பதியப்பட்ட வரலாற்று நிகழ்வுகளைத் தங்கள் வாய்ப்புக்கேற்ப மாற்றிப் பேசும் கெடுவாய்ப்பும் தமிழ்நாட்டில் நிகழ்ந்துகொண்டுள்ளது. அதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டு புரட்சிக்கவிஞர் பாரதிதாசனை தந்தை பெரியாருக்கு எதிராக நிறுத்தும் தவறானப் போக்காகும்.
பாவேந்தர் பெரியார் மேல் கொண்டிருந்த தாளாப் பற்றைத் தமிழகம் அறியாததல்ல.
“மக்கள் நெஞ்சின் மலிவுப் பதிப்பு
வஞ்சர்க்கோ கொடிய நெருப்பு
மிக்க பண்பின் குடியிருப்பு
விடுதலைப் பெரும் படையின் தொகுப்பு
தமிழர் தவம்கொடுத்த நன்கொடை
தன்மானம் பாயும் தலை மேடை
நமக்குத் தாண்டி அந்த வாட்படை
நமைஅவரின் போருக்கு ஒப்படை”
பெரியார் குறித்துப் பாவேந்தர் தீட்டியுள்ள இந்தப் பாட்டோவியம் எக்காலத்திற்கும் பொருந்துவதாகும்.
1908ஆம் ஆண்டு நடந்த புலவர் தேர்வில் மாநி லத்திலேயே முதல் மாணாக்கராய்த் தேர்ச்சி பெற்றவர் அன்றைய கனக சுப்புரத்தினம். மயிலம் ஸ்ரீ ஷண்முகன் வண்ணப்பாட்டும், மயிலம் சுப்பிரமணியர் துதியமுதும் பாடிக்கொண்டிருந்த கனக சுப்புரத்தினம், அதே ஆண் டில் புதுவை வேணு நாய்க்கர் வீட்டுத் திருமண நிகழ்வு ஒன்றில் முதன்முதலாய்ப் பாரதியாரைச் சந்திக்கிறார். பின்னர் அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு அவ ருக்கு ஏற்படுகிறது.
“கலகலென மயிலினொடு விளையாடி வருகோலம்
காண்பனேல் கவலை யுண்டோ?
கன்னலென வயலெலாம் செந்நெல்வளர் மயிலம்வாழ்
கந்தா குழந்தை வேலா...”
என்று கடவுள் பாடல்களும்,
“கன்னலடா எங்கள் காந்தியடிகள் சொல்
கழறுகிறேன் அதைக் கேளே - நீவீர்
கதர் அணிவீர் உங்கள் பகைவரின் வேரங்குத்
தூளே... தூளே... தூளே...”
என்று கதர் ராட்டினப் பாடல்களும் எழுதி வந்த கனக சுப்புரத்தினம், பாரதியாரின் தொடர்புக்குப்பின் புதிய பாட்டுப் பாதையில் பயணிக்கத் தொடங்குகிறார்.
“பாடலிற் பழமுறை பழநடை என்பதோர்
காடு முழுதும் கண்டபின் கடைசியாய்க்
சுப்பிர மணிய பாரதி தோன்றியென்
பாட்டுக்குப் புதுமுறை புதுநடை காட்டினார்”
என்று பாரதியால் தான்பெற்ற பயன்பற்றிப் பாவேந்தர் எழுதினாலும் பாவேந்தரையே புதுநெறி காட்டிய புலவ ராய்த் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியது தன்மான இயக்கந்தான்.
1928ஆம் ஆண்டுதான் அவருக்கும் பெரியாருக்குமான தொடர்பு அரும்புகிறது. அன்று தொட்டு 1964 வரை, அதாவது 36 ஆண்டுக்காலம் பகுத்தறிவியக்கச் சிம்புட் பறவையாய்ப் பாவேந்தர் சிறகடித்துப் பறந்தார். அவருக் கும் பெரியாருக்கும், அவருக்கும் தன்மான இயக்கத் திற்கும் அறுபட முடியாத ஓர் உறவுப் பாலத்தைக் காலம் தன்போக்கில் கட்டி அமைத்தது. அஃது வரலாற்றில் ஓர் இன்றியமையாத் தேவையாகவும் அமைந்து போயிற்று.
இன்று தமிழ்த்தேசியம் பேசும் சில பேர் ‘திராவிடம்’ என்ற சொல்லைக் கேட்டாலே தீராத பகை கொண்டு நஞ்சு கக்குகின்றனர். அவர்களுக்கு அந்தச் சொல்லின் மேல் அவ்வளவு வெறுப்பு; சினம். 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பெரியார் ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என்ற முழக்கத்தைத்தான் முன்வைத் தார். பின்னர் அவரின் அரசியல் முழக்கம் ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்பதாக மாற்றம் பெற்றது. அதற்கான அரசியற் பின்புலத்தை ஆய்வு செய்தல் இக்கட்டுரையின் நோக்கமன்று.
1956 ஆண்டுக்குப்பின் இங்கே மொழிவழி மாநிலங்கள் அமையலாயின. பெரியாரும் தம் அரசியல் முழக்கத்தைத் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என மாற்றிக் கொண்டார். தம் வாழ்வின் இறுதிக்காலமான 1973 வரை, இக்கொள்கையிலிருந்து அவர் பின்வாங்கவில்லை.
பெரியாரின் தொடர்பு ஏற்பட்ட காலம் முதல் பாவேந்தர் ‘குடிஅரசு’, ‘பகுத்தறிவு’ போன்ற ஏடுகளில் இடைவிடாமல் எழுதிவந்தார். 1938இல் குத்தூசி குருசாமி - குஞ்சிதம் குருசாமி இணையரின் முயற்சி யால் ‘பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி’ வெளி வருகிறது. முதல் தொகுதியில் இடம்பெற்றுள்ள பெரும் பாலான படைப்புகள் தமிழின் இனிமை, தமிழ்மொழி யின் மேன்மை, தமிழ் வளர்ச்சி, தமிழர் முன்னேற் றம், மூடத்திருமணம், கைம்மைக் கொடுமை, பெண்ணுக்கு நீதி, தொழிலாளர் விண்ணப்பம், புதிய உலகு செய்வோம் போன்ற பல்வேறு பாடுபொருள்களைக் கொண்டவை.
1949ஆம் ஆண்டு பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுதி வெளிவந்தது. இந்நூலின் முதல் பாடலே, ‘வாழ்க வாழ்கவே - வளமார் எமது திராவிட நாடு வாழ்க வாழ்கவே’ என்னும் ‘திராவிட நாட்டுப் பண்ணோடு’ தான் தொடங்குகிறது.
“செந்தமிழர் உன்நாட்டின் பேரென்ன செப்பென்றேன்
இந்தியா என்றே இளிக்கின்றான் என்தாயே
பைந்தமிழ் நாட்டினையும் பாரதம் என்று சொல்வான்
எந்தவகையில் இச்சேய் உருப்படுவான் என்தாயே!”
என்று எழுதிய பாரதிதாசன்தான்,
“‘இனப்பேர் ஏன்’என்று பிறன்எனைக் கேட்டால்
மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம்
‘நான்தான் திராவிடன்’ என்று நவில்கையில்
தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்”
என்று மகிழ்ச்சி மீதூரக் கூவுவார்.
“சீர்த்தியால், அறத்தால், செழுமையால், வையப்
போர்த்தி றத்தால் இயற்கை புனைந்த
ஓருயிர் நான், என் உயிர்இனம் திராவிடம்
ஆரியன் அல்லேன் என்னும் போதில்
எத்தனை மகிழ்ச்சி எத்தனை மகிழ்ச்சி
விரிந்த வரலாற்றுப் பெருமரம் கொண்ட
‘திராவிடன்’ ஆலின் சிறிய வித்தே”
- பாரதிதாசன் கவிதைகள், தொகுதி-2
என்பார் பாவேந்தர்.
‘திராவிடம்’ என்பதே ஒரு திருட்டுச் சொல், குழப்பச் சிந்தனை என்று குழப்புகிறார்கள் இன்றைய நவீனத் தமிழ்த்தேசியர்கள். இதில் எவ்வகைக் குழப்பமும் இல்லை. ‘ஆரியம்’ என்கிற நச்சுப் பார்ப்பனியக் கருத்தியலுக்கு எதிராக முன்நிறுத்தப்பட்ட கலகச் சொல்தான் திராவிடம். ஆரிய எதிர்ப்பு, வடமொழி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, வருணாசிரம சாதி எதிர்ப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு போன்றவற்றின் குறியீட்டுச் சொல்தான் திராவிடம்.
மேலும் திராவிடம் தமிழியத்திற்கு எதிரானதும் அல்ல. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர் கள் தமிழம் என்னும் பெயரே திரவிடம் எனத் திரிந் தது என்றும், தமிழே பிற திரவிட மொழிகளாகத் திரிந் தது என்றும் சுட்டுவார்.
“தமிழுக்குத் திரவிடம் என்னும் பெயர் தமிழ்நாட் டில் வழங்காமையானும், தமிழ் என்னும் வடிவத்தை யொட்டிய பெயர்களே மேனாட்டிலும் வடநாட்டிலும் பழங்காலத்தில் வழங்கி வந்தமையாலும், திராவிட மொழிகளெல்லாம் ஒரு காலத்தில் தமிழாகவே இருந்த மையானும், தமிழம் என்னும் பெயரே திரவிடம் எனத் திரிந்தது என்று தெளியப்படும். தமிழ் என்னும் பெயர் எங்ஙனம் திரவிடம் எனத் திரிந்ததோ, அங்ங னமே தமிழாகிய மொழியும் திரவிட மொழிகளாய்த் திரிந்ததென்க.” - பாவாணர் : திரவிடத்தாய், பக்.8, தமிழ்மண் வெளியீடு.
எனவேதான், அரசியல் வழி திராவிட நாட்டுக் கொள்கையை முன்நிறுத்திய பெரியாரைப் பின்பற்றிப் பாவேந்தர், திராவிட நாட்டைப் பாடினார்; திராவிட நாட்டுக் கொடிக்கு வணக்கம் செய்தார்.
“வானில் உயர்ந்த திராவிட நாட்டு
மணிக்கொடி தன்னை வணங்குவோம்
ஊனுடைமை உயிர் யாவும் திராவிடர்
மானத்தைக் காப்பதற் கல்லவோ?
ஆனதைப் பார்க்கட்டும் ஆளவந்தார் - அவர்
ஆர்ப்பாட்டங்கள் நமை வெல்லுமோ?
திண்மையும் உண்மையும் வண்மையும் கொண்ட
திராவிடர் மாக்கொடி வாழ்கவே
ஒண்சுடர் வான்நிலை உள்ளளவும் புகழ்
ஓங்கித் திராவிடம் வாழ்கவே”
- குயில் 1-10-1947
மேலும் பாவாணர் கருத்தை ஏற்றுக்கொண்டவராய் திராவிடரும் திருத்தமிழும் ஒன்றுதான் என்று பாவேந் தர் கருத்துரைக்கிறார்.
“திராவிடம் என்று செப்பியதேன் எனில்
திருத்தமிழம் எனும் செந்தமிழ்ப் பெயரை
வடவர் திரமிளம் என்று வழங்கினர்
திரமிளம் பிறகு திராவிடம் ஆனது
வேட்டியை வடவர் வேஷ்டி எனினும்,அவ்
வேட்டி திரிந்த வேஷ்டியும் தமிழே
அதுபோல்,
திருத்தமிழகத்தைத் திராவிடம் என்றால்
இரண்டும் தமிழே என்பதில் அய்யமேன்?”
- குயில் 1-7-1947
பல்வேறு அரசியல் மாற்றங்களுக்குப்பின் இந்தியத் துணைக்கண்டமெங்கும் மொழிவழி மாநிலங்கள் அமையத் தொடங்கின. அதுவரை திராவிட நாட்டுக் கோரிக்கையை முன்வைத்துப் போராடி வந்த பெரியார், ஆந்திரப் பிரிவினையை அடுத்து மலையாளிகளும், கன்னடியர்களும்கூட நம்பிக்கையற்றவர்களாய் இருப்பதைக் கண்டார்.
“தமிழ் எழுதப் படிக்கப் பேசத்தெரியாத மலையாளி களையும் கன்னடியர் (மங்களூர்க்காரர்)களையும் தமிழ்நாட்டிலே மாகாணத் தலைமை உத்தியோகம், ஜில்லாத் தலைமை உத்தியோகம் மற்றும் கெசட் பதிவு அதிகாரிகள், கெசட் பதிவில்லா அதிகாரிகள், கமிஷனர்கள் முதலிய உத்தியோகங்களில் நியமிப்பது என்பது சர்வ சாதாரணமான காரியமாக இருந்து வருகிறது... தமிழ் தெரியாத அதிகாரிகளைக் கொண்டுவந்து வைத்து, அவர்களிடம் நீதி நிர்வாக அதிகாரங்களைக் கொடுத்து நிர்வாகம் செய்யச் சொல்வது என்றால், எந்தவிதத்தில் இந்த நாட்டில், இந்த நாட்டு மொழியை அரசாங்கம் ஆதரிக்கிறது என்று சொல்ல முடியும்? உயர்திரு காமராசர் அவர்களைக் கொண்ட, சென்னை இராஜ்ய மந்திரி சபை, இனியாவது இந்த விஷயத்தில் கவலை கொள்வது பெருமைக்குரியதாகும்” (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், வே. ஆனைமுத்து தொகுப்பு நூல், பக்.835-836).
பெரியார் தம் 76ஆவது பிறந்தநாளையொட்டி, 1954ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு அறிக்கையிலும் வடநாட்டார் மற்றும் மலையாளிகள் ஆதிக்கத்தைக் குறித்து ஒரு நீண்ட பட்டியல் மூலம் விளக்கினார். ஒரு கட்டத்தில் மலையாளிகள் எதிர்ப்பு மாநாடு ஒன்று நடத்துவது பற்றியும் அவர் திட்டமிட்டார். திராவிட நாடு பிரிவினைக் கொள்கையைக் கைவிட்ட பெரியார் தம் வாழ்வின் இறுதிமூச்சு வரை தனித்தமிழ் நாட்டுக் கொள்கையைத்தான் முன்வைத்தார். 19.12.1973 அன்று தியாகராய நகர் இறுதிப் பேருரையில் அவர் பின்காணுமாறு வீரமுழக்கமிட்டார் :
“நீ போப்பா வெளியே, உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நீ 2000 மைல், 1500 மைல் தூரத்தில் இருக்கிறாய். உன் பேச்சு எனக்குப் புரியாது. என் பேச்சு உனக்குப் புரியாது. உன் பழக்கம் வேற. என் பழக்கம் வேற. மரியாதையாய்ப் போ. ரகளை வேணாம். என்னத்துக்காக இவ்வளவு தூரத்தில இருக்கிறவன் எங்களுக்கு இராஜாவாகணும்? நீ இல்லாவிட்டால் எங்களுக்கு என்ன நஷ்டம்? எங்களுக்கு என்ன உப்பு இல்லையா? தண்ணீர் இல்லையா? மலை இல்லையா? காடு இல்லையா? சமுத்திரம் இல்லையா? இல்லை, நெல் விளைய வில்லையா? கரும்பு விளையவில் லையா? என்ன இல்லை எங்களுக்கு!”
94 அகவை நெருங்கிய நிலையிலும் சிறைக்கஞ்சாத சிங்கமாய்ப் போராடிய தொண்டுக்கிழத்தின் துணிவுதான் எத்தகையது? இந்தப் பெரியாரைப் பார்த்துக் கன்னடர் என்றும், தமிழர்களைக் காட்டிக் கொடுத்த தலைவர் என்றும் சிலர் தொண்டைகிழியக் கத்தி தொடை தட்டுகிறார்கள்.
பெரியார் பாசறையின் பாட்டு முரசம் பாரதிதாசன். அவரின் இடிமுழக்கப் பேச்சுகளையும் எழுத்துகளையும் அப்படியே வெடிமருந்துப் பாக்களாய் வெளிப்படுத்தியவர் பாவேந்தர். இன்று சில பேர் பாவேந்தரைப் பெரியா ருக்கு எதிரி போல எதிர்ப்பக்கத்தில் நிறுத்தி இன்பங் காணுகிறார்கள். பெரியாரின் திராவிடச் சார்பையும் மீறிப் புரட்சிப் பாவலர் தமிழ்த்தேசியப் பாவலராய்ப் புதுப் பிறப்பெடுத்தாராம்.
பெரியாரைத் தம் வாழ்வின் தனிப்பெருந் தலைவராய் ஏற்றுங் கொண்டவர் பாவேந்தர்.
பயிர்போன்றார் உழவர்க்குப்! பால் போன்றார்
குழந்தைகட்குப் பசும் பாற்கட்டித்
தயிர் போன்றார் பசித்தவர்க்குத்! தாய் போன்றார்
ஏழையர்க்குத்! தகுந்த வாக்குச்
செயிர் தீர்ந்த தவம் போன்றார், செந்தமிழ் நாட்டிற்
பிறந்த மக்கட் கெல்லாம்
உயிர்போன்றார்! இங்கு வந்தார், யாம்கண்ட
மகிழ்ச்சிக்கோர் உவமை உண்டோ?
என்று பொதுவாழ்வில் பெரியார் வரவை எண்ணி மகிழ்ச்சிக் கூத்தாடியவர் பாவேந்தர். 1956-க்குப் பின், திராவிட நாட்டுக் கொள்கையைக் கைவிட்டு, தனித் தமிழ் நாட்டுக் கொள்கையைப் பெரியார் உயர்த்திப் பிடித்த போது, அவரின் படையணியின் முதல்வரிசை வீரனாய் நின்றவர் பாவேந்தர். 1956ஆம் ஆண்டுக் குப் பிறகு அவர் எழுதிய பெரும்பான்மையான பாடல் கள் தமிழ்நாட்டு விடுதலையை முன்னிறுத்திய வையே ஆகும்.
“கேரளம் என்று பிரிப்பதுவும் - நாம்
கேடுற ஆந்திரம் பிய்ப்பதுவும்
சேரும் திராவிடர் சேரா தழித்திடச்
செய்திடும் சூழ்ச்சி அண்ணே - அதைக்
கொய்திட வேண்டும் அண்ணே!”
திராவிட நாட்டுக்கு ஆதரவாக எழுதப்பட்ட இப் பாடல் 1949ஆம் ஆண்டு வெளிவந்த பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம் தொகுப்பில் இடம்பெற்ற படைப்பாகும்.
“தமிழர்க்குத் தமிழே தாய்மொழி என்றோம்
தமிழகம் தமிழர்க்குத் தாயகம் என்றோம்
தமிழ்நாட்டில் அயலார்க் இனி என்ன வேலை
தாவும் புலிக்கொரு நாய் எந்த மூலை
அவனவன் நாட்டில் அவனவன் வாழ்க - மற்
றயல் நாட்டைச் சுரண்டுதல் அடியோடு வீழ்க
துவளாத வாழ்க்கை உலகமெலாம் சூழ்க!
தூக்கிய கைகள் அறம் நோக்கித் தாழ்க!”
இப்பாடல் 4.11.1958 அன்று குயில் ஏட்டில் இடம்பெற்றது.
திராவிடம் பற்றிய கருத்தோட்டத்திலும், தனித்தமிழ் நாட்டுக் கொள்கை நிலைப்பாட்டிலும் பாவேந்தர் எப்போதும் பெரியாருடன் இணைந்தேதான் பயணித்தார். தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் பற்றிய செய்தி களில் இருவர்க்குமிடையே சிற்சில கருத்து வேற்று மைகள் இருந்ததுண்டு. ஆயினும் அவை பகை முரண்களல்ல. எனவே பாவேந்தரைப் பெரியாருக்கு முரண்பட்டவராய்க் காட்டுவது சிலரின் தனிப்பட்ட ஆசையாக இருக்கலாம்.
இன்னும் வெளிப்படையாய்ச் சொல்வதானால் பெரியார் திராவிட நாடு கேட்பதும், தனித்தமிழ் நாடு முழக்கம் எழுப்பியதும் சாதியொழிந்த தமிழகத்தை அவாவியதால்தான். இதன் எல்லை பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வில்லை. இன்று தமிழ்த்தேசிய வீரமுழக்கமிடும் யாரோடும் நமக்குச் சண்டையில்லை. அவர்கள் வெற்றிபெற நமது வாழ்த்துகள்!