வாக்குரிமை என்பதென்ன? நண்பா! அஃது

வளமார்ந்த நல்லாட்சித் ‘திறவுகோல்’ தான்!

பூக்கின்ற புதுப்புரட்சி, வண்மை, மேன்மை

பொலிவுடனே உருவாக்கும் ‘மந்தி ரக்கோல்!’

ஆக்கங்கள் அறுவடைக்கே மண்ணில் நாமும்

ஆவலுடன் பதியமிடும் ‘விதைநெல்’ என்பேன்!

தீக்குணத்தோர் அவ்வுரிமை விலைக்கு வாங்கச்

செயல்பட்டால் நீ பலியாய் ஆகலாமா?

கூறுகெட்டோர் நூறுகளால் உனையே வாங்கிக்

கோட்டைகளில் நுழைவார்கள்; விளைவும் என்ன?

ஏறுமுகம் நாட்டுக்கும் உண்டா? அந்த

எத்தர்களோ கோடிகளைச் சுரட்டி ஊழல்

நாறும்பாழ் வரலாற்றைப் படைப்பார் என்றால்,

நண்பா! நீ உனைவிற்க எண்ண லாமா?

‘சீறிவரும் பாம்புகட்குத் தவளை யூரில்

திருமுடி ஏன்?’ பாவேந்தர் அன்றே கேட்டார்!

பொன்னைவிற்பார்; பொருளைவிற்பார்; எனினும் தங்கள்

புகழ்க்கற்பை விற்பாரா நந்தம் பெண்டிர்?

தென்னைவிற்றார்; பனையைவிற்றார்; எனினும் தங்கள்

சீர்மானம் விற்றாரா நந்தம் முன்னோர்?

தன்னைஉயர் நாற்காலி அமர்த்து தற்குச்

சண்டாளர் இருட்பேரம் பேச வந்தால்

உன்னையும்நீ விற்காதே! தோழா, இன்னும்

ஊழல்நெடி தாங்காது நமது நாடு!