நீதிக்கட்சி என்று சொல்லப்படுகின்ற பார்ப்பனரல்லாதாருக்கான கட்சி பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தோடு இணைக்கப்பட்ட நாள் தான் திராவிடர் கழகம் அல்லது திராவிடர் இயக்கம் நிலைபெற்ற நாளாகும்.

அதற்கு முன்னர் சென்னை அரசு வருவாய்க் கழக (Revenue Board) ஊழியர்கள் சிலர், சென்னை அய்க்கிய சங்கம் (Madras United League) என்ற பெயரில் பார்ப்பனரல்லாத அரசு அலுவலர்களின் நலனைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஓர் அமைப்பை 1912இல் தோற்றுவித்தனர். அந்த அமைப்பு, திராவிட இயக்க மூலவர்களுள் ஒருவரான டாக்டர் சி.நடேச முதலியாரின் வழிகாட்டுதலில் நடைபெற்றது. அதன் முதலாவது ஆண்டுவிழா டாக்டர் சி.நடேசனாரின் தோட்டத்தில் 1913இல் நடைபெற்றது.

அப்போதுதான் ஏன் மாறுதலையான ஒரு பெயரில் இயங்கவேண்டும் என்று கருதி, “சென்னை திராவிடர் சங்கம்” (Madras Dravidian Association) என்று அச்சங்கத்தின் பெயரை டாக்டர் சி.நடேசன் மாற்றினார். அதையொட்டி திராவிடர் மாணவர் விடுதி (Dravidan Students Home) என்ற பார்ப்பனரல்லாத மாணவர் விடுதியை அவரே அமைத்து நடத்தினார். மாணவரிடையே இன உணர்வு பரவிட அவ்விடுதி துணையாக இருந்தது.

தலைசிறந்த இந்திய தேசியவாதிகளாக இருந்த சர்.பிட்டி. தியாகராயச் செட்டியாரும் டாக்டர் டி.மாதவன் நாயரும் ஒரு சிறு கருத்து வேறுபாடு காரணமாகத் தங்களுக்குள் பேச்சுத் தொடர்பே இல்லாமல் இருந்தனர். அப்போதுதான் டாக்டர் சி.நடேசனாரின் வேண்டுகோளை ஏற்று டாக்டர் டி.எம்.நாயர் அவர்கள் முற்பட்டு இருவரும் தியாக ராயரைச் சந்தித்து தங்களுடைய இன நலன் காக்க மூவரும் இணைந்து செயல்படுவது என முடிவு செய்தனர். இது 1916இல் நடைபெற்றது.

அவர்கள் பார்ப்பனரல்லாதார் நலன்களைக் காக்க வேண்டி வலிமையான செய்தித் தாள் ஊடகம் வேண்டும் என்பதால் தென்னிந்திய மக்கள் சங்கம் என்கிற பெயரில் 1916 நவம்பர் இறுதியில் (South Indian Peoples Association) என்பதை நிறுவினர். அதனைத் தொடர்ந்து 1916 திசம்பரில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation) என்பதைத் தொடங்கினர். அச்சங்கம் 29.1.1917இல் செயல்படத் தொடங்கியது.

உடனடியாக (Justice) என்னும் ஆங்கில நாளிதழை வெளியிட முடிவு செய்தனர். அதற்கு ஆசிரியராக இருந்து பணியாற்றிட கருணாகர மேனன் என்பவர் ஒப்புதல் தந்து இருந்தார். ஆனாலும் அந்த முயற்சியைக் குலைக்க வேண்டும் என்று கருதிய டாக்டர் அன்னிபெசன்ட், சி.பி. இராமசாமி அய்யர் ஆகியோர் கருணாகரமேனனைத் தூண்டி, அவர் அப்பொறுப்பை ஏற்காமல் செய்துவிட்டனர். அந்த இக்கட்டான சூழலில்தான் டாக்டர் டி.எம். நாயர் தாமே “Justice” ஏட்டின் ஆசிரியராக இருக்க ஒப்பிப் பொறுபேற்றார்.

“Justice” நாளிதழின் முதலாவது இதழ் 1917 பிப்ரவரி 26 ஆம் நாள் வெளியிடப் பட்டது. அது தொடங்கி 10 மாதங்களுக் குள் “திராவிடன்” என்ற தமிழ் நாளேடும் “ஆந்திரப் பிரகாசிகா” என்கிற தெலுங்கு நாளேடும் வெளியிடப்பட்டன.

நீதிக்கட்சியின் அதிகாரம் வாய்ந்த ஆங்கில நாளேடு ‘ஐஸ்டிஸ்’. அவ்விதழில் 9.11.1917 இல், கட்சியின் அரசியல் கொள்கை பற்றிப் பின் வாறு எழுதியுள்ளார், டாக்டர் டி.எம். நாயர்.

“கேரளம், கன்னடம், ஆந்திரம், தமிழ்ப் பிரதேசங்கள் அடங்கியது தென் இந்தியா. இவைகள் சேர்ந்ததே இன்றைய சென்னை மாகாணம். இந்தத் தென்னிந்தியாவில் வாழும் மக்ககள் ஒரே கூட்டத்தவர்.

(திராவிடர்- நகர தூதன்).

இந்த நான்கு சகோதரர்கள் பேசும் பாஷைகள் ஒரே மூலத்திலிருந்து பிரிந்தவை. இந்தத் தென்னிந்தியா இந்தியாவின் மத்திய அரசிலிருந்து விலகி, நான்கு பிரதேசங்களும்  சேர்ந்த கூட்டுஅரசு ஏற்பட வேண்டும். எங்கள் தென் இந்திய நல உரிமைச் சங்கம் அதற்காகவே ஏற்பட்டது. அதற்காகவே பாடுபடப்போகிறது”.

(பெரியார்: மரபும் திரிபும்-எஸ்.வி.ராஜதுரை, பக்கம் 131, முதற்பதிப்பு - பிப்ரவரி 2001)

(நகர தூதன், தமிழ்க் கிழமை இதழ் திருச்சியி லிருந்து வெளிவந்தது. மணப்பாறை  (மணவை)) ரெ. திருமலைசாமி எனும் பெயர் பெற்ற-துணிச்ச லான நீதிக் கட்சித் தலைவர் இதன் ஆசிரியர், எதற்காகவும் யாரிடத்தும் அஞ்சாதவர். 1950 முதல் அவர் மறையும் வரை அவரோடு நான் பழகும் வாய்ப்பு நேரிட்டது)

இந்தச் செய்தியை திராவிட நாடு திரா விடருக்கே என்ற முழக்கத்தை முதன்முதல் எழுப்பியவர், டாக்டர் நாயர் எனப் பலரும் கூறுவர். இது நிற்க, நமக்குக் கிடைத்த ஆவணங்களின் படி, மேலே கண்ட டாக்டர் டி.எம். நாயரின் கருத்தையடுத்து, தில்லி மாநிலங்கள் அவையில் சர்.சி. சங்கரன்நாயரும், பி.சி. தேசிகாச் சாரி என்பவரும் இணைந்து 1926 பிப்ரவரியில் பின் கண்ட தீர்மானத்தை முன் மொழிந்தனர்.

`சென்னை மாகாணத்தில் அடங்கியுள்ள தமிழ் பேசும் மாவட்டங்களை மட்டும் தனியாகப் பிரித்து முழுத் தன்னுரிமை உள்ள தனி மாநிலமாக இயங்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  (Constitution of Tamil Districts in the Madras Presidency into a province with complete Self-Government)”.

அத் தீர்மானத்தை மாநிலங்கள் அவை 15.3.1926இல் தள்ளுபடி செய்தது.

(கோப்பு எண் இந்திய அரசு, உள்துறை, எண். 247/1926 பொது).

பின்னும் அய்ந்தாண்டுகள் கழித்து, 1931 திசம்பரில், சர்.சி. சங்கரன் நாயர் பின்கண்ட வாறான தீர்மானத்தை மாநிலங்கள் அவை யில் முன் மொழிந்தார்.

'இந்திய கவர்னர் ஜெனரல் அவர்களுக்கு, இந்தப் பேரவை பின் கண்ட முடிவை இந்திய விவகாரங்களுக்கான செயலாளருக்குப் பரிந் துரை செய்து, இந்தியாவில் உள்ள எல்லா மாகாணங்களும் முழுத் தன்னுரிமை பெற் றவையாக அமைவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்க வேண்டு கிறேன் அல்லது குறைந்தபட்சம் எந்த எந்த மாநிலங்கள் அதற்குத் தகுதி வாய்ந்தனவையாக இருப்பதாக இந்திய விவகாரங் களுக்கான அமைச்சர் முடிவு செய்கிறாரோ அவற்றுக்கு முழுத் தன்னுரிமை வழங்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறேன்’’ என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.

“This Council recommends to the Governor General-in-Council to request the Secretery of State for India to take such steps as may be possible to introduce immediately provincial autonomy into all the provinces or atleast in such provinces as are in his opinion fit for the same.”

மேலே கண்ட தீர்மானம் மாநிலங்க ளவையில் வாக்கெடுப்புக்கு முன்மொழியப் பட்டது. தீர்மானத்துக்கு ஆதவராக சர்.சி. சங்கரன்நாயர், சையத் அப்துல் ஹபீஸ், கான் பகதூர் சவுத்ரி முகமது தின், நாராயணசாமி செட்டி ஆகிய நால்வரே வாக்களித்தனர்; எதிராக 16 பேர் வாக்களித்தனர்.

இவை மாகாணங்களுக்கு முழுத் தன்னுரிமை கோரிய தெளிவான தீர்மானங்கள், பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தால் இத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் எந்த மாகாணமும் பின்னாளில் விடுதலைக்குப் போராட வேண்டிய இன்றிமையாமை இருந்திருக்காது.

இதன் பின்னர் 1937இல் சென்னை மாகாணத்தில் காங்கிரசுக் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் அன்றைய முதலமைச்சர் இராசகோபாலாச்சாரியார், சென்னை மாகாணத்தில் உள்ள 125 உயர் நிலைப் பள்ளிகளில் இந்தியை தேர்வுக்குரிய கட்டாயப் பாடமாக வைத்து ஆணை பிறப்பித்தார்.

தமிழர் அனைத்துத் தரப்பினரும் ஒன்று திரண்டு, கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த் துப் போராடினர். அந்தப் போராட்டத்தின் முதன்மை குறித்து சிற்றூர்தோறும் விளக்கிக் கூறும் பொருட்டு இந்தி எதிர்ப்புக் கால் நடைப் படை பரப்புரை செய்துகொண்டு சென்னைக் கடற்கரையை 11.9.1938இல் அடைந்தது. மக்கள் கடல், கடல் அலையை மிஞ்சிச் சீறியது. அன்றுதான் `தமிழ்நாடு தமிழருக்கே!’ எனும் முழக்கத்தை முதன்முதலாக எழுப்பினார் பெரியார்.

இந்த நிகழ்ச்சி நடந்த பின்னர் சென்னை அடையாறு பகுதியில் உள்ள செட்டிநாடு மாளிகையில் தென்னிந்தியர் நல உரிமைச் சங்கத்தின் கமிட்டிக் கூட்டம் நடை பெற்றது. அதில் பங்கேற்ற தெலுங்கர், கன்னடியர், மலையாளிகள் பலரும், `தமிழ்நாடு தமிழ ருக்கே என்றால் எங்கள் கதி என்ன?’ என்று ஈ.வெ.ரா.விடம் கேள்வி கேட்கத் தொடங் கினர். அதன் விளைவாகத்தான் திராவிட நாடு திராவிடருக்கே என்னும் கொள்கை முழக்க விளக்க அறிக்கையை பெரியார் ஈ.வெ.ரா. 20.11.1939இல் மெயில், “The Mail” ஏட்டில் வெளியிட்டார்.

அடுத்து `திராவிட நாடு திராவிடருக்கே’ என்பதை விளக்கி, குடி அரசு 17.12.1939 நாளிட்ட இதழில் தலையங்கம் எழுதினார்.

இந்த நிகழ்ச்சிகளை அடுத்து இந்தியாவில் வகுப்புவாரியாக சட்டமன்ற, நாடாளுமன்ற இடங்களைப் பிரித்துக் கொள்வதைப் பற்றி ஆய்வு செய்வதற்காக 1942 மார்ச்சு மாதம் சர் ஸ்டாப்போர்டு கிரிப்ஸ் தலைமையில் ஒரு பிரிட்டிஷ் அமைச்சரவைக் குழு இந்தியாவுக்கு வந்தது. அக்குழுவை ஈ.வெ.ராமசாமி, மு.அ.மு. குமாரசாமிராஜா, என். ஆர். சாமியப்ப முதலியார், ஊ.பு.அ. சௌந்தர பாண்டிய நாடார் ஆகிய நால்வரும் 30.3.1942 இல் சந்தித்தனர். அவர்கள் தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் மட்டுமே ஆவர். அவர்களின் கோரிக்கை பின்வருமாறு அமைந்தது.

`சென்னை மாகாணத்தை மட்டும் தனி மாகாணமாகப் பிரித்து மாட்சிமை தங்கிய ஆறாம் ஜார்ஜ் மன்னரின் நேரடி ஆளுமையின் கீழ் வைக்க வேண்டும்’’ என்பதாகும்.

அக் கோரிக்கை கிரிப்ஸ் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது. எனவே அக் குழுவினர் பரிந்துரைத்தபடி, பிரிட்டிஷார் இக் கோரிக் கையை நிராகரிப்பதாக 1945 சூலையில் அறிவித்தனர். அதுகண்டு வெகுண்டெழுந்த திராவிடர் கழகம் 1945 செப்டம்பர் மாதம் திருச்சியில் நடைபெற்ற மாகாண மாநாட்டில் பின் கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது.

“திராவிட நாடும் நாட்டு மக்களும் திராவிட நாட்டவர்கள் அல்லாத அந்நியரின் எல்லா விதமான சரண்டல்களிலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டுக் காப்பாற்றப்பட வேண்டும்”

- குடிஅரசு, 6.1.1945.

1956 நவம்பர்  1 அன்று மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு 4-11-1956 அன்று திருச்சியில் திராவிடர் கழக மத்திய செயற்குழுவைக் கூட்டி “தமிழ்நாடு தமிழருக்கே” என்கிற கோரிக்கையை முன்வைத்தார். தன்னுடைய இறுதிக்காலம் வரை அக் கோரிக்கையில் உறுதியாக இருந்தார்.

இனி சர்.பிட்டி. தியாகராயர், திராவிட நாகரிகம் குறித்துக் கூறியுள்ளதை அறிவோம்.  ``திராவிட நாகரிகத்தில் திளைத்த தலைவர் கள் மனிதரிடையே பிறவியின் பேரால் வேறு பாடு உண்டு என்பதை ஏற்கவில்லை. திரா விடச் சிந்தனையின் முன்னோடிகளான திருவள்ளுவர், அவ்வை, கம்பர் முதலானோர் தாங்கள் கடவுளின் சித்தப்படி அவருடைய தலையிலிருந்து பிறந்தவர்கள் என்பதை ஏற்கவில்லை.

((The genious of Dravidian civilisation does not recognise difference between man and man by birth. The leaders of Dravidian thought Thiruvalluvar, Avvai and Kambar do not claim to be born from the brain of the god- head”. Welcome Address by Sir. P. Thyagaraya Chetty in the South Indian Non-Brahmin Confederation, held on 28 and 29 December 1917 at Madras)’’

1. டாக்டர் டி.எம். நாயர் 9-11-1917இல் ஐஸ்டிஸ் ஆங்கில நாளேட்டில் எழுதியது, இந்தத் தென்னிந்தியா மத்திய அரசிலிருந்து விலகி, நான்கு பிரதேசங்களுக்குள்ளும் சேர்ந்த கூட்டு அரசு ஏற்பட வேண்டும் என்கிற அரசியல் கொள்கையை முன்வைத்தது.

2. சர். பிட்டி. தியாகராயராயர், 28.12.1917இல் தம் வரவேற்புரையில் கூறியது, திராவிட நாக ரிகம் பிறவியால் வேறுபாட்டை ஏற்க வில்லை என்கிற சமுதாய விடுதலைக் கொள்கையை முன்வைத்தது.

3.1926 பிப்ரவரியில், தில்லி மாநிலங்கள் அவையில் (Council of States) சர்.சி. சங்கரன் நாயரும், பி.சி.தேசிகாச்சாரியாரும் கோரியது, சென்னை மாகாணத்தில் அடங்கியுள்ள தமிழ் பேசும் மாவட்டங்கள் முழுத் தன் னுரிமை பெற்ற தனி மாகாணமாக இலங்க வேண்டும் என்கிற அரசியல் கோரிக்கை.

4. சர்.சி.சங்கரன் நாயர் மட்டும் தில்லி மாநிலங்கள் அவையில், 1931 திசம்பரில் கோரியது, இந்தியாவிலுள்ள எல்லா மாகாணங்களும் முழுத் தன்னுரிமை பெற்றவையாகத் திகழ இந்திய அரசு வழி காண வேண்டும் என்கிற அரசியல் கோரிக்கை.

5. திராவிட நாடும் நாட்டு மக்களும் திராவிட நாட்டவர்கள் அல்லாத அந்நியரின் எல்லா விதமான சுரண்டல்களிலிருந்தும் ஆதிக்கத் திலிருந்தும் விடுவிக்கப்பட்டுக் காப்பாற்றப்பட வேண்டும் எனத் தந்தை பெரியார் அவர்கள் 29.9.1945இல் கோரினார். இது எந்தப் பிசிறும் இல்லாத தனிச் சுதந்தர திராவிட நாடு கோரிக்கை.

1801 முதல் 1935 வரையில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பர்மா (மியான்மர்) 1936இல் துப்புரவாக பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து பிரிந்து, இன்று உலக நாடுகள் அவையில் இடம் பெற்றிருக்கிறது என்பதை நாம் எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும். இது முதன்மை.

நீதிக்கட்சி, தொடர்ந்து, 1920-1926, 1930-1937 எனப் பதின் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தது. இடையில் 1926-1929 நீதிக் கட்சியின் பல கொள்கைகளுக்குச் செயல் வடிவம் தந்த சுயேச்சை அமைச்சரவை ஆட்சி செய்தது.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற இரு அவை களிலும் பேசியே தீர்க்கக் கூடியதுதான், இந்தியாவிலுள்ள எல்லா மாகாணங் களுக்குமான முழுத் தன்னுரிமை பெறும் கோரிக்கை. அது ஏன் நடை பெறவில்லை?

தந்தை பெரியார் 1928 முதலே,

1. திராவிடர் இயக்கம் என்கிற பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் அனைத்திந்திய இயக்கமாக மாற வேண்டும்.

2. அனைத்திந்தியாவிலும் இவ்வியக்கம் பரவி, மக்கள் இயக்கமாக மாறிட ஏதுவாக ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் நாளேடுகள் வெளியிடப்பட வேண்டும்.

3. தமிழர்களுக்குத் தனிநாடு இன்றேல், (அ) நல்வருணப் பிறவி வேறுபாடு (ஆ) வீடு தோறும் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பனப் புரோகிதம், பழக்க வழக்கச் சட்டம், சிலை வணக்கம் இவற்றை என்றென்றும் ஒழிக்க முடியாது எனத் தெளிவாகச் சொன்னார்.

இன்றைய இந்திய ஏகாதிபத்திய அரசு, இன்றைக் குள்ள அரசியலமைப்பையும், இந்துச் சட்டத்தையும் வைத்தே இவற்றைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

தனிச் சுதந்தர திராவிட நாடு, தனிச் சுதந்தரத் தமிழ்நாடு கோருவோர் அனை வரும் அருள்கூர்ந்து இவற்றைப் பற்றிச் சிந்தி யுங்கள்! சிந்தனையாளன் 2017 பொங்கல் மலர் இவை பற்றிப் பலருடைய உயரிய கருத்துக்களைத் தாங்கி வெளிவர வேண்டும் என மனமார, நெஞ்சார விழைகிறேன்.

Pin It