1989-ஆம் ஆண்டு, எங்கள் பகுதியில் உள்ள மளிகைக் கடையில் பொட்டலம் கட்டுவதற்காக இருந்த பழைய நூல் ஒன்றை பிரித்துப் பார்த்தேன். அப்போது என் கண்ணில் பட்ட சொற்றொடர்கள் என்னை ஒரு உலுக்கு உலுக்கியது.

அந்நூல் தந்தை பெரியாரின் நூல். நூலின் தலைப்பு நினைவில் இல்லை. அந்த வாசகம் என்னவெனில்,

“மாணவர்கள் டெஸ்ட் புத்தகங்களைப் படித்து மடையர்களாவதை விட திருக்குறள் ஒன்றை வாங்கிப் படித்து அறிவாளி யாவது மேல் என்றுதான் நான் கூறுகிறேன்.”

“திருக்குறள் ஒன்றே போதும் உனக்கு

அறிவு உண்டாக்க

ஒழுக்கத்தைக் கொடுக்க;

உலக ஞானம் ஏற்பட;”

பகுத்தறிவு மணிகளால் கோர்க்கப்பட்ட நூல்தான் திருக்குறள். குறளை ஊன்றிப் படிப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள்.

“அரசியல் ஞானம்

சமூக ஞானம்

பொருளாதார ஞானம்”

ஆகிய எல்லாமும் திருக்குறளில் அடங்கியிருக்கிறது என்று பெரியார் மொழிந்த பொன் எழுத்துக்களைப் படித்தேன்.

தந்தை பெரியாரின் இந்த எழுத்துக்களே என்னிடத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

“அன்றைய நாளே என் அம்மாவிடம் பத்து ரூபாய் பெற்றுக் கொண்டு திருக்குறள் மு.வ. தெளிவுரை ஒன்று வாங்கி வந்தேன்.”

நான் படித்த முதல் குறள்,

“அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்” (குறள் 611)

இது செய்வதற்கு அருமையானது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும். அதைச் செய்வதற்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.

இக்குறளைப் படித்த பின்னர்தான் “நம்மால் முடியும்” என்கிற நம்பிக்கை என்னுள் எழுந்தது. அதிகாரம் 62 ஆள்வினை உடைமை என்கிற அதிகாரத்தைப் பலமுறை படித்தேன். பொருளை நன்குணர்ந்து படித்தேன்.

திருக்குறளை முழுமையாகக் கற்க வேண்டும் என்கிற எண்ணம் அரும்பியது. முதலில் என் குழந்தைகளுக்கு, திருக்குற ளைச் சொல்லிக் கொடுத்தேன்.

எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பமாய் இருந்த போது எங்கள் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் தெருப் பிள்ளைகள் மொத்தம் 15 பிள்ளைகளுக்கு எங்கள் இல்லத்திலேயே 1997ஆம் ஆண்டுவாக்கில் திருக்குறளைச் சொல்லிக் கொடுத்தேன்.

திருக்குறளை முன்கூட்டியே படித்து குறிப்பெடுத்துக் கொண்டு ‘குட்டிக்கதை களோடு’ திருக்குறளைச் சொல்லிக் கொடுத் தேன். அதன்பின்னர், நெல் அவியல் தொழி லாளர்கள் வசிக்கும் எங்கள் பகுதியில் உள்ள குடிசைப் பகுதிக்குச் சென்று சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் சுமார் 30 மாணவர் களுக்குத் திருக்குறள் பயிற்சி வகுப்பு நடத்தி னேன். நூறு குறட்பாக்கள் முடிந்த 12 மாணவர்களுக்கு எங்கள் பகுதியிலேயே விழா எடுத்து பரிசுப் பொருள் வழங்கி னேன். பிறகு அவர்கள் படிக்கும் பள்ளியில் பாராட்டுகளைப் பெற்றனர். படிப்படியாக மற்ற பகுதிகளுக்குத் திருக்குறள் குறித்த விழிப்புணர்வு பெறத் தொடங்கியது.

1995-இல் “உலகப் பொதுமறை திருக்குறள் பேரவை” தொடங்கப்பட்டது. அதன் பின்னர், தொடர்ந்து ஒவ்வொரு சனி, ஞாயிறு 3 இடங்களில் திருக்குறள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

சிற்றூர்ப்புற ஊராட்சிப் பள்ளிகளில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என 4 திசைகளில் 10 நடுநிலைப் பள்ளி, 6, 7, 8-ஆம் வகுப்பு மற்றும் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குப் பாடத் திட்டத் தில் குறிப்பிட்ட அதிகாரங்களோடு, மேலும் சில அதிகாரங்களைச் சேர்த்துக் கொண்டு திருக்குறள் ஒப்பித்தல் போட்டி நடத்தி னேன். இப்போட்டிக்கு முன்னதாக ஊரகப் பகுதிகளுக்கு, 2, 3 முறை சென்று பயிற்சி அளிக்கப்பட்டு, அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் கிராம நாட்டாண்மைக் காரர்களை வைத்தும், ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில் பரிசுப் பொருள்கள் வழங்கிச் சிறப்பாக நடத்தினோம்.

சிற்றூர்ப் புறங்களில் குறைந்தது 60 பள்ளிகளிலிருந்து சுமார் 1000 மாணவர்கள் (நாங்கள் நடத்தும் திருக்குறள் போட்டியில்) கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்றுச் சிறப்பித்து உள்ளார்கள்.

2003-ஆம் ஆண்டு ஆறு மாணவர்கள் 1330 குறளையும் ‘கசடற’ பயின்று, 133 கோணங்களில் திறன் பெற்றார்கள். அவர் களுக்குத் திருக்குறள் இளந்தூதர் பட்டம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாணவர்க்கும் வெள்ளிப் பட்டயம், சிறப்புச் சான்றிதழ், கேடயம், திருவள்ளுவர் சிலை, 1330 ரூபாய் பொற்கிழி போன்றவை வழங்கிச் சிறப்பிக்கப் பட்டன. இந்த நிகழ்ச்சி உள்ளூர்த் தொலைக் காட்சியில் நேரடி ஒளிப்பரப்பாக ஒளிபரப் பப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு காஞ்சியில் பரவலாகத் திருக்குறள் பேரவை என்கிற ஒரு அமைப்பு திருக்குறள் பயிற்சி வகுப்பை நடத்துகிறது என்கிற செய்தி பொதுமக்களி டையேயும், பள்ளி அளவிலும், மாணவர் களிடையேயும் பரவலானது.

தொடர்ந்து, காஞ்சியில் ஒவ்வொரு சனி, ஞாயிறுகளில், மூன்று இடங்களில் கோயில் மற்றும் பள்ளிகளில் திருக்குறள் பயிற்சி வகுப்பு நடத்திக் கொண்டு வருகின்றோம்.

“குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடைக்கால திருக்குறள் சிறப்புப் பயிற்சி வகுப்பு” இருபது நாள்கள் காஞ்சி யிலும் அதைச் சுற்றியுள்ள, சிற்றூர்ப் புறங்களிலும் நடக்கும்.

“ஐந்து மையங்களில் குறைந்தது 180 மாணவர்கள் திருக்குறள் பயிற்சியில் கலந்து கொள்வர்”.

தேர்ந்தெடுக்கப்பட்ட 25 அதிகாரங்கள் மொத்தம் 250 குறட்பாக்கள் நடத்தப்படும். 100 மாணவர்களுக்குமேல் 200, 250 குறட்பாக்கள் மனப்பாடம் செய்வர். இக்கோடைத் திருக்குறள் பயிற்சி வகுப்பில், பேரவைத் தலைவர் புலவர் கு. பரமானந் தம், முற்போக்குச் சமூகநீதிப் பேரவை நிறுவனர் டாக்டர். விமானமூர்த்தி, குறள் அமிழ்தன், திருக்குறள் கவனகர் இரா. எல்லப்பன், திருக்குறள் அன்புரவி, திருக்குறள் பா. காயத்ரி, திருக்குறள் ப. கௌசல்யா, திருக்குறள் கு. சாரதி, திருக்குறள் மீ.சோ. இளவேனில், திருக்குறள் ப. எழிலரசன், திருக்குறள் மீ.சோ. கணிமொழி, மூலிகைச் சாறு, ஏ.தணிகாசலம் போன்றோர் திருக் குறள் பயிற்சியினை அளிப்பர்.

நிறைவாகக் “கோடைக்காலச் சிறப்புத் திருக்குறள் சிறப்புப் பயிற்சி வகுப்பு நிறைவு விழா” மிகச் சிறப்பாக நடத்தப்படும்.

பயிற்சி வகுப்பில் சேர்ந்து இடையில் வராமல் போன, அல்லது கோடை விடு முறைக்காக ஊருக்குப் போன அத்தனை மாணவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப் பட்டு, சிறப்புச் சான்றிதழோடு, எனக்குப் பிடித்த குறள், பேச்சுப் போட்டி, குறள் கவன நிகழ்வு, திருக்குறள் திறப்பாடு, குறள் பட்டிமன்றம், குறள் தொடர்பான நாடகம், பாராட்டுப் பரிசளிப்பு விழா என சிறப்பான விருந்தோம்பலுடன் நிறைவு விழாவினை நடத்துவோம்.

கோடைக்காலத் திருக்குறள் பயிற்சி வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, வைகாசி 1-ஆம் தேதி திருக்குறள் பயிற்சி மாணவர்களுக்கு தம் குடும்பத்தி னருடன் கன்னியாகுமரி, திருவள்ளுவர் அறக்கட்டளை நடத்துகின்ற “திருக்குறள் விழாவிற்கு”ச் சென்று, கன்னியாகுமரியைச் சுற்றியுள்ள சுற்றுலா மையங்களுக்கு அழைத்துச் சென்று, திறப்பரப்பு அருவியில் நன்றாகக் குளியல் போட்டு, பத்மனாபுரம் அரண்மனை தொடங்கி வட்டக்கோட்டை மற்றும் சுசீந்திரம் கோயில், மாத்தூர் தொட்டிப் பாளையம், சூரிய உதயம், சூரியன் மறைவு கண்காட்சியாகக் கண்டு களித்து அழைத்து வருவேன். மாணவர்கள் அளவில்லா மகிழ்ச்சியில் திளைப்பர்.

குறிப்பாகச் சொல்ல வேண்டியது என்னவெனில், திருக்குறள் பயிற்சி பெற்ற மாணவர்கள், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து திருக்குறள் பேரவைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். குறிப்பாக அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் அரசுப் பணிக்கு சுமார் முப்பது மாணவர்கள், அரசுக் கருவூலம், கல்வித்துறை, வருவாய்த் துறை, தலைமைச் செயலகம், தட்டச்சுப் பணியாளர் மற்றும் வேளாண் மைத் துறை, மாவட்ட ஆட்சியர் அலு வலகம், மின்சாரத் துறை, மத்திய அரசுப் பணி, பொறியாளர் பட்டம் பெற்று நம்பக மான தனியார் நிறுவனங்களிடம் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்குத் திருக்குறள், ஒளிவிளக்கு கல்வியில் ஆர்வத்தை உண்டாக்கி, ஊக்கத்தை அளித்து, தன்னம்பிக்கையை அளித்து விடாமுயற்சியுடன் வெற்றிவாகை சூட வைக்கின்றது என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.

மேலும் 2015 திசம்பரில் தமிழகத்தி லிருந்து 133 திருக்குறள் மாணவர்களை தில்லிக்கு அழைத்துச் சென்றார். தில்லி தொடர்வண்டி நிலையத்தில், தில்லி மேயர், ஒவ்வொரு மாணவர் கையிலும் ஒரு ரோசா மலர் கொடுத்து வரவேற்றது பெருமகிழ்வாக இருந்தது.

அதன்பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் கள் தங்குமிடத்தில் அறைகள் ஒதுக்கி, குடியரசுத் தலைவர் மாளிகைகளைச் சுற்றிப் பார்த்து, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது. பகல் விருந்து உண்டது. மறுநாள் தில்லி நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில், உத்தரகாண்ட் நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் 133 மாணவர்களுக் கும் “திருக்குறள் செல்வர்” என்னும் விருது வழங்கி, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் திருவள்ளுவர் பற்றியும், திருக்குற ளைப் பற்றியும் சிறப்பித்து வாழ்த்தியது இன்னும் சிறந்த நிகழ்வாக திருக்குறள் அன்பர்களால் போற்றப்படுகிறது.

திருக்குறள் பயிற்சி, திருக்குறள் போட்டி, பரிசளிப்பு, பாராட்டு என்கிற தன்மையில் மாணவர்களிடையே திருக்குறள் சென்றடை வதால், அவர்களிடையே,

  1. அறநெறிப் பண்பு வளர்கிறது.
  2. அன்பு, அடக்கம், அறிவு, மேம்படுகிறது.
  3. நினைவாற்றல், ஆளுமைத்திறன் சிறக்கிறது.
  4. நல்லொழுக்கம் மேன்மைக்கு வழி கோலுகிறது.
  5. விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கிடைக் கிறது.
  6. பள்ளிப் பாடத்தில் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெறத் துணைபுரிகிறது.
  7. நன்றி உணர்வும் - ஒப்புரவும், சால்பு நிறைந்த நிறை மாந்தனாக உருவாக்கு கிறது. மொத்தத்தில் திருக்குறளால் தலைசிறந்த மாந்தனை உருவாக்குகிறது என்கிற எண்ணம் ஆசிரியப் பெரு மக்கள், பெற்றோர் மற்றும் மாணவச் செல்வங்களிடையே பெருகி வருவதை காண்கிறோம்.

திருவள்ளுவரின் குறிக்கோள் “ஈதல் இசைபட வாழ்தல்” என்பதாம்.

இந்த குறிக்கோளையே உலகப் பொது மறை திருக்குறள் பேரவையின் நோக்கமாகக் கொண்டு, அனைத்து மாணவர்களிடை யேயும் திருக்குறள் “கசடற” பயிற்றுவிப்ப தும், திருக்குறளை உலகம் முழுக்கக் கொண்டு சென்று, திருவள்ளுவர் காண விரும்பிய சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதே ஆகும். இப்படிப்பட்ட பாதையை நோக்கி திருக்குறள் பரப்புதலை உயர்ந்த இலக்காகக் கொண்டு ‘உலக நூலாக’த் திருக்குறளை உயர்த்திப் பிடிப்போம்.

- குறள் அமிழ்தன், நிறுவனர் - பயிற்றுநர், திருக்குறள் பேரவை

Pin It