(மிகப் பழைய தமிழ்ப் படங்கள் "யத்பவிஷ்யன் அல்லது ரம்பையின் காதல்" என்பது போல் இரண்டு தலைப்புகளுடன் வெளிவந்தன. அதைப் போல் இக்கட்டுரைக்கும் இரண்டு தலைப்புகள் பொருத்தம் கருதிக் கொடுக்கப்பட்டு உள்ளன.) தாய் மொழி அல்லாத பிறிதொரு மொழியில், அம்மொழியினரை விடப் புலமையுடன் விளங்குபவர்கள் அவ்வப்போது ஆங் காங்கே இருக்கவே செய்கின்றனர். இத்தாலிய மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட கான்ஸ்டன்ஸே பெஸ்கி என்ற இயற்பெயர் கொண்ட வீரமாமுனிவர் தமிழ் மொழியில் பெரும் புலமை பெற்றிருந்தார். அவர் தேம்பாவணி என்ற காப்பி யத்தைப் படைத்தார் என்பது மட்டும் அன்றித் தமிழில் இதற்கு முன் படைக்கப்பட்டிராத சதுரகராதி என்ற நான்கு வகை அகராதியையும் படைத்தார். இது அவர் தமிழைத் தாய் மொழி யாகக் கொண்ட பல தமிழ்ப் புலவர்களை விடப் புலமை வாய்ந்தவர் என்பதை நிறுவுகிறது. தமிழர்கள் அதை மகிழ்ச்சி யுடன் அங்கீகரிக்கவே செய்கின்றனர். ஆனால் யாரும் (குறிப்பாக இத்தாலியர்கள்) அவர் உரிய அளவிற்குப் போற்றப்படவில்லை என்று புலம்புவது இல்லை.
இதே போல் சீனிவாச சாஸ்திரியார் ஆங்கிலேயர்களே வியக்கும் அளவிற்கு ஆங்கில மொழியில் பெரும் புலமையுடன் விளங்கினார். ஒரு முறை வின்ஸ்டன் சர்ச்சில் tribian என்று உச்சரிக்க வேண்டிய சொல்லை triphibian என்று தவறாக உச்சரித்தார். இத்தவறை, சீனிவாச சாஸ்திரி சுட்டிக் காட்டினார். வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு அரசியல் தலைவர் மட்டும் அல்ல; ஆங்கில மொழியில் நல்ல புலமை வாய்ந்தவரும் ஆவார். தான் புலமை பெற்று இருக்கும் தன் தாய் மொழியில் தவறு செய்ததைப் பற்றி அவர் வெட்கப்பட்டார். சீனிவாச சாஸ்திரியின் ஆங்கிலப் புலமைக்குத் தான் தலை வணங்குவதாகக் கூறினார்.
சர்ச்சில் செய்த தவறு, தமிழில் சிலர் 'அவற்றை' என்பதற்கு 'அவைகளை' என்று உச்சரிப்பது போன்று தவறான சொல்லாட்சி யாகும். அரசியல் தலைவ ராக முழு நேரப் பணியும், மொழிப் புலமையை விருப்பமான பணியாக வும் ஏற்றுக் கொண்ட ஒரு வர் செய்த இது போன்ற தவறை, தமிழில் மொழிப் பணியை முழு நேரப் பணி யாகக் கொண்டவர்களும் செய்துள்ளனர். எடுத்துக் காட்டாக உ.வே.சாமிநாதைய்யர் பல இடங்களில் ‘அவற்றை', ‘இவற்றை', ‘என்பவற்றை', ‘வேண்டியவற்றை' என்று எழுது வதற்குப் பதிலாக ‘அவைகளை', ‘இவைகளை', ‘என்பவை களை', ‘வேண்டியவைகளை' என்று எழுதி இருக்கிறார்.
மிகப் பெரிய செல்வாக்கு வாய்ந்த ஒரு அரசியல் தலைவர் சீனிவாச சாஸ்திரியின் ஆங்கிலப் புலமைக்குத் தலை வணங்குவதாகக் கூறிய நிகழ்வை மையமாகக் கொண்டு, அவ்வளவு உயர்வான தகுதி கொண்ட சீனிவாச சாஸ்திரியார் உரியபடி கவுரவிக்கப்படுவது இல்லை என்று பார்ப்பனர்கள் வாய்ப்பு கிடைத்த போது மட்டும் அல்ல; வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டும் புலம்பிக் கொண்டே இருக்கின்றனர்.
ஆனால், இதே வகையில் (சொல்லப் போனால் இதைவிட மேலாகவே) இன்னொரு செல்வாக்கு மிகுந்த ஆங்கிலேயர் ஒருவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரைப் புகழ்ந்து இருக்கிறார். ஆனால் இது யாருக்குமே தெரிய வாய்ப்பில்லா மலேயே இருக்கிறது.
1919 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்து கொண்டு இருந்த போது, முதல் உலகப் போர் முடிவுற்ற பின், மாண்டேகுசெம்போர்டு சீர்திருத்தங்களை அமலாக்க ஆங்கில அரசாங்கம் அனைவருடைய ஒத்துழைப்பையும் கோரியது. தேர்தல்கள், வாக்குரிமை, தொகுதி நிர்ணயம் முதலிய விஷ யங்களைப் பற்றி ஆராய இலண்டனில் நாடாளுமன்றக் குழுவின் முன் சாட்சியமளிக்க மக்கள் பிரதிநிதிகளை ஆங்கில அரசு அழைத்தது. இந்த அழைப்பைக் காங்கிரஸ் கட்சி நிராகரித்தது. ஆனால் தென் இந்தியாவில் பார்ப்பனர் அல்லாதாரின் இயக்கமான நீதிக் கட்சியின் சார்பில், பார்ப்பனர் அல்லாத மக்களின் பிரச்சினைகள் பற்றியும், அம்மக்களின் முன்னேற்றத்திற்கு அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றியும் ஆங்கில ஆட்சியாளர்களிடம் விளக்குவதற்காக, டி.எம்.நாயரின் தலைமையில் ஒரு குழு இலண்டன் நகருக்குச் சென்றது. அக்குழுவில் மதுரை வழக்கறிஞர் என்று நீதிக் கட்சியினரால் செல்லமாக அழைக்கப்பட்ட எல்.கே.துளசிராம் இடம் பெற்று இருந்தார்.
அக்குழுவினர் முன் 25-8-1919 அன்று சாட்சியம் அளித்த நீதிக் கட்சியினர், இந்தியாவில் பார்ப்பனர் அல்லாத மக்கள் பார்ப்பனர்களால் ஒடுக்கப்படுவதைப் பற்றி விளக்கிக் கொண்டு இருந்தனர். அப்பொழுது இவர்களுடைய குறைகளைக் கேட்டுக் கொண்டு இருந்த ஆங்கிலேயர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இந்திய மக்கள் தொகையில் பார்ப் பனர்கள் 3 மட்டுமே. மற்றவர்கள் 97 உள்ளனர். இவ்வளவு பெரும்பான்மை யான மக்கள் சிறு எண்ணிக்கையிலான பார்ப்பனர் களைக் கண்டு அஞ்சுவது அவர்களுக்கு வேடிக்கை யாக இருந்தது. இவர்களுடைய குறைகளைக் கேட்டுக் கொண்டு இருந்த, ஆங்கில அரசு நியமித்த குழுவின் தலைவர் எட்வின் சாமுவேல் மாண்டேகு (Edwin Samuel Montague) இதை அவர்களிடம் கேட்டே விட்டார். இவ்வினாவைக் கேட்டதும், நீதிக் கட்சிக் குழுவினரில் இருந்தவர்கள் என்ன விடை சொல்வது என்று தெரியாமல் திகைத்துப் போனார்கள். ஆனால் எல்.கே.துளசிராம் சிறிதும் பதறாமல், காட்டில் ஆயிரக் கணக்கில் மான்கள் இருந்தாலும் அவை ஒரே ஒரு சிங்கத்தைக் கண்டு எப்படி அஞ்சுகிறதோ, அதே போல், இந்தியாவில் மிக மிக அதிகமான எண்ணிக்கையில் உள்ள பார்ப்பனர் அல்லாத மக்கள் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள பார்ப் பனர்களைக் கண்டு அஞ்ச வேண்டி உள்ளது என்று கூறினார்.
எல்.கே.டி.யின் உடனடியான பதிலைக் கேட்ட உடன், ஆங்கிலேயர்கள் சிறிது நேரம் அசைவற்று நின்று விட்டனர். அவர்களால் உடனடியாக எதிர்வினாவைத் தொடுக்க முடிய வில்லை. அதே சமயத்தில் எல்.கே.டி. கூறியதை அப்படியே ஏற்றுக் கொண்டு நீதிக் கட்சியின் பக்கம் தான் நீதி இருக்கிறது என்று முடிவுக்கும் வர முடியவில்லை. ஆங்கிலேயர்கள் திகைத்து நின்றததைப் பார்த்த எல்.கே.டி. தன் பேச்சைத் தொடர்ந்தார். இந்தியாவுக்கு வருகை புரிந்த ஆங்கிலேயர்களில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், சமூக சேவகர்கள், மதப் பிரச்சாரகர்கள், சுற்றுலாப் பயணிகள் எனப் பலவிதமான மக்கள் இருந்தனர். அவர்களில் தங்கள் அனுபவங்களைப் பதிவு செய்யும் வழக்கம் உள்ளவர்களும் இருந்திருந்தனர். அவ்வாறு பதிவு செய்தவர்களின் ஆவணங்களை எல்லாம் எல்.கே.டி. எடுத்துக் காட்டினார். ஆங்கிலேயர்களில் அனைத்துத் தரப்பு மக்களும் பார்ப்பனர்களின் ஆதிக்க மனப்பான்மையைப் பற்றியும், அதிகார வலிமையைப் பற்றியும் மிகத் தெளிவாகவும் மிக நுணுக்கமாகவும் எழுதி வைத்து இருந்தனர். அவற்றை எல்லாம் எல்.கே.டி. எடுத்துக் காட்டிய உடன், அவர்கள் (சிறு பான்மையான மக்கள் மிகப் பெரும்பான்மையான மக்களை ஒடுக்கி வைக்க முடியுமா என்று எண்ணி இருந்த) பழைய திகைப்பில் இருந்து விடுபட்டு, இப்படியும் இருக்கிறதே என்று புதிய திகைப்பில் ஆழ்ந்தனர். அவர்களுடைய கோரிக்கை யின் மேல் ஒரு நல்ல முடிவை எடுப்பதாக எட்வின் சாமுவேல் மாண்டேகு கூறினார்.
உடனே எல்.கே.டி.தான் கூற வந்தது இன்னும் முடிய வில்லை என்று கூறினார். ஆங்கிலேய அரசு அதிகாரிகள் கல்வி, சுகாதாரம், போக்கு வரத்து, விவசாயம் போன்ற துறைகளில் வளர்ச்சிக்காக எடுக்கும் நடவடிக்கைகளினால் பார்ப்பனர் அல்லாத மக்கள் முன்னேற்றம் அடைந்து விடுவார்கள் என்ற அச்சமோ ஐயமோ ஏற்பட்டால் / இருந்தால், அப்படி எதுவும் நடந்து விடக் கூடாது என்பதற்காக, பார்ப்பனர்கள் உள்ளறுப்பு வேலை செய்து அத்திட்டங்கள் நடக்கவொண்ணாமல் தடுப்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் விளக்கினார், இவ்வுண்மையை அனுபவ பூர்வமாக அறிந்து கொண்டு இருந்த சென்னை இராஜதானி யின் கவர்னர் எல்ஃபின்ஸ்டன் (Elphinstone), அதிகாரப் பணியில் பார்ப்பனர்கள் மட்டும் வேலை செய்வதால் தான் இவ்வாறு செய்ய முடிகிறது என்று புரிந்து கொண்டதைப் பற்றி யும் எல்.கே.டி. விளக்கினார். இவ்வுண்மையைப் புரிந்து கொண்ட கவர்னர் அதிகார வேலைகளில் பார்ப்பனர்கள் மட்டும் அல்லாது பல்வேறு சாதியினரையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று 1840ஆம் ஆண்டில் B.S.O.No.125இல் ஒரு ஆணை பிறப்பித்து இருப்பதையும் எடுத்துக் காட்டினார்.
ஆங்கிலேயக் குழுவினர் இதை வியப்புடன் கேட்டுக் கொண்டு இருக்கையில், அந்த ஆணையையும் பார்ப்பனர்கள் உள்ளறுப்பு வேலை செய்து நடைமுறைக்கு வராதபடி தடுத்து விட்டனர் என்பதையும் கூறினார். இவ்வளவு விளக்கங்களை யும் கேட்ட ஆங்கிலேய ஆட்சியாளர்கள், நீதிக் கட்சிக் குழு வினரிடம் அவர்களுக்குச் சாதகமான நடவடிக்கையை நிச்சயம் எடுப்பதாக உறுதி கூறினார்கள்.
கூட்டம் முடிந்து வெளியே வந்ததும், நீதிக் கட்சிக் குழு வினரில் இருந்த ஒவ்வொருவரும் எல்.கே.டி.யைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். தங்களில் யாருக்கும் இந்த யோசனை தோன்றவில்லை என்பது மட்டும் அல்ல; யாருமே இந்த அளவிற்கு ஆவணங்களைக் கையில் கொண்டு வரவில்லை என்றும் கூறினர். எல்.கே.டி. மட்டும் இல்லை என்றால், அந்தப் பயணமே முற்றாக வீணாகி இருக்கும் என்றும் கருத்துத் தெரிவித்தனர்.
அதன் பிறகு ஒரு நாள் மாலையில், இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியப் பிரநிதிகளை ஒரு தேநீர் விருந்துக்கு அழைத்து இருந்தனர். அவ்விருந்தில் எல்.கே.துளசி ராமும் கலந்து கொண்டார். இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர்தர் ஹெண்டர்சன் (Arthur Henderson), சைடன்ஹாம்ஸ் பிரபு (Lord Sydehams) ஆகியோரும் கலந்து கொண்டனர். அவர்கள் அளவளாவிக் கொண்டு இருந்த நேரத்தில் அந்த அறையில் தலை சிறந்த நிர்வாகி எனப் பெயர் பெற்றவரும், இந்தியாவின் பழைய அரசுப் பிரதிநிதியுமான (Viceroy), கர்சன் பிரபு (Lord Curzon) நுழைந்தார். அவர் நுழைந்ததைப் பார்த்த உடன் அனைவரும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றனர். எல்.கே.துளசிராமும் எழுந்து நின்றார். ஆனால் கர்சன் பிரபு துளசிராமின் அருகில் வந்து, துளசிராம் ஒரு மிகப் பெரிய அறிவாளி என்பதை, அவர் நாடாளு மன்றக் குழுவின் முன் அளித்த சாட்சியத்ததில் இருந்து, தான் புரிந்து கொண்டதாகக் கூறினார். அத்தகைய பேரறிஞர் தனக்காக எழுந்து நிற்கக் கூடாது என்று கூறி, அவரது தோளை அழுத்தி அமர வைத்தார். அத்துடன் மட்டும் நில்லாமல் அவருக்கு ஒரு சுருட்டைக் கொடுத்து, தானே அதனைப் பற்ற வைக்கவும் செய்தார். அப்பொழுது அங்கே சீனிவாச சாஸ்திரியும் இருந்தார்.
நிர்வாகத் திறமைக்கும், தலை வணங்கா ஆளுமைக்கும் பெயர் போன கர்சன் பிரபு, துளசிராமைப் பார்த்து மிகப் பெரிய அறிவாளி (genius) என்பதால் தனக்கு மரியாதை அளிக்கும் பொருட்டு எழுந்து நிற்க வேண்டாம் என்று கூறிய செய்தியானது, வின்ஸ்டன் சர்ச்சில் சீனிவாச சாஸ்திரியின் ஆங்கிலப் புலமைக்குத் தலை வணங்குவதாகக் கூறியதை விடப் பலமடங்கு சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். ஆனால் மிக மிகச் சிறப்பு வாய்ந்த இச்செய்தி யாருக்குமே தெரிவது இல்லை. அதைப் பற்றி எந்த ஊடகமும், கல்வி முறையும் கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. ஏன்?
எல்.கே.துளசிராம் பார்ப்பனர் அல்ல. பார்ப்பனர் அல்லாதார் எவ்வளவு பெரிய சாதனைகளைச் செய்தாலும், இந்திய ஆதிக்க வர்க்கம் அதை அங்கீகரிக்காமல் இருட்டடிப்புச் செய்யும். ஆனால் பார்ப்பனர்கள் சிறிய சாதனை செய்தாலும், ஏதோ அவர்கள் தான் இந்த உலகையே தாங்கி நிற்பது போன்ற உணர்வு ஏற்படும்படியான பிரச்சாரங்களைச் செய்யும். அதுவும் போதாது என்று அவர்கள் உரிய புகழை அடையவில்லை என்று அழுது புலம்பவும் செய்யும்; வாய்ப்புக் கிடைத்தால் உறுமவும் செய்யும். ஆனால் உண்மையில் பார்ப்பனர்கள் தங்கள் செயல்களுக்கு / சாதனைகளுக்கு எவ்வளவு பெயரை யும் புகழையும் அடையத் தகுதி உண்டோ அதை விடப் பல மடங்கு அடைந்து இருப்பார்கள்.
ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் பார்ப்பனர்களால் கற்பனையும் செய்ய முடியாத அளவிற்குச் சாதனைகளைச் செய்து இருந்தாலும், அவற்றை எல்லாம் இந்திய ஆளும் வர்க்கம் ஓசை இன்றி - ஓசை என்ன? சிறு முணுமுணுப்புக் கூட இன்றி - இருளில் மூழ்கடித்து விடும்.
இதை ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் அப்படியே ஏற்றுக் கொண்டு அடங்கி ஒடுங்கித்தான் இருக்க வேண்டுமா? இதற்குத் தீர்வே இல்லையா?
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. ஆதிக்க வர்க்கத்தின் கோணல் புத்திக்கு அடி பணிந்து கிடப்பது ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் உத்தியாக இருக்க முடியாது / கூடாது.
ஆங்கிலேயர்கள் வெளியேறி இந்திய அரசியல் அதிகாரம் பார்ப்பனர்களின் நேரடி ஆதிக்கத்திற்கு வந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேல் அம்பேத்கரைப் பற்றிப் பள்ளிக் கூடத்தில் பாடம் சொல்லித் தரப்படவே இல்லை. அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான வீரத் தலைவராக இருந்தார் என்பதால் முற்ற முழுக்க இருட்டடிப்புச் செய்யப்பட்டார். ஆனால் அவருடன் ஒப்பிடுகையில் கதிரவனுக்கு எதிரில் ஒரு மின்மினியைப் போன்று இருக்கக் கூடிய மகாதேவ கோவிந்த் இரானடே எனும் பார்ப்பனரைப் பற்றி அக்காலத்தில் பள்ளியில் பாடம் செல்லிக் கொடுக்கப்பட்டது.
மகாதேவ கோவிந்த் இரானடே அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்? மதங்கள் சுமத்தும் மூட நம்பிக்கைகளை எதிர்த்தார்; ஆனால் அவரது சுற்றத்தினரின் நெருக்குதலுக்குப் பணிந்து மூட நம்பிக்கைப் பிராயச்சித்தங்களைச் செய்தார். விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார்; குழந்தைப் பருவத் திருமணத்தை எதிர்த்தார்; ஆனால் அவரது முதல் மனைவி இறந்த பின் அவருடைய நண்பர்கள் ஒரு கைம்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்படி கூறியதை ஏற்றுக் கொள் ளாமல் தன் பெற்றோர்களின் சொற்படி ஒரு குழந்தையைத் திருமணம் செய்து கொண்டார். அப்படிப்பட்ட இரானடே ஒரு சமூக சீர்திருத்தவாதி என்றும் சுதந்திரப் போராட்ட வீரர் என்றும் பள்ளிக்கூடத்தில் பாடம் செல்லிக் கொடுத்தார்கள்.
ஆனால் அம்பேத்கர் என்றால் யார் என்று கேட்கும்படியாக அவரை இருளிலேயே வைத்திருந்தார்கள். ஆனால் தாழ்த் தப்பட்ட வகுப்பு மக்களின் தளராத முயற்சியினாலும், அயராத உழைப்பினாலும் அவரைப்பற்றித் தெருவில் சுவர் எழுத்துக் களின் மூலமும், சுவரொட்டிகள் மூலமும் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களின் இயக்கம் வளர்ந்து, இன்று அவரைப் பற்றிப் பள்ளிப் பாடத் திட்டத்தில் சேர்த்தே ஆக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களின் தளராத முயற்சியும், அயராத உழைப்பும் மற்ற ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு ஒரு வழி காட்டியாகும்.
நிர்வாகத் திறமைக்கும், தலைவணங்கா ஆளுமைக்கும் பெயர் போன கர்சன் பிரபுவினால், ஒரு அறிவாளி என்று வியந்து போற்றப்பட்ட, எல்.கே.துளசிராம் இந்திய அதிகார வர்க்கத்தினால் முற்ற முழுக்க இருளில் வைக்கப்பட்டு உள்ளார். அண்ணல் அம்பேத்கரை இருளில் இருந்து மீட்டெடுத்து, அவரது தொண்டுகளை, சாதனைகளை உலகுக்கு உணர்த்திய / உணர்த்திக் கொண்டு இருக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களைப் போல, எல்.கே.துளசிராமின் தொண்டுகளை, சாத னைகளை வெளி உலகத்தினருக்கு உணர்த்தக் கடுமையாக முயல வேண்டும்; அயராது உழைக்க வேண்டும்.
எல்.கே.துளசிராமைப் பேலவே ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சாதனையாளர்கள் எவ்வளவு பேர்கள் பார்ப்பன ஆதிக்க வர்க்கத்தினரால் இருட்டில் வைக்கப்பட்டு இருக்கிறார்களோ! அவர்களைச் சேர்ந்தவர்களும் கடுமையாக முயன்றும் அயராது உழைத்தும் அவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும். இது பொறுப்புள்ள இயக்கங்களின் அமைப்பு களின் நீங்காகக் கடமை!