சூரிய பிரகாஸ் என்பவர் கண்பார்வை குறைபாடுடைய ஒரு மாற்றுத் திறனாளி மாணவர். புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சமற்கிருதத்தில் இளநிலை முனைவர் ஆய்வுப் பட்டம் பயில்கிறார். கடந்த சனவரி 5-ஆம் தேதி அப்பல்கலைக் கழகத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் (ABVP) அமைப்பைச் சேர்ந்த கர சேவகர்களால் நடத்தப்பட்ட, கோழைத்தனமான முரட்டுத் தாக்குதலில் அவரது இடக்கை வீங்கிப் புடைத்து விட்டது. கடந்த ஞாயிறன்று நிகழ்ந்த அந்தக் கொடூரச் சம்பவத்தின்போது, கரசேவகர்கள் அவரது இடக்கையை இரும்புத் தடியால் தாக்கி இருக்கிறார்கள். விடுதி அறைக் கதவில் சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் புகைப்படம் ஒட்டியிருந்தது என்பதுதான், தான் தாக்கப்பட்டதற்கான காரணம் என்று பிரகாஸ் கூறுகிறார்.

நேரு பல்கலைக் கழகத்தில் கடந்த சனவரி ஐந்தாம் தேதி நடைபெற்ற காட்டுத் தாக்குதல், இதற்கு முன்பு வரலாற்றில் என்றும் நிகழ்ந்திராத ஒரு முன்னுதராணமற்ற நிகழ்வாகும். ஆனால், நமது இந்தியக் கூட்டாட்சி தேசியம், கொடிய நச்சுப் பாம்பின் விசப் பற்களை ஒத்த கொடுங்கோலாட்சியாளர்களிடம் இருந்து காப்பாற்றப் படுமேயானால், அந்த வன்முறைக்கு எதிராக நாமாற்றிய எதிர்வினைகள் யாவும் நாளைய வரலாற்றில் இடம் பெறும் என்பதில் ஐயமில்லை.

jnu protest 6jan20இந்தத் தாக்குதலின்போது மகளிர் விடுதியிலிருந்த மாணவியர்களின் மீதும் ஆசிரியர்களின் மீதும் கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியும், அவர்கள் மீது அமிலத்தை வீசியும் துரத்தி இருக்கிறார்கள். அவ்வாறு தாக்குதலுக்கு ஆளான ஆசிரியர்களும், மாணவர்களும், அத்தாக்குதலுக்கு ஆளான மறுநாளே அதற்கெதிரான ஒரு கலக அணிவகுப்பிற்குத் திரண்டு விட்டார்கள். அத்தகைய ஓர் எதிர்க்கலக அணிவகுப்பிற்கு ஆதரவாக, பாலிவுட் நட்சத்திர நடிகை தீபிகா படுகோன், களத்தில் நின்று நேரடியாக ஆதரவு அளித்துள்ளார். அரசிற்கு எதிரான அணிவகுப்பு என்றபோதும், தன்னுடைய அடையாளத்தை அவர் மறைத்துக் கொள்ளவில்லை.

இந்தக் கொடூரமான, கோரத் தாக்குதலுக்காக கூட நாம் கலக்கம் அடையவில்லை. ஆனால் அந்தத் தாக்குதலுக்கு பின்னால் இருக்கக் கூடிய ஓர் அறமோசமான தருக்கப் பிழைதான் நம்முடைய உண்மையான கலக்கத்திற்கான காரணமாக இருக்கின்றது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் ஏன் தாக்கப் பட்டது? திடீரென்று உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்திற்கு எதிராக கலகக்குரல் எழுப்பும் அப்பல்கலைக் கழகத்தை அதிகார வர்க்கம் வெறுத்து ஒதுக்குகின்றது. அதற்குக் காரணம், உயர்கல்வியை தனியார் மயமாக்கத் துடித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசின் பேரார்வத்திற்கு அப்பல்கலைக்கழகம் இடையூறு செய்வதாக அவர்கள் கருதுகிறார்கள். அத்துடன், அப்பல்கலைக்கழகம் வலுப்படுத்தும் இடதுசாரிக் கருத்தாக்கத்தை தடை செய்ய வேண்டும்; அப்பணியில் ஈடுபடும் பேராசிரியர் பெருமக்களை இழிவுபடுத்த வேண்டும் என்பன போன்றவை எல்லாம் அவர்களின் உள்நோக்கமாக இருந்தது. நேரு பல்கலைக் கழத்தின் அடிப்படை கருத்தியலுக்கும், அதன் கருத்தாக்கங்களுக்கும் எதிராக ஓர் இனப்படுகொலையை நிகழ்த்த வேண்டுமென அவர்கள் அணி திரண்டார்கள். பல்கலைக் கழகத்தை கிட்டதட்ட மூன்று மணிநேரத்திற்கு கரசேவகர்களுக்காக கட்டவிழ்த்து விட்ட இச்சம்பவம் நாட்டிலொரு சிறிய அதிர்வலையை உண்டாக்கி இருக்கிறது.

இந்தக் கோரச் சம்பவத்தை முற்றாக விவரிக்கவியலாத அதன் தன்மையில்தான் அதற்கான விளக்கமும் அடங்கி உள்ளது. எந்தக் காரணமுமின்றி வன்முறை நிகழ்த்தப்படும்போது மட்டுமே, உண்மையான பீதியையும் பதற்றத்தையும் அது உருவாக்கி விடுகிறது.

நேரு பல்கலைக் கழத்தில் நிகழும் அமைதியான போராட்டங்களை அரசியல் வழியில் பல்வேறு வகையில் எதிர்கொள்ள முடியும். ஆனால், அதற்கு மாறாக, வன்முறைக்கு அனுமதி அளித்திருப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையை நேர்மையாக அணுகும் வாய்ப்பை அரசு இழந்திருக்கிறது என்று சொல்ல வேண்டும்.

நேரு பல்கலைக் கழகத்தில் நடந்ததைப் போல காரணமற்ற, காட்டுமிரண்டித் தாக்குதலை நடத்தும்போது அது ஏற்படுத்தும் ஒருவிதமான அச்சத்தை மூலதனமாக்கி, நாடு முழுவதும் தனக்கு இருக்கக் கூடிய எதிர்ப்பைத் துடைத்து எறிந்து விடலாம் எனப் பொருள்படும்படியான ஒரு நோயரசியல்வாதத்தை அரசு எதிரணிக்குக் கற்பிக்க முயல்கிறது.

இந்தத் தாக்குதலின் மீதும், வன்முறையின் மீதும் கூறப்படுகின்ற அனைத்து விளக்கங்களுக்கும் அப்பால், இந்தத் தாக்குதலின் மூலம் ஒருவிதமான பயத்தினை அரசுக்கெதிராக போராடுபவர்களின் மத்தியில் தோற்றுவிக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச உத்திரவாதத்தை உறுதி செய்யும் வகையில் இந்தத் தாக்குதல் திட்டமிடப் பட்டிருக்கிறது. போராட்டக்காரர்கள் மத்தியில் உருவாகும் அத்தகைய ஒரு பயம், நீண்ட நெடிய காலத்திற்கு தங்களுக்குச் சாதகமான அரசியல் இலாபத்தை ஈட்டித் தருவதோடு, பிளவு அரசியலின் வழி வந்து சேரும் வாக்கு வங்கியின் வலிமையையும் பெருக்கிக் கொள்ள முடியும் என்று அதிகார வர்க்கம் கருதி இருக்கலாம்.

ஒருவேளை, பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரும் உள்துறை அமைச்சகமும் சேர்ந்து இத்தகையதொரு துல்லியமான அரசியல் சதித் திட்டக் கணக்கைப் போட்டிருக்கலாம்.

இந்தத் தாக்குதலை அடுத்து, சனவரி ஏழாம் தேதியன்று நேரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் எம்.ஜெகதீஸ்குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கை, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போன்று அமைந்துள்ளது. எது நடந்தாலும் அவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு மீண்டும் மாணவர்களின் நிகழ்நிலைப் பதிவுகளை (online registration) தொடங்குங்கள் என்று பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு அவர் அறிவுருத்தி இருக்கிறார்.

துணைவேந்தரின் இச்செயல், நாட்டின் முதன்மை அமைச்சர் (Prime Minster) நரேந்திர மோடி, ஈகைத்திருநாளில் (Eid – இரமலான் பண்டிகை) காசுமீரக (Kashmir) இசுலாமியர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திவிட்டு, அடுத்த வந்த சில நாட்களிலேயே, காசுமீரகத்திற்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சிறப்புநிலை அதிகாரத்தை (சட்டப்பிரிவு–370) முறித்தெறிந்ததை நினைவுபடுத்துகிறது. தங்களுக்குள் இருக்கின்ற இந்தக் கொடுவெறித்தனத்தை இந்துக்கள் பலருக்கும் பரப்ப வேண்டுமென அவர்கள் எண்ணுகிறார்கள்.

புதுதில்லியை தேர்தல் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், ஆளும் தரப்பு கிளப்பி இருக்கும் இந்தச் சிக்கல் தங்களுக்கான தேர்தல் பலனைத் தரும் என்று கருதுகிறார்கள். மக்களிடையே காணப்படும் சிக்கலுக்கானத் தீர்வினை முன் வைப்பதன் மூலம் வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதைத்தான் பெரும்பாலான அரசுகள் விரும்பும். ஆனால் மோடி அரசு இதற்கு நேரெதிராக, சமூகத்தில் இதுவரையிலும் காணப்படாத ஒரு புதுச் சிக்கலை உருவாக்கி, அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவதையே தனது ஒரே அரசியல் வழிமுறையாகக் கொண்டது.

பாரதிய ஜனதாக் கட்சி இதற்கு முன்பு, கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற புதுதில்லி தேர்தலின்போது, திரிலோகப்புரி (Trilokpuri) எனுமிடத்தில், தலித்துகளுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையே மோதலைத் தூண்டி விட்டது. கிறித்துவ தேவாலயங்களின் மீது திட்டமிட்ட தாக்குதலையும் நடத்தியது.

பல்கலைக் கழகத்தை தேர்தல் அரசியலுக்கான ஒரு தளமாக பயன்படுத்திக் கொள்வது முன்னுதாரணமற்ற ஒரு நடவடிக்கையாகும். ஆனால், இவ்வளவு கலவரம் நடந்த பின்னும், அதன் அதிகார வரம்பு குறைவாக இருந்தாலும் கூட, ஒட்டு மொத்த பல்கலைக் கழத்தின் சிந்தனை என்பது உலக அளவிலான ஒரு மாற்று சமூக சிந்தனைப் பார்வையை முன் வைப்பதாக உள்ளது.

பெரும் செல்வாக்கைப் பெற்றிருக்கும் மோடி அரசு இதனைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், ஆர்.எஸ்.எஸ்-ஐ பின்புலமாகக் கொண்ட மோடி - அமித்ஸா கூட்டணி, இந்தப் பிரச்சனையை அவ்வாறு எளிதில் கடந்துவிட விரும்பவில்லை. தங்களுக்கு எதிரான கருத்துடைய ஒவ்வொருவரையும் எதிரியாகக் கருதவும், வாய்ப்புள்ள ஒவ்வொரு களத்தையும் எதிரியின் கூடாரமாகக் கட்டமைக்கவும் அவர்கள் கடுமையாக முயற்சி செய்கிறார்கள்.

இவ்வாறு கூறுவதற்கு தக்க சான்றும் உள்ளது. நேரு பல்கலைக் கழகத்தில் நடந்த அந்தக் கொடூரத் தாக்குதலுக்குப் பின்பு நடத்தப்பட்ட கண்டனக் கூட்டத்தை, பறக்கும் ஒளிப்படக் கருவி (drone) மேலே பறந்து படம் எடுத்துக் கொண்டிருந்தது. பொதுவாக, இதுபோன்ற திட்டமிடல்களை எல்லாம், ஒரு நாட்டின் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழும் புரட்சியாளர்களை ஒடுக்குவதற்காகத்தான் ஆளும் அரசு பயன்படுத்தும். ஆனால் இங்கே மாணவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்பதிலிருந்து தான் மோடி-ஸா கூட்டணி இப்பிரச்சனையை அவ்வளவு எளிதில் கடந்துவிட விரும்பவில்லை என்பதை காட்டிக் கொடுக்கின்றது.

கரசேவர்களை பல்கலைக்கழகத்தை நோக்கி கட்டவிழ்த்து விட்டதிலிருந்து ஒன்று தெளிவாகப் புலப்படுகிறது. வலதுசாரி ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பியின் நோய்மைமிக்க அரசியலுக்காக வன்முறையை அவர்கள் எவ்வளவு தூரம் கையாளுகிறார்கள் என்பதையும், அவர்களது நோயரசியலுக்கு வன்முறை எவ்வளவு தூரம் பங்காற்றுகிறது என்பதையும் இந்தத் தாக்குதலிருந்து தெளிவாக அறிய முடிகிறது. வன்முறையும், வலதுசாரி பி.ஜே.பி அரசியிலும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை; இதுபோன்ற கோழைத்தனமான செயல்களை நிகழ்த்திக் காட்டுவதிலும் அதன்மூலம் வெற்றி பெறுவதிலும் அவர்கள் பெருமிதம் அடைகிறார்கள்.

இது ஓர் இரக்கமற்ற, பரிவுணர்ச்சியற்ற தேசியவாதத்தின் பண்பாகும். பல்கலைக் கழத்தின் தற்போதைய துணைவேந்தரின் செயல்களிலும் இந்தப் பண்பு எதிரொலிப்பதைப் பார்க்க முடிகிறது. அவர் பரிவுணர்ச்சியற்றவராக மட்டும் காணப்படவில்லை. தனக்கெதிராக செயல்படும் எவர் ஒருவரின் மீதும் கொடுங்கோன்மையோடு செயல்படுபவராகவும் இருக்கிறார்.

துணைவேந்தரையும் அவர் ஆதரிக்கின்ற ஒரு தனி அடையாளம் கொண்ட மத அரசியலையும் பெரும்பான்மை மக்கள் உயர்த்திப் பிடிக்க மறுப்பதனால் வரும் ஆத்திரத்தில் தான் இத்தகைய பரிவுணர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துகிறார்கள். இதுதான் அவர்களுடைய உள்ளியல்பு. காரணம், இத்தகைய அரசியலுக்கு வெளியே அவர்கள் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள்; தனிமையின் நெடிய நிழல், மதிப்பற்றுப் போன அவர்தம் அரசியல் செயல்பாடுகள் அவர்களை உள்ளுக்குள் புழுங்கச் செய்கின்றது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழத்தின் உண்மையான சிக்கல் என்பது, அதன் உறுதியான நிலைப்பாடுதான். பல்கலைக் கழகம் சிக்கல்களை சந்திக்கும் போதெல்லாம், சிக்கலின் தன்மை எத்தன்மையாயினும், அவற்றிலிருந்து உடனடியாக விடுபட்டு இயல்புநிலைக்குத் திரும்பி விடுகிறது. இந்த ஆற்றலுக்கான காரணம், பல்கலைக் கழகத்தின் ஒவ்வொரு நாள் நடைமுறைகளுமே முரண்பாடுகளின் அடிப்படையிலேயே அமைவதனால்தான். சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின் தங்கிய பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களை நேரு பல்கலைக் கழகம் மிகச் சிறந்த சமூக ஆளுமைகளாக உருவாக்குகின்றது. அவ்வாறு உருவாகும் முற்போக்காளர்கள் எல்லா வகையிலும் முன்னேறி இருக்கிறார்கள். சாதியப் பாகுபாடுகள் மிகுதியாக நிறைந்த ஒரு சமூகத்தில் இதைவிட ஒரு பெருஞ்சவால் ஏதுமிருக்க முடியாது. இதுதான் நேரு பல்கலைக் கழகம் அரை நூற்றாண்டு காலமாகச் சந்தித்து வரும் உள்ளார்ந்த சவால். எனவே தான் நாம் கண்கூடாகப் பார்த்தது போன்ற நேரடித் தாக்குதல் பல்கலைக் கழகத்தை அதிர்ச்சியடையச் செய்தாலும் கூட, அதன் உண்மையான அடையாளத்தை மூழ்கடித்துவிட முடியாது.

சமூகத்தில் ஆழப் புதைந்திருக்கும் ஒரு சமூகச் சாவலை (பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை உயர்த்துதல்), பல்கலைக் கழகம் அதன் அன்றாட நிகழ்வுகளில் ஒரு பகுதியாக சந்திக்கும்போது, இந்தியாவின் அந்த இழிவான உண்மையை மறைப்பதற்காகவோ அல்லது அதில் ஒரு பிறழ்ச்சியை ஏற்படுத்துவதற்காகவோ இதுபோன்ற நேரடித் தாக்குதல்களை அவர்கள் நிகழ்த்துகிறார்கள். ஆனால், நேரு பல்கலைக் கழகம் இதுபோன்ற கொடுஞ்செயலுக்கு அஞ்சாமல் பீடு நடை போடுகிறது.

இந்தக் காட்டுமிராண்டித் தாக்குதலைக் கண்டு மாணவர்களும் பேராசிரியர்களும் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்திருப்பது உண்மை தான்; ஆனால் அவர்கள் ஒருபோதும் நலிவடையவில்லை, பின்வாங்கவில்லை. இந்தத் தாக்குதலை அடுத்து, இந்தப் பல்கலைக் கழகத்தை தங்களுக்கான இடமாக மீட்டுக் கொணர அவர்கள் உடனே அணி சேர்ந்திருக்கிறார்கள்.

படைக்கலமற்ற மாணவர்களை திடீரென்று தாக்கிய வலதுசாரிகளின் நிறைப்பயனற்ற ‘வெற்றி’ கொண்டாட்டத்தைப் பார்க்கும்போது, எதிரணியை அல்லது எதிர்க் கருத்து உடையவர்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள அவர்களுடைய வலதுசாரி அரசியல் உதவாத பொழுது, வன்முறையின் மூலம் வென்று விடலாம் என்ற இடத்திற்கு அவர்கள் வந்து சேர்கிறார்கள். தங்களது கருத்தை மாற்றிக் கொள்ள விரும்பாத, தற்குறிகளாக, லும்பன்களாக தங்களை நிறுவிக் கொள்கிறார்கள்.

இடையில் நின்று தரகு அதிகாரம் செய்பவர்களைப் போல, வலதுசாரி குண்டர்கள் செயல்பட்டாலும் அவர்களது தாழ்வு மனப்பான்மை இதில் தெளிவாக வெளிப்பட்டு விட்டது.

நரேந்திர மோடி – அமித்ஸா கூட்டணியின் ஒரு தனிவகைப்பட்ட மத அரசியல் போக்கு பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்த இக்கட்டான அரசியல் சூழலில், அவர்களிடமிருந்து விடுதலையை வேண்டி நிற்கும் பெரும்பான்மை மக்களுக்கு, அத்தகைய விடுதலையை நேரு பல்கலைக் கழகம் போன்ற தளங்களே வழங்கும்.

நேரு பல்கலைக் கழகத்திற்கு எதிரான கோபம் என்பது, வலதுசாரி அரசியல் தான் செல்லும் பயணத்திற்கு எதிராக எவரொவரும் மனதளவிலும் நினைக்கக் கூடாது என்ற எண்ணம் ஏற்படுத்தும் கோபம் தான். இந்த உள்ளார்ந்த விருப்பம் ஒரு மோசமான அச்சத்தைத் தோற்றுவிக்கிறது. ஆனால், இவற்றிற்கெல்லாம் நேரெதிராக, நேரு பல்கலைக் கழகம் மட்டுமே அதற்கான காப்பரணாக விளங்கப் போகிறது.

மூலம்: https://thewire.in/rights/jnu-and-the-pathology-of-the-right

கட்டுரையாளர்: அஜய் குடவர்த்தி (இணைப் பேராசிரியர், அரசியல் கல்வி மையம், நேரு பல்கலைக் கழகம்)

தமிழில் : ப.பிரபாகரன்

Pin It