்கும் தருவாயில் உள்ளது. காரணம், அதனைச் செயல்படுத்தும் விதம். இந்நிகழ்வின் மைய நோக்கம் மறக்கப்பட்டு, இவ்வீர விளையாட்டு அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. 

ஏறுதழுவுதல்

jallaikattu 311ஊரார் கூடி நிற்க, வலு மிகுந்த காளை பாய்ந்து வருகையில் ஆண்மகன் ஒருவன் தன் பலத்தால் அக்காளையின் திமிலைப் பற்றி அதன் வேகத்தை அடக்குதலாகிய நிகழ்வே ‘ஏறுதழுவுதல்’ எனச்சுட்டப்படுகின்றது. சங்ககாலம் தொட்டே இந்நிகழ்வு நிகழ்த்தப்பட்டுவருகின்றது. சங்க இலக்கியமான ~கற்றறிந்தோர் ஏத்தும் கலித்தொகை’ இதற்குச்சான்று பகர்கின்றது.

பொதுவாகக் காளை என்றால் நம் நினைவில் வருவது வீரம், இளமை இவை இரண்டுமேயாகும். அதனால்தான் ஓர் ஆண்மகனைச் சுட்டுகையில் ‘கட்டிளங்காளையவன்’ என்று ஒப்புமைப் படுத்துகின்றோம். உலகளவில் காளை வீரத்தின் குறியீடாகக் கருதப்படுகின்றது. கி.மு.2000 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்திற்குப் பெயர் பெற்றவர்களான எகிப்தியர்கள் மத்தியில் காளைச்சண்டை இடம்பெற்றிருப்பதனை நாம் அறிய முடிகின்றது. “எகிப்தில் உள்ள பெனி-ஹாசன் சித்திரங்களிலும், கிரீட் தீவிலுள்ள கினோஸஸ் என்னுமிடத்தில் உள்ள அரண்மனைச் சித்திரங்களில் காளைப்போர் இடம் பெற்றுள்ளது"1.

சிந்துசமவெளி நாகரிக வரலாற்றிலும் காளை முக்கியப்பங்கு வகிக்கின்றது. ஆகவேதான் இம்மக்கள் காளையினைத் தெய்வமாக வழிபட்டதனை அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற சான்றுகள் வாயிலாக அறிகின்றோம். இந்தியப் பண்பாட்டின் முக்கியக் கடவுளான சிவபெருமானின் வாகனமாகக் காளை இடம்பெறுகின்றது. இப்படிப்பட்ட சிறப்பினைக் கொண்ட காளையினைக் கொண்டு ஏறு தழுவுதல் சங்ககாலத்தில் நிகழ்த்தப்பட்டிருப்பது சிறப்பான ஒன்றாகும்.

ஏறுதழுவுதலும் தமிழர் அறமும்

இலக்கியத் தொன்மையும், பண்பாட்டுத் தொன்மையும் கொண்டதே தமிழர் வரலாறாகும். இயற்கையுடனும் பிற உயிர்களிடமும் இணைந்தே சங்ககாலத்தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். இதற்கு சங்க இலக்கியங்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றுள் ஒன்றே ஏறுதழுவதல் நிகழ்வு. உலகின் பல பகுதிகளில் எருதுகளை மையமிட்ட நிகழ்வுகள் பல நடைபெறுகின்றன. ஸ்பெயின், மெக்ஸிகோ, போர்ஸிகோ, தெற்குப் பிரான்ஸ் போன்ற நாடுகளில் நடைபெறும் காளைப்போட்டிகள் நம் தமிழக ஏறுதழுவுதலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விநோதமானவையாகும்.

“ஏறுதழுவுவோன் சிலரின் உதவியோடு காளையினை அடக்கிக் கொன்றுவிடுவான்"2. அதாவது ஒரு மைதானத்தில் கையில் சிவப்பு நிறத்துணியுடன் வீரனும், வலிமையான காளையும் களமிறங்குவர். காளையிடம் வீரன் தோற்க நேர்ந்தால் அவன் இறக்க நேரிடும். வீரன் வெற்றிபெற்றால் காளையினைக் களத்திலேயே கொன்றுவிடுவது இங்கு வாடிக்கையாகும். இதனால் உயிச்சேதம் ஏற்படுகின்றது. ஆனால் இதனை இவர்கள் பொருட்படுத்துவதில்லை. இங்குதான் நம் தமிழரின் உயர்ந்த அறம் பொற்றப்படுகின்றது. சங்காலத்தமிழர்கள் தோற்றாலும், வென்றாலும் காளைகளைக் கொன்றதாக வரலாறில்லை. இதுவே தமிழரின் அறக்கோட்பாடகும்.

சங்ககாலத்தில் ஏறுதழுவுதல்

சங்க இலக்கியங்களில் முல்லைக்கலியில் மட்டுமே முதன்முதலாக ஏறுதழுவுதல் நிகழ்வு குறித்துச்சுட்டப்பட்டுள்ளது. முல்லை நில ஆயர்கள் இந்நிகழ்வில் பங்குகொள்கின்றனர். ஏறுதழுவல் குறித்து முன்னரே பறையின் மூலமாக அறிவிக்கின்றனர். குறிப்பிட்ட நாளில் ஏறுதழுவல் நடைபெறுகின்றது. முல்லை நில ஆடவர்கள் தலைவியின் காதலைப்பெறும் பொருட்டு தன் வலுவினை வெளிப்படுத்தி காளையினை அடக்கி, அவளை அடைய முயற்சிப்பர். ஆதலின் முல்லை நில ஆடவர் வீரமிக்கவர்களாகத் திகழ்ந்தனர். முல்லை நில ஆண்கள் தம் ஆண்மையினைப் (வீரத்தினை) பரிசோதிக்கும் நிகழ்வாதலின் இது ஓர் கவுரவப்பிரச்சனையாகவும் அமைந்த ஒன்றாகும்.

“கொல் ஏற்றுக்கோடு அஞ்சுவானை மறுமையும்
புலலாளே,ஆயமகள்
அஞ்சார் கொலைஏறு கொள்பவர் அல்லதை,
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய-உயிர்துறந்து
நைவாரே ஆயமகள்”3.

முல்லை நில மகளிர் தம் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதில் எவ்வளவு கவனம் செலுத்தினர் என்பதனை மேற்கண்ட பாடல் வரிகள் வாயிலாக அறியலாம். ஆயர்குல மகளிரை மணக்க விரும்புவோர் அவளுக்காக வளர்க்கப்பட்ட காளையினை அடக்க வேண்டும் என்பது அக்கால வழக்கமாகும். இதனை ‘ஏறுதழுவுதல்’ என இலக்கியங்கள் கூறுகின்றன. எருதின் கூரிய கொம்புகளைக் கண்டு அஞ்சி ஓடும் வீரமில்லா இளைஞனை ஆயமகளிர் இப்பிறப்பிலும், மறுபிறப்பிலும் கூட கணவனாக அடைய விரும்பமாட்டாள். ஏனென்றால் வீரம் ஒன்றே ஆணுக்கு அழகு என்று எண்ணிய காலம் அதுவாகும்.

“முல்லை நில மகளிர் தம் குடிப்பெண் பருவம் எய்தியதும், தங்களிடமுள்ள ஒரு காளையை அவள்பொருட்டு ஊட்டச்சத்தான உணவுகளைக் கொடுத்து வளர்ப்பார்கள். பெண்ணிற்கு திருமண வயது வந்தவுடன், காளையும் திமிலுடன் தயாராக இருக்கும். அக்காளையை அடக்கும் வீரனுக்கே ஆயர் மகள் மணம் செய்விக்கப்படுவாள்”4. காளையையும், குழந்தையையும் ஒன்றாகக் கருதிய தமிழரின் மாண்பினை இதன் மூலம் அறியலாம்.

“கொலைமலி சிலைசெறி செயிர்அயர் சினம் சிறந்து,
உருத்து எழுந்து ஓடின்று மேல்.
எழுந்தது துகள்;
ஏற்றனர் மார்பு;
கவிழ்ந்தன மருப்பு;
கலங்கினர் பலர்;
அவருள்,மலர்மலிபுகழ் எழ,
அலர்மலி மணிபுரை நிமிர் தோள் பிணைஇ
எருத்தோடு இமிலிடைத் தோன்றினன்; தோன்றி,
வருந்தினான் மன்ற அவ் ஏறு”5.

கொலைவெறியுடன் ஓடிவரும் காளையின் முன்னே தம் மார்பினைக்காட்டி அதனைத் தழுவி அடக்க ஆர்வமுடன் முன்வரும் முல்லைநில ஆடவரின் வீரம் இங்கே புலப்படுகின்றது. அத்துடன் வீரர்களை அடையாளம் கண்டு கொள்ளவும் ஏறுதழுவுதல் நடத்தப்பட்டிருக்கலாம்.

“மணிவரை மருங்கின் அருவி போல
அணிவரம்பு அறுத்த வெண்காற் காரியும்,
மீன்பூத்து அவிர்வரும் அந்திவான் விசும்பு போல
வான்பொறி பறந்த புள்ளி வெள்ளையும்,
கொலைவன் சூடிய குழவித்திங்கள் போல்
வளையுபு மழிந்த கோடு அணி சேயும்,
பொருமுரண் முன்பின் புகல்ஏறு பலபெய்து-
அரிமாவும்,பரிமாவும்,களிறும்,கராமும்,
பெருமலை விடாரகத்து,ஒருங்கு உடன் குழீஇ,
படுமழை ஆடும் வரையகம் போலும்-
கொடிநறை சூழ்ந்த தொழூஉ”6.

பலவகையான காளைகள் கூரிய கொம்புகளுடன் தொழுவத்தினில் இருந்ததாகவும், அவை காண்பதற்கு சிங்கமும், குதிரையும், யானையும், முதலையும் ஒருங்கே கூடி நிற்பது போல் காட்சியளிப்பதாகவும் மேற்கண்ட பாடல் வரிகள் வாயிலாக அறியப்படுகின்றது. சங்ககாலத் தமிழர்கள் விலங்குகளைத் தங்களது உடைமையாகக் கருதி வளர்த்து வந்ததனை இதன் மூலம் அறியலாம். முல்லைக்கலி தவிர பட்டினப்பாலையில் ஓரிடத்திலும், மலைபடுகடாமில் (330-335) சற்று விரிவாகவும் ஏறுதழுவுதல் குறித்துச் சுட்டபட்டுள்ளது. இலக்கண நூலான புறப்பொருள் வெண்பாமாலையில் ஒழிபியல் பிரிவில் ‘ஏறுகோள்’ குறித்துக் கூறப்பட்டுள்ளது. இதற்கான கல்வெட்டுச்சான்றுகளும் கிடைகின்றன. “சேலம் மாவட்டம் பெத்தனாயக்கன் பாளையத்தில் எருதுவிளையாடி மரணம் அடைந்த ஒருவன் பற்றி அங்கு கிடைக்கப்பெற்ற நடுகல்ச் செய்தி எடுத்துரைக்கின்றது. மேலும், வாசகமின்றி உருவம் மட்டுமே உள்ள அர்த்த சித்திர வடிவக் கல்வெட்டுக்கள் தருமபுரி மாவட்டத்தில் ஏராளமாகக்கிடைக்கின்றன”7.

ஏறுதழுவுதல் இன்று

“தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தாற் கொள்ளப்படும்”8.

நமது ஒவ்வொரு செயலும் நமது பின்புலத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிப்பதாகும். சங்க காலத்தில் ஏறுதழுவி வெற்றி பெறுபவற்கு பெண் கொடுக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் இன்று அவ்வழக்கம் இல்லை. மாறாக பணமும், பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இது ஒருபுறமிருக்க, தமிழ்நாட்டில் ஏறுதழுவுதலுக்கு நீதிமன்றம் தடை விதிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது. 2000 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இவ்வீரதீரச்செயல் நம் அலட்சியத்தாலும், குறுக்குப்புத்தியாலும் இந்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இன்று நாம் செய்யும் சிறு தவறுகளால் நம் முன்னோர்களின் பண்பாடுகள் பொய்யுற்றுப்போக நேரிடும். சங்க காலத் தமிழர்கள் ஏறுதழுவும் போது காளையினைத் துன்புறுத்தியோ, வதைசெய்தோ இன்புறவில்லை. ஆனால் இன்று ஏறுதழுவும் முன் காளைக்கு மதுவினை கட்டயப்படுத்தி அளித்தும், நிகழ்வின் போது காளையினை துன்புறுத்தியும் வருகின்றனர். இதுதவிர இந்நிகழ்வின் போது சாதிச்சண்டைகள் நிகழ்வது அண்மைக் காலங்களில் வழக்கமாகிவிட்டது. எனவேதான் இந்நிகழ்விற்குத் தடை விதிக்க வேண்டி மிருகவதைத்தடுப்பு ஆர்வலர்கள் முறையிடுகின்றனர்.

தமிழுக்கும், தமிழர்க்கும் பெருமை சேர்க்கும் சங்க இலக்கியங்களில் அறியலாகும் நம் முன்னோர்களின் பழக்கவழக்கங்களை மறந்து அதற்கு மாறான செய்கைகளில் ஈடுபடுவதன் விளைவே இன்று ஏறுதழுவுதலை நீதிமன்றம் தடைவிதிக்க நேர்ந்தது. 2000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த செம்மொழியைப் பெற்றுள்ள நாம் அத்தகுதிக்குக் காரணமான நம் பாரம்பரியத்தை மறப்போமேயானால் எஞ்சியுள்ள தொன்மங்களும், கலையும், கலாச்சாரமும் அழிந்து நமது அடையாளத்தை முற்றிலும் இழக்க நேரிடும். எனவே நம் முன்னோரின் பழக்கவழக்கங்களையும், அறங்களையும் பேணிப்பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

அடிக்குறிப்புகள்.

1. அ.பிச்சை, தமிழர் பண்பாட்டில் விளையாட்டுக்கள், ப-62
2. மேலது, ப-67
3. அ.விஸ்வநாதன், சங்க இலக்கியம் கலித்தொகை,ப-453
4. varalaru.com
5. அ.விஸ்வநாதன், சங்க இலக்கியம் கலித்தொகை,ப-446
6. மேலது, ப-451
7. அ.பிச்சை, தமிழர் பண்பாட்டில் விளையாட்டுக்கள்,ப-65
8. புலவர்.அரசுமணி, திருக்குறள்,ப-24

- முனைவர் ஆ.பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி-02