அறிஞர் அரிஸ்டாடில் காலந்தொட்டு இன்று வரை மக்களாட்சிமுறை என்பதற்குப் பல்வேறு விளக்கங்கள் பல்வேறு நிலைகளில் முறைகளில் விளக்கப்பட்டு வருகிறது. அன்று மக்களின் உரிமைகளைப் போற்று வதுதான் மக்களாட்சி இயலின் அடிப்படையாக இருந்தது. 18ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு அய்ரோப்பிய நாடுகளில் அரசமைப்புச் சட்டங்கள் வழியாக நீதித் துறை, நிர்வாகத்துறை, சட்டத்துறை ஆகியவற்றுக்கான விதிகளும் மரபுகளும் ஒழுங்குமுறைகளும் கட்டுப் பாடுகளும் உருவாக்கப்பட்டன. மேற்குறிப்பிட்ட மூன்று துறைகளும் கைக்கோத்தால்தான் உயர் நெறி சார்ந்த மக்களுக்கான ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்த முடியும் என்று அரசமைப்புச் சட்ட அறிஞர்கள் குறிப்பிட்டார்கள். மக்களாட்சிக் கோட்பாடுகள் வேறு-நடை முறைகள் வேறு என்பதையே அய்ரோப்பிய நாடு களிலும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலும் காண முடிகிறது. கூட்டாட்சி நெறிகளை ஏற்றுக் கொண்ட நாடுகளில்கூட அந்தந்த நாடுகளின் அரசியல் சமூகப் பண்பாட்டுத் தன்மைகளுக்கு ஏற்ப மக்களாட்சியும் நடை முறைகளும் வேறுபட்டு உள்ளன.

கூட்டாட்சியியலை ஏற்றுக்கொண்ட கனடா பன்முகத் தன்மைகளைப் போற்றுகின்ற ஜனநாயக நாடாக உள்ளது. பிரிவினை கேட்பதும், அதற்காகப் பொது வாக்கெடுப்பு நடத்து வதற்கும் கனடா நாட்டின் அசரமைப்புச் சட்டம் வாய்ப் பளிக்கிறது. கூட்டாட்சியியலைப் பின் பற்றுகிற அமெரிக்காவில் ஜனநாயகம் உள்நாட்டில்தான் உள்ளது. அட்லாண்டிக் கடற்கரையைக் கடந்துவிட்டால் தனது பொருளாதார அரசியல் நலன்களுக்காக ஜனநாயக நெறிகளைக் குப்புறக் கவிழ்க்கும் நாடாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற மானுட விடுதலைப் போராளி நெல்சன் மண்டேலா அமெரிக்கா செய்யும் அத்துமீறல்களை-கொலைவெறி அணுகுமுறைகளைக் கண்டு கொதித்து அமெரிக்காவைப் போக்கிலி நாடு (Rogue State) என்று குறிப்பிட்டார்.

இத்தகைய புவிசார் அரசியல் பின்னணியோடுதான் மக்களாட்சி முறை பல்வேறு வகைகளில் செயல் படுகிறது. இந்தியத் துணைக்கண்டத்தில் 1950க்குப் பிறகு நடைமுறைக்கு வந்த அரசமைப்புச் சட்டம் சட்டமன்றத் துறை, நிர்வாகத் துறை, நீதித்துறை ஆகியவற்றுக்கான வரை யறைகளை முடிந்த அளவிற்கு வகுத்தது. ஆனால் உச்ச நீதிமன்ற அதிகார எல்லையைத் தெளிவாக விளக்கவில்லை. இருப்பினும் நாடாளுமன்றம் இயற்றுகின்ற சட்டங்கள் மாநில அரசுகள் இயற்றுகின்ற சட்டங்கள் ஆகியவற்றை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் அதிகார எல்லை தனக்கு உண்டு என்பதையே உச்சநீதிமன்றம் தொடர்ந்து மெய்ப்பித்துக் காட்டி வருகிறது. மக்களாட்சி முறையில் நாடாளுமன்றம்தான் உயர்நிலை அதிகாரம் பெற்றது என வாதிடுபவர்கள் பலரும் நாடாளுமன்றம் இயற்றுகின்ற சட்டத்தை ஆய்வு செய்யும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு இருப்பது தேவை எனக் கூறுகின்றனர். இவர்களில் ஓய்வுப் பெற்ற உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளும் அடங்குவர். குறிப்பாக தமிழ் நாட்டின் உயர்நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிநாயகம் சந்துரு, உச்சநீதிமன்றமே உயர்நீதி மன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தேசிய சட்ட ஆணையம் வழியாக நீதிபதிகளை நியமிக்கும் முறையால் நீதிமன்றத்தின் நடு நிலைமை பாதிக்கப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரசு தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது நீதிபதிகள் நியமன தேசியச் சட்ட ஆணையத்திற்கான சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் 2013இல் தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சந்தோ`பால் இந்தச் சட்ட வரையறை யைப் பல தரவுகளைச் சுட்டிக்காட்டிக் கடுமையாக எதிர்த்தார் (கட்டுரை அக்2013 தி இந்து நாளிதழில் வெளி வந்தது). இக்கட்டுரையின் முகப்பில் அரசமைப்புச் சட்ட அறிஞர் மென்கன் (Mencken,H.L.) கூறிய ஒரு கருத்தைச் சுட்டியிருந்தார். அரசியல்வாதிகள் பேசி னாலும் பேசாமல் செயல்பட்டாலும் நாமெல்லாம் எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும். அவர்களின் வழக்கமான திட்டம் யாதெனில் அரசமைப்புச் சட்டத்தைத் திருட்டுத்தனமாக அபகரித்து அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என வேடிக்கை பார்ப்ப தாகும். எவ்வித எதிர்ப்பும் இல்லையெனில் தைரியமாக மேலும் தங்கள் செயல்களைத் தொடங்குவார்கள். அவர்களின் ஒற்றையான ஒரே ஒரு நோக்கம் யாதெனில் தங்களிடம் மேலும் மேலும் அதிகாரக்குவியலை ஏற்படுத்தித் தங்கள் நலனிற்காகவும் மற்றவர்களின் நலனிற்கு எதிராகவும் எவ்விதத் தடையுமின்றிச் செயல்படுத்த முனைவார்கள். அரசியல்வாதிகள் அரசமைப்புச் சட்டத் திருத்தம் மேம்பாடு என்று கூறினால் எல்லா நேரங்களிலும் கவனத்தோடு எச்சரிக்கையாக இருங்கள் என்று குறிப்பிட்டுத் தனது கட்டு ரையில் தேசிய நீதிபதி நியமன ஆணையத்தைச் சந்தோ`பால் எதிர்த்தார்.

தற்போது இந்த அரசமைப்புச் சட்டத்திருத்தம் (99)- நீதிபதிகள் நியமன தேசிய ஆணையச் சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

காங்கிரசு அரசு தனது அதிகார எல்லையை விரிவாக்கி சுயநல ஊழல் அரசியலைத் தங்கு தடையின்றி மேற் கொள்வதற்கு முயற்சி செய்தது. இன்றைய பாஜக அரசு காங்கிரசு இயற்றிய சட்டத்தை ஆதரிப்பதில் முன்னிலையில் உள்ளது. தேர்ந்தெடுக்கப்படாத வர்களின் கொடுங்கோன்மை (நீதித்துறை), தேர்ந் தெடுக்கப்பட்டவர்களின் (நாடாளுமன்றம்) உரிமைகளைப் பறிப்பதை இந்திய ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கடுமையாக நடுவண் அரசின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விமர்சித்துள்ளார். இந்தத் தீர்ப்பு வரும்போது காங்கிரசு ஆட்சியில் இருந்திருந்தால் அருண் ஜெட்லி உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று வரப்பட்ட சட்டத்தில் இந்த ஆணையத்திற்கான உறுப்பினர்களில் நடுவண் சட்ட அமைச்சர் 2 சட்ட வல்லுநர்கள் இடம் பெற்றி ருப்பார்கள். 4 பேர் கொண்ட இந்த ஆணையத்தில் நீதிபதிகள் அல்லாத இருவர் எதிராக வாக்களித்தால் ஆணையத் தின் பரிந்துரைகள் நிராகரிக்கப்படும். இத்தகைய வீட்டோ அதிகாரம் நீதித்துறையின் கையை முறிக்கும் செயலாகும் என்று பல சட்ட அறிஞர்கள் குறிப்பிடு கின்றனர்.

நீதிபதிகள் நியமன ஆணையத்தின் அடிப்படைக் கூறுகள் இங்கிலாந்து சட்ட ஆணைய முறையை ஒத்துள்ளது. இந்தியா விடுதலை பெற்றிருந்தாலும் அடிமை எண்ணம் இன்றும் அகலவில்லை என்பதையே இக்கூற்று மீண்டும் மெய்ப் பிக்கிறது. ஆனால் இங்கிலாந்து சட்ட ஆணைய முறையில் அரசியல் தலைவர்களின் குறுக்கீடுகள் கிடையாது. மேலும் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் பிரவுன் இந்த ஆணையத் திலிருந்து அரசு விலகிக் கொள்ள விரும்புகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். இன்றளவும் அரசியலுக்கு அப்பால்தான் இங்கிலாந்தின் நீதிபதிகள் நியமன ஆணையம் செயல்படு கிறது. இந்திய உச்ச நீதிமன்றம் அண்மைக்காலமாக ஊழல் வழக்குகளில் அரசியல்வாதிகளுக்கு எதிராகக் கடுமையான தீர்ப்புகளை வழங்குவதால்தான் உச்சநீதிமன்றத்தின் அதிகார எல்லையைக் குறைக்க அரசு முற்படுகிறது என உச்சநீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி லோதா குறிப்பிடுகின்றார்.

கடந்த 15 ஆண்டுகால காங்கிரசு மற்றும் பாஜக ஆட்சிகளில் நேர்மையான நீதிபதிகளை மிரட்டும் போக்கு தொடர்கதையாக உள்ளது. 1975ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சியில் உச்சநீதிமன்றம் சிறுமைப்படுத்தப்பட்ட செயலை யாரும் மறந்து விட முடியாது. இக்கூறுகளையே இன்றைய பாஜக ஆட்சியிலும் காண முடிகிறது. எதிர்ப்பவர்களை மிரட்டுவது, எழுத்தாளர்களை-சிந்தனையாளர்களைக் கொலை செய்வது, இதை ஆட்சியாளர்கள் ஆதரிப்பது என்பது பிரதமர் கண்டும் காணாமல் இருப்பது இன்றைய பாஜக பின்பற்றும் நடைமுறையாகும்.

2014இல் மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு பாஜகவின் தலைவராக அமித்ஷா` தேர்ந்தெடுக்கப்பட்டார். இசுலாமியர்களுக்கு எதிராக குஜராத்தில் நடைபெற்ற கல வரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர், அவர். உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் இந்த வழக்கை விசாரிக்கும் போது சலுகைக் காட்டினார் என்றும் கூறப்பட்டது. அதனால்தான் ஓய்வு பெற்ற பிறகு நீதிபதி சதாசிவத்திற்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டது என்று குற்றம் சுமத்தப்படுகிறது.

நடுவண் அரசின் அரசியல் தலைவர்கள் கடைப் பிடிக்கும் இத்தகைய போக்கினையும் நாடாளுமன்றம் இயங்கும் தன்மைகளையும் அறிந்த சட்டவல்லுநர் ஏ.ஜெ.நூரானி நாடாளுமன்றத்தைப் பற்றித் தனது “அரசமைப்புச் சட்டக் கேள்விகளும் குடிமக்களின் உரிமைகளும்” என்ற நூலில் நாடாளுமன்ற நெருக்கடி என்ற தலைப்பில், சில முதன் மையான கருத்துகளைக் கூறியுள்ளார். தகுதியற்ற, கல்வியற்ற, பொறுப்பற்ற எதிர்கட்சி இந்தியப் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு அடி கொடுத்துள்ளது என்று 2001 லேயே குறிப்பிட்டார். ஜனநாயகத்தை மாற்றி மாற்றி அழிக்கும் வழி முறையைப் பாஜகவும் காங்கிரசும் பின்பற்றுவதில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றுள்ளன. இவ்விரு கட்சிகளின் சண்டையும் அதிகார வெறியும் அதிகாரக் குவியலும்தான் உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் நடுவண்அரசிற்கு எதிராகத் தீர்ப்பு வழங்கும் நிலையை உருவாக்கியது.

மேலும் குற்றப் பின்னணியுள்ளவர்கள் நாடாளுமன்றத் திலும் சட்டமன்றங்களிலும் அதிக அளவில் இடம் பெற்று வருகின்றனர். ஜனநாயகத்தில் போக்கிலிகளின் ஆதிக்கமும் முதலாளித்துவ ஆதிக்கமும் இணைந்து நாடாளுமன்ற முறையைப் படுகுழியில் தள்ளிவிடுகிறது. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்கு சிபிஐ, வருமான வரித்துறை, ஆளுநர்கள் என்ற 3 ஆயுதங்களை நடுவண் அரசு பயன்படுத்துகிறது என்று தில்லி முதல்வர் கெஜ்ரிவால் அண்மையில் குறிப் பிட்டுள்ளார். குஜராத்தில் சிபிஐ தொடர்ந்த வழக்குகளை ஒவ்வொன்றாக நடுவண் அரசு திரும்பப் பெற்று வருகிறது. நேர்மையாகப் பணியாற்றிய அதிகாரிகள் தொண்டு நிறுவனங்கள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்கிறது. மேலும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளில் பெரும் பான்மையினர் உயர் வர்க்கத்தினராக இருப்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். விதிவிலக்காக தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில்தான் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதன் காரணமாகத் தான் இன்றைய உச்சநீதிமன்றத்தில் இசுலாமியர்களும் பிற்படுத்தப்பட்ட வர்களும் பெண்களும் நீதிபதிகளாக அமர்ந் துள்ளனர். இது தந்தை பெரியார் செய்த சமூகப் புரட்சியின் விளைவே எனப் பல சட்ட ஆய்வாளர்கள் குறிப்பிடுகி ன்றனர்.

நீதித்துறை சீர்திருத்தத்தையும் நீதிபதிகள் நியமனம் பற்றியும் பேசும் பாஜகவும், காங்கிரசும் ஒரே ஊழல் குட்டையில் ஊறிய மட்டைகளேயாகும். இடஒதுக்கீடு கொள்கை பற்றி இக்கட்சியினர் வாய் திறப்பதில்லை. எனவேதான் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிற நெறிக்கு மாறாக சனாதான தர்மத்தைப் போற்றும் பல தீர்ப்புகள் உயர் உச்ச நீதிமன்றங்களால் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக சிதம்பரம் நடராசர் கோயில் தீட்சிதர் வழக்கிலும், அனைத்துச் சாதியி னரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழ்நாடு சட்டத்தின் மீது தொடரப்பட்ட வழக்கிலும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பும்-அளிக்காமல் உள்ள தீர்ப்பும் இக்கூற்றை உறுதி செய்கின்றன.

நீதிமன்றங்களில் தாய்மொழியை நீதிமன்ற மொழியாக ஏற்க மறுப்பதும், பெரும்பான்மையான மக்களுக்கு எதிராக உச்சீநீதிமன்றம் செல்கிறதோ என்ற ஐயம் வலிமை பெறு கிறது. இது போன்று பெரும்பான்மை மக்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தாமல் நீதிமன்றச் சீர்திருத்தம் என்பது புரையோடிய புண்ணிற்கு மருந்து பூச்சு செய்வது போன்றதாகும். எனவே நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற பெயரில் அதிகாரக் குவிப்பையும் மேலாதிக்க ஆட்சி முறையையும் தவிர்த்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கினால் இப்பிரச்சி னைக்குத் தீர்வு காண முடியும் என்று பல நல்ல கருத்துகளை நீதிபதி லோதா முன்மொழிந்துள்ளார்.

உலகில் சிறந்த கூட்டாட்சியியல் நாடான சுவிட்சர் லாந்து நாடாளுமன்ற-சட்டமன்ற ஒருங்கிணைப்பைக் கூட்டாட்சியிய லோடு இணைத்து நல்ல முறையில் மக்களாட்சி மாண்பை உயர்த்தி வருகிறது. சுவிட்சர்லாந்து உச்சநீதிமன்றத்தில் 38 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் 13 பேர் பெண்கள் 25 பேர் ஆண்கள் ஆவர். சுவிட்சலாந்தில் குடியுரிமை பெற்ற 3 இத்தாலியர்கள் 12 டச்சுக்காரர்கள் 23 ஜெர்மானியர் நீதிபதி களாக உள்ளனர். வல்லுநர்களைக் கொண்ட நீதி ஆணை யம்தான் நீதிபதிகளின் பெயர்களைப் பரிந்துரை செய்கிறது. இந்தப் பரிந்துரைகளை நாடாளுமன்றம், மாநிலச் சட்டமன்றங்கள் ஆய்ந்து நீதிபதிகளைத் தேர்வு செய்கின்றன. நீண்ட அனுபவம் உள்ள வழக்கறிஞர்கள் சட்டத்துறைப் பேராசிரியர்கள் மாநில நீதிபதிகளாகப் பணியாற்றுவோர் உச்சநீதிமன்றத் துணை நீதிபதிகளாக முதலில் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேற்கூறிய பல இனத்தவரும் பெண்களும் துணை நீதிபதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படு கின்றனர். இம்முறையின் வழியாக எவ்விதச் சிக்கலுமின்றி அனைத்து இனத்தினருக்கும் பெண்களுக்கும் சம உரிமை அளிக்கப்படுகிறது. கூட்டாட்சியியலும் மக்களாட்சியியலும் நிலைநிறுத்தப் படுகிறது. இது போன்ற அணுகுமுறைகளை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் வல்லுநர்களும் ஏன் முன்மொழிய வரவில்லை என்பது கேள்விக்குறி யாகும். இதுவும் ஒரு புதிராகும். இந்திய அரசமைப்புச் சட்டம் நடை முறைக்கு வந்தபோது அண்ணல் அம்பேத்கார் மூன்று முத்தான கருத்துகளை முன்மொழிந்தார்.

1.            சமூகப் பொருளாதார நோக்கங்களை அடைய அரசமைப்பு சட்ட முறைகளை விரைந்து கடைப் பிடிக்க வேண்டும்.

2.            ஜனநாயக வழிமுறைகளை நிலைநிறுத்துவதற்கு இங்கிலாந்து பொருளாதார அறிஞர் ஜான் ஸ்டுவர்ட் மில் கூறிய கருத்தைப் பின்பற்ற வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகளை எக்காரணத்தைக் கொண்டும் எந்தப் பெரிய மனிதர்களின் காலடியிலும் வைக்கக் கூடாது. ஜனநாயக அமைப்பு களைச் சீர்குலைக்கும் முறைக்கு ஏதுவாக ஆட்சி யாளர்கள் மீது முழு நம்பிக்கையை வெளிப்படுத்தக் கூடாது. தனிநபர் வழிபாடு அரசியலை தாழ்த்து வதற்கும் இறுதியில் சர்வாதிகாரத்திற்கும் வழி வகுத்துவிடும் என்று மில் குறிப்பிட்டதை அம்பேத்கார் சுட்டியுள்ளார்.

3.            அரசியல் ஜனநாயகம் போதும் என இருந்துவிடக் கூடாது. அரசியல் ஜனநாயகம் சமூக ஜனநாயகமாக மாற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். சுதந்திரம், ஜன நாயகம், சமத்துவம் ஆகிய தனித்தனி மூன்று பக்கங் களும் முக்கோண வடிவம் போல ஒன்றை யொன்று சார்ந்தது; இணைந்தது. ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்தா லும் ஜனநாயகத்தின் அடிப்படைத் தன்மையைச் சிதைத்துவிடும்.

இந்தியச் சமூகத்தில் இரண்டு கூறுகள் முழுமையாக இல்லவே இல்லை. சமத்துவம் என்பதே இல்லை. சமூகத்தளத்தில் அடக்குமுறை கட்டமைப்பு ஏற்றத்தாழ்வை நிலை நிறுத்தி சிலரை உயர்த்திப் பலரைத், தாழ்த்துகிறது. பொருளாதாரத் தளத்தில் நமது சமூகத்தில் அளவிட முடியாத சொத்துக் குவிப்பையும் அதற்கு நேர்மாறாக கொடுமையான வறுமையிலும் மக்கள் வாழ்கின்றனர்.

அண்ணல் அம்பேத்கார் குறிப்பிட்ட உயர் எண்ணங்களை நாடாளுமன்றம், சட்டமன்றம், நிர்வாகத் துறை நீதித்துறை நேர்மையாக நடைமுறைபடுத்தினால்தான் போக்கிலிகளின் பிடியில் இருந்து அரசியல் விடுபடும். நீதித்துறையும் நிர்வாகத்துறையும் தங்கள் அதிகார எல்லைகள் சுதந்தரமாகச் செயல்படுத்தும் மக்களாட்சி மாண்புகள் பாதுகாக்கப்படும். செய்வார்களா?

Pin It