பொங்கல் என்பது தொழிற்பெயர்; தொழில்கள் எல்லாவற்றுக்கும் மூலத்தொழில் ‘உழவுத் தொழில்’. அதனால் பொய்யாமொழியார்,

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்”

என்றார். உழவர் தொழிலாளரைச் சார்ந்து வாழ்பவர். பதினெண் குடியினர் - தொழிலினர் என்று முன்னை நாளில் கணக்கிட்டனர். உழவர் உழுது பாடுபடாமல் கையைக் கட்டிக் கொண்டால், எப்பற்றும் இல்லேம் என்னும் துறவரும் வாழார்! என்பதை,

‘உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை’ (1036)

ஏன்எனில், உழவர் எவரையும் இரந்து வாழார்; இரந்து வந்தவர்க்கு இல்லை எண்ணாது ஈவர் என்பதால்!

“இரவார் இரப்பார்க்கு ஒன்றுஈவார் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்” (1035)

தம் உழைப்பாலேயே வாழ்பவர்; அவர் மட்டுமல்லர், வழி வழியாக உழுதொழில் செய்பவர் அவர்!

உலகம் சுழல்வது உண்மை; அச்சுழற்சியால் மட்டும் மாந்தர் வாழ்ந்துவிடமுடியாது! உழவன் தன் நிலத்தில் ஏரைப் பூட்டி உழுது சுழல வேண்டும் என்பதை,

“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை” (1031)

என்றார் அறம் பாடிய கிழவர் வள்ளுவர்.

கிழவர் என்பார் மண உரிமையர்; வாழ்வுரிமையர்; நில உரிமையர்; அவர் நீர் இறைக்கும் இறைவைச் சால், கிழார்!

நிலக்கிழார் தந்தவை பண்பாடு, ஒப்புரவு, ஈகை, விருந்தோம்பல் என்பன.

பண்பாடு

‘பண்’ணிசை செவிக்கு இன்பம் தரும்
பண்பாடு வாழ்வுக்கு மூலம்’!

உழவன் உழவு, கட்டி உடைப்பு, எருவிடல் எனப் பண்படுத்துகிறான் விளை நிலத்தை!

அவன் படுத்தமும் உழைப்பும் வெளிப் படக் காட்டுவது விளைவு.

‘விளையறா வியன் கழனி
கார்க் கரும்பின் கமழாலை’

என்பது பட்டினப்பாலை.

நெல்லும் கரும்பும், வாழையும் கமுகும், மஞ்சளும் இஞ்சியும்-விளங்கும் விளைநிலம் உழவன் பண்படுத்தலுக்கும் உழைப்புக்கும் சான்று.

முள்ளும் முடலும், கள்ளியும் கற்றாழையும், வேலிக் கருவேலும்-உழவன் உழையாமைக் கும் பண்படுத்தாமைக்கும் சான்று.

நிலத்தைப் பண்படுத்தா மடியன் (சோம்பன்) வாழ்வு மடிந்து போகும் சான்று!

உழவன் தந்த பண்படுத்தல் சான்று, வாழ்வியல் பண்பாட்டு மூலம்!

அதனைக் கலித்தொகை,

“பண்பெனப்படுவது பாடறிந்தொழுகல்”

என்கிறது. பாடு என்பது மெய்ப்பாடு!

தம் முன்னால் நிற்பவர் - இருப்பவர், எந்நிலையில் உள்ளாரோ அந்நிலை அறிந்து நடந்து கொள்ளுதல் பண்பாடாகும். இத னைப் ‘பண்புடைமை’ என்றோர் அதிகார மாகத் திருக்குறள் தந்தது (100).

ஒப்புரவு

உழவன் நிலத்தை ஒப்புரவு செய்வான். உழுவான்; வரப்பு ஓரம் வெட்டுவான்; சால் அடிப்பான்; மேடுபள்ளம் இல்லாமல் சமன் படுத்துதலால் ஒப்புரவு செய்வான்! ஏனெனில், ஒப்புரவு செய்யாமல் மேடுபள்ளமாக இருந்து நீர்விட்டால், மேட்டில் நீர் ஏறாது; போட்ட வித்து முளையாது; பள்ளத்தில் நட்ட வித்து முளைத்தாலும் அழுகிச் செத்துப்போம். ஒப்புரவில்லாமை இரட்டைக் கேடாம்! பொதுவுடைமையோ-சமுதாயமோ- தோன்றுவதற்கு முன்னர் உழவன் வழியே தமிழன் - தமிழினம் - கண்டது ஒப்புரவு.

‘ஒப்புரவறிதல்’ என்பது வள்ளுவத்தில் ஓரதிகாரம் ஆனது (22). ஒப்புரவு எங்கும் காணரிய உயரிய பண்பு. அனைவருக்கும் கைம்மாறு கருதாமல் பெய்யும் மழை போன்றது; ஊருணி நீர் நிறைந்தது போன்றது; உள்ளூரில் பழமரம் பழுத்தது போல்வது; பசிநோய் முதலாம் நோய்களுக்கு மருந்து போன்றது என்று வள்ளுவர் விரித்துக் கூறுவார்.

வள்ளலார்,

“ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எல்லாரும் ஒருநிலையர் ஆதல்”

என அரிய விளக்கம் தருவார்.

ஈகை

ஒப்புரவுக்கு அடுத்த அதிகாரம் ஈகை. ஈகையாவது கொடை (23).

“வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை” (221)

“அற்றார் அழிபசி தீர்த்தல்” (226)

“ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்” (225)

“ஈத்து உவக்கும் இன்பம்” (228)

என ஈகைச் சிறப்பை இனிதின் விளக்குகிறார். வள்ளலார் உள்ளப் பதிவாம் பசியாற்றல் தலைப்பட்டு நிற்பது இவ்வதிகாரம்.

விருந்தோம்பல்

இல்லறத்தான் கடப்பாடுகளுள் விருந்தோம்பல் தனிச்சிறப்பினது.

“விருந்தே புதுமை” என்பது தொல் காப்பியம். தொல்காப்பியர் வழியில் முப்பால் யாத்த திருவள்ளுவர், விருந்தோம்பலை ஓர் அதிகாரமாகப் பாடுகிறார் (9). வந்த விருந்தினரை எதிர்பார்த்திருத்தல் இல்லற வாணன் கடமையாக்கிய அவர், அந்நாளில் தமிழகத்துப் புகுந்த வேள்வியை எண்ணி வருந்துகிறார்.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலைக் கண்டிக்கும் அவர் (259), விருந்தோம்பலாம் வேள்வியைச் செய்ய ஏவுகிறார்.

பசித்து வயிறு எரிபவனுக்கு உயிர் மருந்தாகிய பால், வெண்ணெய், நெய், அரிசி, பருப்பு முதலியவற்றையும், பருவிலைய பட்டு துணிமணி உயிரி என்பவற்றையும் பாழாகக் கொட்டுதலை எண்ணி,

“இனைத்துணைத் தென்பதொன்றில்லை விருந்தின்
துணைத் துணை வேள்விப் பயன்” (87)

என்றும்,

“பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்” (88)

என்றும் கூறுகிறார்.

தமிழர் பண்பாட்டின் மூல வைப்பகமாம் திருக்குறளை வாழ்வியலாகக் கொள்ளாமல் வேறு வேறு நெறி பற்றல்,

“கனியிருப்பக் காய் கவர்ந்தேயாம்”.

வாழிய நலனே! வாழிய நிலனே!

- முதுமுனைவர். இரா. இளங்குமரனார்