வந்தான்என் கனவில்பா வேந்தன் நேற்று

                வரச்சொல்லி யாசொன்னேன்? அவனே வந்தான்

இந்தாப்பா தம்பி,இதோ விடியும் நேரம்;

                இப்படியா உறங்குவது? எழுஎழு என்றான்

தந்தானே தொந்தரவு உறக்கத் திற்கு

                தவிர்க்கமுடி யாதெழுந்து வணக்கம் சொன்னேன்

எந்தனுயிர் மூச்சான தமிழும் நாடும்

                எங்கே?யெங் கே?யென்றே குடைந்தெ டுத்தான்!

நன்றாநீர் கேட்பதெல்லாம் நியாயந் தானா?

                நீயிருக்கும் போதேதான் செத்துப் போச்சே!

இன்றுவந்து எதற்குஅதைக் கேட்கின் றீர்கள்?

                என்றேநான் சொன்னேன்பார், அவனும் சீறி

அன்றேநான் தமிழியக்கப் பாட்டில் சொன்ன

                அழகான அடிகளுக்கு ஒப்பாய் இங்கு

தமிழாய்ந்த தமிழன்தான் தமிழர் நாட்டின்

                தலைமைஅமைச் சாயிருந்து ஆண்டா ராமே!

ஆண்டாரே ஆண்டாரே ஆண்டா ரய்யா

                அரசாண்டார் மண்ணாண்டார் மலையும் ஆண்டார்

ஆண்டிகளும் அரசர்களாய் ஆக ஆண்டார்

                அடுத்தவரின் பெண்டாண்டார்  பிள்ளை ஆண்டார்

மண்டிநின்ற காடாண்டார் மணலும் ஆண்டார்

                மற்றுமவர் ஆண்டதெல்லாம் பதவி ஊழல்

மண்டுதமிழ் இலக்கியத்தின் பெருமை எல்லாம்

                மாநாட்டில் எழுத்துகளில் பேச்சில் ஆண்டார்!

கண்டுரைத்து நீசொன்ன கருத்தை யெல்லாம்

                காற்றினிலே பட்டமெனப் பறக்க விட்டோம்

சுண்டிவிட்ட ரத்தத்தில் சொரணை இன்றி

                சூழ்ச்சிஅர சியல்மட்டும் செய்யக் கற்றோம்

மண்டிவிட்ட சுயநலத்தால் மானம் கெட்டு

                மாநிலத்து உரிமையெலாம் தாரை வார்த்தோம்

கண்டுவக்கத் தமிழகத்தில் ஒன்றும் இல்லை

                கையெடுத்துக் கும்பிடுவேன் போய்வா என்றேன்.

இதையெல்லாம் எடுத்துச்சொல்ல ஆளா இல்லை?

                இருக்கின்றார் ஆனைமுத்து என்றோர் கிழவன்

அதையெல்லாம் எவரையா கேட்கின் றார்கள்

                அவரவரும் அவர்பேச்சே பெரிதென் கின்றார்

கதையின்றோ எல்லாமே சாதி சாதி

                கற்பனையும் செய்வதில்லை தமிழர் என்றே

இதையெல்லாம் பார்க்காதே திரும்பு என்றேன்

                இடிந்துமனம் நொந்தபடி எழுந்தே போனான்!

Pin It