சென்னை கார்ப்பரேஷனுக்குத் தலைவர் தெரிந்தெடுக்க வேண்டிய சடங்கு இம்மாதத்தில் நடக்க வேண்டும்.
சென்னை முனிசிபாலிட்டியில் இதுசமயமுள்ள 50 கவுன்சிலர்களில் பார்ப்பன கக்ஷியில் சுயராஜ்யக் கக்ஷிக்கும் சுயேச்சை கக்ஷிக்குமாக சுமார் 20 கவுன்சிலர்கள் இருக்கின்றார்கள். பார்ப்பனரல்லாதார் கக்ஷிக்கும் சுமார் 20 கவுன்சிலர்கள் இருக்கின்றார்கள். மீதி வெள்ளைக்காரர்களாக இருக்கின்றார்கள். ஆகவே, எந்த கக்ஷியாரும் வெள்ளைக்காரர்கள் தயவு இருந்தால் தான் வெற்றி பெற முடியும். இந்த நிலையில் வெள்ளைக்கார கவுன்சிலர்கள் இரண்டுக் கக்ஷித் தலைவர்களையும் தங்கள் முன் வந்து அவரவர்கள் கொள்கைகளை உபந்நியாசம் செய்யும்படிக்கும் அதில் யார் வெள்ளைக்காரர்களுக்கு அனுகூலமாயிருக்கிறார்களோ அவர்களுக்குத் தங்கள் ஓட்டை கொடுப்பதாகவும் சொன்னார்கள். அவர்கள் பேச்சை நம்பி இரண்டு கக்ஷிக்காரர்களும் அதாவது பார்ப்பனரல்லாத கக்ஷிக்காக முக்கியமாய் பனகால் ராஜாவும், பார்ப்பன கக்ஷிக்காக ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யரும் பேசினார்கள். மற்றும் ஸ்ரீமான்கள் பாத்ரோவும், சாமி வெங்கிடாசலம் செட்டியாரும் முறையே பேசி இருந்தாலும் முன்சொன்ன இருவர்கள் பேசினதையே பிரதானமாய் வைத்துப் பார்த்ததில் ஒருவரைவிட ஒருவர் பேசினது ஜாக்கிரதையாகவும் இரண்டர்த்தம் கொடுக்கக் கூடியதாகவும் வெள்ளைக்காரரையும் ஜனங்களையும் ஏமாற்றக் கூடியதாகவும் இருந்ததே தவிர ஒன்றும் வெள்ளைக்காரரால் மதிக்கப்படவில்லை.
காரணம் என்னவெனில் இந்த இரண்டு கக்ஷிக்கும் ஓட்டுக் கொடுப்பதற்கு வெள்ளைக்காரருக்கு இஷ்டமில்லை. என்னவென்றால் கோயமுத்தூர் மகாநாட்டில் கவர்னர் பிரபு பேரில் நம்பிக்கை இல்லாத தீர்மானம் நிறைவேற்றியதால் பார்ப்பனரல்லாதார் கக்ஷி மேல் இருந்த நம்பிக்கை வெள்ளைக்காரருக்கு விட்டு போய் விட்டது. சுயராஜ்யக் கக்ஷி கவுன்சிலர்கள் மானம், மரியாதை இல்லாமல் இழிமொழிகள் பரிமாறிக்கொண்டு மீன்கடை, கள்ளுக் கடைபோல் கலகம் செய்வதால் அவர்களுக்கு ஓட்டுக் கொடுக்கவும் இஷ்டமில்லை. இதுவும் தவிர சுயராஜ்ய கக்ஷியார் வெள்ளைக்காரர் ஓட்டுப் பெறுவதாயிருந்தாலும் அது ஒரு பார்ப்பனருக்கு வருவதற்கு இல்லாமல் இந்த தடவையும் ஸ்ரீமான் சாமி வெங்கிடாசலம் செட்டியாருக்கே போக வேண்டியிருக்குமாதலால் சுயராஜ்யக் கக்ஷியிலுள்ள பார்ப்பன கவுன்சிலர்களுக்கு தங்கள் கக்ஷியார் பேரால் ஆளை நிறுத்தவும் மனம் இல்லாமல் சூழ்ச்சி செய்து எப்படியாவது அது இந்த தடவை ஒரு பார்ப்பனருக்கு போகும்படி செய்ய வேண்டும் என்பது அவர்களுடைய கருத்து.
இந்த நிலையில் ஜி.எ. நடேசய்யர் என்கிற ஒரு பார்ப்பனரை சுயராஜ்யக் கக்ஷி பார்ப்பனர்கள் ரகசியமாய் தூண்டி விட்டு அவரைக் கொண்டு வெள்ளைக்காரர் ஓட்டுகளை சரி செய்யச் செய்து தாங்களும் உதவி செய்வதாய் வாக்களித்து (ஏனென்றால் ஸ்ரீமான் நடேசய்யருக்கு ஓட்டு செய்யாவிட்டால் ஜஸ்டிஸ்காரர்கள் வந்து விடுவார்கள். ஆதலால் ஜஸ்டிஸ்காரர்கள் வராமலிருப்பதற்கு வேறு ஒரு கக்ஷிகாரருக்கு ஓட்டு செய்தோம் என்று சொல்லிக் கொள்ளலாம் என்கிற சாக்கின் பேரில்) அவரையேத் தலைவராக்க வெகு பிரயத்தனங்கள் செய்கின்றார்கள். இந்த சூழ்ச்சி அறிந்த ஜஸ்டிஸ் கக்ஷியார் தங்கள் ஓட்டுகளை தாங்கள் வருவதற்கு இல்லாவிட்டால் ஒரு பார்ப்பான் வருவதைவிட பார்ப்பனரல்லாதாராவது வரட்டும் என்கின்ற எண்ணத்தின் பேரில் ஸ்ரீமான் சாமி வெங்கிடாசலம் செட்டியாருக்கு ஓட்டு செய்வதாய் ஒப்புக் கொண்டு அவருக்கு வலுவில் சொல்லியும் அனுப்பி விட்டார்கள். இது தெரிந்த வெள்ளைக்காரர்களும், பார்ப்பனர்களும் இஞ்சி தின்றக் குரங்கை போல் விழிக்கிறார்கள்.
எப்படியாவது பார்ப்பானை இந்த தடவை தலைவராக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தின் பேரில் பார்ப்பனர்கள் ஒரு புது யோசனை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது ஜஸ்டிஸ் கக்ஷியார் நல்ல எண்ணத்தின் பேரில் தங்கள் கக்ஷிக்கு ஓட்டுசெய்ய வரவில்லை. வகுப்பு துவேஷத்துடன் பார்ப்பான் வரக்கூடாது என்கின்ற எண்ணத்தின்மேல் சாமி வெங்கிடாசலம் செட்டியாருக்கு ஒரு பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையில் ஓட்டு செய்ய வருகின்றார்கள். ஆதலால் அம்மாதிரி ஓட்டுகளை பெறுவதின் மூலம் வகுப்பு துவேஷத்தை வளர்ப்பதற்கு இடம் தரக்கூடாது. எப்படியாவது பாடுபட்டு வகுப்பு துவேஷம் ஒழிவதற்கு அனுகூலமாய் இந்த தடவை ஒரு பார்ப்பனருக்கேத் தலைவர் பதவி செய்து வைக்க வேண்டுமென்று தர்ம நியாயம் பேசுகிறார்கள். பார்ப்பனர்கள் தயவினாலும், பணத்தினாலும் ஸ்தானம் பெற்ற பார்ப்பனரல்லாத கவுன்சிலர்கள் சிலரும் இதற்கு ஆமா ஆமா போடுகிறார்கள்.
என்ன சொன்னாலும் ஸ்ரீமான் சாமி வெங்கிடாசலம் செட்டியாரை சுலபத்தில் ஏமாற்ற முடியாது. ஆதலால் முடிவு எப்படி ஆகுமோ சொல்ல முடியாது. என்ன ஆவதானாலும் ஜஸ்டிஸ் கக்ஷிக்கு தலைவர் ஸ்தானம் கிடைப்பது கஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் வெள்ளைக்காரர்கள் சுயராஜ்யக் கட்சிக்காவது ஓட்டுச் செய்து கவுன்சில் மீட்டிங்கின்போது காதையும் கண்ணையும் மூடிக் கொள்ளவோ எழுந்து ஓடி விடவோ செய்வார்களேயல்லாமல் கவர்னர் பேரில் நம்பிக்கை இல்லாத தீர்மானம் செய்து இரட்டை ஆட்சியை ஒழிக்கின்றவரை உத்தியோகம் ஒப்புக் கொள்ளுவதில்லை என்று சொன்னவர்களுக்கு ஓட்டுச் செய்யவே மாட்டார்கள் என்று தோன்றுகிறது.
எது எப்படியானாலும் அதில் நாம் போற்றுவது ஒன்று. அதாவது கக்ஷிபேதம் பாராட்டாமல் எதிர் கக்ஷியாய் இருந்தாலும் அதை லக்ஷியம் செய்யாமல் பார்ப்பனரல்லாதார் என்கின்ற உணர்ச்சியின் பேரில் ஸ்ரீமான் சாமி வெங்கிடாசலம் செட்டியாருக்கு ஓட்டுக் கொடுப்பதாய் வலுவில் சொல்ல தைரியமாய் முன் வந்த பார்ப்பனரல்லாதார் கக்ஷியின் உணர்ச்சியை நாம் மனதாரப் பாராட்டுகின்றோம்.
(குடி அரசு - கட்டுரை - 13.11.1927)