கருத்தியல் கோட்பாட்டு (Ideology) அணுகுமுறை

இனி பாவேந்தரின் மொழி வளர்ச்சி தொடர்பான கருத்தியல்களை விளக்கலாம்.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மகாகவி பாரதி பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகவும், தானே ஒரு பெரும் பாரம்பரியத்தின் தொடக்கமாகவும் விளங்குபவர் பாவேந்தர் பாரதிதாசன். அவரைப் பற்றித் தந்தை பெரியார் கூறுவது:

"பாரதிதாசன் சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற கவி என்றுதான் கூற வேண்டும். இந்த ஒரு காரணத்தினாலேயே அவர் இன்று தமிழ்நாட்டின் சிறந்த கவியாய் இருந்தும், அவருடைய புகழ் போதுமான வரையில் பரவாமல் இருக்கிறது. ஆனால் அவர் மட்டும் வெறும் புகழை விரும்புவாரானால் காலத்திற்கும் பாமர மக்களின் உணர்ச்சிக்கும் ஏற்றவாறு தம் கருத்துக்களை மாற்றிக் கொண்டு மிகச் சிறந்த கவி என்ற பெயரை எளிதில் பெற்று விடலாம். ஆனால் உண்மை, நியாயம், அறிவு முதலியவற்றைச் சிறிதும் விட்டுக் கொடுக்க இசையாத இயற்கையான பிடிவாதமுடையவராதலால் அவர் புகழை எதிர் பாராமல், தம் கொள்கைகளில் விடாப்பிடியாக இருந்து வருகிறார்.”

இந்தக் கூற்று கூர்ந்து கவனிக்கத்தக்கது. (திருவாசகன் 1993.90) காலத்திற்கு ஏற்றவாறும், பாமர மக்களின் உணர்ச்சிக்கு ஏற்றவாறும் தம் கருத்துக்களை மாற்றிக் கொள்ளாமல், பழைய ஆசாரங்களிலும், மதங்களிலும் ஊறிக் கிடந்த அன்றைய சமூகத்தினைத் தன் கவிதைகளால் மாற்றப் பாடுபட்டார். அக்காலத்து வரலாற்று நிகழ்ச்சிகளையும் சமூதாயச் சிக்கல்களையும் பாடுபொருளாக எடுத்துக் கொண்டார். கடவுள், சமயம், ஆரிய திராவிட இனங்கள், தமிழகத்தின் எதிர்காலம், பெண்கல்வி, குழந்தை மணம், கைம்பெண் நிலை முதலாளித்துவ எதிர்ப்பு, பொது உடைமை ஆகியன பற்றி இவரது பாடல்கள் மக்களிடையே பெரிய மாற்றத்தை உண்டு பண்ணியிருக்கின்றன.

இருக்கும் நிலை மாற்ற ஒரு புரட்சி மனப்பான்மை

ஏற்படுத்துதல் பிறர்குழைக்கும் எழுத்தாளர் கடனாம் (792)

என்று அன்றைய காலகட்டச் சமூதாயத்தின் நிலையை மாற்றுவதைத் தமது கடமையாகக் கொண்டு கவிதை எழுதியவர் பாரதிதாசன் ஆவார். பாரதிதாசனின் மனதிற்கு மிக நெருக்கமான பாடுபொருள்களில் தமிழும் தமிழினமும் முக்கியமானவையாகும். தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் பாரதிதாசன் அளவிற்கு யாரும் பாடவில்லை என்றே கூறவேண்டும். தமிழ் என்றால் என்ன என்ற அவரின் கருத்து இங்குச் சுட்டத்தக்கது. தமிழ் இன்பம் என்ற தலைப்பில்,

“தமிழ் என்றாலே தமிழ் மொழியை மட்டும் குறிப்பதோடு நிற்கவில்லை. தமிழ் என்றால் தமிழர்களையும் குறிக்கின்றது. தமிழ் என்ற சொல் தமிழர் படையையும் குறிக்கும்”. (பாரதிதாசன் பேசுகிறார். பக்.57.) என்று கூறுகிறார்.

தமிழின் நிலை பற்றியும், தமிழ் வளர்ச்சி பற்றியும், தனித்தமிழ் பற்றியும் பல்வேறு கருத்துக்களைப் பாரதிதாசன் வெளியிட்டுள்ளார். அவருடைய கருத்துக்கள் எல்லாம் அளப்பரிய தமிழ்ப்பற்றால் படைக்கப்பட்டவை. உணர்வு சார்ந்தவை என்று சாதாரணமாக எடை போட்டுவிட முடியாது.

பாரதிதாசன் தத்துவ மேதையோ, அரசியல் விற்பன்னரோ, சட்டப் பேரறிஞரோ, மொழிநூல் வல்லுநரோ, மனித இன வரலாற்று ஆசிரியரோ அல்லர். அவர் ஒரு முழுமையான கவிஞர். எனவே இனம், மொழி சமயம் சமுதாயம் பற்றி அவர் கூறிய கருத்துக்களின் தரத்தை எடையிடுவது முறையாகாது. வீண் செயலுமாகும். அவரது கோட்பாடுகள் கவிதைகளாக மலர்ந்து மணம் பரப்புகின்றனவா அல்லது கோட்பாடுகளாகவே மொட்டவிழாது இலக்கிய இன்பத்திற்கு ஊறு செய்து நிற்கின்றனவா என்பதே நாம் கேட்க வேண்டிய, விடை அறிய வேண்டிய வினாவாகும். அவரது கொள்கைகளை வெறுப்போர் அவரது கவிதைகளைத் தூற்றுவதையும். அவரது கொள்கைகளை ஏற்றுக் கொண்டோர் கவிதையைப் போற்றுவதையும் நாம் பெரிதும் காணுகின்ற இந்நாளில் இத்தகைய ஆய்வு இன்றியமையாதது.

என்று மருதநாயகம் (2004:106) குறிப்பிடுவார்

பாரதிதாசனின் மொழி, இனம், சமுதாயம் பற்றிய கருத்துக்களை சரியான கோட்பாடுகளின் அடிப்படையில் பார்க்கும்பொழுது தான் அவருடைய உணர்வுகளையும் புரிந்துக் கொள்ள முடியும். பாரதிதாசனின் தமிழ்ச் சிந்தனைகளைச் சமூக மொழியியல் அடிப்படையிலும் கருத்தியல் அடிப்படையிலும் ஆராயும்பொழுது அவருடைய கருத்துக்களின் வலிமையைப் புலப்படுத்த முடியும்.

மொழியை அறிவியல் முறையில் அணுகுவது மொழியியலாகும். பாவேந்தரின் மொழி பற்றிய சிந்தனை எல்லாம் உணர்வு நிலையில் இருக்கும் பொழுது மொழியியல் அணுகுமுறையில் ஆராய்வது முறையாகுமா? என்ற கருத்து எழலாம். மொழியை அறிவுப்பூர்வமாகவும் அணுகலாம். மொழியை உணர்வுப்பூர்வமாக அணுகுவது அறிவியலுக்கு எதிரான செயல்பாடன்று. மொழியைச் சமுதாயத்தோடு இணைத்துப் பார்க்கும் பொழுது இத்தகைய அணுகுமுறைகளுக்கு இடம் இருப்பதை அறிந்துக் கொள்ளமுடியும்.மொழி, சமுதாயத்தில் பயன்படுத்தப்படும் பொழுது, சமுதாயத்தால் மொழி பாதிக்கப்படுவதும், சமுதாயம் மொழியால் பாதிக்கப்படுவதும் இயல்பே. இத்தாக்கங்களை அறிவியல் அடிப்படையில் விளக்குவது சமுதாய மொழியியல் ஆகும். ஒரு படைப்பாளி, மொழியைக் கருவியாகக் கொண்டு தன் படைப்பைப் படைக்கும்பொழுது, அப்படைப்பு மொழியால் அமைந்த நிலையில், படைப்பின் சமூக நிலையையும் விளக்க முடியும். படைப்பில் காணப்படும் சமூக மொழியியல் கூறுகளைப் படைப்பாளியின் பின்புலத்தோடு இணைத்தும் விளக்கலாம்.

பாவேந்தரின் படைப்புகளைப் பொறுத்தமட்டில் தமிழே பாடு பொருளாக அமைந்துள்ளது. எந்த ஒரு படைப்பாளனின் படைப்பிலும் அவனுடைய கருத்தியல்கள் வெளிப்பட்டு இருக்கும். பாரதிதாசனின் தமிழ் பற்றிய பாடலில், மொழி பற்றிய பல்வேறு கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன. இக்கருத்தியல்கள் எவை? அவை எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பதை மொழியியல் வழி விளக்கலாம்.

பாவேந்தரின் மொழி பற்றிய சிந்தனைகள் எல்லாவற்றிற்கும் மொழியியல் நெறியில் விளக்கமளிக்க இயலாமல் போகலாம். பல மொழிச் சிந்தனைகள் மொழியியல் நெறிகளுக்குப் புறம்பானவையாக இருக்கலாம். அவற்றைப் பாவேந்தரின் மொழிக் கருத்தியலாகக் கொண்டு, அவற்றை சமுதாய" சூழலோடும், கருத்தியல் வெளிப்படுத்தப்பட்ட முறைகளோடும் விளக்கும் பொழுது, பாவேந்தரின் ஆழமான தமிழ்ப்பற்றை விளக்கிக் காட்ட இயலும். அதற்குக் கருத்தியல், கருத்தியல் உருவாக்கம் ஆகியனப் பற்றிய அடிப்படைப் புரிதல்கள் அவசியமாகின்றன.

1.1 கருத்தியல்

கருத்தியலைப் பற்றி பல்வேறு அறிஞர்கள் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். கருத்தியலின் அடிப்படைப் பொருளே கருத்துதான். ஒரு சமூகத்தினரால் பகிர்ந்துக் கொள்ளப்படும் கருத்து கருத்தியலாக இருக்கும் ஆனால் சமூக நிலையில் ஆதிக்கச் சமூகத்தின் கருத்துக்களே கருத்தியலாகவும், பிறரது கருத்துக்கள் தவறானவை என்றும் பொருள் மாற்றமடையலாம். கருத்தியலை விளக்குவதற்கு கருத்து பற்றிய அடிப்படைத் தெளிவு அவசியமாகிறது. கருத்தைப் பின்வருமாறு வெவ்வேறு வகையில் விளக்கலாம். (வான் டிங்க் 1998).

(1) கருத்து என்பது மனதில் உள்ள ஒன்று என்றோ, மனதின் செயல்பாட்டால் விளையும் ஒன்று என்றோ கூறலாம்.

(2) எண்ணங்களின் வெளிப்பாடு கருத்தாகலாம்.

(3) மனித அறிவின் ஒரு பகுதியாகக் கருத்து அமையலாம்.

(4) தனிப்பட்டதாகவோ, சமூகத்தினரால் பகிர்ந்து கொள்ளப்பட்டதாகவோ அமையலாம்.

(5) ஒரு முக்கியப் பொருண்மை குறித்த புதிய சிந்தனை வெளிப்பாடு எனலாம்.

இக்கருத்தை மையமாக வைத்துக் கருத்தியல் விளக்கப்படுகிறது. ராய்மண்ட் வில்லியம்ஸ் (பிஸ்க் (1990) இருந்து எடுக்கப்பட்டது) என்பவர் கருத்தியல் பற்றி மூன்று வகையானவிளக்கங்களைத் தருவார். அவை

(1) ஒரு குறிப்பிட்ட குழுவினருடைய நம்பிக்கைகளின் ஒழுங்கமைவு.

(2) அறிவியல் நெறிக்கு மாறுப்படக்கூடிய நம்பிக்கைகளின் ஒழுங்கமைவு.

(3) பொதுக்கருத்து மற்றும் பொருண்மையை உருவாக்கும் செயல்.

கருத்தியலைப் பல்வேறு கருத்துக்களையும், முடிச்சுகளையும் உடைய பனுவலாகவும் காண்பர். கருத்தியலை ஒரு பண்பாட்டின் மிக முக்கியமான பகுதி என்றும், ஒரு சமூகத்தினர் தங்களது உயர் மதிப்பு, வேலைப்பாகுபாடு போன்றவற்றின் வகைப்பாட்டில் உள்ள தன்ணுணர்வு சார்ந்த விழிப்புணர்வு என்றும் காண்பர். பிரஞ்சு அமைப்பியல்வாதிகளும் பின் அமைப்பியலாளரும், கருத்தியலை விழிப்புணர்வுடைய ஒழுங்கமைக்கப்பட்ட கருத்துக்கள் என்பதை விடுத்து, அது ஓர் அமைப்போடு இயங்கக்கூடிய வாழ்வியல் நடத்தை என்றும் கூறுவர்.

கருத்தியல் என்பது உளவியல் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் வரையறுக்கப்படுகிறது. உளவியலார், மனப்பாங்குகளின் பிறப்பிடம் கருத்தியல் என்பர். கருத்தியல்களைத் தனிமனிதன் உருவாக்குவதைவிடச் சமூகமே வரையறை செய்கிறது என்று கூறுவார். மார்க்சீயக் கருத்தியலாளர் சமூகத்தில் உள்ள வர்க்கபேதமும் வேலைப் பகிர்வுமே தங்களது கருத்தியலுக்கான அடிப்படை என்பார்கள். எனவே கருத்தியல் என்பதைத் தனிமனித உரிமையாக க் கொள்ளாமல் அதை ஒரு சமூகச் செயல்பாடாக கொள்ளவேண்டும் என்று கருதுவர்.

கருத்தியல் என்பது ஒரு வகையான உண்மைக் கருத்துக்கள் என்று கருதப்பட்டாலும், ஒரு சமூகத் தகுதியால், சமூகத் தகுதியின் விளைவால், பட்டறிவின் விளக்கத்தால் அது கருக் கொள்ளும் நிலையைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அதாவது சமூக அரசியல், பொருளாதார அதிகாரத் தன்மையின் தொடர்பால் கருத்தியல்கள் உருவாக்கப்படலாம். கருத்தியல் பொதுவாக ஓர் அதிகாரக் குழுவின் கருவியாகவும், சொத்தாகவும், நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது. அதிகாரமற்றவரின் பண்பாட்டுக் கருத்தாக்கங்களும் செயல்பாடுகளும், கருத்தியல் தன்மையற்றவை என்று அதிகாரக் குழுவால் வரையறை செய்யப்படும்.

1.2. கருத்தியலும் குறிப்பீட்டாக்கமும்

கருத்தியலைக் கருத்துக்கள், சொல்லாடல்கள் அல்லது குறீயீட்டுச் செயல்பாடுகள் ஆகியவற்றின் வழியாக அதிகாரத்தைக் கைப்பற்றவோ, அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவோ பயன்படுத்துவர். ஒரே பண்பாட்டைச் சேர்ந்தவர்களால் பகிர்ந்து கொள்ளப்படும் தொன்மங்களும் குறிப்புகளும் (Denotations) கருத்தியலுக்கும், குறிப்பீட்டாக்கத்திற்கும் அடிப்படையாக அமைபவை.

குறிப்பீட்டாக்கத்தைச் சசூரின் கோட்பாட்டின்படி சற்று விளக்கலாம். சசூர் ஒரு குறி என்பது குறிப்பான், குறிப்பீடு இரண்டும் இணைந்தது என்பார். பசு என்ற குறி ஒலிக்குறியாக உள்ளது. அது பசு என்ற நான்கு காலுடைய விலங்கைக் குறிக்கும் உருப்பொருளுக்கும், பசு என்றவுடன் நம் மனதில் தோன்றும் மனக்குறிக்கும் சேர்த்தே பொருள் கொடுக்கிறது. இந்த உறவைப் பின்வருமாறு விளக்குவார்.signified and signifier

இதைப் பசுவைப் புனிதம், அமைதி என்ற பொருள் வெளியில் உள்ளவற்றோடு தொடர்புப்படுத்துவதைக் குறிப்பீட்டாக்கம் எனலாம். இந்தக் குறிப்பீட்டாக்கம் என்பது ஒவ்வொரு பண்பாட்டிற்கும் தனித்தனியானது. பண்பாடு சார்ந்து அமைவது.

இந்த நிலையில் கருத்தியல்களும் மொழி வழியாகவோ மொழி அல்லாத பிற செயல்களின் வழியாகவோ புலப்படுத்தலாம். அவ்வாறான புலப்படுத்தலில் மொழியின் குறிப்புப் பொருள்களும், தொன்மங்களும் கருத்தியல் வெளிப்பாட்டிற்குப் பெரிதும் உதவும். இவ்வாறு தொன்மங்களும் மொழிவழியாக அமையும் பனுவலும் கருத்தியலின் பண்பை நிலைகொள்ளச் செய்கின்றன. கருத்தியலுக்கும் குறிப்பீட்டாக்கத்திற்கும் இடையே உள்ள உறவைப் பின்வரும் படம் தெளிவாகக் காட்டும்.signified and signifier 1

நம்பிக்கைக்கும் விழுமியங்களுக்கும் ஒரு வடிவம் கொடுப்பவை குறிகளாகும். இக்குறிகள் மொழியாகவும் நடத்தையாகவும் அமையலாம். இக்குறிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் வழியாகக் கருத்தியலுக்கும் உயிர் ஊட்டப்படுவதுடன் புதிய கருத்தியல்களை உருவாக்கவும் வழிவகை செய்யப்படும்.

குறிகளின் வழியாகத் தொன்மங்களும் நம்பிக்கைகளும் வெளி யிடப்படும் பொழுது, அவை மக்களை, ஒத்த பண்பாட்டினராக இணங்காணவும் செய்யும். (பிஸ்க். 1982).

கருத்தியலை உறைந்துபோன விழுமியங்கள் என்பதாக அல்லாமல் ஒரு நடத்தையாகக் கொள்ள வேண்டும் என்பார் பிஸ்க்.ஒரு குறிப்பிட்ட கருத்தியலுக்கு ஒருவர் ஆட்படும் பொழுது, அக்கருத்தியலுக்கேற்ப நடத்தையும் வெளிப்படும். கருத்தியலின் மிக முக்கிய அங்கமே அதன் தேர்வுத் தன்மையும், மறைத்தல் தன்மையும்தான். இத்தகைய மறைத்தல் திரித்துக் கூறுதல் என்பன, தான் சார்ந்த ஈடுபாட்டைக் காட்டவும், பயன்படுத்தப்படுபவையாகும். அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள உருவாக்கும் போலியான உணர்வுகளைத் தகவல் தொடர்புச் சாதனங்கள் வழியாகப் பரப்புவதன் மூலம் கருத்தியல் பரவலாக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக ஒரு நபரை போராளியாகவும், தீவிரவாதியாகவும் பார்க்கும் பார்வை கருத்தியல் சார்ந்ததாகும். தகவல் தொடர்புச் சாதனங்கள், அரசியல் வெளியீடுகள் வழியாக இவை பெருமளவில் பரப்ப ப்படும்பொழுது அதிகாரக் கருத்தியல் வலுப்பெறுகிறது. இத்தகைய ஆதிக்கம், பட்டாளி வர்கத்தினரது பணிவை இயற்கையானதாகவும் மாற்றிக் காட்டிவிடும்.

1.3. கருத்தியல் மறு உற்பத்தியாக்கம்

கருத்தியல்கள் சமூகச் செயல்பாடுகளாலும், பேச்சுகள், உரைகள் வழியாகவும் மறு உற்பத்தி செய்யப்படுகின்றன. கருத்தியல் உற்பத்தியாக்கம் என்பது தொடர்ச்சியான நிலைபெற்ற செயல்பாடாகும். கருத்தியல்கள் புதிய குழுவினருக்கு அறிமுகமாகும் பொழுதோ, புதிய பயன்பாட்டாளர்கள் வரும்பொழுதோ மறு உற்பத்திச் செய்யப்படுகின்றன. ஒரு சமுதாயத்தின் செயல்பாடுகளில் பங்கேற்பதன் வழியாகவோ (கற்றல், சொற்பொழிவு) புதிய நபர்களுக்கு அறிமுகம் செய்யப்படுவதுடன் அவர்களாலும் பயன்படுத்தப்படுகின்றன.

கருத்தியல் உற்பத்தியாக்கம் என்பதைச் சமூக நிலைகளில் பின்வரும் வழிகளில் காணலாம் அவை

(1) அமைப்பு-செயல்பாடு என்ற நிலை

இந்நிலையில் ஓர் அரசு அமைப்போ, நிறுவனமோ கருத்தியலை உருவாக்கி அதை" செய்யல்படுத்தும். இது மேலிருந்து கீழ் நோக்கிச் செல்லும் செயல்பாடாக அமையும். கருத்து நிலையிலான நம்பிக்கைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கப்படுவது இந்நிலையில்தான்.

(2) செயல்பாடு-அமைப்பு நிலை

இந்த நிலையில் மக்களிடம் பொதுவாகப் பகிர்ந்துக் கொள்ளப்பட்ட, நிலைபெற்ற தொடர்ச்சியான கருத்தியல்கள் ஓர் அமைப்பாக உருப்பெறும். இது கீழிருந்து மேல் செல்லும் செயல்பாடாக இருக்கும்.

அதை போலக் குழுக்கருத்தியல் தனிநபர்களுக்குச் செல்லுதலும், தனிநபர் கருத்தியல் ஒரு குழு உருவாக்கத்திற்கும் அடிப்படையாக அமையலாம். கற்பித்தல், உரையாடல், சொற்பொழிவு போன்ற செயல்பாடுகளிலும் மொழியின் பல்வேறு வடிவங்களிலும் (பேச்சு எழுத்து கவிதை கட்டுரை முதலியன) கருத்தியல்கள் வெளியிடப்படலாம்.

1.4. கருத்தியல் உரைக்கோவை அமைப்புகள்

கருத்தியல் உரைக்கோவை என்பது ஒருவரது நம்பிக்கையை வெளிப்படுத்தும் உரைக்கோவையாகும். இந்நம்பிக்கைகள் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ அமையலாம். இவ்வுரைக் கோவையின் மிக முக்கியச் செயல்பாடு, அது கேட்பவரின் அல்லது வாசிப்பவரின் மனதில் ஒரு தூண்டல் விளைவை ஏற்படுத்த வேண்டும். கருத்தியல் உரைக்கோவை வழியாகக் கேட்பவரின் மனநிலையைத் தங்களின் நம்பிக்கை, குறிக்கோள், விருப்பத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யவும் முடியும்.

உரைக்கோவை எவ்வாறு கருத்தியலை வெளிப்படுத்தி நிற்கிறது என்பதோடு, அது எவ்வாறு பிறரால் பெறப்படுகிறது என்பதும், முக்கியமானவையாகும்.

கருத்தியலை வெளிப்படுத்தக் குறிப்பிட்ட மொழி அமைப்பு, குறிப்பிட்ட மொழி வடிவம்தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூற இயலாது. ஆனால் ஒவ்வொரு அமைப்பும், வடிவமும் ஒவ்வொரு சூழலில் கருத்தியலை வெளிப்படுத்தலாம்.

கருத்தியல் வெளிப்பாடுகள் இரண்டு நிலைகளில் அமைகின்றன.

அவை

(1) கருத்தியல் தொடர்பான நம்பிக்கைகளைப் பொதுவாக வெளிப்படுத்துதல்.

(2) நிகழ்வுகளிலும் சூழல்களிலும் குறிப்பிட்ட நம்பிக்கைகளை மறைமுகமாக வெளிப்படுத்துதல்.

எனலாம்.

ஒரே உரைகோவை அமைப்பு, ஒரு சூழலில் கருத்தியல் வெளிப்பாடாகவும், ஒரு சூழலில் கருத்தியல் அற்றதாகவும் செயல்படலாம். இந்நிலை பயன்படுத்துவோரின் விருப்பம், குறிக்கோள் தான் ஏற்றுள்ள பாத்திரம்., ஒரு குழுவின் செயல் ஆகியவற்றால் அறியப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே, சூழலைப் பொறுத்தவரையில், இரண்டு அமைப்புகளைக் குறிப்பிடலாம்.

அவை

(1) புலப்பாட்டு" சூழல்

(2) புலப்பாட்டில் பங்கேற்பாளர் பங்கு

புலப்பாட்டு" சூழல் என்பது பேடைப் பேச்சு. சட்டசபை உரை, துண்டறிக்கை போன்றன கருத்தியல் தூண்டல்.

பங்கேற்பாளரின் பங்கு என்ற அமைப்பில் அரசியல்வாதியாக, பெரும் முதலாளியாக, சினிமா நட்சத்திரமாக ஒரு சில தகுதிகளின் அடிப்படையில் சில கருத்தியல்கள் வெளிப்படலாம்.

கருத்தியலை, இத்தகைய சமூகத் தகுதிகளைக் கொண்டவர்கள் வழியாக அறிமுகம் செய்யும்பொழுது, ஓர் அதிகாரத் தன்மையும் நம்பகத்தன்மையும் வெளிப்படும்.

அதேபோலக் கருத்தியலை வெளிப்படுத்தும் நாடகம், சினிமா போன்றவற்றில் கதாநாயகன், வில்லன் போன்ற பாத்திரங்கள் வழியாக கருத்தியல் வெளிப்படலாம். ஒவ்வொரு பாத்திரத்தைப் படைப்பதற்கும் ஒவ்வொரு கருத்து முன்னரே சமுதாயத்தில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும். இத்தகைய முன் கருத்துக்களின் அடிப்படையில் கருத்தியலை வெளிப்படுத்தலாம் .

மொழிநிலையில் பல்வேறு அமைப்புகளும் அவை பயன்படுத்தப்படும் விதமும் கருத்தியல் வெளிப்பாட்டிற்கு உதவலாம். ஒரு கருத்தியலை வெளிப்படுத்தும் உரைக்கோவை, பனுவலாக இருக்கும்பொழுது, பனுவலில் உள்ள எழுத்துக்களின் மாறுபாடுகூடக் கருத்தியலை வெளிப்படுத்தும். செய்தித்தாள்களில் இடம்பெறும் தலைப்புகள், பெரிய எழுத்துகள், இடம்பெறும் இடம் ஆகியன கருத்தியல் வெளிப்பாட்டிற்குச் சான்றாகும்.

வாக்கியநிலையில், வாக்கியங்களின் அமைப்பு, எந்த வகையான வாக்கியம் ஆகியனவும் கருத்தியல் சார்ந்தவை. வாக்கிய நிலையில் பின்வரும் கூறுகள் கவனிக்கத்தக்கன.

(1) வாக்கியங்கள், சொற்கள் வரும் முறை.

(2) செய்வினை செயப்பாட்டுவினை வாக்கியங்கள்.

(3) எழுவாய் வெளிப்படையாகவோ,மறைந்தோ வரும் நிலை.

(4) பதலீட்டுப் பெயர்களின் பயன்பாடு அவை வெளிப்படுத்தும் அதிகார உறவுகள்.

(5) இனங்காணல் X ஒதுக்கல் என்ற நிலையில் வாக்கியத்தில் இடம்பெறும் நாம் X பிறர் என்ற அமைப்பு.

மொழி நிலையில், கேட்போர் வாசிப்போரைக் கவரும் வகையில் அமைக்கப்படும் திரும்பத் திரும்ப வருதல், பதிலியாக வருதல், உவமை, உருவகம், முரண்கள் ஆகியன கருத்தியல் வெளிபாட்டிற்கு உதவுவன.

ஒரு பனுவல்/கவிதையின் தலைப்புக் கூடக் கருத்தியலை வெளிப்படுத்தும். ஒரு பொருண்மையின் பெரும் அமைப்பு என்ற நிலையில் இத்தலைப்பு அமைவதால் கூறவந்த மொத்தப் பொருண்மையை முன்னிறுத்தும் தன்மை கொண்டது தலைப்பு.

அதேப் போல பனுவலில் வரும் பேச்சு செயல்பாடுகளால் (Speech Acts) எசேரித்தல், ஏவுதல், நம்பிக்கை வெளிப்படுத்துதல் போன்ற அதிகாரக் கருத்தியல் சார்பானவை. எனவே மொழிக்கூறுகளின் தன்மை, அவை பயன்படுத்தப்படும் முறை, பயன்படுத்தப்படும்

சூழல் ஆகியவற்றை வைத்துக் கருத்தியலை விளக்க முடியும்.

1.5 கருத்தியலின் அமைப்பு

எந்த ஒரு கருத்தியலாக இருந்தாலும் அதை ஓர் அமைப்பு நிலையில் ஆராயலாம். அந்த வகையில் பின்வரும் ஆறு கூறுகள் மிக முக்கியமானவையாகும் அவை

(1) உறுப்பினர்கள் (2) செயல்கள் (3) குறிக்கோள் (4) விழுமியங்கள் (5)சமூகநிலை மற்றும் குழு உறவுகள் (6) சமுதாய வளமைகள்

(1) கருத்தியல் என்பது ஒரு குழுவினரின் நம்பிக்கைகள் என்ற நிலையில் அதில் உள்ள உறுப்பினர்களது நிலை அறியப்பட வேண்டும். அவை பின்வரும் வினாக்களின் வழி அறியப்படலாம்.

(1) நாம் யார்?

(2) எங்கிருந்து வந்தோம்.

(3) பார்ப்பதற்கு எவ்வாறு இருப்போம்

(4) நம்மவர்கள் யார்

(5) நம்முடன் இணையத் தகுதி பெற்றவர் யாவர்.

(2) கருத்தியல் என்பது ஒரு நடத்தை என்ற நிலையில் பின்வருவன சிந்திக்கத்தக்கன.

(1) நாம் என்ன செய்யப் போகிறோம்?

(2) நம்மிடம் எது எதிர்பார்க்கப்படுகிறது?

(3) நாம் எதற்காக இங்கே இருக்கிறோம்?

(3) கருத்தியல் ஒரு நடவடிக்கை அல்லது செயல்பாடாக வெளி யிடப்படும் பொழுது அதன் குறிக்கோள் விளக்கப்படலாம்.

(1) நாம் இந்த செயலை ஏன் செய்கிறோம்.

(2) நாம் எதை அடைய விரும்புகிறோம்.

(4) கருத்தியலுக்கான விழுமியங்கள் என்ற நிலையில் பின்வருவன விளக்கப்படலாம்.

(1) நம்முடைய தலையாய விழுமியங்கள் எவை.

(2) நம்மையும் பிறரையும் எவ்வாறு மதிப்பீடு செய்கிறோம்

(3) நம்முடைய தனித்துவம் என்ன?

(5) கருத்தியலில் பங்கேற்பவர்களின் சமூக நிலையும், சமூக உறவுகளும் அதிகாரத்தைக் காட்டவல்லன. அந்த நிலையில்,

(1) நம்முடைய சமூகத் தகுதிகள் எவை?

(2) நம்முடைய எதிரிகள் யார்?

(3) நம்மைப் போன்றவர் யார்? நம்முடைய எதிரி எத்தகையவர்?

(6) கருத்தியலுக்கு அடிப்படையாக அமையும் மற்றொன்று சமுதாய வளமாகும். ஒத்த கருத்தியலைக் கொண்டுள்ளவர்களின் சமுதாய வல்லமை என்ன? எத்தகைய சமூக வளமைகளை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.?

மேலே குறிப்பிட்டுள்ள கருத்தியல் அமைப்புகள் இனங்காணலும் இன ஒற்றுமைக்கு அடிப்படையாக அமைபவை.

1.6. மொழிவழிக் கருத்தியல்

மொழி வழியாக வெளிப்படும் கருத்தியலைப் பின்வரும் எடுத்துக் காட்டின் வழியாக விளக்கலாம்.

“:தொடர்ந்து வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி செய்முறையை அறிந்திருந்தும், பெரும்பாமையோர் பட்டினியில் இருப்பதற்குக் காரணம் அறிவியல் முடிவுகள் செயல்படுத்தப்படாமையே”

மேலே குறிப்பிட்ட ஒரு வாக்கியம் ஒரு கருத்தைத் தெரிவிக்கிறது. அக்கருத்தைக் கூறுபவர் ஒருவர். அவரின் சமுதாயப் பின்னணி ஒன்றாக உள்ளது. அதை நடைமுறைப்படுத்துபவர் வேறொருவர். அதாவது இங்கு குறிப்பிடப்படும் இரு பிரிவினருக்கும் அறிவியல் நெறிமுறைகளைப் பின்பற்றும் சமுதாயமாக இருந்தால், அங்கே கருத்தியல் என்பது எதுவும் இல்லை எனலாம். ஆனால் அவ்வாறு இல்லாத நிலையில் பின்வரும் எதிர் நிலைகளைக் காணலாம்.

அறிவியல் விவசாயம் X பண்டைய விவசாயம்

நகரம் X கிராமம்

சந்தைப்பொருளாதாரம் X தேவை சார்ந்த பொருளாதாரம்

வளர்ச்சி X நிலைப்பு

மாற்றம் X பழமை

இந்த எதிர் நிலைகளின் அடிப்படையில் பேசுபவர் நாம் என்ற அறிவியல் பண்பாட்டைச் சார்ந்தவராகவும் பிறர் என்பவர் அறிவியல் சாராதவர் என்றும் புரிந்துக் கொள்ளலாம். கருத்தியலின் அடிப்படையே நாம் X பிறர் என்பதுதான்.

மேலே குறிப்பிட்ட அணுகுமுறையில், பாவேந்தரின் மொழி பற்றிய கருத்தியலை ஆராயலாம். பாவேந்தரின் கருத்தியல் அன்றைய சமுதாயத்தில் அதிகார வர்க்கத்தினர் உருவாக்கிய கருத்துகளுக்கு எதிர்நிலையில் கட்டமைக்கப்பட்டதாகும். அக்கருத்தியலைக் கருத்தியல் அமைப்பின் அடிப்படையில் ஆராயலாம்.

பாவேந்தரின் தமிழ், தமிழர் தொடர்பான கருத்தியல் பின்வரும் அமைப்பில் இருப்பதை அறியலாம்.

(1) தமிழரின் பழமையும் தொன்மையும்.

(2) தமிழரோடு உறவுடையவர் யார்? யார்?

(3) தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்

(4) தமிழர்கள் எதை அடைய வேண்டும்?

(5) தமிழரின் பண்பாடு எது?

(6) பிறரின் பண்பாடு எது?

இக்கருத்தியல் அமைப்பைப் பாவேந்தர் வெளிப்படுத்தும் முறைகள் பல்வேறு வகையாக உள்ளன. கருத்தியலுக்குத் தன்னை நடுநிலைப்படுத்தித் தனக்குத் தமிழ் எத்தகையது? என்றும் தன்னைப் போலவே நமக்கு என்ற நிலையில் தமிழர்களுக்கு மொழி எவ்வாறானது? என்றும் கூறுவார். எனவே, கருத்தியல் வெளிப்பாட்டை நான் X நாம், நாம் X பிறர், தெற்கு X வடக்கு என்ற பொது நிலையில் காணலாம்.

1.7 தமிழின் தொன்மை

கருத்தியல்கள் அதிகார" சூழலில் தோற்றம் பெறுவதும், அதிகார வர்க்கத்தினரது ஆளுமைக்கு உட்பட்ட தகவல் தொடர்புச் சாதனங்களால் பரவலாக்கப்படுவதும் இயல்பானவை. அதிகார இனம் தங்கள் இனம், மொழி பற்றி உயர்வான கருத்துக்களைச் சமுதாயத்தில் பரவ விடுவதன் வழியாகப் பிற இனம், மொழி ஆகியவற்றைத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளும். பிற இனம், பிற மொழி ஆகியன தாழ்வானவை என்ற கருத்து, தன்மொழி உயர்வைக் காட்டுவதன் வழியாகவும் நிலை நிறுத்தப்படும். இத்தகைய சூழலில் எழும் எதிர்ப்புக் குரல் வேறு வகையான கருத்தியலைக் கட்டமைக்கிறது. பாவேந்தர் கால" சூழலில் வடமொழி ஆதிக்கம், வடமொழி உயர்வு, வடமொழியின் தொன்மை ஆகியன கருத்தியலாகப் பரப்ப ப்பட்ட சூழலில் இதற்கு எதிரான கருத்தியலை உருவாக்கவேண்டிய சூழல் எழூகிறது

ஒவ்வொர் இனத்திற்கும், மொழி என்பது பொதுவான அடையாளமாக இருக்கும். அனைத்துத் தாய் மொழியாளர்களும் தங்களது மொழி பற்றிய உயர்ந்த மதிப்பீட்டுகளையே கொண்டிருப்பர். ஆனால் ஆதிக்க" சூழலில் இம்மதிப்பீடுகள் மாற்றப்படலாம். இத்தகைய ஆதிக்க" சூழலில், மொழியின் தொன்மையும், மொழியின் சிறப்பும் போற்றப்படுவது அவசியமான செயல்பாடாகிறது. மொழிகளின் தொன்மையை அறிவியல் அடிப்படையில் விளக்குவது ஒரு நிலையாகும். ஆனால் மொழியின் தொன்மை என்பது இறைக் கோட்பாடோடும், உலகத் தோற்றக் கோட்பாட்டோடும், இணைக்கப்படும்பொழுது அது கருத்தியலாகிறது. மொழியின் தொன்மையும், மொழியின் இனிமையும், ஆதிக்க" சூழலில் பேசப்படும்பொழுது, மொழிவழியாக இன உணர்வை ஊட்டுவதான செயல்பாடாகவே அமையும். இந்த நிலையில் தமிழ் மொழியின் தொன்மை தொடர்பான பாவேந்தரின் கருத்துக்களைக் காணலாம்.

திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்

மங்கு கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் (180)

மானுடம் என்னுமோர் ஆதிப்பயிர்தமிழ்

மக்களென் றேகுதித் தாடுவோம் (237)

மனித வாழ்வை

இனியநற் றமிழே

நீதான் எழுப்பினை! .(446)

நிலவே நீ முன் நடந்ததைக் கூறுவாய்! மெய்யாய்க் கூறுவாய்

இங்குச் செந்தமிழையும் உன்னையும் கூட்டி

இயற்கை அன்னை வளர்த்த்தில்லையோ பாலூட்டி (1003)

முன்னைத் தோன்றிய மக்கள் முதன்முதல்

பேசிய மொழியே! மொழியே .(1042)

மொழியில் உயர்ந்த து தமிழ் மொழியே பண்டு

முதல் நாகரிகமும் பழந்தமிழ் மக்களே! (1047)

ஆதி மனிதன் தமிழன்

ஆதி மனிதன் தமிழன்தான்

அவன் மொழிந்த தும் செந்தமிழ்த்தேன் (1668)

சொல்லார்ந்த தமிழ் மொழிக்கும் அதனின் தோற்றம்

தொல் பழமை அடிமுடியைக் கண்டாரில்லை (1863)

என்று தமிழின் தொன்மையைக் கூறுவார்.

பாவேந்தரின் கருத்துகள், அவர் சார்ந்த இயக்கக் கருத்துக்களாக இருந்து, தமிழ், தமிழர் சார்ந்த கருத்துக்களாக திகழ்கின்றன. இவை அனைத்தும் வடமொழி தேவபாஷை என்ற கருத்தியலுக்கு எந்திரான கருத்தியலாகக் கருதலாம்.

தமிழின் தொன்மையும், தமிழரின் தொன்மையையும் கூறியதைப் போல் தமிழ் மொழியின் இனிமையைப் பற்றியும் பாவேந்தர் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். பாவேந்தரின் இனிமைக் கருத்தியலை வெளிப்படுத்திய விதம் கருத்தியல்சார் குழு மனப்பான்மையை உருவாக்குவதற்காக என்று எடுத்துக் கொள்ளலாம். தமிழின் இனிமை வழியாக நான் X நாம் என்ற ஒருமைப்பாட்டை விளக்குவதை உணரலாம்.

தமிழின் இனிமை, இன்பத் தமிழ் என்றத் தலைப்புகளில் அமைந்த பாடல்களில் பாவேந்தர் தமக்குத் தமிழ் எத்தகையது என்பார். மங்கை ஒருத்தி தரும் சுகம்கூடத் தமிழுக்கு இணை யில்லை என்ற தன்னுணர்வை வெளிப்படுத்துவார். அதேபோல் எங்கள் தமிழ் என்ற தலைப்பில்,

இனிமைத் தமிழ் மொழி எமது எமக்

கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!

என்று மொழியையும் இனிமையையும் பொதுமையாக்குவார். தமிழின் இனிமை வழியாக நான் X நாம் என்பதை கட்டமைத்த

பாவேந்தர் தமிழ் மொழியைக் காத்தல் என்ற நிலையிலும் தம்மை

முன்னிறுத்திப் பிறரிடம் அதே நிலைப்பாட்டை எதிர்நோக்குவார்.

சலுகை போனால் போகட்டும் - என்

அலுவல் போனால் போகட்டும்

தலைமுறை ஒரு கோடி கண்ட என்

தமிழ் விடுதலை ஆகட்டும் (1830)

என்றும்,

தமக்கொரு தீமை என்று நற்றமிழர்

எனை அழைத்திடில் தாவி

இமைப்பினில் ஓடித் தரக்கடவேன்

நான் இனிமேதாம் என் ஆவி (240)

என்றும் மொழிக்காப்பிற்கு எதையும் இழக்கலாம் என்பார். தமிழ் மொழியினைக் காப்பதற்கு உயிரையும் தருவதற்கு முன்வர வேண்டும் என்ற கருத்தைக் கொண்டவர் பாவேந்தர். மொழிகாத்தல் என்பது மிக முக்கியமான செயல்பாடாகக் கொள்ளவேண்டும். என்பதைப் பாவேந்தர் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நான் X நாம் என்ற கருத்தமைப்பில் கூறுவார்.

1.8 தமிழும் உயிரும்

தமிழ் என்பது தமக்கு மட்டும் உயிர் என்று அல்லாமல் தமிழர்கள் அனைவரும் அதை உயிராகப் பேண வேண்டும் என்பார். உயிர் என்ற கருத்தைப் பற்றிய பாவேந்தரின் கவிதை வெளிப்பாடுகள் பல நிலைகளில் உள்ளன.

செந்தமிழே! உயிரே நறுந்தேனே

செயலினை முச்சினை உனக்களித்தேனே (237)

இனியன என்பேன் எனினும்-தமிழை

என்னுயிர் என்பேன் கண்டீர்

தமிழும் நானும்

மெய்யாய் உடலுயிர் கண்டீர் (1764)

உன்னை வளர்பன தமிழா! உயிரை

உணர்வை வளர்ப்பது தமிழே

தமிழுக்கு அமுதென்று பேர்-அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் (175)

தமிழ் எங்கள் உயிர் என்பதாலே வெல்லுந்

தரமுண்டு தமிழருக்கிப்புவி மேலே (178)

கமழும் உன்தமிழினை உயிரென ஓம்பு (237)

விந்தைத் தமிழ்மொழி எங்கள் மொழி அது

வீரத் தமிழ்மக்கள் ஆவி என்போம் (719)

ஒரு தமிழன் தமிழர்க்கே வாழ்கிறான்

உயிர் வாழ்வோன் தமிழர்க்கே தனை ஈகிறான் (790)

தமிழின் இனிமையைக் கூறிய பாவேந்தர், தமிழை உயிராக கருதுவதற்கு அடிப்படைக் காரணம் தமிழ் மொழி வழியான இனமீட்சி என்ற கருத்தியல் சார்ந்ததாகும். ஓர் இனத்தின் உயிர்நாடியே மொழிதான் பழம்பெருமை வாய்ந்த மொழியும், நாடும்,பிறரின் ஆதிக்க" சூழலில் இருக்கும்பொழுது மொழியை உயிர் என்ற குறியீட்டோடு பயன்படுத்தி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவார்.

உயிர் என்ற கருத்தைக் கருவாகக் கொண்டு புரட்சிக் கவி என்ற குறுங்காப்பியத்தைப் புனைவார். தமிழ்க்கவியின் வல்லமையைக் கதையாக்கித் தமிழ் உணர்வை மக்களிடையே வளர்க்கப்பாகுபடுவார். கருத்தியல் வெளிப்பாட்டில் கதாநாயகன், எதிர்த் தலைவன் என்று கருத்தமைப்பைத் தமது கருத்தியலுக்குப் பயன்படுத்திக் கொள்வார்.

தமிழறிந்த தால் வேந்தன் எனை அழைத்தான்

தமிழ்க்கவி யென்றெனை அவளும் காதலித்தாள்.

அமுதென்று சொல்லுமிந்த தமிழ், என் னாவி

அழிவதற்குக் காரணமாயிருந்த தென்று

சமுதாயம் நினைத்திடுமோ? ஐயகோ என்

தாய்மொழிக்குப் பழி வந்தால் சகிப்ப துண்டோ?

உமை ஒன்று வேண்டுகிறேன் மாசில்லாத

உயர்தமிழை உயிர்என்று போற்று மின்கள்! (142)

அதேபோல எதிர்பாராத முத்தம் என்ற தலைப்பில் அமைந்த படைப்பிலும் தமிழரின் உயர்விற்காகக் கதைத் தலைவன் செத்தான் என்பதாகப் படைப்பார்.

இத்தகைய தமிழ் உயர்வே பிற்காலத்தில் தமிழ் மொழி மீட்சிக்கும் தமிழ் மொழி காத்தலுக்கும் அடிப்படையாக அமைந்தது.

1.9. நாம் பிறர்

கருத்தியலின் அடிப்படைப் பாகுபாடே, நாம் X பிறர் என்பதுதான். பாவேந்தரின் நாம்பிறர் என்ற கருத்தியல் அடிப்படை, தமிழர் X ஆரியர், தமிழர் X பார்ப்பனர், தமிழ் X வடமொழி, தமிழ் X இந்தி, தமிழ் X பிறமொழிகள், தெற்கு X வடக்கு என்ற பல்வேறு நிலைகளில் உள்ளது.

ஓர் உயிர்நான்! என் உயிர் இனம் திராவிடம்!

ஆரியன் அல்லேன் எனும் போதில்

எத்தனை மகிழ்ச்சி! எத்தனை மகிழ்ச்சி (784)

வீரம் பிறந்த நாட்டிற் பிறந்தவர்

வெற்றித் தமிழர் உலகிற் சிறந்தவர்

ஆரியர் அல்லர்; மறைந்தி ருந்தே

அம்பு பாய்ச்சும் பூரியர் அல்லர் (1549)

என்று ஆரியரிடமிருந்து, தமிழர் வேறுபட்டவர்கள் என்பதை; உயர்ந்தவர் நாம் என்ற அடையாளத்தை உயர்ந்த பண்பாட்டுச் சிறப்பு வழியாகவும், நடை, உடை, மொழி வழியாகவும் கட்டமைப்பார்.

நாமெல்லாம் திராவிடர்கள் என்ற எண்ணம்

நம் உள்ளத்தில் வேரூன்ற வேண்டும்! மேலும்

நாமெல்லாம் ஒரே வகுப்பார் என்ற எண்ணம்

நன்றாக நம் உணர்வில் ஏற வேண்டும். (1523)

உடையினிலே ஒன்றாதல் வேண்டும்! உண்ணும்

உணவினிலே ஒன்றாதல் வேண்டும்! நல்ல

நடையினிலே ஒன்றாதல் வேண்டும்! பேசும்

நாவினிலும் எண்ணத்திலும் ஒன் றாதல் வேண்டும் (1524)

நாம் என்று ஒன்றுபடுத்தும் நிலையில், தமிழர்கள் தமிழர்களோடு இணைந்த திராவிடர்கள் என்றும் திராவிட மொழிகள் என்றும் ஒன்றிணைப்பார்.

பண்டைத் தமிழும், தமிழில் மலர்ந்த

பண்ணிகர் தெலுங்கு துளுமலை யாளம்

கண்டைநிகர் கன்னடமெனும் மொழிகள்

கமழக் கலைகள் சிறந்த நாடு (900)

தமிழர்கள் திராவிடர்கள் என்று ஒன்று சேர்க்கும் அதே நேரத்தில் தமிழர் பண்பாடு ஆரியப் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது என்பதையும் விளக்குவார்.

ஒருத்தியை ஐவர் மணப்பது உங்கள் நாகரிகம்!

பிச்சை புகல் உயர்வென்னல் உங்கள் நாகரிகம்!

வருபசிக்கு மானம் விடல் உங்கள் நாகரிகம்!

உயிர்கொன்று வேள்வி செயல் உங்கள் நாகரிகம்!

உருவணக்கம் செய்வதும் உங்கள் நாகரிகம்!

மங்கையரை இழிவு செய்திடல் உங்கள் நாகரிகம்!

பெருமக்கள் ஒரு தாயின் மக்களெனச் சொன்னால்

பெருந்தொகை வேற்றுமை நாட்டல் உங்கள் நாகரிகம்! (1024)

என்று ஆரியப் பண்பாட்டுக் கூறுகளையும்,

ஒருத்தி ஒருவனை மணப்பது எங்கள் நாகரிகம்

ஒருத்தன் ஒருத்தியை மணப்பது எங்கள் நாகரிகம்

ஒருவன் ஒருத்திக்கு நிகர் எங்கள் நாகரிகம்

உலக மக்கள் நிகர் என்பது எங்கள் நாகரிகம்

கருதிச்செய் தீமைக்குக் கழுவாய் ஒன்றில்லை;

காவலனின் பொறுப்பதெனல் எங்கள் நாகரீகம்;

பெருத்த உடல் வீழ்ந்தபின் பெரிய நிலை தேடல்

பெருந்தவறே என்பதுதான் எம் நாகரீகமே! (1205)

என்று தமிழரின் பண்பாட்டுக் கூறுகளையும் தருவார். இக்கருத்தியல் வெளிப்பாட்டிற்கு அவர்கையாளும் உத்தியும் கருத்தில் கொள்ளத்தக்கது.குறிஞ்சித்திட்டு என்ற கதைப்பாடலில் தமிழ்ப் பெண் X ஆரியப் பெண் என்ற எதிர்நிலையமைப்பில் தாமரை என்ற பெண், விநோதையிடம் கூறுவதாக அமைப்பார். அதேபோல 'ஒழுக்கமில்லாதவர்கள் அவர்கள்' என்ற தலைப்பில் அமைந்த கவிதையிலும் ஆரியப் பண்பாட்டினைக் காட்டுவார்.

ஆரியர்கள், வடக்கர்கள் செய்த சூழ்ச்சியின் விளைவே, தமிழரின் இந்த தாழ்ந்த நிலை என்பதை வலுவான கருத்தாகக் கொண்டவர் பாவேந்தர்.

புலையொழுக்கம் கொண்டவர்கள் பொல்லா வடக்கர்

தலையெடுத்தார் இன்பத் திராவிடத்தின் தக்க

கலையொழுக்கம் பண்பனைத்தும் கட்டோ டொழித்து

நிலைபுரட்டி நம்நாட்டை நீளடிமை யாக்க ... (727)

என்றும்,

வடநாடு தென்னாட்டை வீழ்த்தச் செய்த

வஞ்சகங்கள் சிறிதல்ல தம்பி (786)

கேரளம் என்று பிரிப்பதுவும் நாம்

கேடுற ஆந்திரம் பிய்ப்பதுவும்

சேரும் திராவிடர் சேரா தழித்திடச்

செய்திடும் சூழ்ச்சி அண்யுண (787)

என்றும் வடக்கு X தெற்குக் கருத்தியலோடு, வடவரின் சூழ்ச்சியையும் வெளிப்படுத்துவார்.

வடக்கு X தெற்குக் கருத்தியலைப் பாவேந்தர், வீட்டுக் கோழியும் நாட்டுக் கோழியும் என்ற தலைப்பில் அமைந்த கவிதை வழியாகவும் வெளிப்படுத்துவார்.

வடக்கன் தெற்கு வாழ் தமிழர்க்கு அள்ளிக்

கொடுப்பதாய்ச் சொல்லி குதிக்கின்றார்கள்

. . . . . . . . . . . .

இங்குளார் உழைப்பின் பயனை யெல்லாம்

வடவர் அடியோடு விழுங்கி வாழ்பவர்

. . . . . . . . . . . . . . . .

கம்பு போட்டுக் கழுத்தை அறுக்கும்

வடக்கன் ஆட்சி போன்ற இடக்கு

நம் தாயகத்தில் நாம் கேட்டறியோம் (1684)

என்று வடக்கரின் சூழ்ச்சியைக் கதை வடிவிலும் வெளிப்படுத்துவார். இவ்வடக்கு X தெற்கு; தமிழன் X ஆரியன் என்ற கருத்தியலின் வெளிப்பாடுதான் பாவேந்தரின் இராவணன் பற்றிய கருத்துகள்.

தென் றிசையைப் பார்க்கின்றேன். என் சொல்வேன்

என்றன் சிந்தையெல்லாம் தோள்களெலாம் பூரிக்குதடா!

அன்றந்த லங்களையினை ஆண்ட மறத்தமிழன்

ஐயிரண்டு திசை முகத்தும் தன்புகழை வைத்தோன்! (213)

வடவரின் சூழ்ச்சியை வெல்லத் தமிழ் என்ற பெரு உணர்ச்சியைக் கைக்கொள்ள வேண்டும் என்பதே பாவேந்தரின் கருத்து. அதை அவர்,

வடக்கினில் தமிழர் வாழ்வை

வதக்கிப் பின் தெற்கில் வந்தே

இடக்கினைச் செய நினைத்த

எதிரியை, அந்நாள் தொட்டே

"அடக்கடா" என்று ரைத்த

அறங்காக்கும் தமிழே (448)

என்று கூறுவார்.

கருத்தியல் சொல்லாடல்களில் மிக முக்கியமான ஒன்று யார் எதிரி? அவர்களுடைய செயல்கள் எவை? எவை? என்பதாகும். ஆரியர் பார்ப்பனர்கள்தாம்தமிழுக்கு எதிர் என்பதைப் பல்வேறு இடங்களில் சுட்டிக் காட்டுவார்.

வஞ்சகர், வந்தவர் தமிழாற் செழித்தார்

வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்

நம் செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார் (239)

முந்திய காலத்து மன்னர் நம்

முத்தமிழ் நாட்டினில் தொத்திடு நோய்போல்

வந்த வடமொழி தன்னை விட்டு

வைத்தத னால்வந்த தீமையைக் கண்டோம் (716)

வஞ்சக நரிகள் புலிக்காட்டை ஆளுமோ?

வடக்கர் எம்மை ஆளவும் மாளுமோ? (789)

தமிழர்களின் சிறப்பையும் தமிழ் மொழியின் சிறப்பையும் பல்வேறு இடங்களில் கூறி, அத்தகைய மிழர்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதை நோக்கமாகக் கொள்வார். 'புகழ்பட வாழ்பவன் தமிழன்' என்றும் 'பொதுநலம் புரிபவன் தமிழன்' (1048), நாடாண்டாயே, தமிழே நீ ஞாலம் ஆண்டாய் வாழ்வும் ஈந்தாய் (1001) என்றும் தமிழரின் நிலையைக் கூறுவார்.

கேளீர் தமிழ் வரலாறு கேட்கத்

கேட்க அது நமக்கு முக்கனிச் சாறு (1452)

என்று தமிழரின் வரலாற்றை நாவலந்தீவின் முதல் மொழியாகக் காட்டிப் பெருமித உணர்வை ஏற்றுவார்.

1.10. தமிழ் பிறமொழிகள்

மொழிக் கருத்தியல் என்ற நிலையில் முன்னர்க் கூறியது போல வடமொழி, இந்தி, கொ"சை மொழி, ஆங்கிலம் போன்றவற்றைப் பற்றித் தமது கருத்துகளைத் தெரிவிப்பார். அவை தூய்மையாக்கச் சொல்லாடல் புதிழில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.மொழி என்பது வாழ்வோடு பின்னிப் பிணைந்த து. மொழி அழிந்தால் வாழ்வு மங்கும் என்பதை உயர்வுதாழ்வு என்ற நிலையில் வெளிப்படுத்துவார்.

தமிழ் என்னில் எம்முயிர்ப் பொருளாம் இன்பத்

தமிழ்குன்றுமேல் தமிழ்நாடெங்கும் இருளாம் (178)

நைந்தா யெனில் நைந்நு போகுமென் வாழ்வு

நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே (237)

வல்லமை சேர்க்கும் வாழ்வை யுண்டாக்கும்

வண்டமிழ் நைந்திடில் எது நம்மைக் காக்கும் (1043)

பாவேந்தரின் இத்தகைய சொல்லாடல்கள் வழியாகப், பிற மொழி, பிற இனத்தினரது ஆதிக்கத்தை உணர்ந்து கொள்ளலாம்.

1.11. கருத்தியலும் கவிதைத் தொகுப்பும்

கருத்தியல் வெளிப்பாட்டில் தலைப்புகள், உட்தலைப்புகள் ஆகியன முக்கிய இடத்தைப் பெறுவன என்பது முன்னர்க் கூறப்பட்டது. பாவேந்தர் தாம் கூற வந்த கருத்தின் சாரத்தைத் தலைப்பாக்கி கவிதைகள் புனைந்துள்ளார். அத்தலைப்புகளில் சிலவற்றைத் தொகுத்துப் பார்த்தாலே அவரின் தமிழ் தொடர்பான கருத்தியலை விளங்கிக் கொள்ள முடியும்.

தமிழ் பற்றிய அவர் கவிதைகள் பின்வரும் தலைப்புகளில் அமைந்துள்ளன.

தமிழ் இனிமை, இன்பத் தமிழ், தமிழ் உணர்வு, தமிழ்ப்பேறு, எங்கள் தமிழ், தமிழ்க் காதல், தமிழ்க் கனவு, தமிழ் வளர்ச்சி, முதலில் உண்டானது தமிழ், இயற்றமிழ் எழில், தமிழர்க்குத் தமிழ் உயிர், சாகாத் தமிழ், கலைகள் தந்த தமிழ், வெற்றித் தமிழ், படைத் தமிழ் செந்தமிழ்ச் செல்வம், தமிழ் வரலாறு, தமிழுக்கு வாழ்வதே வாழ்வு, சாகின்றாய் தமிழா, தமிழ்நாட்டில் ஐந்தாம் படை, தமிழர் மீள வேண்டும், தமிழைக் கெடுப்பவர் கேடு, தமிழ் விடுதலையாகட்டும் முதலியன.

தமிழின் மேன்மையை விளக்குவதன் வழி தமிழர்களின் நிலையை மாற்றிவருவதும் பாவேந்தரின் முக்கியச் செயல்பாடாகும். அதே நேரத்தில் பிற மொழிகளைப் பற்றியும், பிறரைப் பற்றியும் கூறித் தமிழின் உயர்வை வெளிப்படுத்துவார். இந்தி எதிர்ப்புப் பாட்டு, இந்தி கட்டாயம், இந்தி ஒழிப்பது கட்டாயம், வடமொழி எதிர்ப்பு, இந்திக்கு உன்திறம் காட்டு என்று வேறு மொழிகள் பற்றியும் திராவிடர் ஒழுக்கம், திராவிடர் கடமை என்ற தலைப்புகளில் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் குறிப்பிடுவார்.

1.12 முடிவுரை

பாவேந்தர் தமிழ்ச் சமுதாய வளர்ச்சியை, அதன் ஒழுக்கப்பாட்டை, உயர்வை, மனித நேயத்தை, இன மானத்தை, மொழி உணர்வை, சமுதாய சீர்திருத்தத்தை த் தூண்டி தமிழரிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர். அவர்காலச் சமூக நிலையில் தமிழர்களை ஒன்றிணைக்க, விழிப்படையச் செய்ய, அவர் மொழியையே பலம் வாய்ந்த கருவியாகப் பயன்படுத்தினார். நைந்துப்போன, தன்னிலை மறந்த தமிழர்களைத் தமிழ்மொழி, பண்பாடு வரலாறு வழியாகத் தட்டியெழுப்பி உணர்வை ஊட்டியவர். வடமொழி ஆதிக்கத் திலிருந்து மீண்டு தமிழ் இன்று பல துறைகளிலும் சிறப்பாகச் செயல்படுவதற்கு அடிப்படைக் காரணம் பாவேந்தர் தமிழர்க்கு ஊட்டிய தமிழ் உணர்வே.

இத்தமிழ் உணர்வே, கருத்தியல் அமைப்பில் பல்வேறு நிலைகளில் வெளிப்பட்டுள்ளதை விரிவாகக் கண்டோம்.

தம்முடைய கருத்துக்களை, இன ஒற்றுமைக்காகவும், தான்பிறர், வடக்கு X தெற்கு, தமிழ் X பிறமொழிகள், என்ற எதிர் நிலைகளை உருவாக்கி வெளியிட்டுள்ளார். அவர்தம் கவிதைகளுக்கு வைத்த தலைப்புகள்கூட அவரின் கருத்தியலுக்கு துணை செய்வதாக அமைந்துள்ள பாங்கும் விளக்கப்பட்டுள்ளது.

***

** இந்நூலில் உள்ள பாரதிதாசன் பாடல்கள் அனைத்தும் திருவாசன் சுரதா கல்லாடன் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டவை.

- பேராசிரியர் எல் .இராமமூர்த்தி, கேரளா மத்திய பல்கலைக்கழகம்.