வகுப்பறை உரையாடலில் இப்போதெல்லாம் அத்தனை கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. ஆசிரியரின் உலகத்திலிருந்து எதிரில் அமர்ந்திருக்கும் மாணவனின் உலகம் என்பது வேறாகவும் ஆசிரியரின் உலகம் என்பது எல்லாவகையிலும் முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகவும் இருக்கிறது. ஆசிரியர் சமூகம் கடந்த கால பழைய சோறு பற்றிய நினைவுகளைச் சுமந்து வகுப்பறைக்குள் சென்றால், மாணவச் சமூகம் பீட்சா, பர்க்கர் சாப்பிடுகின்ற சமூகமாக இருக்கிறது. உணவிலேயே இத்தனை முரண் எழுகையில் கல்வி சார்ந்தும் கற்றல் சார்ந்தும் எத்தனை எத்தனை முரண்கள் எழும் என்பதைச் சிந்தித்துக் கூட பார்க்க முடிவதாய் இல்லை. அதிலும் ஊடக வளர்ச்சி, நவீன சமூகக் கட்டமைப்புப் போன்றவை மாணவர்களின் சிந்தனைகளில் மேதாவித்தனத்தைக் கொண்டு வந்து புகுத்தி விட்டது.

வலைதள உலகம்

நாம் என்ன கேள்வி எழுப்பினாலும் தட்டையாக ஒரு பதிலைக் கண்டுபிடித்து வைத்துக் கொள்கிறார்கள். நமக்குக் கற்றுத் தந்ததை விட வலைதள உலகம் அவர்களுக்குக் கூடுதலாகக் கற்றுத் தந்து விடுகிறது. நம் கேள்விக்கான பதிலை விரைந்து தேடிக் கண்டுவிடுகிறார்கள். அது சரியா? தவறா? என்பதைப் பற்றிய எண்ணங்கள் எல்லாம் அவர்களிடம் இல்லை. 'நீங்கள் ஒரு கேள்வி எழுப்பினீர்கள் நான் ஒரு பதிலைக் கூறி விட்டேன்' என்கின்ற நிலையில் மாணவருக்கும் ஆசிரியருக்குமான உரையாடல் நின்று போகிறது.

 பரஸ்பரப் புரிதலோ , தெளிந்த பார்வையோ எழுவதற்கான நூல் சார்ந்த கற்றல் தளத்தையும் பெரியோர்களைச் சந்தித்துக் கேட்டுணர்ந்து தெளிகின்ற களத்தையும் வலைதள உலகமும் மீடியா உலகமும் அடைத்து வைத்துக் கொண்டன. எல்லாவற்றையும் வலைதள உலகமே தந்து விடும் என்கின்ற ஒற்றைத் தகுதியை மட்டுமே இறுகப் பிடித்துக் கொண்ட தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. அப்படியான தலைமுறையினரிடம் ஒரு சொல்குறித்து விவாதிப்பதோ அல்லது விளக்குவதோ கூட பெரும் இன்னல்களைக் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது.

இலக்கியத்தில் மயிர்

தமிழ் இலக்கியத்தில் மயிர் என்ற சொல் ஏறத்தாழ திருக்குறள் தொடங்கி எல்லா இலக்கியத்திலும் 'மயிர்' என்ற பதத்திலும் 'குஞ்சி' என்ற பதத்திலும் வெவ்வேறான சொற்களால் பேசப்பட்டிருக்கிறன. அப்படித்தான் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப்பாடநூலிலும் இராவண காவியத்தில் ஒரு பாடலில் 'மயிர்த்தலைச் சிறார்' என்று வருகிறது. இச்சொல்லை எப்படி வாசிப்பது. ஆசிரியராக எனக்கு ஒரு புரிதல் இருக்கிறது மயிர் என்பது கெட்டவார்த்தை இல்லை என்று. இதனை மாணவர்களுக்கும் உணர்த்தியாக வேண்டும். மாணவர்களிடம் ஒரு பழக்கம் உண்டு! ஆசிரியர் தவறாக வாசித்து விட்டாலோ அல்லது தவறானவற்றை வாசித்து விட்டாலோ வகுப்பறையே சிரித்து மகிழும். இது காலம் காலமாக வகுப்பறைக்குள் தவிர்க்க முடியாத நிகழ்வாகி விட்டது. அத்தகைய சிந்தனை எடுத்த எடுப்பிலேயே 'மயிர்த்தலைச் சிறார்' என வாசித்தால் சிரிப்பு எழும் என எண்ணி சிந்தித்தே 'மயிர்த்தலைச் சிறார்' என வாசித்தேன். சிரிப்புக்கு மாறான பெரும் மௌனம் நிலவியது. சிரிப்பை விட பெரும் அச்சத்தை இந்த மௌனம் உண்டாக்கியது.

சிலர் பக்கத்தில் உள்ள மாணவர்களோடு இறுகிய முகத்தோடு விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். மயிரா? மயிரா? என்ற கேள்வி இருண்மை கலந்த அச்சத்தையே உண்டாக்கியது. இனியும் அமைதியாக எதிர் நிற்பது மயிர் என்ற சொல் கெட்டவார்த்தை என்கின்ற சிந்தனைக்கு வலு சேர்த்துவிடும் என்பதை உணர்ந்து, மாணவர்களை நோக்கி மயிர் நல்ல சொல்லா? கெட்ட சொல்லா? என்ற கேள்வியை எழுப்பினேன். பேரமைதி நிலவிற்று. கெட்ட சொல் என்பவர்கள் கை உயர்த்துங்கள் என்றதும் வகுப்பில் சரிபாதிக்கு மேல் கை உயர்த்தியிருந்தனர். மாணவர்கள் மனதில் கெட்ட சொல்லாகத்தான் இருக்கும் என்பது எனக்கு முன்னமே தெரியும் அதனால் எந்த ஆச்சரியமும் எனக்கில்லை.

வள்ளுவத்தில் மயிர்

"மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமா" (968) என்ற குறளிலும்,

"தலையின் இழிந்த மயிரனையர்" (964) என்ற குறளிலும் மயிர் என்பதை நேரடியான பதத்திலேயே வள்ளுவர் பயன்படுத்துகிறார். அவரின் காலத்தில் மயிர் என்பது கெட்ட சொல்லாகப் பயன்பாட்டில் இருந்திருந்தால் அவர் எப்படி மயிர் என்ற சொல்லை நேரடியான பதத்தில் திருக்குறளில் பயன்படுத்தியிருப்பார்?

வீழ்ந்த முடியே இழி மயிரானது

கெட்ட வார்த்தையாக வள்ளுவர் காலத்தில் இல்லாத சொல் எப்படிக் கெட்ட வார்த்தையானது. ஒருவர் நம்மை மயிர் என்று திட்டி விட்டால் என்ன பொருளில் புரிந்து கொண்டு கோபப்படுகிறோம்? என்ற கேள்வியை மாணவர் முன் வைக்கையில் ஒருவரிடமும் பதில்லை. பதில் இருக்காது என்பதும் எனக்குத் தெரியும். ஏனெனில் முடி இழி மயிரானதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அந்தக் காரணத்தை உணர மீண்டும் திருக்குறளுக்குள் தான் சென்று வர வேண்டும்.

தமிழர்களிடம் முடிவெட்டுதல் என்பது வள்ளுவருக்குப் பிற்காலத்தில் வந்த ஒன்று இருக்க வேண்டும். அப்படி எனில் வள்ளுவர் காலத்தில் முடித்திருத்தம் என்பது என்னவாக இருந்தது? வள்ளுவரே சொல்கிறார், "மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்" முடித்திருத்தம் என்பது மழித்தலாகவும் அல்லது முடி வளர்த்தலாகவும் மட்டுமே இருந்திருக்கிறது. அந்த இரண்டு நிலையிலுமே முடி மேன்மையாக இருந்திருக்கிறது. ஆனால் தலையிலிருந்த தானே வீழ்ந்த முடி என்பது இழிவானதாகப் பார்க்கப்பட்டுள்ளது. இதைத்தான் "தலையின் இழிந்த மயிரனையர்" என்ற குறளில் தெளிவுபடுகிறது. இன்னும் பிற்காலத்தில்தான் முடி வெட்டுதல் அல்லது முடியைக் குறைத்தல் என்கின்ற முடி வெட்டுதலாகிய 'கிராப்' எனப்படும் முடித்திருத்தம் வருகிறது.

மழித்தல் காலத்தில் மழிக்கப்பட்ட மயிர் சவரி முடி போன்ற பயன்பாட்டிற்குப் பயன்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் பல துண்டுகளாக வெட்டபட்ட முடியால் எந்தப் பயன்பாடும் இல்லாமல் போயிற்று. வெட்டிக் கீழே தள்ளப்பட்ட பின்பு அருவருப்பாகப் பார்க்கப்பட்டது. பயன்பாடின்றி வெட்டப்பட்ட முடி பாழாய்ப் போனது. இப்படிப் பாழாய்ப்போன மயிர் தான் இழிவானதாக மாறிப் போனது. இந்தப் பொருளில் தான் நம்மை யாரேனும் மயிர் எனத் திட்டினால் தவறானதாகப் புரிந்து கொள்கிறோம். பொருள் புரியாமல் கோபப்படுகிறோம். மற்றப்படி மயிர் என்பது அத்தனை கொடிய கெட்ட வார்த்தையல்ல என்பதை மாணவர்களுக்கு உணர்த்தி முடித்த பின் மீண்டும் "புலவர் குழந்தையின் இராவண காவியத்தின் வரிகளை "மயிர்த்தலைச் சிறார்" என எந்தத் தயக்கமும் இன்றி உரக்க வாசித்தேன். வகுப்பு அத்தனை பொருள் பொதிந்த அமைதியோடு கடந்து போயிற்று.

- மகா.இராஜராஜசோழன், குழந்தைகளுக்கான தமிழ்ப் பயிற்றுநர், செம்மொழி தமிழ்க்கூடம், சீர்காழி

Pin It